Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதைக் குறைப்பது சரியா? தவறா?

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்களில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான திருத்தமானது முக்கியதோர் அம்சமாக காணப்படுவதோடு வாதப்பிரதிவாதங்களுக்கும் உட்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தின் வரலாறு

எம் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஓய்வூதியம் மற்றும் விதவை ஓய்வூதியக் கொடுப்பனவு என்பவற்றின் வரலாறு 1815ஆம் காலப்பகுதி வரையிலும் முற்பட்டுச் செல்கின்றது. அப்போதைய காலப்பகுதிகளில் பிரித்தானிய காலனித்துவத்தில் பணிபுரிந்த அரச பணியாளர்களுக்கு மாதாந்த சம்பளத்துடன், ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின்படி இவ் ஓய்வூதிய வழங்கல்கள் நிறுவப்பட்டாலும், 1901 ஆம் ஆண்டு முதலாகவே ஓய்வூதியம் என்பது இலங்கை சட்டத்தின் முக்கிய ஒரு பகுதியாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

1974களில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. என்றபோதிலும் 1972 மே மாதம் 05 ஆம் திகதியிடப்பட்டு திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்பிலான அரசியலமைப்பு விதிமுறைகளே நடைமுறையில் உள்ளன. தற்போது ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான அனைத்து விதமான நடவடிக்கைகளும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. 

ஓய்வூதியம் பெற்றுக்கொள்வது தொடர்பான தகுதிகள்

ஓய்வூதியம் எனப்படுவதானது அரச ஊழியர்களுக்கான உரிமைகளில் ஒன்றாக கருதப்படுவதில்லை. மாறாக அது ஒரு சலுகை அல்லது வரப்பிரசாதமாகவே நோக்கப்படுகின்றது. அதன்படியே அனைத்து அரச ஊழியர்களும் தமது ஓய்வூதியங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்  என ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு அரச ஊழியரின் ஓய்வூதியத்திற்கான தகுதிகள் என சில காணப்படுகின்றன. ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான, அல்லது தகுதியான பதவியில் இருந்திருக்க  வேண்டும், அந்த பணியானது உறுதிசெய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும், ஓய்வூதியம் தொடர்பில் கணக்கிடப்படும் மொத்த சேவைக்காலம் 120 மாதங்களுக்கு மேலிருத்தல் வேண்டும். அதேபோன்று பதவியில் இருந்து முறையாக ஓய்வு பெற்றதற்கான அடிப்படை தகுதிகள் என்பனவற்றை முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோர்

இந்த வருடம் ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பு நிலவரத்தின்படி நாட்டில் உள்ள மொத்த ஓய்வூதியம் பெற்றவர்களின் எண்ணிக்கை 671,756 ஆகும். அவர்களில்  360,868 சிவில் சர்வீஸ் ஓய்வூதியதாரர்கள், 187,206 பேர் விதவை மற்றும் அனாதை என்ற அடிப்படையில் உள்ளவர்கள், 117,006 பேர்  இராணுவத்தினர், 3,448 பேர் அரசினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் சார் ஆசிரியர்கள் மற்றும் 3,227 உள்ளூராட்சி சார்ந்த அரசாங்க உத்தியோகஸ்த்தர்கள். கம்பஹா, கொழும்பு, குருநாகல், கண்டி, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே அதிகளவான ஓய்வூதியர்கள் வாழும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக் கணக்கெடுப்பு கூறுகின்றது. இதுதவிர வெளிநாடுகளில் வசிக்கும் 6,034 பேரும் ஓய்வூதிய  சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

படஉதவி:www.leader.lk

ஓய்வூதிய கொடுப்பனவுகள்

மேற்குறிப்பிட்ட அளவிலான ஓய்வூதியர்களுக்கு, தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் அதுசார் சலுகைகளை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதத்தில் 23,528 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த மொத்த பணத்தில் 13,187 மில்லியன்கள் அரச சேவை உத்தியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விதவை மற்றும் ஆதரவற்றறோருக்கு 5,011 மில்லியனும், ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு 5,100 மில்லியன்களும், அரசினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட தனியார் ஆசிரியர்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கு 146 மில்லியன்களும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெறும் வயது

ஓய்வூதியம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளின்படி 2021 ஆண்டு வரையிலும் 55 வயதை எட்டிய பின்னர் அரச ஊழியர்கள் ஓய்வினை பெற்றுக் கொள்ள முடியும். என்றபோதிலும் 1910 இலக்கம் 10 இன் விதிகளின்படி அரசு மற்றும் நீதிசார் உத்தியோகஸ்த்தர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆகும்.  விதிவிலக்காக, தகுதி மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டாய ஓய்வு வயது வரம்பினைத் தாண்டியும் பணியாற்ற அரசாங்கம் அனுமதியளிக்கின்றது. இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகள் 61 வயது வரையிலும் அனுமதியளிக்கப்படுகின்றனர். மேலும் மருத்துவ துறையில் 63 வயதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதும், மேன்முறையீட்டு நீதிபதிகள் 63 வயது வரையிலும், மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 61 வயது வரையிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை உதாரணமாக கூறமுடியும்.  

திருத்தப்பட்ட ஓய்வூதிய வயது

கடந்த 2021, நவம்பரில் அப்போது நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வு வயதெல்லையை 60இல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் அரை அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வு வயதெல்லை 62 வயதுகளாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்குறிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது. 

அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் புகார்கள்

இவ்விதமான ஓய்வு வயது தொடர்பிலான வர்த்தமானியின் பின்னர் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அரசு மீது திரும்பியது. அரச மற்றும் அரை அரசு ஊழியர்களின் ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால், அரசு துறையில் உள்ள ஏனைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும், விசனங்களும் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக சிரேஷ்ட உத்தியோகஸ்த்தர்கள் நீண்ட காலமாக சேவையில் இருக்கும் நிலையின் காரணமாக அப்பதவிகளுக்கு வேறு நபர்களை நியமிப்பதில்லை எனவும் கூறப்பட்டது.  இந்த நிலையின் காரணமாக பதவி உயர்வுகளின் இழுபறி நிலை ஏற்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் அரசுக்கு எதிராக திரும்பியது. அதேபோன்று அரச ஊழியர்களின் ஓய்வு வயது திருத்தப்பட்டதன் விளைவாக அரச பணியில் இணைந்து கொள்ளும் ஏராளமாக இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு தடுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஓய்வூதிய வயது  திருத்தியமைக்கப்பட வேண்டும்

இவ்வாறான விமர்சன, சாடல்களையும் அதன் பின்புலத்தையும் ஆராய்ந்த பின்னர் 2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவு திட்டத்தினை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். அதில் அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி  தற்போது அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 31, 2022க்குள் ஓய்வு பெற வேண்டும். ஆனாலும் மருத்துவம், தாதியர், நீதித்துறை போன்ற துறைகளில் உள்ள அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது எனவும் அவர்களின் ஓய்வு வயதை 63 ஆக உயர்த்துவதற்கும் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

படஉதவி -www.gettyimages.com

ஓய்வுபெறும் வயதை 65ல் இருந்து 60 ஆக குறைப்பதற்கு அரசினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புகளும் வெளியாகின. இதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றினை ஸ்ரீ ஜயவர்தனபுர பொதுவைத்தியசாலையின் விஷேட மருத்துவர்கள் நால்வர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொதுவைத்தியசாலையின்  பணிப்பாளர் சபை மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  அதேபோன்று அந்த மனுவானது விசாரணைக்கு உட்படுத்தப்படும் வரையிலும் ஏற்கனவே இருந்த 65 என்ற ஓய்வு வயது எல்லையில் எந்த மாற்றங்களும் இடம்பெறக் கூடாது என அதுசார் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இவ்விதமாக மருத்துவர்களின் ஓய்வு வயது குறைக்கப்படுமிடத்து நாட்டில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். 60 வயது ஓய்வு என்பதானது நாட்டின் சுகாதாரத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், ஏற்கனவே நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் ஏராளமான மருத்துவர்கள் வேறு நாடுகளுக்கு செல்கின்றனர் என்பதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஓய்வூதிய வயதை  65லிருந்து 60 ஆகக் குறைப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து, வேலை தேடும் பட்டதாரி ஒருவர் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில்,“இந்த தீர்மானத்தை ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன். ஒருவரை 65 வயது வரை அரசு பணியில் அனுமதிப்பது என்பது பலருக்கு செய்யும் அநீதியாகவே பார்க்கப்படல் வேண்டும்.  இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  அனைவருக்கும் அரசாங்க வேலை அவசியம் என்று நான் கூறவில்லை, இளைஞர் யுவதிகள் சரியான காலகட்டத்தில் அரச துறையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும். அதனை இன்னும் 5 வருடங்கள் குறைத்தாலும் நல்லது என்றே நான் கூறுவேன்” என்று கூறுகின்றார்.

அதேபோன்று “ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவது நேர்மறையான முடிவுகளைத் தரும் ஒன்றாக அமையலாம், ஆனால் அது ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நியாயமற்றது” என்று ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எங்களிடம் இந்த விடயம் தொடர்பாக இவ்விதமாக தனது கருத்து தெரிவித்தார்.

வாழ்வின் கடைசியில் அல்லது  ஓய்வு காலத்தில்

பொதுவாகவே அரசு பணியில் உள்வாங்கப்படுகின்றவர்கள், பல்கலைக் கழகத்திலோ அல்லது உயர் கல்வி நிறுவனங்களிலோ படித்தவர். அவர்கள் தம் வாழ்வின் கணிசமான காலப்பகுதியை கல்விக்காகவே செலவிடுகின்றனர். மீதமுள்ள காலத்தினை தொழில் நிமித்தம் செலவிடுகின்றனர். சிலருக்கு தங்களது குடும்பம், குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்கும் சிரமமாய் காணப்படுகின்றது. இதன் காரணமாக அரச ஊழியர்களுக்கு நிம்மதியான ஓய்வு காலம் அவசியப்படுகின்றது. தனிநபர்களின் ஆயுள் காலம் குறைவடைந்து செல்லும் காலகட்டத்தில் 65 வயது வரைக்கும் பொதுப்பணியில் இருத்தி வைத்திருப்பது எப்படியும் நியாயமில்லை” என்ற வகையிலும் ஓய்வு தொடர்பில் அவர் எமக்கு தனது வெளிப்பாட்டினை அறியத் தந்திருந்தார்.

எது எவ்வாறானபோதிலும் “அரச பணியாளர்களின் ஓய்வு வயதினை அடிக்கடி இவ்விதமாக மாற்றிக் கொண்டிருக்கும் செயலானது, அரச ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அசாதாரணமாகவே பார்க்கப்படல் வேண்டும்” என்று தற்போது அரச பணியில் கடமையாற்றும் ஒருவர் எமக்கு கூறியிருந்தார். 

படஉதவி- The Economic times 

மேலும் இது தொடர்பில் அவர் தொடரும் போது., “கட்டாய ஓய்வு வயதினை 60 ஆக அல்லது 65ஆக வைத்திருப்பது தொடர்பில் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை, ஆனால் இப்படி அடிக்கடி அதனை மாற்றுவது சரியல்ல. பெரும்பாலான அரச ஊழியர்கள் தனது குடும்பத்தினை, குழந்தைகளின் நலத்தினை இந்த ஓய்வு வயதினை அடிப்படையாகக் கொண்டே திட்டமிடுகின்றனர். ஆனால் இப்படி இதனை அடிக்கடி திருத்தும்போது அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனால் ஓய்வு வயது 50, 60 அல்லது 65 எதுவாக இருந்தாலும் அதனை நீண்ட காலத்திற்கு திருத்தாமல் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும்”  என்று தெரிவித்திருந்தார்.

ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

புதிய திருத்தத்தின்படி ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த ஆண்டுகளை விடவும் இவ்வாண்டு ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2000 என்ற கணக்கில் உயரும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக ஒரு வருட இறுதியில் ஓய்வு பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 18000 என்று காணப்பட்டாலும், இந்த வயது குறைப்பு நடவடிக்கை காரணமாக அது 20000  ஆன அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் பற்றாக்குறை?

மேற்குறிப்பிட்ட அளவில் மாற்றங்கள் ஏற்படும் போது எதிர்காலத்தில் அரச நிறுவனங்களில் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும் நிலை ஏற்படும் என தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதேபோன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிமித்தம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அரச சேவைக்கான திட்டங்களில் மறுசீரமைப்பு

எவ்வாறாயினும், தற்போது அரசாங்கத்தால் பொருளாதாரம் தொடர்பில் திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் அரச மற்றும் அரை அரச பொது நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும், அண்மையில் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.. அதன்படி பணிநீக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்கள் தொடர்பிலும் தீர்மானங்கள் எட்டப்பட உள்ளன.

முக்கியமாக, இலங்கையில் குறிப்பிட்ட கடமைகள் இல்லாத சுமார் 100000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அரச ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் திறமையற்றவர்கள் என அமைச்சர்கள் பலர் அண்மையில் கருத்துகளை முன்வைத்திருந்தனர். அதே போன்று சில அரச நிறுவனங்களின் சேவைகளையும், செயற்பாடுகளையும் இப்போது உள்ள ஊழியர்களில் பாதி அளவினரை மாத்திரம் கொண்டு திறன்பட பூர்த்தி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிங்கள மொழியில: கயன் சமரவீர
தமிழ் மொழிபெயர்ப்பு: சந்திரன் புவனேஷ்

 

Cover Image – www.dailynews.lk

கட்டுரைக்கான ஆதாரங்கள்

www.pensions.gov.lk

www.dailymirror.lk

www.statistics.gov.lk

www.sundaytimes.lk

Related Articles