வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II

மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மனிதப் பண்புகளை கூறுகின்ற மத நூல்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன.

அதை விட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதற்கே உரிய மிக தொன்மையான வாய்வழி இலக்கியங்கள் மிக பலமான மனித பண்புகளை கடத்திக்கொண்டு இருகின்றது. இவையெல்லாம் வெறும் எழுத்துரு சொல்வழி தளத்தில் இயங்குகின்றனவே ஒழிய சமூகத்துக்குள் ஊடுருவி புழங்குகின்ற தன்மை அற்றனவாக காணப்படுகின்றன. இந்த புழக்கம் இன்மையின் வினைதான் இன்றைய சமூக சீர்கேடுகள். எமது சமூகங்களுக்கு மனிதப்பண்புகளை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அமுல்படுத்தவேண்டிய, பின்பற்றவேண்டிய தேவை இருகின்றது. இதை யாரும் மறுத்துவிட முடியாது.

வடக்கு நட்டார் இலக்கியங்களின் இறுதிப் பகுதியான நட்டார் கதைகளின் நிறைவுப் பாகம் இது. வடக்கில் காலம் காலமாக இருந்த மக்களிடையே வாய்மொழியாக பேசப்பட்டு பின்பற்றப்பட்டு கடத்தப்பட்ட மனித நேய பண்புகளை கூறும் கதைகள்தான் இந்த பாகத்தின் மையப்பொருள். வடக்கு மனிதர்களிடையே காலம் காலமாக இருக்கின்ற இருபிரச்சனைகளை சுற்றியே எல்லா மனிதநேய கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

(staticflickr.com)

ஒன்று  ஆட்சி, இன்னொன்று குடும்பம். இவை இரண்டிலும் நாளாந்த வாழ்வியலில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கலை கருவாக கொண்டு நல்லது இது கெட்டது இது என்று வரையறை செய்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. இரண்டு அரசு மற்றும் குடும்ப கட்டமைப்புக்களை களமாக கொண்டு பிரச்சினையை முன்வைத்து பின்னர் அதனால் உழல்கின்ற மக்களின் வாழ்வியலை காட்டி கடைசியாக  பிரச்சனையிலிருந்து மீள்கின்ற வழியினை போதித்து கதையை முடித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கதைகள் இந்த கட்டமைப்பிலேயே இருக்கின்றன.

கதைகளில் சில நுட்பமான குறியீடுகளை பயன்படுத்துவதன்  மூலம் சமூகத்தில் இருக்கின்ற தீய சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணி இப்படியாக அமைகின்றது. அதிகாரங்களில் இருப்பவர்களிடையே இருக்கின்ற தீய எண்ணம் கொண்டவர்களை எதிர்த்து வெளிப்படையாக கதைக்கக்கூடிய அல்லது போராடக்கூடிய திறன் அற்றவர்களாக இருந்த மக்கள், அவர்களை ஐந்து அறிவு படைத்த மிருகங்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்கின்ற அட்டகாசங்களை பிறருக்கும் அறிவிக்கின்ற, அறிவுறுத்துகின்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்ற தீயவர்களை மிருகங்களுக்கு ஒப்பாக கருதி மிருகங்களாகவே வடித்துள்ளனர். அவர்களுடனான சாதாரண மக்களின் உரையாடல்களும் போராட்டங்களும் வெற்றியும் தோல்வியும் அதனூடு வெளிப்படுகின்ற நல்ல, தீய மனிதப்பண்புகளின் பிரிவினையையும் இந்தக் கதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியில் இருக்கின்றவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.

(blogspot.com)

கதை 1

“……… ஒரு நாள் நெல்லை காயவைத்துகொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று ‘உன்னை கடிக்கட்டா இல்லை நெல்லை கொறிக்கட்டா?‘ என்றது காட்டு பன்றி, அவள் பயத்திலேயே ‘நெல்லை கொறித்துகொள்‘ என்றாள்…………..”

கதை 2

“……………….கல்யாணத்தன்று குரங்கு அவனிடம் இதைக்கூற அவன் மறுத்துவிட்டான். பின்னால் ஏதோ ஒரு வகையில் குரங்கு அவனிடம் பேசி சம்மதிக்க வைத்தது………….”

கதை 3

“……………. அவளை மயக்கிக் கொண்டு சென்ற புலி ஒரு அழகான ஆண் புலிக்குழந்தையை அவளுக்கு கொடுத்தது…………………..”

கதை 4

“……………..தவளையிடம் அரசியை பார்த்து வரும் படி அவன் தூது அனுப்பினான். அதை அரச கழுகு கவனித்து ராஜாவிடம் சொல்லி விட்டது……..”

சில கதைகளில் மனித அறியாமையும் அதனால் ஏற்படுகின்ற தவறுகளும் அதற்கு உதவுகின்ற மாந்தர்களும் என உதவி செய்தலையும் செய்த உதவியை மறக்காமல் இருத்தலையும் ஆழமாக கூறுகின்றன. இவற்றுள் பொதுவாக குடும்ப பின்னணியே பயன்படுத்தபடுகின்றது.

கதை 5

“ ஒரு விவசாயி தினமும் பெரிய பெரிய கிழங்குகளை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வருவான். ஆசையுடன் மனைவியிடம் கொடுத்து காய்ச்சச் சொல்வான். அவளும் பக்குவமாக பெரிய கிழங்குகளை அடியிலும் சிறிய கிழங்குகளை மேலும் வைத்து காச்சுவாள். காய்ச்சிய கிழங்குகளை அவன் தட்டில் குப்புற கொட்டுவாள். எப்போதும் அவனுக்கு சிறிய கிழங்குகளே கிடைக்கும். அதனால் மிக வருத்தம் அடைந்தவனாய் நண்பனிடம் ஒருநாள் சென்று விவரத்தை கூறினான். நண்பன் நெய்யை மனைவிக்கு தெரியாமல் தாச்சியின் அடியில் பூசி விட்டு விவரத்தை பார் எண்டான். இவனும் அப்படியே செய்தான் அண்டைக்கு எல்லா கிழங்குகளும் அவன் தட்டில் விழுந்தன. மனைவி தான் செய்த அறியாமையின் தவறை உணர்ந்து மனிப்புகேட்டாள். விவசாயி நண்பனுக்கு நன்றியுடையவனாக இருந்தான்.”

இந்த வாய்வழி கதை; உதவி, மன்னிக்கும் மனப்பாங்கு, நன்றிமறவாமை என்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இருந்தும் இதன் பின்னணியில் இருக்கின்ற, இதே போன்ற சில கதைகளின் பின்னணியில் இருக்கின்ற வெளிப்பாடுகள் பெண் அறியாமை என்ற கருவில் பேசுகின்றன.

(yartmagazine.com)

அடுத்து மிக முக்கியமாக கதைகளில் இருக்கின்ற பண்பு பாசம். அம்மா-மகன், அண்ணன்-தங்கை, கணவன்–மனைவி என்ற பாசப்பிணைப்புக்கள் போன்றவை கதைகளில் இழையோடி இருக்கிறன. எந்த சந்தர்ப்பத்திலும் மகனை விட்டுக்கொடுக்காத அம்மா, ஐந்து அண்ணன்களை தனது சாகசத்தால் மீட்ட தம்பி, தங்கையின் பாசத்துக்காக மனைவியை துறந்த அண்ணன் என்று கதைகள் ஒவ்வொன்றும் விதவிதமான பாசப்பிணைப்புகளை காட்டுவதாகவே அமைகின்றன.

கதை 6

“……….அண்ணா! அண்ணி செய்யும் கொடுமைகளை பார் என்று கேட்பது போல அவனுக்கு அவன் நான்கு தம்பியரின் பார்வைகள் இருந்தன, அவன் மனைவியை துரத்திவிடவில்லை. பக்குவமாய் பல மொழிகள் சொன்னான். அவளும் வெகு விரைவில் திருந்தி அண்ணனும் தம்பிமார்களும் அண்ணியும் மருமகளும் மிக சந்தோசமாக வாழ்ந்தார்கள்……….”

கதை 7

“………….புலி மரத்தின் மேலே நின்றதைப்பாரத்த அண்ணன் அது தாவும் முன்னர் தங்கச்சியை காப்பாற்ற புலி மீது பாய்கிறான்……..”

அரசாட்சிக்குள் நடக்கின்ற பிரச்சனைகளையும், அதில் ஏற்படுகின்ற கவனக்குறைவால் உண்டாகின்ற பிழைகளையும் மந்திரி ஊழியர் அரசர் உறவுகளையும் இளவரசியின் காதல், உதவுகின்ற மனப்பாங்குகளையும் போர்யுக்தி அரச பரஸ்பர உறவுமேம்பாட்டயும் அதிலே உண்டாகின்ற உன்னத மனித பண்புகள் பற்றியும் சில கதைகள் விவரிக்கின்றன.

மனிதப்பண்பு என்ற வகையோடு பேய்க்கதைகள் மந்திரக்கதைகள் என அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் வெகு சிலவும் காணப்படுகின்றன.

(google.lk)

இந்த பேச்சு வழி கதைகள் எல்லாம் எந்தக்குறையும் இன்றி கடத்தப்படுகின்றனவே ஒழிய பயன்படுத்தபடுகின்றன்வா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதிலிருந்து முடிவுகளையும் அனுபவங்களயும் எடுத்துக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக உன்னத பண்பாடு நாகரீகம் என்று வெறும் புறவய நிலுவைகளை கொண்டாடுகின்றோமே ஒழிய அகவயமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் நிதர்சனம்.

இந்த மறக்கப்பட்ட வடக்கு நாட்டார் இலக்கியங்கள் என்ற தொடர் இத்துடன் என்வழியே முற்று பெற்றாலும் ஆழமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல

“இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.”

இன்று இத்தோடு முடிகின்ற அத்தியாயம் இன்னொரு முறை மிக ஆழமாக எழுதப்படும்.

Related Articles