Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 07 – “நாட்டார் கதைகள்”

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டுரையினை எழுதுவதற்காக கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கதைகளை வாசித்துள்ளேன். இணையத்தில் இருந்தும் சுற்றத்தில் இருந்தும் முக்கியமாக கலாநிதி கி. விசாகரூபன் எழுதிய ஈழத்து நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து என்னால் பெருமளவான கதைகளை திரட்ட முடிந்தது.

கதைகள்- ஓர் அறிமுகம்

(mamtavn.files.wordpress.com)

இன்றிலிருந்து சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அனுமானிக்கப்படுகின்ற மனித இனம் வழி வழியாக கடந்து வந்த பாதையின் குறிப்புகளே கதைகள். இந்த குறிப்புகளின்  உண்மைத்தன்மை என்பதை மீறிய ஒரு பதிவு நுட்பம்தான் கதைகளின் கரு. சிறிய சிறிய விடயங்களில் தொடங்கி உலகின் மிகப்பெரிய வரலாற்றுத் தடங்கள் வரை எல்லாமுமே கதைகளின் கோப்புகள்தான். இன்று கிடைத்திருக்கின்ற வரலாற்று தடயங்களில் இருந்து உருவாகின்ற அனுமானங்கள் எல்லாமே கதைகள் தான். கல்லை உரசி பொறி துவக்கினானிலிருந்து கணனியில் பொறி கிளப்பினான் வரை எல்லாம் கதையின் பரிமாணங்கள் தான். ஒரு சம்பவமோ சில சம்பவ கோர்ப்புகளோ வெளிப்படும் போது அவை கதைகளாக மாற்றம் கொள்கின்றன. ஒரு காதாசிரியன் கதைகளை உருவாக்குகிறான் என்ற இன்றைய போக்கிலிருந்து சற்றே விலகி சாதாரண மாந்தர்கள் எல்லாருமே கதாசிரியர்கள் ஆகின்றார்கள் வரலாற்றில். பொதுவாகவே அனுபவங்கள் தான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவருகின்ற கதைக்குறிப்புகளாக இருக்கின்றன. ஓர் உண்மைச்சம்பவமோ அல்லது புனைவோ அனுபவமாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்கள்தான் இன்றைய கதைகள்.

வடக்கின் நாட்டுப்புறக் கதைகள் – தெய்வீக கதைகள் ஒரு பார்வை

கதைகளுக்கு பிறப்பிடம் கிராமங்கள் தான். இதில் வேற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஏனென்றால் ஆதி வரலாறுகளில் கிராமங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வடக்கின் புவியியல் அமைப்பு, விளிம்புகளில் கரையோரமாகவும் மத்திம பகுதிகளில் விளைநிலமாகவும் அடியில் காட்டு நிலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த நிலவியல் அடிப்படையிலேயே கதைகளும் அதன் போக்கை வகுத்துக்கொள்கின்றன. வெவ்வேறு நிலவியலில்  வாழுகின்ற மாந்தர்கள் அந்தந்த நிலவியலின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த நிலவியல் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. இந்த பயத்தின் குறியீடே அவர்களின் கதைகளில் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கின்றன.

கதை 01- வேளாங்கண்ணி மாதா

“……….. நடுக்கடலில் பெரிய புயல் வீசி கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க கப்பலில் இருந்த எல்லாரும் “மாதா” என அலறிக்கொண்டிருந்தனர். …………”

கதை 02- உக்கிர வைரவர்

“……..தண்ணி உக்கிரமாய் பாயத்தொடங்கியது. வர வர தண்ணீர் வேகமாக அடித்துகொண்டுவருவதைப்பார்க்க இவருக்கு ஐமிச்சம் ஆகிவிடுகிறது….. வேட்டி சால்வை எல்லாவற்றையும் மம்பட்டிக்கு சார்த்தி விட்டு ஓடி வந்துவிட்டார்…… “

இந்த பயத்தை ஏற்படுத்தும் ஊடகமாக இயற்கையே பயன்படுத்தப்பட்டது. இயற்கை கொள்கின்ற சீற்றம் அவர்களுக்கு தெய்வ குற்றமாகப் படுகின்றது. அந்த இடத்திலே ஏற்படுகின்ற உதவியை அவர்கள் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உதவியாகவும் அதன் பின்னரான சம்பவங்கள் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட குறீயீடுகளே என்ற நம்பிக்கை ஒவ்வொரு கதைகளிலும் பலமாக எதிரொலிக்கிறது.

கதை 03- லொரென்சியார் கோவில்

“…. தாமஸ் (ஐயம்பிள்ளை) லொரென்சியாரை பூசித்துவரும் காலத்தில் தீவாலய முன்றலில் நிறுவுவதற்கு கொடிமரம் இல்லையே என்று மனம் வருந்திய சில நாட்களில் பரவைக்கடலில் முப்பத்தைந்துஅடி உயரமான சவுக்கு மரம் ஒன்று வந்தடைந்தது ………”

பெரும்பாலான கதைகளின் பின்னணி அவ்வூர்களில் இருக்கின்ற கோவில்கள் தேவாலயங்கள் பற்றியே இருக்கின்றன. பக்தி என்ற பயத்தை மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்காக முன்னைநாள் அனுபவங்களை சொல்லுகின்ற பின்னணியை கதைகள் கொண்டிருக்கின்றன.

(pixabay.com)

கதைகளில் மையக் கருவாக இருக்கின்ற பக்தியினை உறுதிப்படுத்த புனைகின்ற சம்பவங்கள் அனைத்தும் தெய்வத்தை அலட்சியப் படுத்துகின்றதன் விளைவையோ அல்லது மிக இக்கட்டான சூழ்நிலையில் தெய்வத்தின் உதவியையோ காரணப்படுத்தி கூறப்படுகின்றன.

கதை 04 – காளியாச்சி

“………… பிறகு ஒரு நாள் ஒரு சோனக மனுசி அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால தலையை விரித்து அந்த முடியை கையால் கோரி விட்டுக்கொண்டு அம்மனை அலட்சியமாக பார்த்துவிட்டு போனாள். அப்படி பார்த்த மனுஷியின் தலை அப்படியே திரும்பி விட்டது…………..”

கதை 05 – அற்புத இளநீர்

“……….. அடுத்த நாள் அபிஷேகத்துக்கு பால் பழம் கொண்டு கோயிலுக்கு போனார்கள். கோயில் ஐயாவிடம் இளநீர் கிடைக்காததை எண்ணி வருந்த ஐயா தோட்டத்தில் போய் பார்க்குமாறு கூறி அனுப்பிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தபோது செவ்விளனி குலையாக காய்த்து கிடந்தது…….”

பக்தியோடு உள்ளூர சாதியமும் கதைகளில் ஓடுகின்றது. கீழ் சாதியினரை ஊர் மக்கள் வெறுப்பதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க மறுக்கின்ற அல்லது ஓதுகின்ற போக்கினையையும் எடுத்துக்காட்டுகின்றது.

கதை 05 – அற்புத இளநீர்

“….. பறையனுக்கு வீட்டில் இளநீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர்……..”

கதை 06 – பாவம் கழித்தல்

” …….. அவர்கள் இந்த வளவுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்உங்களையும்  அவர்கள் போலவே நினைத்துக்கொள்வேன். ……”

(pixabay.com)

சில கதைகள் மதப்பிரிவினை இருந்ததை கூறுகின்றன. மதங்களுக்கிடையே வன்முறை முற்றி இருப்பதை, அவர்கள் மற்றைய மதங்களை மதிக்காமல் இருப்பதையும் காட்டுகின்றது. இன்று வடக்கில் பேசாமல் ஒளிந்து காணப்படுகின்ற மதப்பிரிவினை ஒருகாலத்தில் பெரும் கலவரமாகலாம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல் மிக வலிமை வாய்ந்தது. எவ்வளவுதான் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் புரிந்துணர்வு இல்லாமலே இந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் மூன்று சமய வணக்கஸ்தலங்களும் ஒன்றாக இருந்தாலும், கூடவே இருக்கின்ற மீன் இறைச்சி சந்தையின் நிலவுகை இன்றைய வவுனியா சூழலில் இருக்கின்ற மத, மன நல்லிணக்கத்தின் சிறந்த குறியீடு.

போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆங்கிலேய கால கட்ட கதைகளின் போக்கு இன்னொருவிதமானது. இதில் கிறிஸ்தவ மத பின்னணியை கொண்ட புனைவுகளே அதிகமாக காணப்படும். அவர்களின் மத தாக்கம் அல்லது மத திணிப்பு கதைகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர்களும் சரி இந்துக்களும் சரி எந்த பேதமுமின்றி கிறிஸ்தவர்களாகும் கதைகளே காணப்படுகின்றன. மேலை நாட்டவர் நீர் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்தமையால் கதைப்பின்னணி கடலோர வாழ்வியலை மையப்படுத்துகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே இறைவனின் உதவிக்கு நன்றியாக கட்டப்பட்டிருக்கின்றன. மதம் மாற்றல் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்ட கதைகள் அந்த பருவ காலத்துக்குரியவை.

கதை 07 – சவேரியார் கோவில்

“……………..முஸ்லீம் யாத்திரைகள் யாவரும் சவேரியாரின் நாமத்தை கோஷித்த வண்ணமே வந்து அவரின் அடியை வணங்கினார்கள். நிலைமையை புரிந்துகொண்ட சவேரியார் ஜெசுவின் நாமத்தை உச்சரித்து குமாரனை உயிர்பித்தார். ………..”

கதை 08- லொரென்சியார் கோவில்

“…………ஐயம்பிள்ளையாரின் ஏற்கனவே இருந்த நாச்சிமார் கோவில் மறைய அவ்விடத்தில் கண்டெடுத்தல் கல்லை வைத்து லொரென்சியார் கோவில் அமைத்து வணங்கினார். நாச்சிமாரை வணங்கிய சமூகம் லொரென்சியாரை வணங்க தொடங்கியது…….”

(pixabay.com)

 

வெளிநாட்டவர்கள் மதத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணித்ததாக எந்த கதைகளுமே கூறவில்லை. மேலான சமயம் ஒன்றிக்கு தாமாக மாற்றப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. கோவில் அழிப்புக்கள் பல தாமாகவே மறைந்ததாகவும் அந்த இடத்திலே கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவானதாகவுமே வலிந்து கூறப்படுகின்றன.

வரலாற்றை மறைக்க புனையப்பட்ட வெறும் பொய்க்கதைகளாகவே இதை கருத முடிகின்றது. கதைகளில் பல இருவரோ அல்லது ஒருவருடனேயே முடிவடைந்து விடுகின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத நிகழ்வுகள் அங்கிருக்கும் ஆட்சிக்கோ நம்பிக்கைக்கோ ஏற்ப திரிபுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். காலத்தின் நிலைமையோடு வழிபாடும் கடவுள்களின் சக்திகளும் அவர்களால் செய்யப்படுகின்ற அற்புதங்களும் வலுவைமாற்றிக்கொள்கின்றன. அந்த அந்த இடங்களில் வலுப்பெற்றிக்கின்ற சமயத்தினை பொருட்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன. இதிலிருந்து கதைகளில் உள்ள புனைவுத்தன்மை வெளிப்படுகின்றது. இவற்றினை ஒட்டுமொத்தமாக நோக்கும் பொருட்டு மிகத்தெளிவாக திரிபாக்கப்பட்ட கதைகளின் வடிவமாகவே தெய்வீக கதைகள் இன்று உலவுகின்றன என்பது ஓரளவு ஊர்ஜிதமாகின்றது.

இது சமய விருப்பு வெறுப்பு இன்றி எழுதப்பட்டது. கதைகளின் மீதான எனது தனிப்பார்வையிலேயே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. எந்த திணிப்புகளும் இதிலில்லை.

அடுத்த கட்டுரையில் சமூகம் சார்ந்த கதைகளையும் சமூக விழுமியங்கள் சார்ந்த கதைகளையும் அரசு ஆட்சி போன்றவை சம்பந்தமான கதைகளும் பற்றி ஆராயலாம்.

Related Articles