பார்வையின்றி கனவை மெய்ப்பிக்கத் துடிக்கும் பரா மெய்வல்லுனர் வீரரான காலித் ஒஷ்மான்.

காலித் ஒஷ்மான். வயது 38. 12 ஆண்டுகளுக்கு முன் அவரது கண்பார்வையை இழந்துவிட்டார். “நான் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன், வாழ்க்கையில் என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எனக்கு தற்கொலை எண்ணங்கள் வந்தன, கிட்டத்தட்ட என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் முயன்றேன்”, என்றுச் சொன்னார்.

இருந்தபோதிலும், அவரது உடன்பிறவாச் சகோதரர், சித்திக் அஹமட் என்பவர் தான், அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். “என்னுடைய இயலாமையைத் தாண்டி என்னால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் கூறியதுடன் ‘உன்னால் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும். அனைவருடைய வாழ்விலும் ஏதோவொரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஏதாவது ஒன்றைச் செய்: என்றும் சொன்னார்.’ இது என்னை இயங்குதிறன் பயிற்சியில் (mobility training) ஈடுபடத் தூண்டியதுடன், இப் பயிற்சி எனக்கு வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்திச் சுதந்திரமாக இயங்க உதவியது.” என்றார் ஒஷ்மான்.

“நான் இளமையாக இருந்தபோது விளையாட்டில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை, ஆனால் தொண்டுச் சேவைகள் செய்வதில் எனக்கு எப்பொழுதும் விருப்பம் இருந்தது. நான் ஐந்து ஆண்டுகள் செஞ்சிலுவைச் சங்கத்தில் வேலை செய்ததற்கு இதுவும் ஒரு காரணம். இறுதியில், பார்வையிழந்ததன் காரணமாக அந்த வேலையை இழக்க வேண்டி நேர்ந்தது. நான் ஒரு புதிய வேலையைப் பெற்றுக்கொள்ள முயன்ற போதிலும், எனது இயலாமை காரணமாக நான் நிராகரிக்கப்பட்டேன். வேலை நேர்முகத்தேர்வுகளுக்காகக் குறைந்தது 30-40 நிறுவனங்களுக்குச் சென்றிருப்பேன்”, என்று அவர் கூறினார்.

ஒஷ்மான் தற்பொழுது கட்டுநாயக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏவியேஷன் (வான்பயணக்)  கல்லூரியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். விமான ஊழியர்கள், பயணச் சீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விமானப் பொறியியல் நிகழ்ச்சித்திட்டங்களில் மாணவர்களுக்கு உதவுகின்றார். “எனது நாளாந்த வேலைகளுக்கு உதவக்கூடிய சிறப்பு மென்பொருளைக் கொண்ட கணினியை நான் பயன்படுத்துகிறேன். என் தொலைபேசியும் கூட எனது தேவைகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.

“இயங்குதிறன் பயிற்சியின் (mobility training) தொடக்க காலம் மிகவும் கடினமானதாக இருந்தது, பேருந்துகளில் இருந்து கீழே விழுந்தேன், வடிகான்களுக்குள் வழுக்கிவிழுந்தேன். ஆனால் நான் எவ்வளவு அதிகமாக வீழ்த்தப்பட்டேனோ, அவ்வளவு அதிகமாக என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது” என்று ஒஷ்மான் கூறினார். 

2013ஆம் ஆண்டில், ஒஷ்மான் முதன்முறையாக ‘Run for Their Lives’ என்ற தொண்டு ஓட்டத்தில் (charity run) பங்கேற்றார், அதிலிருந்து, பல தொண்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அவர் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருக்கிறார். அதே ஆண்டில், அவர் நீச்சல் போட்டிகளிலும் ஈடுபட்டார். “இயலாமையுள்ளதொரு ஆளாக என்னை மற்றவர்கள் பிரித்துப்பார்ப்பதை நான் விரும்பவில்லை,” என்றார் ஒஷ்மான்.

Photo credit: Facebook

“நான் நிறையப் பயிற்சியாளர்களிடம் சென்று, எனக்கு பயிற்சி அளிக்கும்படி கேட்டேன், ஆனால் ஜூலியன் பொல்லிங்கைத் தவிர வேறு யாரும் எனக்குப் பயிற்சியளிக்க விரும்பவில்லை.” பலமுறை தன் நாட்டுக்காகப் பதக்கம் வென்ற நீச்சல் வீரர் பொல்லிங்க், ஒஷ்மானுக்குப் பயிற்சியளிக்க உடனடியாக ஒப்புக்கொண்டார். 

“அந்த வருடமே நான் பரா-தேசிய (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய) 100 மீட்டருக்கான போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றேன். மாஸ்டர்ஸ் இன்டோர் (Masters Indoor) நீச்சல் போட்டிகள் போன்ற விளையாட்டுப்போட்டிகளிலும் அவர் என்னைப் பங்குகொள்ளச் செய்தார், மேலும் அவர் என்னை வழக்கமான போட்டியாளர்களுடன் பங்கேற்க அனுமதித்தார். இது பரா-விளையாட்டு வீரர்களுடன் (மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன்) மட்டுமன்றி வேறு யாருடனும் போட்டியிடக்கூடிய நம்பிக்கையை எனக்கு வழங்கியது. இறுதியில், ஒரு இயலாமையுள்ள ஆளாக நான் பார்க்கப்படுவதை விரும்பவில்லை. நான் அவர்களுடன் போட்டியிட்டபோது, அவர்கள் என்னை வழக்கமானதொரு  விளையாட்டு வீரராக ஏற்கவேண்டும் என்று விரும்பினேன். அவர்களின் ஆதரவு மட்டுமே எனக்குத் தேவை, அனுதாபம் அல்ல”, என்று அவர் கூறினார். 


எல்லாவற்றிற்கும் மேலாக, ஒஷ்மான் மரதன் ஓட்டங்களில் பங்குகொள்கிறார், குத்துச்சண்டையும் கிரிக்கெட்டும் விளையாடுகிறார். அவர் 2017ஆம் ஆண்டுக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் டி20 உலகக்கிண்ணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “200 வீரர்களுக்கிடையே நான் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இறுதி அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். போட்டித்தொடரின் போது நான் சில போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. 2023ஆம் ஆண்டுக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் டி20 உலகக்கிண்ணத்திலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்குச் சென்ற ஆண்டு கிடைத்தது”, என்றார் ஒஷ்மான்.

“முயற்சி செய்வதால் ஒரு தீங்கும் நிகழப்போவதில்லை நான் தொடர்ந்தும் முயன்றுகொண்டேயிருந்தேன். ஒரு மாதத்திற்குள் எனது உடல் எடையை 85 கிலோவிலிருந்து 75 கிலோவாகக் குறைக்க வேண்டியிருந்தது. நான் ஒரு மாதத்திற்கு, வேலை நேரத்தின் பின், நாளாந்தம் 2-3 மணித்தியாலங்கள்  பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. சைக்கிள் ஓட்டம், நீச்சல், ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் எனது செயல்திறனை பயிற்சியாளர் ஒரு மாதத்திற்குப் பிறகு மதிப்பிட்டு, அதில் திருப்தியடைந்தால் மட்டுமே நான் போட்டியில் பங்குகொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதாக கூறினார்.  சோறு சாப்பிடுவதைக் குறைத்துவிட்டுப், பழச்சாறு அருந்தத் தொடங்கிய பிறகு நினைத்த உடல் எடையை அடைய முடிந்தது. மேலும், நான் உறுதியளித்தபடி பயிற்சி செய்ததுடன் அவருடைய தேர்விலும் சித்தியடைய முடிந்தது. இறுதியாக, IRONMAN சவாலில் பங்கேற்பதற்கான அவரது அனுமதியைப் பெற்றேன். என்னுடன் சேர்ந்து ஓடுவதற்கு நண்பர் ஒருவர் தேவைப்பட்டார்.” என்றார் ஒஷ்மான்.

அவரது இயலாமை காரணமாக நிகழ்வில் பங்குகொள்வதற்கு நபரொருவரின் உதவி ஒஷ்மானுக்குத் தேவைப்பட்டது. அச்சமயத்தில் அவருக்கு உதவும் நபராக முன்வந்தார் ஷாகி எதிரிசிங்க என்பவர். இவர்தான் ஒஷ்மானுக்குக் கடலில் நீந்தப் பயிற்றுவித்தவர். “நான் இதற்கு முன் கடலில் நீந்தியதில்லை. ஆனால் இவரது வழிகாட்டுதல் மூலம் ஒத்திசைவாக நீந்துவதற்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.

“ஆறு மணித்தியாலங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் சவாலை முடிப்பதே எனது இலக்கு. இறுதி நிகழ்வில் ஏழு மணித்தியாலங்களில் எல்லாவற்றையும் நான் நிறைவு செய்ய முடிந்தது, என் வாழ்வை மாற்றும் தருணமாக அது அமைந்தது.”

“நான் இதுவரை மூன்று IRONMAN நிகழ்வுகளை நிறைவுசெய்துள்ளேன். அவைகளில் இரு நிகழ்வு கொழும்பிலும் ஒன்று இந்தியாவின் கோவாவிலும் நடைபெற்றது. வியட்நாமில் நடைபெறவிருப்பது நான் பங்கேற்கும்  நான்காவது நிகழ்வாகும். எல்.எஸ்.ஆர் (LSR) கொழும்பு மரதன், பரிஸ் மரதன் மற்றும் சிங்கப்பூர் மரதன் ஆகிய மூன்று மரதன் ஓட்டப் போட்டிகளையும் நிறைவுசெய்துள்ளேன். பத்து IRONMAN சவால்கள் மற்றும் பத்து மரதன்களை நிறைவு செய்வதே தற்போதைய எனது இலக்காகும்.”

ஒஷ்மானின் தற்போதைய பயிற்றுவிப்பாளரும், தடகள வீரருமான மிதுன் லியனகே கூறுகையில், “விளையாட்டு எனக்கு ஒழுக்கமாக இருக்க கற்றுக் கொடுத்துள்ளது. நான் கற்றுக்கொண்டதைத் திருப்பிக்  கொடுப்பதற்கான வழி விளையாட்டுகள் தான். நாங்கள் ஓடும்போது, நான் அவருக்கு உதவுவதை விட அவர் எனக்கு மிகவும் உதவுகிறார். காலித்துடன் இணைந்து ஓடுவது மனத்திற்கு திருப்தியளிப்பதாக இருந்தது.” அடுத்த மாதம் வியட்நாமில் நடைபெறவிருக்கும் IRONMAN 70.3 நிகழ்வில் ஒஷ்மானும் மிதுனும் பங்கேற்கின்றனர்.

புகைப்பட உதவி – Roar Media/Nazly Ahmed

Related Articles