Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளும் நவீன “கார்ப்பரேட் சாமியார்கள்”

இப்போதெல்லாம் நம் சாமியார்கள் திக்குத் தெரியாக் காடுகளில், கண்காணாதவோர் மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்த்தலம்  “குகைப் பொந்துகளுமில்லை, மலை உச்சிகளுமில்லை ” ! ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள் அவர்களைத் தேடிப்போக நாம் விரும்பாவிட்டாலும் , அவர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள்! ஆம், ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததேயில்லை. உலகமயமாக்கப்பட்ட வணிகச் சந்தையில் இந்தக் கில்லாடிச் சாமியார்கள் “ஆன்மிகம் ” என்றவோர் வளமான சந்தையை கண்டுகொண்டார்கள்   என்றால் மிகையில்லை . அதுமட்டுமா ? இன்றெல்லாம் அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் அப்படியொரு “fevicol” நெருக்கம். உலகமயமாதலின் உபவிளைவுகளில் ஒன்றே இன்றைய ஹைடெக் சாமியார்கள். இவர்களது மடங்கள் மர்மங்கள் நிறைந்த “டிராகியுலா குகை” என்றாகிவிட்டது . பல்வேறு காப்ரேட் சாமியார்களின் அரண்மைகளில் கொலைகள் தொடங்கி பலதரப்பட்ட வன்முறைகளும் அரங்கேறிவருகின்றன. உலக மயமாதலுக்கு முன்பிருந்த குறிசொல்லும் சாமியார்கள் அல்லர் இவர்கள், கிளியும் கையுமாக திரிந்த கிளிச் சாமியார்களோ, நெற்றியில் பட்டையும் கையில் சுவடியுமாக அமர்ந்திருந்த சோதிடச் சாமியார்களோ  அல்லர் இவர்கள் .. ! இவர்கள், புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு மாடமாளிகைகளைப்போல ஆஷ்ரமங்களை அமைத்துக்கொண்டு, சீடர்களையும், அரசியல் பெரும் புள்ளிகளையும் தமக்கான அரண்களாகக் கொண்டு கண்டம்விட்டு கண்டம் பறந்தோடி கோடிகளில் விளையாடுகின்ற நவீன “காப்ரேட் சாமியார்கள்”! 

புகைப்படவிபரம்:www. bigfundu.medium.com

“கார்ப்பரேட் சாமியார்கள்”? ஆம், கார்ப்பரேட் என்பது “corporate ” எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தவோர்  சொல்! ஒரு நிறுவனத்தின் உச்சமட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களை கார்ப்பரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றித்தான் இருக்கும். அவர்களை மிஞ்சி எதுவும் நடக்கவியலாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவுமில்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப்போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான் Corporate  அல்லது Corporate தலைவர்கள் என்கிறோம். இப்பொது நான் மேற்கூறிய விடயங்களை இன்றைய நவீன சாமியார்களுக்குப் பொருத்திப்பாருங்கள், “corporate  சாமியார்கள் என்பதன் அர்த்தம் விளங்கும்! தம்மைப்பற்றிய ஆடம்பரமான விளம்பரங்களுடன், தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்து பூஜிக்கச் சொல்பவர்கள் இவர்கள், சாமிகள் செய்ய முடியாததை சாமியார்களால் செய்ய முடியும் என பக்கதர்களை நம்பவைப்பவர்கள் தான் இவர்கள். 

இந்த சாமியார்கள் எப்படி உருவாகுகிறார்கள் ?

யார் இந்த சாமியார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?  திடீரெனெ ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? ஒரேயொரு நள்ளிரவிலோ, அதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மதவாதிகளும் கடை விரிக்கிறார்களோ, எங்கெல்லாம் மக்களின் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கிறதோ, அங்கெல்லாம் காலம்தோறும் புதிதுபுதிதாக இவர்கள்   உருவாகுகிறார்கள்! சமூகத்தில்  ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளால், வறுமை ஒருபுறம் தாண்டவமாட, மற்றுமொருபுறமோ செல்வச் செழிப்புடன்! வறுமையில் இருப்பவர்களும், நினைத்ததை அடையமுடியவில்லையே என நினைப்பவர்களும் தம்முடைய அத்தியாவசிய தேவைகளைக்கூட சாமியார்கள் பூர்த்தி செய்வார்கள் என நம்பிச்செல்ல, இந்த நம்பிக்கையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்கள் மக்களை தெரிந்தே ஏமாற்றுகிறார்கள். உலகில் விஞ்ஞானம் வளந்துவரும் அதே வேகத்தில் மூட நம்பிக்கைகளும் குறைவின்றி வளந்துவருகிறது, தம் தேவைகளை பூர்த்திசெய்ய உழைக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தாலும், உழைப்பின்மீது அவநம்பிக்கைகொண்டு, எல்லாவற்றுக்கும்மேல் ஒரு சக்தி உண்டென்று நம்பும் மக்கள் சாமியார்ககளை நோக்கி படையெடுக்கின்றனர் . வாழ்வின் நிதர்சனமான கஷ்டங்களிலிருந்து  விடுபட “அற்புதங்கள்” மீதான நம்பிக்கை உதவுகின்றன . அதுமட்டுமன்றி சிறுவயதிலிருந்தே யாரேனும் ஒருவரைச்  சார்ந்தே இருப்பவர்கள், தான் சார்ந்து இருந்தவர்கள் இல்லாத நிலையில், பிறரைச்  சார்ந்திருக்கவே விரும்புகின்றனர். இவர்களால் சாதாரண செயல்களுக்குக்கூட தன்னிச்சையாக முடிவெடுக்க இயலுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சாமியார்களை நாடி அதிகம் செல்கின்றனராம். 

மனக்கஷ்டங்கள் ஏதாவது  மாயாஜாலங்கள் மூலம்   தீர்ந்துவிடாதா என நினைப்பவர்கள் சாமியார்களின் சக்தி மூலம் தங்கள் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமென நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளே சாமியார்களின் தோற்றத்திற்கான மூலகாரணம் எனலாம். நான் இணையத்தில் வாசித்த ஓர் விடயமதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன், சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும், அதையெல்லாம் புறங்கையால் விலக்கிவிட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம்; மானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக்கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள். தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம், தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை, கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள்  நம்பிக்கையாளர்கள். அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை   சுகப்படுத்துபவர்களாகவும்  அற்புதங்களை நிகழ்த்துபவர்களாகவும்   அமைந்துவிடும் பட்சத்தில், சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள்.

செல்வாக்கில் புரளும் சாமியார்களைக் கண்ணுறும் சிலர், “சபாஷ் இதுதான் சரியான தொழில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்” என, முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஓர் கருவியாக மதத்தினை பயன்படுத்தி தாமும் ஓர் சாமியாராகிவிடுகின்றனர் ! எந்தவிதமான  கல்வித் தகுதியோ, முன் அனுபவமோ, முதலீடோ இல்லாமல் ஒருவர் மக்களிடம் செல்வாக்கும், புகழும் பெற்று பணமும் சம்பாதிக்க எளியவழி சாமியார் தொழில்தான் . மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் மட்டுமே சாமியார் ஆவதற்க்கான தகுதியும் மூலதனமும் ! தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்வது அவரவர் தனித்திறமை! எல்லாம் இருந்தும் நிம்மதியில்லையே” என புலம்பும் பணமுள்ள பார்ட்டிகள்தான் சாமியார்களின் முதல் குறி . பணத்தை சேர்த்துவைத்துவிட்டு  நிம்மதியைத்  தேடியலையும் மக்களை பிடிப்பதுதான் சாமியார்   தொழிலின் சூட்சுமம் ! கால மாற்றத்திட்கு ஏற்றாற்போல மாறியிருப்பது சாமியார்கள் மட்டுமல்ல, அவர்களது கட்டணங்களும்தான்!” முடிஞ்சதப் போடுங்க “,  “நினைத்ததை போடுங்க “,   “எவ்வளவு வேணும்னாலும் போடுங்க உங்க விருப்பம்” என ஆரம்பித்த கட்டணங்கள் இப்போதெல்லாம் ஆயிரக்கணக்காகி, லட்சங்களைத் தாண்டி கோடிகளில் வந்து நிற்கிறது என்றால் மிகையில்லை. இன்றைய தேதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள்…. சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான். இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக் ….அவர்களுக்கு என்று இணைய தளம், பூஜைகள் நேரடி ஒலி ஒளி பரப்பு, மாதாமாதம் பாப்பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு என லேட்டஸ் டிரென்டிங்கோடு வலம் வருகின்றார்கள். அது மட்டுமின்றி இவர்கள் சொற்பொழிவு அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்.

ஆன்மீக முட்டாள்களாக இருக்கும் பொதுமக்கள் 

எவ்வளவுதான் அம்பலப்பட்டுப்போனாலும், மீண்டும் மீண்டும் இவர்கள் தோற்றம்பெற யார் காரணம்? உண்மையில் இங்கு முதல் குற்றவாளிகள் ஆன்மீக முட்டாள்களாக இருக்கும் மக்களே. ஏமாறத் தயாராக இருக்கும் அந்த முட்டாள்தனத்தினை புத்திசாலியான சிலர் சாமர்த்தியமாக/தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்! ஆன்மிகம் பற்றித் தெளிவில்லாத நிலையில் , கடவுளை பற்றி யாராவது பேசினால் ,அதுவும் மத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி நமக்குத் தெரியாத விடயங்களை பற்றி பிரசாரம் செய்தால் ,அவர்கள் துறவாடையும் அணிபவராக இருந்தால், உடனடியாக அவர்களை வணங்கி பின்பற்ற ஒரு கூட்டமே தயாராகிவிடுகிறது . நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் நமக்குத் தெரியாத ஆன்மீக விடயங்களை இன்னொருவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதனாலேயே அவனெல்லாம் மகானாகிவிட முடியாது. போதாக்குறைக்கு அவர்களின் மகிமைகளை பக்கதர்களாகிய நாமே கண், காது, மூக்கு வைத்து ஊதிப்பெருக்கி பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது . போலிச்சாமியார்களின் அதிகரிப்புக்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல , அவரகளது பேராசையும் காரணம் எனலாம்.

ஆன்மீக ஒன்றுகூடல்களில் மக்கள்- புகைப்படவிபரம்:www. bigfundu.medium.com

சந்தைப் பொருளாதாரத்தின் தன்மைப்படி எங்கு ஒரு பொருளுக்கான டிமாண்ட் அதிகரிக்கிறதோ , அங்கு Capacityயும், Supplyயும் அதிகமாகும். ஆக இவர்களின் தோற்றத்திற்கு பொதுமக்களாகிய  நாமும்தான் காரணம் இல்லையா?  அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

தேவைப்படுவது விழிப்புணர்வே !

எந்தப் பொறுப்பும் இல்லாத, வெந்ததைத் தின்று, கிடைத்த சந்தில் புகுந்து ஒழுக்கக்கேட்டில் முழுகி, அந்த கயமைகளைக் காவியில் மறைத்து ஊருக்கு உபதேசம் செய்யும் போலிச் சாமியார்கள் உருவாவதே மூட நம்பிக்கையின் முழு வளர்ச்சியாகவே தெரிகின்றது.சாமியார்களை நம்முடைய பெற்றோர்களோ, தாத்தா பாட்டிகளோ நம்புகிறார்கள் என்றால், அந்த நம்பிக்கையை அவர்கள் அவர்களது பெற்றோர்களிடமிருந்தோ தாத்தா பாட்டிகளிடமிருந்தோ பெற்றிருக்கக்கூடும். எனவே, இன்று நாம் சாமியார்களை கேள்வி கேட்காவிட்டால், அவர்களது இருப்பைக் கேள்விக்குள்ளாக்காதுவிட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கும் ஒரு குட்டி சாமியாரோ, புட்டி சாமியாரோ  தேவைப்படுவார்கள். ஏமாற்றுபவர்கள் எங்கும் , எல்லாக்  காலங்களிலுமே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம்தான் நமது பகுத்தறிவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முற்றும்துறந்த முனிகளைப்போல் சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, சகலருக்கும் அறிவுரை வழங்கி,   நல்வழிப்படுத்த வந்த இறைத்தூதுவர்களைப்போல நற்பெயரை வளர்த்துக்கொண்டு, திரைமறைவில் எல்லாவிதமான கழிசடை வேலைகளையும் பார்க்கும் சாமியார்களை எவ்வாறு நம்புவது? எனவே இவ்வாறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு சுயமாக சிந்திக்கவேண்டும் நாம்! “அவரைப் பார்த்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு ” , ” அவர் கண்ணுல ஒரு தனி தேஜஸ் தெரியுது”, “அவரு புன்னகையில் ஒரு மெசேஜ் இருக்கு ” என்றெல்லாம் யார் யாரோ சொல்வதை வைத்துக்கொண்டு, தாங்களும் அதையே ஒரு செய்தியாக பரப்பிக்கொண்டிராது இருந்தால் இத்தகைய நம்பிக்கைகள் தொடர்கதையாவது தடுக்கப்படும்.

 யார் இவர்களெல்லாம்? இவர்களை ஏன் நாம் நம்பவேண்டும் என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும் .  சேவை அமைப்புக்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கெல்லாம் அரச வரிவிலக்கு  கிடைப்பதனால், இந்த சாமியார்கள் தாம் கொள்ளையடிக்கும் கோடிகளில் கொஞ்சம் ஒதுக்கி பொதுச் சேவை என்ற பெயரில் எதையாவது செய்துவிட்டு கருப்புப்பண பெட்டகமாய் பதுங்கிக்கொள்கிறார்கள் என்பது நம்மில் எத்தனைபேர்க்குத் தெரியும்?  இவர்கள் எல்லோரும் வெறும் பிழைப்புவாதிகள், பிசினஸ் பெரும் புள்ளிகள் , பணம் சேர்க்கும் கேடிகள் அவ்வளவுதான் ! ஒரு புது சாமியார் உருவாகும்போது அது பரபரப்புச் செய்தியாகிறது. அதே சாமியார் வீழ்த்தப்படும்போது அதுவும் பரபரப்புச் செய்தியாகிறது. ஒரு சாமியார் புகழின் உச்சத்தில் இருக்கும்போது அவனோடு சேர்ந்து அவனை உருவாக்கியவர்களும் சம்பாதிக்கிறார்கள் .புதிய கதைகள் , புதிய அற்புதங்கள்    ஜோடிக்கப்படுகின்றன . ஊரெல்லாம் , உலகெல்லாம் அவன் புகழ் பறந்து பறந்து பரப்பப்படுகிறது.” மாட்டுகின்றவரை  சாமி, மாட்டிக்கொண்டால் ஆசாமி” என்ற அடிப்படையில் , குறித்தவொரு   சாமியார் சிக்கலில் மாட்டும்போது, அவனை உருவாக்கியவர்கள் சட்டென்று அவனிடமிருந்து தங்களை துண்டித்துக்கொள்கிறார்கள்.

புகைப்படவிபரம்:www. bigfundu.medium.com

இதுபோன்ற சாமியார்கள் பொதுவாக படித்த இளைய தலைமுறையினை அவ்வளவாய் கவர்வதில்லை , அதனாலேயே பொது அறிவு குறைவாகவிருக்கும் குடும்பப் பெண்களையும், அம்மாஞ்சி கணவன்களையும் இந்த அமைப்பு கவர்ந்துவிடுகிறது. உற்றுநோக்கின் இவர்கள் நாடியது கடவுளையோ ஆன்மீகத்தையோ அல்ல சாமியார்களை. தலைவலிக்குத் தேவைப்படும் உடனடி மாத்திரைபோல இவர்களுக்கு சாமியார்களின் தேவை இருக்கிறது . சம்பளம் அதிகரிக்க , நோய் தீர , குடும்ப சச்சரவுகள் தீர , செல்வம் பெறுக , வேலை கிடைக்க , பரீட்சையில் சித்திபெற போன்ற விடயங்களைத்தாண்டி சாமியார்களின் தேவை  என்பது மிகக்குறைவே! ஆக, இவற்றுக்கெல்லாம் தீர்வு, நாம் உட்கார்ந்து யோசித்தாலே கிடைத்துவிடும். பின்னர் சாமியார் எதற்கு ?  “நான் கடவுளின் அவதாரம் ” என இனி எவன் சொன்னாலும் துணிந்து அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப்பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணர்வீர்கள் . மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூட கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். நம்மிடமிருக்கும் பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துவோமாயின் இனியும் எவனும் சாமியார் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றத் தயாராகமாட்டான்! இதுபோன்ற மூட நம்பிக்கைகளுக்கும் அதன் காவலாளிகளான சாமியார்களும் இந்தத் தலைமுறையிலேயே விடைகொடுப்போமே!

Cover: onlookersmedia.in

Related Articles