இலக்கியம்

4 நிமிடங்களில் வாசிக்க

ஆதலால் காதல் செய்வீர்

Published

4 நிமிடங்களில் வாசிக்க to read

Search Icon Search Icon Search Icon

“காதல் காதல் காதல் காதல்

காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல் சாதல்”

என்பது மகாகவி பாரதியின் கருத்து. ஆனால் “காதலுக்காகவெல்லாம் உயிரை கொடுப்பது மடத்தனம்” என்பது நவீனகால யுவன், யுவதிகளின் கருத்து. எது சரி? வினைச் சொல்லான காதலின் பொருள் புரியுமாயின் ஒருநிலையில் இரண்டுமே சரியாகும். ஒரு வரலாற்று நடைமுறையின் பின்னணியில் இது எவ்வாறு என்பதைக்  காண்போம்.

படம்: tumblr

மனித உறவுகளிடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றங்கள் காலப் பெருவெளியின் நினைவுப் பள்ளத்தில் பேரலை கொண்டு பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடும் காட்டாறுகளாகவும், சில நேரம் சலனமேதுமின்றி மௌனித்துப் போகும் சிற்றோடைகளாகவும் தங்கிப்போகும். இதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் உணர்வு என்பது சூறாவளியினால் அசுரத்தனமான அதிவேகப் பாய்ச்சலில் பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தைப் போன்றது.

உலகம் முழுவதிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்கள் இருபாலருக்கும் பொதுவான இந்த உணர்வினை இருவேறு கூறுகளை மையமாக வைத்துப் பிரித்துப் பார்க்கிறது. முதலாவது மெய் சார்ந்தது மற்றொன்று மனம் சார்ந்தது. அதாவது மெய் சார்ந்ததைக் காமம் என்றும் மனம் சார்ந்ததை காதல் என்றும் வகைப்படுத்துகிறது. காலம் கடந்தும் அவை பெரிய மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே இயங்குகிறது.

பலநூறு ஆண்டுகளாய் ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலுக்கான இலக்கணங்கள் இனம், நிறம், வயது, படிப்பு, முக்கியமாக சாதிய, மத சிந்தனை போன்ற காரணிகள் மூலம் அதற்கெனத் தனித்தனி மரபிணை உள்ளீடாக வைத்துச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டுச் செயல்பட்டது. ஆனால், மனித இனம் இன்புற்று வாழ்வதற்கான உயிர்வளியே காதல் என்பதை எந்தச் சமூகமும் முதன்மைப்படுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ இல்லை. அதுவே காதலைப் பற்றித் தவறான சிந்தனை உருவாகக் காரணமாகிவிட்டது.

படம்: tamilarkadhal

ஆக அகப்பொருள் இலக்கணம் கண்ட தமிழர்களைத் தவிர மற்ற எல்லோரும் காதலையும், காமத்தையும் வெவ்வேறாகப் பார்த்ததன் விளைவுதான் இது என்பதை உணரமுடிகிறது. தமிழர்கள் அகவிலக்கணம் கண்ட வழிமுறையைப் புரிந்துகொண்டால் அது மேலும் வியப்பாக உள்ளது.

மண்ணிலிருந்து எழுந்து கடும்பாறை மீது முயங்கிப் பேராற்றலோடு வீழும் அருவியையும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் தானாக உடைந்து, இணைந்து நிலைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு மாற்றம் பெரும் அணுக்களையும் எவ்வாறு  ஓர் பொது இலக்கணத்துக்குள் வரையறுத்துக் கட்டிப் போடுவது மடத்தனமோ அதுபோலத்தான் காதலும். புத்தம் புது மலரில் தேன் உண்ணும் வண்ணத்துப் பூச்சிகளும், புனலாடும் மீன்களும், புணர்தல் நிமித்தம் கண்டங்கள் கடந்து செல்லும் பட்சிகளும் காதலுக்கு இலக்கணம் வகுத்துக் கொள்ளாதபோது மனிதருக்கு மட்டும் எதற்கு? “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” என்று வள்ளுவனே கூறிவிட்டதால் மேற்கொண்டு நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

படம்: tamilnadupapularart

மற்றவர்களைப் போல வரையறுக்கப்பட்ட இலக்கணத்துக்குள் காதலைக் கட்டிப் போடாமலும்,  காதலையும், காமத்தையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்காமலும், அவ்விரண்டும் கலந்த உளவியல் உணர்விலிருந்தே இயல்பாக  தனக்கான அகப்பொருள் இலக்கணங்களைத் தகவமைத்துகொண்டு இன்புற்று வாழ்ந்த ஒரே இனம் இந்த உலகிலேயே தமிழினம் மட்டும்தான். தொல்காப்பியத்தின் அகப்பொருள் இலக்கணத்தை விளக்கும் ‘நம்பி அகப்பொருள்’ அகத்திணையியல்,  களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என அவற்றை வகைப்படுத்தி விளக்குகிறது. எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படியொரு அகவாழ்வியல் நெறிமுறைகளைக் கையாண்ட தமிழர்களைத் தொல்குடியெனச் சாற்றுவதில் என்ன வியப்பிருக்கிறது.

காதலையும், காமத்தையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்காமலும், அவ்விரண்டும் கலந்த உளவியல் உணர்விலிருந்தே இயல்பாக  தனக்கான அகப்பொருள் இலக்கணங்களைத் தகவமைத்துகொண்டு இன்புற்று வாழ்ந்த ஒரே இனம் இந்த உலகிலேயே தமிழினம் மட்டும்தான். படம்: siragu

ஆக காமமெனும் பெருநெருப்பின் தனலுக்குள் பனிசூழ் மேகத்தினூடே உலவும் குளிர்நிலவைப் போன்ற அன்பும் இரண்டறக் கலந்த  அகச்சிந்தனையை எப்போதும் கடைபிடித்தனர். இவ்வாறு திருமணத்திற்கு முன்பான களவியல் ஒழுக்கத்திலும், திருமணத்திற்குப் பின்பான கற்பியல் ஒழுக்கத்திலும் காதலும், காமமும் ஒன்றெனக் கொண்டாடுவதுதான் தமிழர் மரபின் தனிச் சிறப்பு.

பண்டைத் தமிழ் சமூகத்தில் நிலவிய ஒரு நடைமுறையின் விளக்கத்தோடு இதை மேலும் விரிவாக அறியலாம்.

மடலேறுதல்:

களவொழுக்கத்தின் சிறப்பு காதலோடு கூடிய காமமென்பதால் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்தை உணர்ந்த தலைவனும், தலைவியும் அதைக் கற்பு வாழ்க்கையில் நெறிப்படுத்த முயல்வார்கள்.

பல்வேறு காரணங்களால் தலைவியை அடைய முடியாத தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் யாரும் சூடாத பூளை, ஆவிரை, எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு, பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்வான்.

உடம்பும், உயிரும் நாணத்தை ஒரு ஓரமாய்த் தள்ளி நிறுத்திவிட்டு மடலேறுவதற்குத் துணிந்துவிடுகிறது.
படம்: tamilnadupapular

 “காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்    

      மடலல்லாது இல்லை வலி” 

                                                                  –குறள்.1131

   “நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

     நாணினை நீக்கி நிறுத்து”.              

                                                                –குறள் -1132.

   “மடன்மா கூறும் இடனுமா ருண்டே”

                                                             —தொல்காப்பியம்

   “மற்றை, அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து”

                                                           —கலித்தொகை 138.

காதல் பிரிவு தரும் துயரை உயிரும் தாங்கவில்லை, காமப் பிரிவு தரும் துயரை உடம்பும் தாங்கவில்லை, என்ன செய்வான்? இந்த நோயைத் தாங்காத உடம்பும், உயிரும் நாணத்தை ஒரு ஓரமாய்த் தள்ளி நிறுத்திவிட்டு மடலேறுவதற்குத் துணிந்துவிடுகிறது. இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.

நம்பி அகப்பொருள் ‘மடல் கூறல், மடல் விலக்கு’ என இருநிலைகளை முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு.

மடலூர்தல் மிகவும் இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். தன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.

மடல் ஏறும் வழக்கம் எப்பொழுது தோன்றியது? எதற்காக பனை மடலைத் தலைவன் தேர்ந்தெடுத்தான்? பனைமடலில் எதற்கு ‘மா’ செய்தான்? போன்றவற்றிக்கான விடைகளைச் சங்க இலக்கியப்பதிவுகளில் காணமுடியவில்லை. மடலேறுவோர் பெண்ணை(பெண்பனை) மரத்திலிருந்து பெற்ற மடலாலே ‘மடல்மா’ செய்துள்ளதைக் குறுந்தொகை பாடல் 182, நற்றிணை பாடல் 146, கலித்தொகை பாடல் 141 வழி அறியலாம். சங்கத் தமிழரின் வாழ்வில் பனை மரம் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வறட்சியையும் தாங்கி வளரும் இயல்பினைக் கொண்டது. ஆண், பெண் என்னும் இருவகையினைக் கொண்டுள்ளது. ஆண் பனையினை ஏற்றை என்றும் பெண் பனையினைப் பெண்ணை என்றும் அழைத்துள்ளதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கக் கூடிய பனை ஓலை, பனை மட்டை, பன்னாடை, நுங்கு, பனம்பழம் போன்ற பனையின் அடிமுதல் நுனி வரையுள்ள அனைத்துப் பொருட்களும்  பயனுடையதாக இருந்துள்ளது.

ஏற்றைப் பனை பூப்பதோடு நின்று விடும். பெண்ணைப் பனை பூத்துக் காய்க்கும் இயல்புடையது. எனவே சமூகத்தில் பெண்ணை மதிப்புமிக்க ஒன்றாக உள்ளது. அதனைத் தெய்வமாக வழிபட்டுள்ளதை நற்றிணை 303 ஆவது பாடல் காட்டுகின்றது. எனவே மடலேறுவதற்குப் பெண்ணை பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இப்பெண்ணையை ‘மா’ வாக கொண்டது போல் தான் காதலித்த பெண்ணையும் அடைவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக பெண்பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனக் கருதலாம். பனங்கருக்கு முட்களால் ஆனது. முள் என்பது எதிர்ப்பை அல்லது மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகக் கருதலாம்.

பனைமடலால் ‘குதிரை’ செய்ததாகப் பல உரையாசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மூலப் பிரதிகளில் ‘மா’ என்று மட்டுமே காணப்படுகிறது. மா என்பது விலங்கின் பொதுப்படையான பெயர் அக்காலத்தில் குதிரையின் ஆதிக்கத்தைவிட யானையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. எனவே ‘மா’ என்பது யானையாகவும் இருந்திருக்க கூடும். குதிரை/யானையின் உருவத்தை மடலால் செய்து மடலேறி வருவதாலும் ‘அடன்மாமேல் ஆற்றுவேன்’ என்று கலித்தொகைத் தலைவன் கூற்றிலிருந்து இவ்வாறு மடலேறுபவர்கள் குதிரை/யானை மீதிருந்து போர் செய்யும் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கலாம் எனக் கூறலாம். முன்பு தலைவன் ஒருவனுக்கு மணக்கொடை மறுத்ததால் மனமுடைந்து பனை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கக் கூடும். அதன் விளைவாக பனையேறி விழுவதற்கு முன்பாக மடலேறி வந்திருக்கலாம். இதற்குக் குறுந்தொகை 17 ஆம் பாடலில் வரும் ‘பிறிது மாகுப’ என்பதற்கு வரைபாய்தல் என்பதைவிட பனையிலிருந்து வீழ்ந்து மடிதல் என்றும் கருத இடமுள்ளது.

படம்: tamilarkadhal

மடலேறுதல் என்ற வரலாற்று நடைமுறையோடு ஆய்ந்து பார்க்கையில் “அன்பின் வழியது உயிர்நிலை” என்று அன்புடன் கலந்த காமத்தை முன்னிருத்துவோர்க்கு உண்மைக் காதலை இழந்தபின் சாதலே என்ற  பாரதியின் கூற்று சரியாகிறது. அதேவேளையில் “அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” என்பதுபோல் பிரிவுத்துயரால் மெய் மட்டுமே வருந்தும் காமத்தை முன்னிருத்துவோர்க்கு இரண்டாவது கூற்றும் சரியாகிறது.

காதலோ, காமமோ இன்னும் பிறவோ பெயரளவில் மட்டும் மாறுதல் கொள்ளட்டும். தமிழர் மரபின் வழியில் தொடரும் நம் காதல் காட்டாற்று வெள்ளம்போல் தடையின்றிப் பாயட்டும், இடையூறின்றித் தழுவட்டும். ‘ஆதலால் காதல் செய்வீர்’ தமிழர் வழியில்.

 

இவ்வாக்கம் தொடர்பான உங்களது கருத்து

சிறப்பு
தகவல்
மகிழ்ச்சி
துக்கம்
கோபம்
வேடிக்கை

கருத்துக்கள்