Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

செட்டியார் குலத்தவர் பற்றி அறியப்படாத உண்மைகள்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

நம்மில் பலருக்கும் செட்டியார்கள் குறித்து விரிவாக எதுவும் தெரியாது. நாம் அடிக்கடி கொழும்பில் செவிமடுக்கும் புள்ளே, அலஸ், பெருமாள் போன்ற பெயர்கள், செட்டியார்கள் மூலமாகவே இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றன. செட்டியார்கள் சிங்கள, தமிழ் அல்லது பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்களும் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தனித்துவமான இனத்தினராவர். எனவே, நம்மோடு வாழ்கின்ற இந்த இனத்தவர் குறித்து மேலதிக தகவல்களைத் தேடிச்சென்று, அவற்றை Roar  வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாம் முடிவெடுத்தோம்.

இலங்கையில் இன்று வாழ்கின்ற செட்டி இனத்தவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாவவர். புராதன பாரதத்தில் ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை குலங்களாகப் பிரிக்கும் போக்கு பரவலாக இருந்தது. செட்டியார்கள் பாரம்பரியமாகவே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, “தான வைஷ்ய” என்ற வியாபரக் குலத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஆரம்ப காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த “கூக்” (Coog) மற்றும் வாரணாசி போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த வைஷ்ணவர்கள், பின்னர் ஏற்பட்ட முகலாய ஆக்கிரமிப்புக்கள் காரணமாக, தென்னிந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். நமது நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஆரம்ப காலம் முதல் இருந்துவந்த வியாபாரத் தொடர்புகள் காரணமாகத்தான், செட்டியார்கள் இலங்கையிலும் பரவியுள்ளனர்.

செட்டியார்கள் வாழ்ந்த வீடு - காரைக்குடி, இந்தியா (.bp.blogspot.com)

செட்டியார்கள் வாழ்ந்த வீடு – காரைக்குடி, இந்தியா (.bp.blogspot.com)

இன்று செட்டியார்கள், “செட்டியார்கள்”, “ஹெட்டியார்கள்”, “எட்டியார்கள்” போன்ற பல்வேறு பெயர்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். உண்மையில், செட்டியார்கள் இந்தியாவின் பிரபுக்களுடன் உறவுகளாக இருந்தவர்களாவர். இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில், இன்று 150,000 க்கும் மேற்பட்ட செட்டியார் குலத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் செட்டியார்களின் வரலாறு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வியாபார கொடுக்கல் வாங்கல்களில், செட்டியார்களின் மூதாதையர்கள் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருப்பர் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, இலங்கை மற்றும் இந்திய பிராந்தியம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், பெருமளவு செட்டியார்கள், இலங்கைக்கு குடிபெயர்ந்து இங்கேயே குடியமர்ந்துள்ளனர். நம் நாட்டின் எழுத்து மூல வரலாற்றின்படி, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்திலேயே, நம் நாட்டுக்கு பெருமளவு செட்டியார்கள் குடியேறியுள்ளனர். ஆனாலும், அதற்கு முன்பிருந்தே, அவர்கள் சிறு குழுக்களாக இலங்கையில் வாழ்ந்துவந்துள்ளதாக, சில வரலாற்று அறிக்கைகளில் நாம் காண முடியும்.

பேராசிரியர் எச். எல்லாவல தனது, “Social History of Early Ceylon  -புராதன இலங்கையின் சமூக வரலாறு” என்ற நூலில் குறிப்பிடும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இலங்கை மண்ணில் செட்டியார்கள் முதன் முதலில் கால் பதித்தது, நம் நாட்டின் முதலாவது மன்னராகக் கருதப்படுகின்ற விஜயனின் இலங்கை விஜயத்திற்கு சிறிது காலத்தின் பின்னராகும். இளவரசர் விஜயன் இந்த நாட்டின் மன்னர் பதவியை பெற்றதன் பின்னர், அது குறித்து இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், மதுராபுரியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த அவரது தந்தை, இலங்கை இராசதானியை நன்றாக நடத்திச் செல்வதற்கு உதவியாக, பல்வேறு குலங்களைச் சேர்ந்த பெருமளவிலனோரை இலங்கைக்கு அனுப்பினாராம். பேராசிரியர் எல்லாவலவின் கருத்துக்களின்படி, இவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் “தான வைஷ்ய” அல்லது பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த பெருமளவிலானோரும் இருந்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கோவில் (3-eu-west-1.amazonaws.com)

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கோவில் (3-eu-west-1.amazonaws.com)

 

காலப்போக்கில், எல்லோரும் செட்டியார்களையும் இலங்கையின் ஒரு சமூகப் பிரிவாக அங்கீகரிக்கத் தொடங்கினர். சிங்கள சமூக விளையாட்டுக்களுள் முக்கிய இடத்தை வகிக்கின்ற “அதுருமிதுரு” என்ற விளையாட்டிலும் செட்டியார்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது. “அதுருமிதுரு தம்பதிவதுரு ராஜகபுரு செட்டியா” என்று கூறப்படுவது, இந்த செட்டியார்கள் குறித்தே ஆகும். “ராஜ கபுரு” போன்ற வசனங்கள் மூலம் செட்டியார்களுக்கும் இலங்கை அரச மாளிகைகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பு நன்கு வெளிப்படுகின்றது.

மிகவும் சமீபத்திய சமகால வரலாற்று அறிக்கைகளில், செட்டியார் சமூகம் மிகவும் முக்கியமான வியாபார சமூகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். டபிள்யூ. கைகர் எழுதிய “Culture in Ceylon in Medieval Times  – மத்தியகாலத்தின் இலங்கை கலாசாரம்” என்ற நூலில், புராதன பதிவுகளில் குறிப்பிடப்படுகின்ற செட்டியார்களுக்கும், மத்தியகால செட்டியார்களுக்கும் இடையிலான தொடர்பு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கை வியாபார சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியினராக செட்டியார்களை அறிமுகப்படுத்த முடியும். இவர்கள், புராண நாட்டார் கதைகளில் கூறப்படுகின்ற செட்டியார்கள் அல்லது பணக்கார வங்கியாளர்கள் மட்டுமன்றி, அரச மாளிகைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளவர்களும் ஆவர்.”

ஒரு தனித்துவ சமூகமாக அவர்களுக்கு உள்ள அங்கீகாரம்

1814 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போதே செட்டியார்கள் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தனித்துவமான இனத்தரவாக அங்கீகரிக்கப்பட்டனர். இந்த சட்ட அங்கீகாரம் 1871 ஆம் ஆண்டைய சனத்தொகைக் கணக்கெடுப்பு வரை நீடித்தது. ஆனாலும், பின்னர் அவர்கள் சிங்கள, தமிழ் அல்லது பறங்கிய இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினராகவே கொள்ளப்பட்டனர்.

செட்டியார் குல ஆண்கள் (imagesofceylon.com)

செட்டியார் குல ஆண்கள் (imagesofceylon.com)

இவ்வாறு 100 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம், ஒரு தனித்துவமான இனத்தவர்களாக செட்டியார்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இலங்கை செட்டியார் சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்லி புள்ளே திசேராவுக்கு முடியுமாக இருந்தது. 1984 ஆம் ஆண்டில் அவர் இலங்கை ஆட்சி எந்திரத்தில் இணைந்ததும், செட்டியார்கள் மீண்டும் ஒரு தனித்துவ சமூகமாக அங்கீகரிக்கப்பட்டனர். அதன்படி, 2001 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு முதல், செட்டியார்கள் ஒரு தனித்துவ இனத்தினராக கணிக்கப்பட்டனர்.

இலங்கையில் வாழ்ந்த முக்கியமான செட்டியார்கள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள்

இலங்கையில் உள்ள ஏனைய இனக் குழுமங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், செட்டியார்கள் மிகவும் சொற்பமான தொகையிலேயே உள்ளனர். எண்ணிக்கையில் பார்க்கும்போது, அவர்கள் நமது நாட்டு சனத்தொகையில் 1% சதவீதத்தையும் விட குறைவானவர்களே. ஆதி காலம் முதல் இந்நிலையில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்ததில்லை. ஆனாலும், அவர்கள் எமது சமூகத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

புராதண காலம் முதல் அவர்கள் இந்த நாட்டின் வியாபரத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். நமது நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், நமது நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் அவர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். பாரம்பரிய பொருட்களைப் போன்றே, புதிய பொருட்களையும் நமது நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும், அவர்கள் முன்னணியில் நின்று செயற்பட்டுள்ளனர். எனவே, செட்டியார் சமூகத்தை, நீண்ட காலமாக நம் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக முக்கியமானதொரு பொறுப்பை நிறைவேற்றிய சமூகமாக அறிமுகப்படுத்தலாம்.

சமீப காலத்தில் அவர்கள் நம் நாட்டு விவகாரங்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்தும் போதியளவு ஆதாரங்கள் உள்ளன. நம் நாட்டின் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்காக, பெரும் பங்களிப்பை வழங்கிய, காலம் சென்ற ஆர்.ஐ. பொணான்டோ புள்ளே இதற்கு சிறந்த உதாரணமாவார். இன்றும் இலங்கையின் பெரிய விளம்பர நிறுவனமான “க்ராண்ட் மெக்கேன் எரிக்ஸன்”(Grant McCann Erickson) நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்த, தேசபந்து ரெஜீ கந்தப்பாவும், நமது நாட்டின் முக்கியமான ஒரு செட்டியாவார்.

(delcampe-static.net)

இலங்கையின் முதலாவது தேசிய சிவில் பணியாளராக நியமனம் பெற்ற சைமன் காசி சிட்டி (Simon Casie Chitty)(delcampe-static.net)

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதிலும், செட்டியார்கள் முன்னிலையில் நின்று செயற்பட்டுள்ளனர். இலங்கையின் முதலாவது தேசிய சிவில் பணியாளராக நியமனம் பெற்ற சைமன் காசி சிட்டி (Simon Casie Chitty), ஆரம்ப கால செட்டி அரசியல்வாதிகளில் முன்னணியில் உள்ள ஒருவர் ஆவார். நம் நாட்டின் அரசியலமைப்பு சபைக்கு அவர் 1845 இல் நியமிக்கப்பட்டார்.

நம் நாட்டின் ஒரு முக்கியமான அரசியல்வாதியான ஜே.ஆர். ஜயவர்தனவும் செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒருவரே. தனது அரசியல் வாழ்வில் அமைச்சரவை அமைச்சராகவும், பிரதமராகவும், நமது நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் செயற்பட்ட, இவரது செட்டியார் மூதாதையர் குறித்து, இவரது வாழ்க்கை சரிதையில், மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை பேராசிரியர் கே.எம். டி சில்வாவும், ஹவட் ரிகின்ஸும் (Howard Wriggins) இணைந்து எழுதியுள்ளனர்.

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருந்த செட்டியார்கள், இலங்கை முழுவதிலும் இருந்த கிறிஸ்தவ தேவலாயங்கள் பலவற்றிலும் நிதி விவகாரங்கள், நடாத்திச் செல்தல் மற்றும் மத விவகாரங்களை மேற்கொள்ளும் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்தனர். ஏகாதிபத்திய காலத்துக்கு முன்னர் போலவே, அதற்குப் பின்னரும் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இவற்றில் சில பிரதான தேவலாயங்களாக கொழும்பு 13 இல் அமைந்துள்ள தோல ரோசா அன்னையின் தேவாலயம், ஜிந்துப்பிடி புனித தோமஸ் தேவாலயம், கொழும்பு 12 இல் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் மற்றும், மஹியங்கனை புனித பிலிப் நேரிஸ் தேவாலயம் என்பவற்றை குறிப்பிடலாம்.

செட்டி குலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஜே ஆர் ஜெயவர்த்தன (colombotelegraph.com)

செட்டி குலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஜே ஆர் ஜெயவர்த்தன (colombotelegraph.com)

இலங்கையில் அதிகமானோர் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காகவும், செட்டியார்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், அவர்கள் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். பேராசிரியர் எச்.எல்லாவல சுட்டிக்காட்டும் தகவல்களின்படி, இலங்கைக்கு ஸ்ரீமஹா போதி கிளையை கொண்டுவரும்போது, அங்கு பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர்களில், செட்டியார்களின் முன்னோர்களான “தான வைணவர்களும்” இருந்துள்ளனர். சமீப காலத்தில் இலங்கையில் இருந்த ஒரு கீர்திமிகு பௌத்த தேரரான, சோம தேரரும், சாதாரண வாழ்வில் ஒரு செட்டியாராவார். அவரது பெயர் “எம்மானுவல் பெரேரா புள்ளே” என்பதாகும். பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக 30 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

இன்னுமொரு முக்கியமானவரும் உள்ளார். அவரது பெயா சேர் கிறிஸ்டோபர் ஒன்டச்சி (Sir Christopher Ondaatje) என்பவராகும். இப்போது கனடாவில் வாழ்கின்ற அவர், இலங்கையில் பிறந்த ஒரு செட்டியாராவார். பெரும் கொடை வள்ளலான அவர் 2003 ஆம் ஆண்டில், பெரிய பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் இராணியிடமிருந்து நைட் விருதும் பெற்றார்.

அவரின் சகோதரரான மைகல் ஒன்டச்சி, உலகப் புகழ்பெற்ற ஒரு இலங்கை எழுத்தாளராவார். இலங்கையின் ஆங்கில வாசகர்கள் பலருக்கும் அவரது பெயரைக்கூறினாலே, அவரைத் தெரியும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. அவர் எழுதிய “The English Patient  –  ஆங்கில நோயாளி” என்ற நூலுக்கு, புகழ்பெற்ற “Booker” விருதும் கிடைத்தது. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலக திரைப்படத்துக்கு அகடமி விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உயரடுக்கு வியாபார சமூகமாக ஆரம்பித்த செட்டியார்கள், இன்று வரையிலும் இலங்கை சமூகத்தில் முக்கிய பதவிகளில் உள்ளனர். ஏனைய இனக்குழுமங்களுடன் மேற்கொள்ளப்பட்ட திருமணம் போன்ற விடயங்களால், அவர்களின் தனித்துவம் ஓரளவு சிதைந்து போயுள்ளபோதும், அவர்கள் இன்றும் இலங்கை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஒரு தனித்துவமான இனத்தவர்களாவர். தனித்து விளங்குவதற்கு முயற்சிக்காதபோதும், அவர்கள் இன்றும் நமது தேசிய சமூகத்தில் ஒரு முக்கியமான பகுதியினர் என்பது தெளிவாகும்.

மூலக் கட்டுரையாளர் : மினாலி ஹபுதந்த்ரி

Related Articles