என்று தணியும் இந்த விளம்பர தாகம்!

இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் !

கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?.

மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!.

இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,  இது மக்களை ஏமாற்றும் செயல் தானே ?

விளம்பரங்கள் ஒரு பொருளோட விற்பனையை பல மடங்கு அதிகரிக்குது , அதனால் எல்லா நிறுவனங்களும் விளம்பரம் அதிக அளவு செய்றாங்க அத நாம் தவறுனு சொல்ல முடியாது!. ஆனால் “நுகர்வோரை பயமுறுத்தி” பொருள் வாங்க வைப்பதும், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ள முடியாது!. என்னப்பா, இது புது  பொரலியா இருக்கு என்று தோன்றலாம். ஆனால் நாம் கண்களை திறந்து கொண்டே ஏமாறத்தான் செய்கிறோம் .

விளம்பரங்களால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் “அட்சய திருதி” அன்று நகை வாங்குவதனால் செல்வம் பெருகும் என்ற விளம்பரம்!, எனது அம்மாவிடம் கேட்டல் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நகை வாங்கும் ஐதீகம் எல்லாம் என்று சொல்கிறார், சரி  நமது வேதங்களில் எங்காவது இதைப்பற்றி உள்ளதா என்று எனது தமிழ் ஆசிரியர் தூக்கத்தையும் கெடுத்து பார்த்தாகிவிட்டது!. அப்படி எந்த வேதமும் சொல்லவில்லை, பின் எப்படி அட்சய திருதியை அன்று அவ்வளவு கூட்டம் நகை கடைகளில்?. (அதுவதாது பரவாயில்லை சென்ற ஆண்டு இரண்டு, மூன்று நாட்கள் சிறப்பு விற்பனை, ஒரு நாள் தானே அட்சய திருதியை என்பது!)

“வெறும்  பண விரயம் என்றால் கூட பரவாயில்லை, நம் உடல் நலமும் அல்லவா பாதிக்கிறது”. ஒரு விளம்பரம்; அதில் மேல்தட்டு குடும்பத்தின் அம்மா ஒருவர், தன்னுடைய குழந்தையை வெளியே விளையாட போகாதே 10  விதமான நோய்கள் வரும் என்று சொல்லி பின் இந்த “சோப்பு ” தான் இதற்கு தீர்வு என்றும் சொல்வார். (சுரங்க தொழிலாளிகளுக்காக கண்டு பிடிக்கப்பட்டதுதான் சோப்புனு வரலாறு சொல்லுது)

குழந்தை நல மருத்துவர், குழந்தைகள் கண்டிப்பாய் மண்ணில் விளையாட வேண்டும் சின்ன சின்ன நோய்கள் வரணும் அப்பதான் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகரிக்கும் என்று சொல்கிறார்.

இதை போன்றதே கொசு விரட்டி, கரப்பான் பூச்சி விரட்டி, வீடு துடைக்கும் கிருமி நாசினி முக்கியமாக கழிவறை சுத்திகரிப்பான் (பாவம் இந்த விளம்பரங்களுக்கு என்று முன்னாள் கதாநாயகன் சிக்கி விடுகிறார்) என்று உங்கள் வீடு, உடம்பு என்று அனைத்தும் கிருமிகள் வாழும் நரகம் போன்றதாகவும் அந்த நிறுவனத்தின் பொருள் தேவ தூதன் போலும் காட்டி நம்மை வாங்க வைக்கிறார்கள். என்னப்பா ரொம்ப பில்டப் குடுக்குறியே என்று தோணலாம், ஆனால் ஆய்வின்படி கடந்த சில ஆண்டுகளாக சுத்தமாக இருப்பதற்காக பழைய ரூபாய் நோட்டுக்களை கூட கைகளில் தொட அஞ்சுகிறார்களாம்! (இது ஹைபர் ஆக்டிவிட்டி மக்களே)

விளம்பரங்களின் முக்கியமான இரண்டு உத்தி அது எந்த பொருளாக இருந்தாலும், ஒன்று கவர்ச்சி/காதல் மற்றொன்று குழந்தைகளை கவர்வது!. அது பைக், கார் எதுவாக இருந்தாலும் சரி. அதுவும் 5 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு பொருளை மிட்டாயுடன் கொடுத்து 50 ரூபாய் வசூலிப்பது எல்லாம் வேறு லெவல். பையில் 100 ரூபாய் உடன் தான் குழந்தைகளை கடைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். விளம்பரங்களை பார்க்கும் நடுத்தர குடும்ப குழந்தைகளுக்கு அதன் விலை என்ன புரியவா போகிறது? பெற்றோர்கள்தான் பாவம். அப்ப ஏழை குழந்தைகளுக்கு இந்த உயர் விலை மிட்டாய் எல்லாம்? “காக்கா முட்டை” பட பாணி தான்!

ஒரு விளம்பரம் அதில் ஒரு அப்பா தன் பையனை தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்கிறார், பையன் மறுக்கிறான், காரணம் என்னவென்று பார்த்தால் அவன் பையில் இருக்கும் மிட்டாயை தாத்தா பிடிங்கி விடுவார் என்பது போல் போகிறது அந்த விளம்பரம். இப்படித்தான் நாம் நம் கலாச்சாரத்தை விளம்பரங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஒரு சத்துப் பொடி, அறிவுக்கு ஒன்று, நோய் எதிர்ப்புக்கு ஒன்று என்று வகை வகையான பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுகிறன. அவை எந்த அளவு இயற்கையானது என்று ஆராய்ந்து பார்திருக்கிறோமா?, உண்மையில் நினைவுத் திறன், உடல் வளர்ச்சி என்பது நமது உணவு மற்றும் பரம்பரை வாகு (ஜீன்) பொறுத்தது.

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கறுப்பு மற்றும் மாநிறம் உள்ளவர்கள்தான் அதிகம் இதை எந்த செயற்கை முகப் பூச்சாலும் மாற்ற முடியாது. அப்படி மாற்றி இருந்தால் மொத்த தமிழகமும் இப்பொழுது வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும்!. காரணம் அனைத்து வீடுகளிலும் இன்று முகப் பூச்சுக்கள் கிலோ கணக்கில் உள்ளன. சரி அவர்கள் சொன்ன காலக்கெடுவில் நமது முகம் வெள்ளையாகவில்லை என்றால் நம்மால் அவர்களை என்ன செய்ய முடியும்?, ஒன்றும் செய்ய இயலாது. எல்லா விளம்பரத்திலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற வாசகம் வரும் இனி அதையும் கவனியுங்கள்!.

இங்கு கவலை அளிப்பது நமது இயற்கை நிறமான கறுப்பை, தாழ்வான நிறமாக நம்மையே நினைக்க வைத்ததுதான். குறிப்பாக பெண்கள், 10இல் 9 விளம்பரத்தில் வெள்ளையாக இருக்கும் பெண்கள்தான் சமூகத்திற்கு குரல் கொடுப்பார்கள். தைரியமாக பேசுவார்கள் கறுப்பாய் இருப்பவர்கள் தைரியம் அற்று முகத்தை மூடியபடிதான் இருப்பார்கள் என்று நம் மனதில் விதைத்து விட்டார்கள். இதனினும் கொடுமை பல விளம்பரங்கள் பெண்களை கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே காட்டுகிறது. காண்டம்  விளம்பரத்தை விட “பாடி ஸ்ப்ரே” விளம்பரங்கள்தான் ஆபாசத்தின் உச்சம்! ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பாடி ஸ்ப்ரே அடித்தால் திருமணம் ஆன பெண் கூட அந்த ஆடவர் உடன் செல்வாரம்!. (டேய் இதுக்கு பேரு வேறடா) இன்னொரு விளம்பரத்தில் பார்த்த உடன் அவருடன் உடல் உறவு கொள்ள தோன்றுமாம், இதை நம் குழந்தைகள் பார்ப்பார்கள் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?.

ஒரு பொருள் உற்பத்தி செலவில் பாதியை இன்று அதை விளம்பரப்படுத்த செலவளிக்கிறார்கள். அப்படி என்றால் அதை பொருளின் விலையில்தானே சேர்ப்பார்கள் ?. நடிகர் ராஜ்கிரண் அவர்களை ஒரு வேட்டி தயாரிப்பு நிறுவனம் அணுகி, சில கோடி வரை சம்பளம் தருகிறோம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். நீங்கள் எனக்கு இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால் அதை மக்களிடம்தானே வசூலிப்பீர்கள் என்னைப் பார்த்து பொருள் வாங்கும் ரசிகனை ஏமாற்ற மாட்டேன் என்று நடிக்க மறுத்துவிட்டாராம். சரி இப்ப எதுக்கு இத சொல்றிங்க பாஸ், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சத்யராஜ், மதன் பாப் போன்ற நடிகர்கள் “ஈமு கோழி” வளர்ப்பு விளம்பரத்தில் நடித்து அதை பிரபலப்படுத்தினார்கள் , ஆனால் முடிவு அதில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தெருவில் நின்றார்கள் பலர். நடிகர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை இருப்பினும் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் விளம்பரத்தை பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டும் கருதாமல் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் மேகி இங்கு தடை செய்யப்பட்டது. பின் அனுமதி வழங்கப்பட்டது. இப்பொழுது விளம்பரத்தில் மிகவும் பாதுகாப்பன உணவு என்று விளம்பரம் செய்கிறார்கள்! எதை நம்புவது? இதுவாது பரவாயில்லை “விக்ஸ் பொருட்களுடன் 380 மருத்துவ பொருட்களை இந்தியா தடை செயதுள்ளது” ஆனால் அதற்கு முன்பே விக்ஸ் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள்! பின்  இந்தியா ஏன் அதை அனுமதித்து பின் தடைசெய்தது (அரசியல்வாதிகளுக்கு பங்கு சரியா போய்ருக்கும் போல) இன்றும் அனைத்து மருந்தகம் மற்றும் பெட்டிக்கடைகளில் தாரளமாக விக்ஸ் கிடைக்கிறது. தடைசெய்யப்பட்ட பொருட்களின் தீமைகளை மக்களிடம் விளக்கி சொல்வது அரசின் கடமை. காரணம் இங்கு அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது நீங்கள் தானே!… அதே போன்று குண்டூசி விற்கும் விளம்பரத்தில் கூட  வெள்ளை உடையுடன் மருத்துவர் போல் ஒருவர் வந்து பொருள் வாங்க சொல்கிறார்கள், உண்மையிலயே நீங்களா டாக்டர் தானா ?….

இப்பொழுதெல்லாம் பல்லு விளக்க கையில் பேஸ்ட், பிரஸ் எடுத்தால் யாரோ நான்கு பேர் சுத்தி நின்று உங்க பேஸ்ட்ல அது இருக்கா இது இருக்கானு கேக்குற மாதிரியே தோணுறது எனக்கு மட்டும் தானா?…

 

Related Articles