பாட்டுரிமை யாருக்கு ?

‘மடைதிறந்து பாயும் நதியலை நான்,

மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்,

இசைக்கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்,

நினைத்தது பலித்தது.’

முப்பத்தேழு ஆண்டுகளுக்குமுன்னர், கவிஞர் வாலியின் இந்த வரிகளுக்கு மெட்டமைத்தவர் இளையராஜா, இதில் சில வரிகளை அவரே திரையில் தோன்றிப் பாடினார், அப்போது அவருக்குக் குரல்கொடுத்தவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

(youtube.com)

அப்போது ராஜாவும் சரி, எஸ்.பி.பி.யும் சரி, புகழேணியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். ‘இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம், எனக்கேதான்’ என்ற வரிகள் அவர்கள் இருவருக்குமே பொருந்தின.

அதன்பிறகு, அவர்கள் இருவருமே நெடுந்தொலைவு வந்துவிட்டார்கள், தேசியவிருதுகளில் தொடங்கி அவர்கள் பார்க்காத கௌரவமில்லை, பெறாத பாராட்டுகளில்லை, புகழுக்கோ பணத்துக்கோ குறைவில்லை. இருவருமே அவரவர் துறையில் உச்சம் தொட்டவர்களாக, இத்துறைகளில் நுழையும் இளைஞர்களின் லட்சியபிம்பங்களாக, தென்னிந்தியத் திரையுலகின் இமயங்களாகப் புகழப்படுகிறார்கள்.

ஆனால், இந்தத் தொழில்முறை உறவுக்கு வெளியே, அவர்கள் மிகநல்ல நண்பர்கள். ராஜா திரைப்படத்துறைக்கு அறிமுகமாவதற்குமுன்பிருந்தே அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது, ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கொருவர் உதவிவந்திருக்கிறார்கள்.

ராஜா தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கத்தொடங்கியபோது, அதற்காக அவர் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்று, எஸ்.பி.பி.யின் குரல். அதற்குமுன்பே எஸ்.பி.பி. தமிழில் பல பாடல்களைப் பாடியிருப்பினும், ராஜாவுக்குப் பாட ஆரம்பித்தபிறகுதான் அவர் பெரும் உயரங்களுக்குச் சென்றார். எண்பதுகளில் தமிழில் அனைத்து நாயகர்களுக்கும் எஸ்.பி.பி.யின் குரல்தான் கச்சிதமான பொருத்தம் என்று இன்றைக்கு ரசிகர்கள் நெகிழ்கிறார்கள் என்றால், அவையனைத்தும் ராஜாவுடன் இணைந்து அவர் உருவாக்கிக்கொண்ட கௌரவம்.

இசைஞானி இளையராஜா (ahan.in)

ஆகவே, ராஜாவால் எஸ்.பி.பி. உயர்ந்தார் என்றோ, எஸ்.பி.பி.யால் ராஜா முன்னேறினார் என்றோ சொல்வது பொருந்தாது. இருவரும் இணைந்து தமிழ்த்திரையுலகின் பொற்காலங்களில் ஒன்றை உருவாக்கினார்கள் என்பதுதான் உண்மை.

இந்த வெற்றிக்கூட்டணி இன்றும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘முத்துராமலிங்கம்’ படத்தில் ராஜா இசையில் எஸ்பிபி பாடிய ‘கத்தி கட்டி கத்தி கட்டி’ பாடலில்கூட, அவர்களுடைய வயது தெரியவில்லை, அனுபவ முதிர்வின் பேரழகே தெரிந்தது.

இதில் வியப்பான விஷயம், இந்தப் பாடலில் நடித்த கௌதமின் தந்தை கார்த்திக்குக்கும் தாத்தா முத்துராமனுக்கும்கூட இளையராஜா இசையமைத்திருக்கிறார், அவர்கள் இருவருக்கும் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார். மூன்றாவது தலைமுறையாகவும் தொடர்ந்து அவர்களால் இனிய பாடல்களைத் தரமுடிகிறதென்பது ரசிகர்களின் பேறுதான்.

இந்த மகிழ்ச்சிக்குக் கரும்புள்ளிபோல, இப்போது எஸ்.பி.பி.தரப்புக்கும் இளையராஜா தரப்புக்குமிடையே ஒரு ‘நீதி’ச்சண்டை தொடங்கியிருக்கிறது. காரணம், எஸ்.பி.பி.யின் கச்சேரியொன்றில், தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது என இளையராஜா சட்டப்பூர்வமான ஓர் அறிவிப்பை அனுப்பியுள்ளார். எஸ்.பி.பி. அதனைப் பொதுவில் அறிவித்துவிட்டார்.

இதையடுத்து, ரசிகர்கள்மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பையும் ஆதரித்து, எதிர்த்துக் குரல்கள் எழுகின்றன. இங்கே முக்கியமாக முன்வைக்கப்படும் கேள்விகள்:

  • ஒரு பாடலுக்கான சூழலை இயக்குநர் விவரிக்கிறார், இசையமைப்பாளர் மெட்டமைக்கிறார், கவிஞர் எழுதுகிறார், இசையமைப்பாளர் பின்னணி இசையை எழுதுகிறார், அதனை வாத்தியக்கலைஞர்கள் வாசிக்கிறார்கள், பாடகர்கள் பாடுகிறார்கள், இவை அனைத்துக்கும் தயாரிப்பாளர் பணம் தருகிறார், இப்படி உருவாகும் ஒரு பாடலுக்கான படைப்புரிமை யாருடையது?
  • தான் திரைப்படத்தில் பாடிய ஒரு பாடலை மீண்டும் மேடையில் பாடுவதற்குப் பாடகருக்கு உரிமை இல்லையா?
  • கவிஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என அந்தப்பாடலுடன் தொடர்புடைய பிறரும் இதில் உரிமை கோரலாமா?
  • ஒருவேளை சட்டப்படி இசையமைப்பாளருக்குதான் அந்தப்பாடலின்மீது உரிமை என்றாலும், இப்போது இளையராஜா தன் நெடுநாள் நண்பர்மீது நடவடிக்கை எடுக்கலாமா? அதைத் தங்களுக்குள் பேசித்தீர்த்துக்கொள்ளாமல் எஸ்.பி.பி. பொதுவில் வைக்கலாமா?

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் (tamiloprofile.com)

இந்தக் கேள்விகள் அனைத்தும் படைப்புரிமைகுறித்த நமது குழப்பவுணர்வையே காட்டுகின்றன. இதுவிஷயமாகத் தெளிவான சட்டங்கள் உள்ள மேற்கத்தியநாடுகளிலேயே இத்தகைய குழப்பங்கள் நீடிக்கின்றன என்றால், இந்தியாவின் நிலைமைகுறித்து ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

முதலில், ஒரு பாடலின்மீது சட்டப்பூர்வமான உரிமை யாருக்கு என்பதை அதுதொடர்பாகச் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்கள்தான் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓர் இசையமைப்பாளர் ஒரு படத்தில் பணிபுரியத் தொடங்கும்போதே, அதன் தயாரிப்பாளருடன் இப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம்:

‘என் பாடல்களுக்கு நீங்கள் இத்தனை ரூபாய் தரவேண்டும். அப்பாடலை நீங்கள் படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு, அப்பாடலின் முழு உரிமையும் எனக்கே.’

இந்த ஒப்பந்தப்படி, இசையமைப்பாளர் தான் பெற்றுக்கொண்ட சம்பளத்துக்குப் பதிலாக, அப்பாடலை முதன்முறை திரைப்படத்தில் பயன்படுத்தும் உரிமையை அந்தத் தயாரிப்பாளருக்கு வழங்குகிறார். அதன்பிறகு, அவர் தன் விருப்பப்படி அப்பாடலை வேறுவிதங்களில் பயன்படுத்தலாம்: வேற்றுமொழிகளில் வெளியிடலாம், தொலைக்காட்சி, வானொலியில் ஒலிபரப்பலாம், இசைத்தட்டுகளாக்கி விற்கலாம், மேடையில் பாடலாம், இணையத்தில், மொபைல் ஃபோன் ரிங்டோன்களாக்கி விற்கலாம்…

இப்போது, இதே ஒப்பந்தத்தைக் கொஞ்சம் மாற்றிப்பார்ப்போம்:

‘என் பாடல்களுக்கு நீங்கள் இத்தனை ரூபாய் தரவேண்டும். அப்பாடலை நீங்கள் படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு, அப்பாடலின் உரிமையில் 50% எனக்கு, 25% உங்களுக்கு, 15% பாடலெழுதிய கவிஞருக்கு, 10% பாடகர்களுக்கு.’

இதுவும் சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய ஒப்பந்தம்தான். இது பாடலின் உரிமையைப் பலருக்குப் பகிர்ந்து வழங்குகிறது. இங்கே யாருக்கு 50%, யாருக்கு 25% என்கிற கணக்கை அவரவர் விருப்பப்படி மாற்றலாம். மற்றபடி, உரிமை எல்லாருக்கும் உண்டு.

பாடல் பதிவில் ஈடுபட்டிருக்கும் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் (1.bp.blogspot.com)

அதன்பிறகு, அப்பாடல் ரிங்டோனாக விற்கப்பட்டு ஆயிரம்ரூபாய் வருமானம் வந்தால், அதில் 500ரூபாய் இசையமைப்பாளருக்கு, 250ரூபாய் தயாரிப்பாளருக்கு, 150ரூபாய் கவிஞருக்கு, 100ரூபாய் பாடகர்களுக்குச் செல்லும். இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிலிருந்தும் கிடைக்கிற லாபம் ஒப்பந்தப்படி பகிர்ந்தளிக்கப்படும்.

ஆக, பாடலின் முழு உரிமையும் ஒருவருக்கா, அல்லது பலருக்கா என்பது ஒப்பந்தத்தைப்பொறுத்தது. ஒருவேளை அந்த ஒப்பந்தம் படைப்பாளிகளான கலைஞர்கள் அனைவரையும் அங்கீகரிக்காவிட்டால், அவர்கள் அந்த உரிமையைக் கோரிப்பெறவேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பாடகரின் பாடல்கள் பல்வேறு வானொலிகளில் வருடம்முழுக்க ஒலிபரப்பாகின்றன என்றால், ஒப்பந்தப்படி அவர் தனது உரிமையைக் கோரலாம். ஒருவேளை ஒப்பந்தம் அவருக்கு அத்தகைய உரிமையை வழங்கவில்லையென்றால், அதுபற்றிய விவாதத்தை அவர் தொடங்கிவைக்கவேண்டும், ‘பாடகரின் குரலும் ஒரு பாடலின் வெற்றிக்கு முக்கியப் பங்களிக்கிறது. ஆகவே, அதில் எங்களுக்கும் பங்குண்டு’ என்று போராடவேண்டும்.

‘எங்களுக்கும்’ என்ற சொல்லில் இருக்கும் ‘உம்’ஐக் கவனியுங்கள். பல கலைஞர்கள் சேர்ந்து உழைத்த பாடலுக்கு ஒருவர்மட்டும் சொந்தம்கொண்டாட இயலாது. ஆனால், ஒப்பந்தப்படி ஒருவருக்கு அப்படிப்பட்ட தனியுரிமை கிடைத்திருக்கிறது என்றால், அதுதான் சட்டம். ஏற்கத்தான் வேண்டும். அதை மாற்ற விரும்பினால், நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்டுப் பயனில்லை.

ஆக, ‘இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு உரிமைகோரலாமா?’ என்று எஸ்.பி.பி. கேட்பது நியாயமாகப்படவில்லை.’அதில் எனக்கும் உரிமையுண்டு’ என்று அவர் கோருவதுதான் நியாயமாக இருக்கும்.

இந்தியாவில் படைப்புரிமை, காப்புரிமைபற்றியெல்லாம் அதிகப்பேருக்குத் தெரியாது. திரைப்படங்கள் தொடங்கிப் பாடல்கள், புத்தகங்கள் எனப் பலவற்றையும் திருட்டுத்தனமாகவே அனுபவித்துக்கொண்டிருக்கிற பழக்கம் நமக்கிருக்கிறது. அதுகுறித்த குறைந்தபட்சக் குற்றவுணர்வுகூட பலருக்கு இல்லை. ஆகவே, ஒரு படைப்பாளி கோரும் நியாயமான உரிமையைக்கூடப் பேராசையாகவே கருதுகிறோம். ‘என் பாடலைப் பாடவே கூடாது’ என்பதற்கும், ‘என் பாடலைப் பாடி, அதன்மூலம் பணம் சம்பாதித்தால், அதில் எனக்கொரு பங்கு உண்டு’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இதையே இன்னும் வேறுவிதமாகச் சொல்வதென்றால், எஸ்.பி.பி.க்கும் சேர்த்துதான் ராஜா உரிமைகோருகிறார். ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதற்காகப் போராடிவருகிறார்கள். ஒரு கச்சேரி, ஒரு வானொலியை முன்வைத்து இதனைச் சுருக்காமல், படைப்பாளியின் உரிமைபற்றிய விவாதமாகவே காணவேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நிகழ்த்துகலைஞர்கள், மேடைப்பேச்சாளர்கள் என்று படைப்புரிமை மறுக்கப்படுகிற, ஏமாற்றப்படுகிற பல படைப்பாளிகள் இங்கே உண்டு. அவர்களும் இதுபோல் குரல் கொடுக்கவேண்டும், தங்கள் உரிமையைக் கோரிப்பெறவேண்டும். அதைவிட்டு, நியாயமான உரிமைக்காகக் குரல்கொடுப்பவரைப் பேராசைக்காரர் என்று பேசுவது அபத்தம்.

இதனால் இசைத்துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் சிலர். அது உண்மையல்ல. இந்தப் பிரச்னை இசைத்துறையை வளர்க்கும் என்பதே உண்மை. இதற்குச் சரித்திர ஆதாரமுண்டு.

இளையராஜாவின் முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’ வெளியான அதே 1976ம் ஆண்டு, பில் கேட்ஸ் என்ற இளைஞர் ‘The Open Letter to Hobbyists’ என்ற கடிதத்தை எழுதினார். அதில் அவர், மென்பொருள்கள் இஷ்டப்படி பிரதியெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்துக் கேள்விகேட்டிருந்தார்.

இளவயது பில் கேட்ஸ் (static.migom.by)

அவருடைய கோபத்துக்குக் காரணம், அவர் தொடங்கி நடத்திவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருளொன்றைப் பலரும் பணம் தராமல் பிரதியெடுத்துக்கொண்டிருந்தார்கள், இது நியாயமல்ல என்றார் அவர், ‘நாங்கள் கடும் உழைப்புக்குப்பிறகு இந்த மென்பொருள்களை உருவாக்குகிறோம். அந்த உழைப்புக்கு உரிய பணத்தைத் தருவதே முறை’ என்றார்.

மென்பொருள்துறையில் காப்புரிமை மதிக்கப்படவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து போராடினார். அந்தப் போராட்டம் அவரையும் பெரிய பணக்காரராக்கியது, இன்னொருபக்கம் மென்பொருள்துறை என்கிற கொழிக்கும் தொழிலையும் உருவாக்கியது.
(wikimedia.org)

அப்போது அவர்மேல் பலரும் கோபப்பட்டார்கள். காரணம், மென்பொருள்களைப் பணம்தந்து வாங்குவது என்ற வழக்கமே அப்போது இல்லை. ‘அது இலவசமாகதான் கிடைக்கவேண்டும்’ என்று நினைத்தார்கள், ‘சாஃப்ட்வேர் எழுதறது ஒரு பெரிய விஷயமா? இதுக்கெல்லாமா காபிரைட் கேப்பீங்க?’ என்றார்கள்.

பில் கேட்ஸ் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். மென்பொருள்துறையில் காப்புரிமை மதிக்கப்படவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து போராடினார். அந்தப் போராட்டம் அவரையும் பெரிய பணக்காரராக்கியது, இன்னொருபக்கம் மென்பொருள்துறை என்கிற கொழிக்கும் தொழிலையும் உருவாக்கியது.

அதன்பிறகு, ‘திறமூலம்’ எனப்படும் Open Source மென்பொருள்களெல்லாம் வந்தன. அவற்றை எல்லாரும் விருப்பம்போல் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.

இன்றைக்கு, பணம்தந்து வாங்கும் மென்பொருள்களும் இருக்கின்றன, இலவச மென்பொருள்களும் இருக்கின்றன, இவற்றை மையமாக வைத்து ஒரு மிகப்பெரிய தொழில்துறையே இயங்கிவருகிறது, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் இதில் இயங்கிவருகிறார்கள்.

ஒருவேளை, பில் கேட்ஸ் அன்றைக்கு அந்தக் கேள்வியை எழுப்பாமலிருந்திருந்தால், இன்றைக்கும் நாம் மென்பொருள்களைப் பிரதியெடுத்துதான் பயன்படுத்திக்கொண்டிருந்திருப்போம், பலர் மென்பொருளெழுத முன்வந்திருக்கமாட்டார்கள், அப்படி வந்தவர்களுக்கு வருவாய் கிடைத்திருக்காது, சிறந்த மென்பொருள்களும் எழுதப்பட்டிருக்கமாட்டா.

அதுபோல, இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே இப்போது எழுந்துள்ள இந்தக் கருத்துவேறுபாடும், ஒரு நல்ல விவாதத்தை, மாற்றங்களைத் தொடங்கிவைக்கும், இது இசைத்துறைசார்ந்த கலைஞர்கள் எல்லாருக்கும் பயன்தரும், இன்னும் பலரை இத்துறையில் வரவேற்பதாக, இன்னும் சிறந்த பாடல்களைக் கிடைக்கச்செய்வதாகவே அமையும் என்பது என் துணிபு!

Related Articles