Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை

இலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க பாடசாலைக்கு போகக்க, “லன்ச் ஷீட்” எண்டு ஒன்று இருந்திச்சு, அதுல சாப்பாட்ட சுத்தி கொண்டு போனம்” என்று வரலாறு சொல்லுவோம்! அது மட்டுமா? சூப்பர் மார்கெட்டுக்கு போகும்போது முன்பெல்லாம் கொண்டு போவோமே சாக்குப் பை! அதனை கொண்டுபோய்த்தான் பொருட்கள வாங்கணும். இனிமேல் பொருட்களை  பத்திரம் பண்ணணும், பராமரிக்கணும், எதோ கண்டோம், எடுத்தோம், பாவித்தோம், தூக்கி வீசினோம் என்று எதுவுமே செய்ய முடியாது! மொத்தத்தில் பொறுப்புணர்ச்சி, திட்டமிடல், அளவான நுகர்வு இப்படி நல்ல பண்புகள் ஒவ்வொன்றாக வெளியில் வரும்.

அட ஆமாங்க! அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது நமது சமூகம். இந்த “Use and throw” (ஒருமுறை பாவித்தபின் தூக்கி எறி) கலாச்சாரம் நமது கீழைத்தேய நாடுகளுக்குள் வந்து, செய்த மாற்றங்கள், சீர்கேடுகள் எல்லாம் பொலித்தீன் பாவனைக்குப் பிறகுதானோ என்னவோ. மேலோட்டமாக பார்த்தால் பெரிய தாக்கங்கள் புரியாது, ஆனால் பொலிதீன் என்ற பழக்கவழக்கம் எமது அன்றாட வாழ்க்கை, கலாசாரம் போன்றவற்றில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பதை உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

எதிலீனில் மேற்கொள்ளப்பட்ட உயர் அழுத்தப் பரிசோதனையில் தவறுதலாக உருவான விளைவுதான் இன்று உலகம் முழுதும் ஆக்கிரமித்து, இயற்கைக்கே அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இப்பொலித்தீன் (media.licdn.com)

1933 இல் ICI என்ற Imperial Chemical Industries ஆய்வகத்தில் எரிக் பாவ்செட் (Eric Fawcett) மற்றும் ரெஜினால்ட் கிப்சன் (Reginald Gibson) ஆகியோரினால் எதிலீனில் மேற்கொள்ளப்பட்ட உயர் அழுத்தப் பரிசோதனையில் தவறுதலாக உருவான விளைவுதான் இன்று உலகம் முழுதும் ஆக்கிரமித்து, இயற்கைக்கே அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இப்பொலித்தீன்!

பள்ளி நாட்களில் விவாதம், ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி இப்படி எது வந்தாலும், நமக்குக் கிடைக்கும் தலைப்புக்களில் முக்கியமான ஒன்று “யுத்தமும், சமாதானமும்”. மற்றயது “சூழல் மாசு”, முக்கியமாக பிளாத்திக்கு உபயோகம். எல்லோரும் ஒருமுறை பாடசாலை நாட்களுக்குப் போய் நான் சொல்வதை சரிபாருங்கள். உண்மைதான் இல்லையா? அவ்வளவுதூரம் எமக்குத் தலைவலியாய் இருந்த பொலித்தீனுக்கு இலங்கை அரசு ஒரு அதிரடித் தீர்வைக் கொண்டுவந்திருக்கிறது.

இலங்கைக்கு இருக்கும் தேசிய, சர்வதேசப் பிரச்சனைகளை பட்டியலிட்டு மாளமுடியாத இச்சூழ்நிலையில், எப்போது என்ன சுமைகள் எமது தோள்களின்மேல் வந்தமரும் என்ற குறிப்பின்றி நகர்ந்துகொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அறிவித்திருக்கும் பொலித்தீன் பாவனை பற்றிய சட்டதிட்டங்கள் நாட்டை ஏதோவொரு வகையில் நலன்பெறச் செய்யும் ஆருடமாகவே தோன்றும். ஆம், 2006ஆம் ஆண்டு அமைச்சராகவிருந்த இன்றைய ஜனாதிபதி அறிமுகப்படுத்திய பொலித்தீன் பாவனை விதிமுறைகளின் தொடர்ச்சியாக, அமைச்சரவை அங்கீகாரத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரப்போவதாய் அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சாத்தியமா?

கடைகளில் பொருள் கொள்வனவின்போது கடதாசி, துணி போன்ற உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பொதிகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் (frugalandthriving.com.au)

அப்படிச் சாத்தியமானால் இலங்கையின் நடைமுறையில் அது எவ்வாறான மாற்றங்களை கொண்டுவரும்? அம்மாற்றங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நீதியில் பெற்றுத்தரப்போகும் வாய்ப்புகள் என்ன? இது ஏற்படுத்தப்போவது நலவா? நஷ்டமா? இப்படி கடந்த சில தினங்களாக இலங்கை மக்கள் நகம்கடித்தவண்ணம் இருக்கின்றனர். இயற்கைக்குச் செய்யும் நலன் மனித சமுதாயத்திற்கும் நலனைத்தானே விளைவிக்கும்?

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சை பரிபாலனம் செய்யும் அடிப்படையில் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இத்திட்டத்தை மூன்று கால எல்லைக்குள் செயற்ப்படுத்த முன்மொழிந்திருக்கிறார். நடக்குமா? இல்லையா? என்பதைப்பற்றிய வாதப் பிரதிவாதங்களை விடுத்து, நடந்தால் நன்றாக இருக்கும் என்ற மனோநிலையுடன் அவ்வேறுபட்ட திட்ட ஒழுங்குகளை ஆராய்வோம்.

குறுங்கால நடவடிக்கைகள்

பொலித்தீன் உயிரியல் முறையில் பிரிந்தழியும் இயல்பற்றது என்ற ஒரு காரணமே பிரதியீடுகளை நோக்கிய எமது முன்னெடுப்புக்களுக்கு போதுமானதாக இருக்கிறது (fthmb.tqn.com)

  • அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.
  • 20 மைக்ரோன் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பயன்பாடு, வியாபாரம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஏலவே விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்
  • CEA இன் அனுமதியோடு 20 மைக்ரோன் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பயன்பாட்டை அங்கீகரித்தல்
  • “Lunch Sheets” எனப்படும் பொலிதீன் வகையின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கான தடை
  • பொலிஸ்டைரின் கொண்டு தயாரிக்கப்படும் பொதிகள், கோப்பைகள், தட்டுக்கள் மற்றும் கரண்டிகள் போன்றவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கான தடை
  • பொலிதீன் பொதிகளில் சமைத்த அல்லது பதனிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை
  • கடைகளில் பொருள் கொள்வனவின்போது கடதாசி, துணி போன்ற உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பொதிகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல்
  • பொது இடங்களில் பிளாத்திக்கு மற்றும் பொலித்தீன் பொருட்களை தகனம் செய்வதை தடுத்தல்
  • உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாத்திக்கு பிரதியீடுகளை அறிமுகப்படுத்தல்

ஒப்பீட்டளவில் பொலித்தீன் பாவனையின்மூலம் சூழலுக்கு விடுவிக்கப்படும் கார்பன் அடிச்சுவட்டின் அளவு அதன் பிரதியீடுகளான காகிதம் மற்றும் துணிகள் போன்றவற்றால் விடுவிக்கப்படும் கார்பன் அடிச்சுவட்டின் அளவைப் பார்க்கிலும் மிகக் குறைவு. ஆதலால் போலித்தீனை தடைசெய்து அதற்கான பிரதியீடுகளை உபயோகிபதால் ஏற்படப்போகும் நிகர விளைவு அல்லது நன்மை என்ன?  என்ற வாதப் பிரதிவாதங்களும் இல்லாமலில்லை. இருந்தும், பொலித்தீன் உயிரியல் முறையில் பிரிந்தழியும் இயல்பற்றது என்ற ஒரு காரணமே பிரதியீடுகளை நோக்கிய எமது முன்னெடுப்புக்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

இலகுவாகச் சொன்னால் உணவு, குடிநீர், பானங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் கொண்டுசெல்லல் மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றில் புதிய மாற்றீடுகளையும் வழிமுறைகளையும் தனியாள் மற்றும் குடும்ப அளவில் தேர்வுசெய்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிடுங்கள். இந்த பொலித்தீன் தடை உத்தரவு எம்மனைவரையும் இன்னும் நூறு ஆண்டுகள் பின்னோக்கிய எமது முன்னோரின் சிறந்த கலாச்சார விழுமியங்களை நோக்கி இட்டுச்சென்றால் அது எம் பாக்கியம்தான்.

உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பிளாத்திக்கு பிரதியீடுகளை உற்பத்திசெய்யக்கூடிய இயந்திரங்களின் இறக்குமதியில் வரிவிலக்களித்தல் (factorydirectpromos.com)

இடைக்கால நடவடிக்கைகள்

  • உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பிளாத்திக்கு பிரதியீடுகளை உற்பத்திசெய்யக்கூடிய இயந்திரங்களின் இறக்குமதியில் வரிவிலக்களித்தல்
  • பிளாத்திக்கு மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியில் 15% வரி அறவீடு

நீண்டகால நடவடிக்கைகள்

  • பிளாத்திக்கு பொருட்களின் மீழ்சுழற்சி பாவனையை முற்றாக இல்லாதொழித்தல்

இந்த சட்டதிட்டங்கள் அமைச்சரவை அங்கீகாரத்தோடும், வாகனப் போக்குவரத்து விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டபோது மற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் போன்றவற்றாலும், ஏனைய வியாபாரக் காந்தங்களின் தலையீட்டினாலும் முளையிலேயே அழிந்துவிடாமல் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெற வேண்டி பிரார்த்திப்போம்.

அப்படி இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைத் திருநாட்டின் வளங்களின் நிலைபேறான இருப்புக்கு அது மாபெரும் உறுதுணையாக அமையும்.

நாட்டு மக்களின் பங்களிப்பு என்ன?

அப்படி இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைத் திருநாட்டின் வளங்களின் நிலைபேறான இருப்புக்கு அது மாபெரும் உறுதுணையாக அமையும். (inhabitat.com)

முன்னாளில் இயற்கையழிவுகள் இயற்கையாக உருவானவையாய் இருந்தான். ஆனால் இன்று அநேகமான அழிவுகள் மனித செயற்பாட்டினாலேயே ஏற்படுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இயற்கைக்கு மனிதன் விடும் அச்சுறுத்தல் பின்னாளில் இயற்கை மனிதனுக்கு விடுக்கும் அச்சுறுத்தலாக மாறும்! இயற்கை எழில்கொஞ்சும் இச்சிறு தீவு அவ்வாறான அழிவுகளை தாங்க வல்லதா?

எனவே, தெய்வாதீனமாக அரசு எடுத்துள்ள இம்முன்னெடுப்பை எமது அடிப்படை கடமையாய் நினைத்து அவதானத்தொடும், சிரத்தையோடும், பொறுப்புணர்வோடும் செயலாற்றவேண்டியதும், சக குடிமக்களையும் எதிர்காலத் தலைமுறையினரையும் இயன்ற அளவில் இச்சீரிய கலாச்சாரத்திற்கு வழிப்படுத்தும் எமது தலையாய கடமை. அதுவே எமது பிள்ளைகளுக்கு நாம் வழங்கும் மிகப்பெரிய வளமும்கூட.

Related Articles