வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 மன்னார்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில் எல்லாம் காற்றில் கிருமிகளே இருக்காது. உப்பின் உவர்ப்பு கிருமிகளை இல்லாதொழித்து விடுகின்றது. அங்கு பரவியிருந்த தேவ ஒளி எல்லார் மனைகளிலும் அன்பும் சந்தோஷமும் பெருக ஆசி செய்துகொண்டிருந்தது. அந்த வீடும் அப்படித்தான். தேவ ஒளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

(photos.travelblog.org)

காலை புலர்ந்து விட்டிருந்தது. புலம்பெயர்ந்து வருகின்ற பெயர்தெரியாத வெளிநாட்டு பறவைகளின் விசித்திரமான கானம் அவன் காதுகளில் தேவகானத்தை மீட்டிக்கொண்டிருந்தது.

என்னடி புள்ளே விடிஞ்சல்லே போச்சுது

செல்ல வேணுமல்லே மீன் பிடிக்க

இன்னமும் நித்திரை கொள்ளலாமோ நீயும்

எழுந்திரு புள்ளே பொழுது புலந்திருச்சு

என்று உப்புக்காற்றை சுவாசித்து சுவாசித்து வரண்டு போன குரலால், முன்னைய நாள் காலை குடில் எல்லாம் சுற்றிக் காயப்போட்ட கருவாட்டுத் துண்டுகளை எடுத்துப் பக்குவமாய் குடிலுக்குள் வைப்பதில் காலம் தாழ்த்தி உறங்கிய மனைவியின் கால்களை உலுப்பி உறக்கத்தில் இருந்து விடுபட வழி செய்கிறான். ஏதோ பழகிப்போன பறவையின் கானம் போலே இருக்கிறதே என்ற யோசனையுடன் கண்களை கசக்கி எழுந்திருக்கிறாள் அவள், மீனவன் மனைவி. எழுந்தவள் தன்னை எழுப்பிய அந்த கானத்திற்குரிய பழகிய பறவை அவள் கணவன் என்று தெரிந்தவுடன் தன்னை சுதாரித்துக்கொண்டு

எழுந்திட்டேன் அத்தானே கொஞ்சம் பொறு

கோப்பித்தண்ணி வச்சுதருவன் ஐயா

தொழுவுங்கோ நம்மை படைத்தவனை

தினம் வாழ வழிவகை தந்தத்துக்கு

இன்றைய நாளில் நடந்ததொன்றும் அவளுக்கு புதுமை இல்லை. திருமணம் ஆகி ஒரே ஒரு மாதம் தான் ஆகின்றது . இருந்தும் கணவனிடம் எப்படி பழகிக்கொள்வது என்று மிக லாவகமாக அறிந்திருந்தாள் அவள். கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரை வேறு சில விடயங்களில் திசைதிருப்புவதன் மூலம் தன் காரியங்களை முடித்துக்கொள்ளலாம் என்று அவள் நன்றாகவே தெரிந்திருந்தாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் கூட உவப்பளிக்கிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையையும் இவ்வாழ்வு அவனால் அருளப்பட்டதே என்ற உண்மையையும் அவள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றாள். அவனை தொழுவது இன்றியமையாதது என்று அவனிடம் கூறி, தான் தேநீர் சமைத்து தருவதாகவும் கூறுகின்றாள் . மன்னாரில் அக்காலத்தில் கோப்பித்தண்ணி பழக்கம் நிலவியமை இதில் அடிக்கோடு இடப்படவேண்டியதாகும் .

கட்டு மரம் கொண்டு கடலோரம் போகணும்

கெதியாக் கொண்டுவா பிள்ளை நீயும்

கட்டுவலை பாய்ச்சக் கனியமு மாச்சுது

மீனெழுந்து வரும் நேரமு மாச்சு

(s-media-cache-ak0.pinimg.com)

தன்னை மெத்தப்படுத்த அவள் செய்யும் மாயவேலை தான் இது எல்லாம் என புரிந்து வைத்திருந்த கணவன் , எதையும் வெளிப்படுத்தாமல் வார்த்தைகளை மெதுவாக இறுக்கி கொள்கிறான். நேரடியாக அவளை பேசிக்கொள்ளாமல் , பொய் காரணமும் சொல்லாமல் தன் நிலையை வெளிப்படுத்துகிறான். இரவெல்லாம் ஆழ் கடலில் தூங்கிக்கொண்டிருக்கின்ற மீன்களெல்லாம் சூரிய ஒளிக்காய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது சீக்கிரப்படுத்திக்கொள் என்று நடுமொழி உரைக்கிறான்.

கோப்பித்தண்ணி ஊற்றி வச்சிருக்கே னத்தான்

எடுத்து குடியுங்கோ தாக்கம் தீர

கோபப்படாமலே போகும் போது ஒரு

முத்தமொன்று தாங்கோ ஆசை தீர

உடனே விழித்துக்கொண்ட மனைவி, கணவனின் நியாயமான கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளாமல் இருக்க கோப்பித்தண்ணி ஊற்றி முடிந்தது என்றும் உங்கள் கோபம் தீர குடித்துக் கொள்ளுங்கள் என்றும் சாடையாக கூறுகின்றாள். அவள் கூறும் தாகம் தீர என்பது அவனின் கோபத்தை தீர்க்கவாகவே இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவன் கோபம் தீர்ந்ததா இல்லையா என்று அறிந்து கொள்ளவும் அவள் பெண்மையை ஆற்றிக்கொள்ளவும் முத்தம் கேட்கும் விதம் அலாதியானது. சந்தம் கூட கேட்பது போல ஆசை தீர முத்தம் கோபப்படாமல் தாருங்கள் என்று கவிதை மொழியை மேலும் மேலும் அடுக்குகிறாள்.

முத்தமொன்று தந்தேன் பத்தரை மாற்றுப்

பசும் பொன்னேத்திரு திர வியமே

முத்துப்போல பிள்ளைகள் பெற்றிடுவோம்

தினம் மீன் பிடிக்க கற்று கொடுத்திடுவோம்.

முத்தம் கேட்டவுடன் உருகிப்போன அவன் மனதோடு கோபமும் பறந்தே போகிறது. அவளை அவன் விழிக்கும் விதம் கடலோர சமூகத்தில் மக்களின் மனநிலையையும் கணவன் மனைவி என்ற உறவின் மீது  அவர்கொண்டுள்ள புனிதத்துவத்தையும் உயர்த்திக்கொள்கிறது. தன் மனைவியை பசும் பொன்னாக உருவகப்படுத்திடும் அழகு அவன் பாசத்தின் உச்சம். அதையும் மீறி முத்துப் போல பிள்ளைகள் என்று கூறும் இடத்தில் கடலோர வாடையுடன் கவித்துவம் மேலோங்குகிறது. கடலோரமக்களின் அரும்பெரும் பொக்கிஷம் அவர்களிடம் கிடைக்கும் ஆழ் கடல் முத்தேயாகும். தங்கள் பிள்ளையும் அந்த ஆழ்கடல் முத்தே என விழித்தல், ஒரு தந்தை கண்டுடெடுக்கக் கூடிய முத்து அவர் பிள்ளைதான் என்ற கூரிய உண்மையை வெளிப்படுத்திடுகிறது. கூடவே பிள்ளையையும் தன் வழியே மீன் பிடித்தலுக்குள் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஓர்  ஆணின்  நியாயமான ஆசையும் காட்டப்பட்டுள்ளது.

(s-media-cache-ak0.pinimg.com)

மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திங்களா மென்றால்

அறிவு மலருமோ சொல்லுங்க ளத்தான்

ஈனப் பிறவிகள் நம்மளைப் போ லல்ல

கல்விமானா யாமும் வளர்ந்திடுவோம்

இந்த வரிகள் கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகள் சிலவற்றை படம் போட்டு காட்டுகிறது. கூடவே அந்நாளின் சமூக சிந்தனைகளையும் கூறுகின்றது. கணவன் மகனை மீனவனாக்க வேண்டும் என்று ஆசையை மனதுள் வளர்த்து கொள்கிறான், முத்தம் கொடுத்த உவகையுடன் அதை வெளிப்படுத்தியும் விடுகிறான். இதில் அவன் நோக்கம் இருவிதமான கண்ணோட்டத்துடன் ஆராயப்படவேண்டியதாகும். அக்கால சமூக கட்டமைப்பு மீனவனை மீனவனாகவே அழுத்திக்கொண்டு செல்லும் போக்குடையது. அப்போக்கினை ஏற்றுக்கொண்டவனாகவும் அதே வழி பயணிப்பவனாகவும் காணப்படுகிறான் கணவன். இன்னொரு பார்வையில் அவனை தன் மரபினை, வழித்தோன்றல்களை நினைவில் விழுத்தி அவனை ஒரு மீனவனாக்கும் நோக்கம் கொண்டவனாகவும் சித்தரிக்கலாம்.

ஆனால் மனைவியின் பார்வை எழுச்சியுடையது. அக்கால பெண்களின் மனநிலையும் கருத்து நிலைகளும் பிரமிக்கத்தக்கனவாக இருந்திருக்கின்றது. ஒரு ஆணாக கணவனானவன் தனது சமூக கட்டுப்பாட்டை மீறத் துணிவற்றவனாய் இருக்கும் போது  ஒரு பெண்ணாக அவள் சிந்தனை மறுமலர்ச்சி காண்கிறது. இன்றைய மீனவ சமூகத்தில் இருந்து  நாம் அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் எத்தனையோ  சாதனையாளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த மனைவி போல் எத்தனையோ பெண்களினது தூரநோக்கானதும் துணிவானதுமான சிந்தனையே முதன்மைக் காரணம் எனலாம். தன் மகன் மீனவனாக வருவதனால் அவன் அறிவில் மேம்பாடு வருமோ வராதோ என கவலையுறுகிறாள் மனைவி. சீரிய கல்வியை தனது பிள்ளைக்கு வழங்குவதால் தன்னைப்போன்று, வெயில், மழை, கடும் காற்று என சீரில்லா காலநிலைகளின்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நிச்சயமில்லாத கடற்றொழிலில் ஈடுபட்டு, இன்னுயிரைப் பணயம் வைத்து,  வலையில் சிக்குவதில் இருந்து கையில் சிக்குவதை கண்ணும் காரியமுமாய் பார்த்து சேமிக்க திண்டாடி அலைகளைப்போலே அலைவுறும் கிளிஞ்சல் வாழ்க்கை வேண்டாம், கல்வி கற்றவர்களாக இஸ்திரமான நிலையில் நாமும் வாழவேண்டும் என்று மனதின் வலிகளை கூறும் மொழிகள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாகின்றது.

(vacation-in-vietnam.com)

சரிப்பிள்ளை போயிட்டு வருகிறேன் பால்கஞ்சி

கலயத்தை கொண்ட நீ வந்துவிடு

பொரிச்ச கருவாடும் சேர்த்துக்கொண்டே வந்து

கஞ்சி குடிக்கயில தந்து விடு

அவளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவனாய், மனைவியின் கனவுகளை கலைக்க முடியாதவனாய் கதையின் போக்கை மாற்றுகிறான். உண்மையில் மாற்றவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான். நாழிகள் கடந்து கொண்டே இருந்தன அவன் வேலைக்கு புறப்பட.. அவன் அவளிடம் பால்கஞ்சியும் பொரித்த கருவாடும் மதிய உணவுக்காக கேட்கிறான்.

சரியாத்தான் வலைபோட செல்லுங்கோ கஞ்சி

கலயத்தை கொண்டு நான் வந்திடுவன்

பொரிச்ச கருவாடும் அரைச்ச துவையலும்

கஞ்சி குடிக்கயில தந்திடுவன்

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனைவியாக கருவாடும் துவையலும் கஞ்சியும் கொண்டுவருவதாக கூறுகின்றாள். இதோடு மனைவியின் ஏக்கத்தை உணர்ந்த கணவனும், கணவனின் மனநிலையைஉணர்ந்த மனைவியாகவும் உடல்கள் பிரிய உணர்வுகாளால் பிணைந்திருக்கின்ற அந்த கடலோர குடிசையின் காலைப்பொழுது இதுவாகும்.

நிலையளவில் தாழ்ந்தவர்களாக சித்தரித்துக்கொள்ளும் அவர்கள் மனதளவில் உறுதியானவர்களாயும் அன்பளவில் இறுக்ககட்டுண்டவர்களாயும் காட்டிய அற்புத படைப்பு இந்த நாட்டார் பாடலாகும். மன்னார் என்ற அழகியல் இந்த பாடலில் இழையோடியுள்ளதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறு இருக்கின்றது.
மேலும் படிக்க:

பாகம் ஒன்று

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

பாகம் இரண்டு

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் – 02

Related Articles