Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ராஜதந்திர அழகி கிளியோபாட்ரா

எகிப்தின் இறுதி அரசியான கிளியோபட்ரா உலக வரலாற்றில் வாழ்ந்த பிரபலமான ஒரு அரசியாவார். கி.மு. 69 இல் பிறந்த அவர், கி.மு. 30 இல் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோமின் ஜூலியஸ் சீஸர் மற்றும் மார்க் அந்தோனி ஆகியோருடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, கிளியோபட்ரா ஒரு சர்ச்சைக்குரிய பாத்திரமாகவே வரலாற்றில் இணைந்துள்ளார்.

தொலமி அரச வம்சம்

கிளியோபட்ரா அரச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் எகிப்து மக்களின் தலைவி என்பதை தெரிவிப்பதற்காக, பாரம்பரிய எகிப்து தேவதையான ஐஸிஸ் தேவதையின் உருவத்தை எடுத்துக்கொண்டார். படம் : tellwut.com

மஹா அலெக்சாண்டரின் ஒரு தளபதியாக இருந்த தொலமி, கி.மு. 323 இல் அலெக்சாண்டர் மரணித்ததும், எகிப்தின் ஆட்சியாளராக மாறினார். அவர், 1ஆம் தொலமி என்ற பெயரை சூட்டிக்கொண்டு, தொலமி அரச வம்சத்தை ஸ்தாபித்தார். கிளியோபட்ரா இந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவராவார். இந்த அரச வம்சத்தில் கிளியோபட்ரா என்ற பெயரைக் கொண்ட ஏழாவது நபரான இவர் 7 ஆவது கிளியோபட்ரா ஃபிலோபேடர் என்று அறியப்படுகிறார்.

தொலமி அரச வம்சம், எகிப்து நாகரிகத்திலிருந்து சில அடையாளங்களை எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதும், பெரும்பாலும் அது ஒரு கிரேக்க அரச குடும்பமாகவே இருந்து வந்தது. உதாரணமாக, கி.மு. 305 இல் தொலமி “பாராவோ” என்ற பதவியைக்கூட தனக்கு சூட்டிக்கொண்டார். ஆனாலும், எகிப்து மக்களிடம் தனது ஆட்சிக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு செய்திருப்பார். இதேவேளை, அண்ணளவாக மூன்று நூற்றாண்டுகளாக தொலமி அரச வம்சம், தனித்துவமான ஒரு கிரேக்க குடும்பமாகவே இருந்திருக்காது என்ற நியாயமான சந்தேகமும் நிலவுகின்றது. குறிப்பாக, ஆபிரிக்கர்களும் இந்தக் குடும்பத்தில் இணைந்திருப்பர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பொதுவாக தொலமி அரச வம்சத்தினர் எகிப்து மொழியை பயன்படுத்தாதபோதும், கிளியோபட்ரா அந்த மொழியைக் கற்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தார் என்று குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு, கிளியோபட்ரா அரச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் எகிப்து மக்களின் தலைவி என்பதை தெரிவிப்பதற்காக, பாரம்பரிய எகிப்து தேவதையான ஐஸிஸ் தேவதையின் உருவத்தை எடுத்துக்கொண்டார்.

வரலாற்றில் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து எகிப்தில் நிலவி வருகின்ற பாராவோ என்ற பதவியை வகித்த கடைசி நபராகவும் கிளியோபட்ராவே இருந்தார்.

சமகால தகவல்கள் போதாமை

கிளியோபட்ராவின் வாழ்வு குறித்த, அவரது காலத்து தகவல்களை தேடிக்கொள்வது மிகவும் கடினமாகும். அவர் பற்றிய வரலாறானது, பிற்காலத்து கிரேக்க மற்றும் ரோம வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தே உருவாக்கப்படுகின்றது.

கி.மு. 51 இல் தந்தை இறந்ததன் பின்னர், கிளியோபட்ராவும், அவரது சகோதரரான 13 ஆவது தொலமியும் எகிப்தின் சம ஆட்சியாளர்கள் ஆகினர். படம் : viola.bz

12 ஆவது தொலமி அவுலெடஸின் மகளாக, கி.மு. 69 இல் கிளியோபட்ரா பிறந்தார். கிளியோபட்ராவின் தாய் யார் என்பதை வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. கி.மு. 51 இல் தந்தை இறந்ததன் பின்னர், கிளியோபட்ராவும், அவரது சகோதரரான 13 ஆவது தொலமியும் எகிப்தின் சம ஆட்சியாளர்கள் ஆகினர். அப்போது கிளியோபட்ராவின் வயது 18 ஆகவும், அவரது சகோதரரின் வயது 10 ஆகவும் இருந்தது. அக்காலத்து சம்பிரதாயங்களின்படி, இவர்கள் இருவரும் திருமணம் முடித்துக்கொண்டதாகவும் நம்பப்படுகின்றது.

எவ்வறாயினும், நீண்டகாலம் செல்ல முன்னரே கிளியோபட்ராவிடமிருந்த அதிகாரம் பறிபோனது. கிளியோபட்ராவுக்கும் தொலமிக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது. அத்தோடு, தொலமியின் ஆலோசகர்கள், கிளியோபட்ராவை ஆட்சியிலிருந்து நீக்கியதாகவும் கருதப்படுகின்றது. இதன்படி, கி.மு. 49 இல் கிளியோபட்ரா சிரியாவுக்குச் சென்றார்.

கிளியோபட்ரா சிரியாவுக்குச் சென்றமை, அவர் ஒரு கெட்டிக்காரப் பெண் என்பதை தெளிவுபடுத்துகின்ற ஒரு சம்பவமாகும். எகிப்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்காக, சிரியாவிலிருந்துகொண்டு, ஒரு கூலி இராணுவத்தை அவர் திரட்டினார். கி.மு. 48 இல் இந்த இராணுவத்தை எடுத்துக்கொண்டு, எகிப்தை நெருங்கினார் கிளியோபட்ரா.

ஜூலியஸ் சீஸரை சந்தித்தல்

ரோம ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஜூலியஸ் சீஸருடன் மேற்கொண்ட யுத்தத்தில் தோல்வியடைந்த பொம்பே எகிப்துக்கு வந்தார். ஆனால், எகிப்தில் அவர் கொலை செய்யப்பட்டார். இதன் மூலம் சீஸரின் உதவியைப் பெற்றுக்கொள்ள எண்ணினார் தொலமி. ஆனால், கிளியோபட்ராவும் சீஸரின் உதவியைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்.

தனது எதிரியாக இருந்தபோதும், பொம்பே கொலை செய்யப்பட்டமை குறித்து சீஸர் அதிருப்தி வெளியிட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. எனவே, தொலமி குறித்து சீஸர் அவ்வளவு நல்லபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. இதேவேளை, கிளியோபட்ராவும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

வரலாற்றாசியர் ப்லூடார்க், ஜூலியஸ் சீஸரின் வாழ்க்கை தொடர்பில் எழுதிய “Life of Julius Caesar” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஜூலியஸ் சீஸர் தங்கியிருந்த மாளிகையைச் சுற்றியும் தொலமியின் இராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. எனவே, சிசிலியின் அபொலொடோரஸ் சுமந்து சென்ற நில விரிப்பினுள் மறைந்துகொண்டுதான், கிளியோபட்ரா மாளிகையினுள் நுழைந்தார்.

ஜூலியஸ் சீஸர், கிளியோபட்ராவிடம் மயங்கிப் போனார். எனவே, கிளியோபட்ராவின் அரச உரிமையைப் பாதுகாப்பதற்காக, அவர் போரிட்டார். படம் : elizabethtaylor.com

ஜூலியஸ் சீஸர், கிளியோபட்ராவிடம் மயங்கிப் போனார். எனவே, கிளியோபட்ராவின் அரச உரிமையைப் பாதுகாப்பதற்காக, அவர் போரிட்டார். மேலதிக இராணுவம் வரும் வரையில், சீஸரின் ரோம இராணுவத்தால் தொலமியின் இராணவத்தை தோல்வியடைச் செய்ய முடியாமல் போனது. ஆனாலும், மேலதிக படைகள் வந்ததும், தொலமியின் இராணுவம் தோற்றுப்போனது. தொலமி, தலைநகர் அலெக்சாண்டிரியாவை விட்டும் தப்பியோடினார். அவர் நைல் நதியில் மூழ்கி மரணித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

மீளவும் கிளியோபட்ரா எகிப்தின் அரசியானார். அத்தோடு, அப்போது 13 வயதான அவரது இன்னுமொரு சகோதரரான 14 ஆம் தொலமியும், சம ஆட்சியாளரானார். எவ்வாறாயினும், அக்காலத்தில் கிளியோபட்ரா ஒரு பிரபலமான ஆட்சியாளராக இருக்கவில்லை. இக்காலத்தில், நைல் நதியில் நீர் அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டதால், உணவு உற்பத்தி குறைந்து, எகிப்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது.

இதேவேளை கி.மு. 47 இல் கிளியோபட்ராவுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. அதற்கு தொலமி சீஸர் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் குழந்தையை சிஸேரியன் (சிறிய சீஸர்) என்று அழைத்தார் கிளியோபட்ரா.

கி.மு. 46-45 காலப் பகுதியில் கிளியோபட்ரா தனது சகோதரன் மற்றும் மகனுடன் ரோமுக்குச் சென்றார். அப்போது சீஸர் ரோமுக்கு சென்றிருந்தார். அங்கு நகருக்கருகே அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் அவர்கள் தங்கினர். சீஸருக்கும் கிளியோபட்ராவுக்கும் இடையிலான உறவு மறைக்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. எவ்வாறாயினும், சீஸர் திருமணம் முடித்த ஒருவராக இருந்ததனால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கி.மு. 44 மார்ச் 15 ஆம் திகதி சீஸர் கொல்லப்பட்டார். பின்னர், கிளியோபட்ரா உள்ளிட்டோர் மீண்டும் எகிப்து நோக்கிச் சென்றனர். சில நாட்களின் பின்னர், கிளியோபட்ராவின் இளைய சகோதரரும் மரணமடைந்தார். இவர் கிளியோபட்ராவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகின்றது. எவ்வாறாயினும், இதன் பின்னர் தனது மூன்று வயதான மகனை, சம ஆட்சியாளராக நியமித்து ஆட்சி செய்தார் கிளியோபட்ரா.

அந்தோனியும் கிளியோபட்ராவும்

அவர்கள் இருவரதும் சந்திப்பு, அவர்களது இறுதி அழிவுக்கான காரணமாக அமையும் என்று, அவர்கள் இருவரும் அப்போது நினைக்கவில்லை. படம் : pinimg.com

சீஸரின் மரணத்தின் பின்னர் ரோமில் சிவில் யுத்த நிலை ஏற்பட்டது. சீஸரின் ஆதரவாளர்களான மார்க் அந்தோனி, ஒக்டேவியன், லெபீடஸ் ஆகிய மூவரும் ஒரு தரப்பிலும், சீஸரை கொலை செய்த கெஸியஸ், ப்ரூடஸ் ஆகியோர் மறு தரப்பிலும் நின்றனர். இந்தக் குழுக்களுக்கிடையில்தான் போர் ஏற்பட்டது. இக்காலத்தில் மத்தியதரைக் கடலில் அமைந்திருந்த முக்கியமான ஒரு நாடாக எகிப்து இருந்ததால், எகிப்தின் ஒத்துழைப்பை இந்த இரு தரப்பும் எதிர்பார்த்தன. சீஸர் எகிப்தில் நிலை நிறுத்தியிருந்த ரோம படைகளை, சீஸரின் ஆதரவாளர்களது தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் கிளியோபட்ரா. கி.மு. 42 இல் அவர்கள் சிவில் யுத்தத்தை வெற்றிகொண்டதோடு, ஒக்டேவியனும் மார்க் அந்தோனியும் ரோமின் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டனர்.

சீஸரின் மரணத்தின் பின்னரான காலப் பகுதியில் கிளயோபட்ராவின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கி.மு. 41 இல் மார்க் அந்தோனி தென் துருக்கியில் அமைந்துள்ள டார்ஸூஸ் நகருக்கு கிளியோபட்ராவை அழைத்தார். எனவே, டார்யூஸ் துறைமுகத்துக்கு வந்த கிளியோபட்ரா, வெள்ளி நிறத்தினாலான துடுப்புக்களையும், நாவல் நிறத்தினாலான பாய்மரங்களையும் கொண்ட தங்க நிறம் பூசப்பட்ட ஒரு கப்பலில் ஏறி, ஐஸிஸ் தேவதை போன்று அலங்கரித்துக்கொண்டு வந்தார். தன்னை கிரேக்க கடவுளான டியோனிஸஸின் உருவம் என நம்பிய மார்க் அந்தோனி, அப்போதே கிளியோபட்ராவால் கவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டார்யூஸ் துறைமுகத்துக்கு வந்த கிளியோபட்ரா, வெள்ளி நிறத்தினாலான துடுப்புக்களையும், நாவல் நிறத்தினாலான பாய்மரங்களையும் கொண்ட தங்க நிறம் பூசப்பட்ட ஒரு கப்பலில் ஏறி, ஐஸிஸ் தேவதை போன்று அலங்கரித்துக்கொண்டு வந்தார் படம் – pinimg.com

எகிப்து நாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு மார்க் அந்தோனி உடன்பட்டார். அத்தோடு, நாடு கடத்தப்பட்டிருந்த கிளியோபட்ராவின் சகோதரியை கொலை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். இந்த வகையில். கிளியோபட்ராவுக்கும், அவரது மகனுக்குமான அரச உரிமை இன்னும் உறுதிப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அவர்கள் இருவரதும் சந்திப்பு, அவர்களது இறுதி அழிவுக்கான காரணமாக அமையும் என்று, அவர்கள் இருவரும் அப்போது நினைக்கவில்லை.

கி.மு. 41-40 களில் குளிர்காலத்தை கழிப்பதற்காக மார்க் அந்தோனி அலெக்சாண்டிரியாவுக்கு சென்றார். இந்த நேரத்தில் அவரது மூன்றாவது மனைவி ஃபல்வியாவும், பிள்ளைகளும் ரோமில் இருந்தனர். அந்தோனி மீண்டும் ரோமுக்குச் சென்று, சில மாதங்களில் கிளியோபட்ராவுக்கு இரட்டையர்கள் இருவர் பிறந்தனர். இவர்களுக்கு அலெக்சாண்டர் ஹேலியோஸ் (சூரியன்), கிளியோபட்ரா செலீன் (சந்திரன்) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஃபல்வியா நோய்வாய்ப்பட்டு மரணித்ததன் பின்னர், மார்க் அந்தோனி அரசியல் ரீதியான திருமணமொன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அதாவது, ஒக்டேவியனின் சிறிய சகோதரியான ஒக்டேவியாவை திருமணம் முடித்தார். இதேவேளை, நீண்ட காலம் பிற்போடப்பட்டு வந்த பாரசீகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கி.மு. 37இல் அவர் மீண்டும் எகிப்து சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் கிளியோபட்ராவினதும், மார்க் அந்தோனியினதும் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கி.மு. 36 இல் கிளியோபட்ராவுக்கு ஃபிலோடொல்ஃபஸ் என்று இன்னுமொரு மகன் பிறந்தான்.

நாடு கடத்தப்பட்டிருந்த கிளியோபட்ராவின் சகோதரியை கொலை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். இந்த வகையில். கிளியோபட்ராவுக்கும், அவரது மகனுக்குமான அரச உரிமை இன்னும் உறுதிப்படுத்தப்பட்டது. படம் : cdn.lolwot.com

பாரசீகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், தோல்வி மனப்பான்மையுடன் திரும்பிய மார்க் அந்தோனி, ஒக்டேவியாவிடம் செல்வதைப் புறக்கணித்து, அலெக்சாண்டிரியாவிலே தங்கினார். இதேவேளை, ஜூலியஸ் சீஸரின் உண்மையான அரசியல் வாரிசுரிமை தனக்கும் கிளியோபட்ராவுக்கும் பிறந்த சிஸேரியனுக்கே உண்டு. மாறாக, சீஸர் தத்தெடுத்த மகனான ஒக்டேவியனுக்கு அல்ல என்று, கி.மு. 34 இல் மார்க் அந்தோனி தெரிவித்தார். இது ஒக்டேவியனுக்கும் மார்க் அந்தோனிக்கும் இடையில் விரிசலை உறுதிப்படுத்தியது.

கி.மு. 32 இல் ரோம செனட் சபை, மார்க் அந்தோனியிடமிருந்த அனைத்து பதவிகளையும் இல்லாமலாக்கியது. அத்தோடு, கிளியோபட்ராவுக்கு எதிராக ஒக்டேவியன் போர் பிரகடனம் செய்தான்.

கி.மு. 31 செப்டம்பர் 2 ஆம் திகதி ஒக்டேவியனின் ரோம இராணுவத்துக்கும் மார்க் அந்தோனி, கிளியோபட்ரா ஆகியோரின் இராணுவத்துக்கும் இடையில் பெரும் கடற்போர் மூண்டது. இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் உலகில் நடந்த பெரும் கடல் யுத்தங்களில் ஒன்றான எக்டியம் யுத்தமாகும். இந்த யுத்தத்தில் 250 ரோம போர் கப்பல்களும், அந்தோனி மற்றும் கிளியோபட்ராவின் 290 போர்க் கப்பல்களும் கலந்துகொண்டன. இந்த யுத்தத்தில் பங்கெடுத்த எகிப்து படையணியை கிளியோபட்ரா வழிநடாத்தினார். எனினும் ஒக்டேவியனின் படையணி, அந்தோனியையும், கிளியோபட்ராவையும் தோற்கடித்தது.

இதனைத் தொடர்ந்து வந்த வருடத்தில், ஒக்டேவியன் எகிப்தை ஆக்கிரமித்தார். பின்னர் அந்தோனியின் படை, அந்தோனியை விட்டுவிட்டு, ஒக்டேவியனுடன் இணைந்து கொண்டது. இதேவேளை, கிளியோபட்ரா தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான செய்தியொன்று, மார்க் அந்தோனியை அடைந்ததும், அவர் தனது வாளால் தன்னையே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவர் மரணமடைவதற்கு முன்னர், கிளியோபட்ராவின் மரணம் தொடர்பில் வந்த செய்தி பொய்யானது என்பது தெரியவந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

வரலாற்றுப் புராணங்களின்படி, கி.மு. 30 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கிளியோபட்ரா, பாம்பொன்றை தீண்டச் செய்து, தற்கொலை செய்துகொண்டுள்ளார். எவ்வாறாயினும் இந்தக் கருத்தை சில வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஒக்டேவியன் கிளியோபட்ராவை கொலைசெய்திருப்பார் என்பதுவே சிலரின் கருத்தாக உள்ளது.

250 ரோம போர் கப்பல்களும், அந்தோனி மற்றும் கிளியோபட்ராவின் 290 போர்க் கப்பல்களும் கலந்துகொண்ட எக்டேவியன் கடல் போர் படம் : pinimg.com

இளவரசர் சிஸேரியனையும் ரோம இராணுவம் கைதுசெய்து, கொலை செய்திருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதேவேளை, அந்தோனியினதும் கிளியோபட்ராவினதும் பிள்ளைகள் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒக்டேவியா இவர்களைப் பராமரித்தார். பிற்காலத்தில் கிளியோபட்ரா செலீன், மொரிடானியாவின் இரண்டாவது ஜுபா மன்னருக்கு திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டார்.

கிளியோபட்ரா மதிக்கப்பட வேண்டிய ஒரு பெண்ணா?

வரலாற்று மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்க்கையில், கிளியோபட்ரா ஒரு பலம்வாய்ந்த பாத்திரத்தைக் கொண்ட, ஆண்களை வசீகரிக்கும் ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சிலபோது, வழக்காறுகளிலிருந்து வெளியே சென்று செயற்பட்ட ஒரு பெண்ணாகவும் உள்ளார்.

தனது மக்களுடன் நெருங்குவதற்காக, அவர்களின் மொழியைக் கற்பதும், அவர்களது தேவதையின் உருவத்தை பின்பற்றுவதும் இராஜதந்திர வியூகங்கள் என்று சொல்லலாம். எவ்வாறாயினும், கிளியோபட்ரா பல மொழிகளையும் கற்ற ஒருவர் என்று குறிப்பிடப்படுகின்றது.

அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டபோது, சிரியாவுக்குச் சென்று, அங்கு ஒரு கூலி இராணுவத்தை திரட்டியமை, அவரது பின்வாங்காத உறுதியைக் காட்டுகின்றது. சீஸரை சந்திப்பதற்கு அவர் பின்பற்றிய தந்திரம், அவரது இடத்துக்கேற்ற அறிவைக் காட்டுகின்றது. கிளியோபட்ரா, மார்க் அந்தோனியை தனது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கு பின்பற்றிய தந்திரம், அந்தோனியை சந்திப்பதற்கு முன்னரே, அந்தோனி குறித்து அவர் நன்கு படித்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. இது ஒரு இராஜதந்திரம் என்ற வகையில் எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு விடயமாகும்.

வரலாற்று மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்க்கையில், கிளியோபட்ரா ஒரு பலம்வாய்ந்த பாத்திரத்தைக் கொண்ட, ஆண்களை வசீகரிக்கும் ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்ப டம் : pinimg.com

மார்க் அந்தோனிக்கும் கிளியோபட்ராவுக்கும் இடையில் இறுக்கமான ஒரு உறவு நிலவியதாகக் கருதலாம். அந்தோனி பாரசீகத்தில் போரிட்டு தோற்றதன் பின்னர், மீளத் திரும்புகையில், ரோமுக்கு செல்லாமல், கிளியோபட்ராவிடம் வந்தமை, அவருக்குத் மானசீக நிவாரணம் தேவைப்படுகின்றபோது, அது கிளியோபட்ராவிடம் கிடைக்கும் என்று அவர் அறிந்து வைத்திருந்தனாலாக இருக்கலாம். இவர்கள் இருவரும் இறுதி வரையில் ஒன்றாக இருந்தமையானது, கிளியோபட்ரா ஆண்களை கவர்ந்து தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் கவனம் எடுத்த ஒரு பெண் என்ற கருத்து நியாயமானதல்ல என்று கூறுகின்றது. சீஸரின் மரணம் வரையிலும், கிளியோபட்ரா அவரை விட்டுவிடவில்லை. மார்க் அந்தோனி வெற்றிபெறுகின்ற சந்தர்ப்பங்களில் போன்றே, தோல்வியடைகின்ற சந்தர்ப்பங்களிலும்கூட, கிளியோபட்ரா அவரை விட்டுச் செல்லவில்லை என்பதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

ஆக்கம்: சாமர சுமனபால

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles