சுற்றாடல்

2 நிமிடங்களில் வாசிக்க

உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்திராத புதிய உயிரினங்கள் பசுபிக் சமுத்திரத்தில்

Published

2 நிமிடங்களில் வாசிக்க to read

Search Icon Search Icon Search Icon

“2016 இலும் கூட, இந்த உலகில் மறைந்திருக்கும் விடயங்களை நாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சரியமானது. குறிப்பாக, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது, 20 அடிகளையும் விட நீளமான பாலூட்டி விலங்கென்பது, உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கின்றது.”

தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் தென்மேற்கு கடலறிவியல் நிலையத்தில் பணியாற்றுகின்ற மூலக்கூறு மரபியல் விஞ்ஞானியான பிலிப் ஏ. மொரின் என்பவர்தான், இந்தக் கருத்தை கூறினார். 2016 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில், பசுபிக் சமுத்திரத்தில் புதியதொரு உயிரியல் இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

படம் – nationalgeographic.com

ஜப்பானிய மொழியில் “கராஸு“ என்பதன் அர்த்தம் காகம் என்பதாகும். ஆனாலும், கண்டுபிடிக்கப்பட்ட விலங்கானது, ஒரு பறவை அல்ல. ஆழ் கடலில் தெளிவாக கண்டுகொள்ள முடியாதளவு கடும் கருப்பாக இருப்பதனால் “கராஸு“ என்று பெயரிடப்பட்ட இந்த விலங்கு, Giant Beaked Whale, எனப்படும் திமிங்கில வகையைச் சேர்ந்ததாகும். நூற்றாண்டுகளாக மனித கண்களிலிருந்து மறைந்து, பசுபிக் சமுத்திரத்தில் உலாவிய இந்த திமிங்கில அதிதி குறித்தே இக்கட்டுரை பேசுகின்றது.

ஹொகைடோ கடலோரத்தில் விசித்திரமான திமிங்கிலங்கள்

ஜப்பானுக்கு சொந்தமான ஹொகைடோ தீவின் கரயோரத்தில், இறந்துபோன மூன்று திமிங்கிலங்கள், 2013 ஆம் ஆண்டு கரையொதுங்கின. இறந்துபோகும் திமிங்கிலங்கள் இவ்வாறு கடற்கரையில் ஒதுங்குவது வழமையானதுதான். ஆனால், இந்த மூன்று திமிங்கிலங்களும், உயிரியல் விஞ்ஞானிகள் இதற்கு முன்னர் கண்டறிந்திருந்த திமிங்கிலங்களை விடவும் வித்தியாசமானதாக இருந்தன. வட பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகின்ற Baird’s Beaked Whale எனப்படும் 22 திமிங்கில வகைகளையும் விட, சிறியதாகவும், இருண்ட நிறமாகவும் இருந்த இந்த திமிங்கிலங்களின் நீளம் 24 அடிகளாகவும், நிறை 16,000 இராத்தல்களாகவும் இருந்தன.

இந்த புதிய திமிங்கிலங்கள் குறித்து சரியான ஒரு முடிவு இல்லாதிருந்தமையால், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என உயிரியல் விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். இந்த பரிசோதனையின் பின்னர் கிடைத்த பெறுபேற்றின்படி, இந்த திமிங்கிலங்கள் Beaked Whale  வகையைச் சேர்ந்த புதிய திமிங்கிலங்களாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது. ஆனாலும், இறுதி முடிவை எடுப்பதற்கான தகவல்கள் ஆய்வுக் குழுவிடம் இருக்கவில்லை. எனவே, இது குறித்து மேலதிக ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான பொறுப்பு, தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் தென்மேற்கு கடலறிவியல் நிலையத்தில் பணியாற்றுகின்ற மூலக்கூறு மரபியல் விஞ்ஞானியான பிலிப் ஏ. மொரின் உள்ளிட்ட குழுவுக்கு வழங்கப்பட்டது.

ப்ரிபிலொஃப் தீவுத் தொகுதியின் புனித ஜோர்ஜ் தீவு

படம் – sputniknews.com

விஞ்ஞானி பிலிப் ஏ. மொரீன் உள்ளிட்ட குழு, ஹொகைடோவின் கரையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று திமிங்கிலங்கள் குறித்து மேலதிக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற வேளையில், அலெஸ்காவில் பேரின் கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள ப்ரிபிலொஃப் தீவுத் தொகுதிக்குச் சொந்தமான புனித ஜோர்ஜ் தீவில், இறந்துபோன திமிங்கிலமொன்று கரையொதுங்கியது. பாழடைந்திருந்த கடற்கரையில் பாதி புதைந்திருந்த திமிங்கிலத்தை, ஒரு இளம் உயிரியல் ஆசிரியர் முதலில் கண்டார். அவர், அங்கு வசித்து வந்த மீன்கள் குறித்த பெண் ஆய்வாளர் ஒருவருக்கு தகவல் வழங்கினார்.

இந்த ஆய்வாளர் இறந்துபோன திமிங்கிலத்தை ஆராய்ந்தார். இது வழமையான திமிங்கிலங்களை விட சற்று பெரிதாகவும், இருண்ட நிறமுடையதாகவும் இருந்த Baird’s Beaked Whale திமிங்கிலம் என்றே கருதினார். ஆனாலும், மிக நுணுக்கமான மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இந்த திமிங்கிலத்தின் மேற்பரப்பு சிறகு, சாதாரண அளவை விடவும் பெரியதாகவும், நெகிழ்வானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. அத்தோடு, இந்த திமிங்கிலமானது ஒரு வளர்ந்த  Baird’s Beaked Whale ஆக இருக்கும் வகையில் பெரியதாக இல்லாதபோதும், மஞ்சள் நிறமான அதன் பற்கள் வித்தியாசமான சில தகவல்களையே வெளிப்படுத்தின.

ஜப்பானிய கடல் பாரம்பரியங்கள் குறிப்பிடப்படும் கராஸு திமிங்கிலங்கள்

இந்த திமிங்கிலங்கள் குறித்து தொடர்ந்தும் ஆய்வுகளில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், ஹொகைடோ கரையிலும், புனித ஜோர்ஜ் தீவிலும் கிடைத்த திமிங்கிலங்கள் Baird’s Beaked Whale வகை அல்ல என்றும், அவை இதனை விட முழுமையாக வேறுபடுகின்ற புதியதொரு திமிங்கில வகை என்றும் இறுதி முடிவுக்கு வந்தனர். அளவில் பெரியதாகவும், விசித்திரமான தோற்றத்தையும் கொண்டுள்ள இந்த திமிங்கில வகையை, கராஸு என்ற பெயராலேயே ஜப்பானிய மீனவர்கள் பல வருடங்களாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.

படம் – sputniknews.com

அண்ணளவாக எட்டு தசாப்தங்களாக ஜப்பானிய மீனவர்கள், கராஸு திமிங்கிலங்களை கண்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திமிங்கிலங்களை கண்டுகளிக்கும் பெரும்பாலான ஜப்பானியர்கள், கராஸுவை Baird’s Beaked Whale வகை திமிங்கிலம் என்றே அடையாளப்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், 40 அடிகள் அளவு நீளமாகவும், 24,000 இராத்தலையும் விட அதிகமான நிறையையும் கொண்ட Baird’s Beaked Whale வகை திமிங்கிலங்களை விட கராஸு திமிங்கிலம் அளவில் சிறியதாகும்.

அரிதாகக் காணக் கிடைக்கின்ற கராஸு திமிங்கிலங்கள், ஜப்பானின் ஹொகைடோ தீவுக்கு வடக்கே அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையிலுள்ள நொமுரோ சமுத்திர சந்தியில் மட்டுமே உலாவுகின்றன.  இவற்றை வசந்த காலத்தில் மட்டுமே பார்க்க முடியும். அத்தோடு கராஸு திமிங்கிலங்களின் இருண்ட நிறம் மற்றும் கடல் மேற்பரப்பில் தெரியாமல் நீந்தும் இயலுமையை வழங்குகின்ற நெகிழ்வான மேற்பரப்பு சிறகு ஆகியவை காரணமாக, இந்த திமிங்கிலங்களை கடலில் காண்பது மிகவும் கடினமாகும்.

கராஸு திமிங்கிலங்கள் பற்றிய சாட்சிகள்

எவ்வாறாயினும், கராஸு திமிங்கிலங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்துமே, இறந்துபோன கராஸுக்களிலிருந்து பெற்றுக்கொண்ட மாதிரிகளைக் கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு, இயற்கைச் சூழலில் கராஸு திமிங்கிலங்கள் அவதானிக்கப்படவில்லை என்பதால், இவை பற்றிய விரிவான தகவல்களை வெளிக்கொணர்வதற்கு விஞ்ஞானிகளுக்கு முடியாமலிருக்கின்றது.

ஆனாலும், இந்த ஆராய்ச்சிகளுக்கு மத்தியில், 1948 இல் எலூசன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட Baird’s Beaked Whale வகையைச் சேர்ந்ததென கண்டெடுக்கப்பட்டு, ஸ்மித்சோனியன் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கராஸு திமிங்கிலமொன்றின் மண்டை ஓடொன்றை ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது. அத்தோடு, லொஸ் ஏன்ஜல்ஸின் இயற்கை வரலாற்று நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த, அலெஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னுமொரு மாதிரியும், இப்போது இந்த ஆராய்ச்சிக் குழுவிடம் உள்ளது.

படம் – hdnux.com

இதற்கு மேலதிகமாக, 2004 இல் உனஸல்கா தீவில் கரையொதுங்கிய கராஸு திமிங்கிலமொன்றின் திசு மாதிரிகளை சேகரித்துக்கொள்வதற்கும் ஆராய்ச்சிகளர்களுக்கு முடிந்தது. அத்தோடு, இந்த திமிங்கிலத்தின் முழுமையான எலும்புக்கூட்டை உனலஸ்கா உயர் கல்லூரியின் உயிரியல் மாணவர்கள், பாடசாலை விஞ்ஞானகூடத்தில் வைத்துள்ளனர்.

புதிய திமிங்கிலத்துக்கு புதிய பெயர்

புதிய திமிங்கில வகையாக உறுதியாக கண்டறியப்பட்டாலும், இன்னும் இந்த அதிதிக்கு விஞ்ஞானப் பெயர் வழங்கப்படவில்லை. எனவே, இன்னுமே இதனை கராஸு திமிங்கிலம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். எனினும், புதிய அதிதிக்கு ஒரு பெயரை வைப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் எடுத்துவருவதாக தெரிகின்றது.

இந்த வகையில், சமீபத்திலேயே கராஸு திமிங்கிலத்துக்கான விஞ்ஞானப் பெயரும் பொதுப் பெயரும் கிடைக்கப்பெறும். அத்தோடு, இவை பற்றிய உறுதியான தகவல்ளையும், இவை ஏனைய Beaked Whale களிலிருந்து வேறுபடும் விதத்தையும், மிருக உலகம் குறித்து ஆர்வம் உள்ளோர் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஆக்கம்: தரணி வீரசிங்க

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

இவ்வாக்கம் தொடர்பான உங்களது கருத்து

சிறப்பு
தகவல்
மகிழ்ச்சி
துக்கம்
கோபம்
வேடிக்கை

கருத்துக்கள்