எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கால்மீது கால் போட்டு முதலிடத்தில் அமர்திருக்கும் ‘ஜெய்பீம்’

ஒருபுறம் தரப்பட்டியலில் முதலிடம், மறுபுறம் தாறுமாறாக எதிர்ப்புகள் என சமநிறைகொண்ட தராசாக விளங்கும் ஜெய்பீம் திரைப்படம், சமூகவளைதளத்தில் உலாவரும் நெட்டிசன்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படியென்ன பெரிய தரப்பட்டியல்? என்று நீங்கள் கேட்கலாம். சர்வதேச மட்டத்தில் இதுவரை வந்துள்ள திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் பணியை நீண்டகாலமாக IMDb என்ற நிறுவனம் நடாத்திவருகின்றது. தற்போது அமேசான் நிறுவனத்தின் அனுசணையுடன் இந்த நிறுவனம் செயற்பட்டு வருகின்ற நிலையில் அண்மையில் வெளியான ஜெய்பீம் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளது. அமெசான் வெளியிட்ட திரைப்படம், அமேசான் அனுசரணையில் இயங்கும் நிறுவனத்தின் தரப்பட்டியலில் வருவதில் என்ன புதினம் உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். இந்த வலைதளத்தின் பார்வையாளர்களின் வாக்குளின் அடிப்படையிலே ஜெய்பீம் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக முதலிடத்தில் காணப்பட்ட The Shawshank Redemption (1994) 9.3, The GodFather (1972) 9.2  என்ற புள்ளிகளை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றி படங்களை பின்தள்ளி ஜெய்பீம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் தான். 

திரைப்பட போஸ்டர் – புகைப்பட விபரம் – Facebook.com

பாராட்டுக்களை சம்பாதித்துள்ள இந்த திரைப்படம் அதே அளவு எதிர்ப்புக்களையும் சம்பாதித்துள்ளது. நாங்க தான் சாதியை காக்கும் தலைமகன்கள் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சாதியை வைத்து இன்றளவும் தமிழகத்தில் அரசியல் செய்யும் தரப்பினர் தங்களது கடுங்கண்டனத்தை திரைப்படக்குழுவுக்கு எதிராக முன்வைத்துள்ளது, நடிகர் சூர்யாவின் உருவபொம்மை எரிப்பு, அவரின் ரசிகர் மன்றம் மீதான தாக்குதல் என கண்டனத்துக்கு வலுசேர்க்கும் முயற்சிக்கு மாத்திரம் பஞ்சம் இல்லை. எதிர்ப்புகள் வலுக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்திற்கான ஆதரவும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டுதான் இருக்கிறது. 

திரைப்படத்துக்கான விளம்பரம் இலகுவாக கிடைத்துவிட்டது என்று மாத்திரம் இதனை மேலோட்டமாக பார்த்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆவணப்படுத்துவது என்பது இங்கு முக்கியவிடயமாக கருதப்படுகின்றது. அதனை செய்த திரைப்படக்குழுவுக்கு பாராட்டுக்கள். வழக்கறிஞர் சந்துரு எதிர்கொண்ட முக்கியமான வழக்குகள் திரைப்படமாக வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து மாலையோ, பாராட்டுக்களோ வேண்டாமென மறுத்து சட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை துணையாக கொண்டு வாழ்ந்து நீதிபதியாக ஓய்வுபெற்ற சந்துரு அவர்கள் ஒரு நவயுக சரித்திர நாயகன் தான். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற நீபதியாக இவர் இருந்த ஆறு ஆண்டுகாலத்தில் 96ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பஞ்சமி நில மீட்பு, பெண்களும் பூசாரி ஆகலாம் என சர்ச்சசைக்குரிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர். அவரது வேடமேற்று மக்களுக்கான அவரது குரலை பதிவு செய்த நடிகர் சூர்யா மற்றும் திரைப்படக்குழுவின் தைரியம் பாராட்டத்தக்கது. 

நிழல் மற்றும் நிஜ நாயகன் சந்துரு – புகைப்படவிபரம் -www.livelaw.in

ஜெய்பீம் என்றால் என்ன? 

1800களின்போது பார்ப்பன பேஷ்வாக்கள் தான் மராட்டியத்தை ஆண்டுவந்தார்கள். அப்போது இந்தக் கொடுமைகள் அங்கே ஏராளமாக நிகழ்த்தப்பட்டன. இதனை சகித்துக்கொள்ள முடியாத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அவர்களை எதிர்த்து ஆயுத போராட்டம் செய்திடும் முடிவுக்கு வந்தார்கள். போருக்கான இடம் குறிக்கப்பட்டது. அந்த இடம் தான் ‘பீமா’ என்ற நதிக்கரை. டிசம்பர் 31, 1817 அன்று இரவு போர் துவங்கியது. இரண்டாம் பாஜிராவ் என்ற மன்னனின் தளபதி கோகலே தலைமையில் 28,000 போர் வீரர்கள் எதிர்புறம் நிற்க 500 மகர் சமுதாய வீரர்களும், 100 இஸ்லாமிய சமுதாய வீரர்களும் இணைந்து மறுபுறம் நின்றார்கள். எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தாலும் உழைக்கும் சமுதாயம், உரிமைக்காக போராடுகிற சமுதாயம் என்பதனால் இயல்பிலேயே இவர்கள் பக்கம் ஒரு வெறி இருந்தது. போர் துவங்கிய 12 மணி நேரத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பார்ப்பன படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள். தளபதி கோகலே போர்க்களத்தில் கொல்லப்பட்டான். அரசன் கைது செய்யப்பட்டான். 

அடக்குமுறைக்கு எதிராக போர்க்களம் புகுந்து வெற்றி பெற்றதன் நினைவாக பீமா நதிக்கரையில் அப்போது ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது. அப்போதெல்லாம் ஜெய் பீம் என்ற சொல் உபயோகப்படுத்தப்படவில்லை. 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அம்பேத்கார் இந்த நினைவிடத்திற்கு சென்றார். அன்று தான் பீமா நதிக்கரையின் வெற்றியை கொண்டாடும் ஒரு முழக்கமாக ‘ஜெய் பீம்’ என்ற முழக்கம் வெடித்தது என்கிறார்கள். இதனை அடுத்து பெரிதாக இந்த சொல் பயன்பாட்டில் இல்லை. 

 1936 ஆகஸ்டு 15 அன்று அம்பேத்கார் அவர்கள் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் துவங்குகிறார். அதன் தலைமை செயலாளரும் அக்கட்சியின் சார்பில் காம்தி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான எல்.என்.பாபு ஹர்தாஸ் பிப்ரவரி 16, 1937 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீம்ராவ் அம்பேத்காருக்கே வெற்றி என்ற பொருளில் ஜெய் பீம் என்ற முழக்கத்தை மீண்டும் துவக்கி வைத்தார். அதன்பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துக்கொள்ளும் போது சொல்லிக்கொள்ளும் வார்த்தையாக ஜெய் பீம் மாறியது. 

ஜெய் பீம் என்ற வார்த்தை யாரையும் எதிர்ப்பதற்கு உரிய சொல் அல்ல, அது உரிமைக்காக போராடுகிற ஏழை எளிய மக்களை ஒன்றுபடுத்தும் சொல் என்பதே எதார்த்தமான உண்மை என்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள்.

 ஜெய் பீம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மராத்திய கவிஞர் சொன்ன விளக்கம் இது தான்.

 ஜெய் பீம் என்றால் ஒளி,

 ஜெய் பீம் என்றால் அன்பு,

 ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்,

 ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர்த் துளி!

விலாஸ் பி டிலாரெ (மராத்திய கவி)  

ஜெய்பீம் கூறும் கதை

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும், அவர்களுக்கான உரிமைகளையும் வலிறுத்தி நடைபெற்ற நீதிமன்ற வழக்கு மற்றும் அரச அதிகாரம் எனும் பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை ஆவணப்படுத்தும் திரைப்படமாக அண்மையில் வெளிவந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமைந்துள்ளது. 1993ஆம் இடம் பெற்ற இடம்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்களின் கற்பனை கலந்து திரைக்கதையாக்கப்பட்ட படமே ஜெய்பீம். சூர்யா, மணிகண்டன், லிஜொமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோர் தங்களது அதிகார நடிப்பினால் உண்மை சம்பவத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட இருளர் மக்களை திரையில் கொண்டு வந்து இதுவரைகாலம் அவர்கள் அனுபவித்து வரும் வன்கொடுமைகளை உலகத்தின் பார்வைக்கு இயக்குனர் கொண்டு வந்துள்ளார் என்றே கூறவேண்டும். 

 திரைப்பட காட்சியொன்றிலிருந்து – புகைப்படவிபரம் -moviegalleri.net

 

ஒருபுறம் வாழ்த்துகளையும், மறுபுறம் கண்டனங்களையும் அளிக்குவித்து வரும் ஜெய்பீம் கூறவரும் கதை தான் என்ன? 90களின் நடுப்பகுதியில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு (மணிகண்டன்) செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு போலிஸாரால் துன்புறத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுகிறார். நிறைமாத கர்ப்பிணியான ராசாக்கண்ணுவின் மனைவி செங்கெனி (லிஜொமோல் ஜோஸ்) தனது கணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி அறவழியில் தனது போராட்டத்தை நடத்துகிறார். ராசாக்கண்ணுவுக்கு என்ன ஆனது? செங்கெனி தனது போராட்டத்தில் வென்றாரா? மிகுதி கதையாக அமைகிறது. 

‘100 வருட தமிழ் சினிமாவில் புரட்டிப்பார்த்தால் இதுபோல 1000 திரைப்படங்கள் கிடைக்கும் ”ஜெய்பீம்ல அப்படியென்ன புதுசா சொல்லிடப்போறாங்க’, ‘இந்த சாதிபிரச்சனையை படமாக்குறது எல்லாம் இப்ப ட்ரென்ட் ஆகிடுச்சு’ என்று மேம்போக்கான கருத்துகளை களைந்து விட்டு திரைக்கதையில் பொதிந்துள்ள  ஆழமான கருத்துக்களை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். 

ஆர்ப்பாட்டம் இல்லாத ஹுரோவாக நடிகர் சூர்யா இந்த படத்தில் வளம்வந்துள்ளார். உண்மைக்கதையின் தழுவல் ஆனாலும் ஹிரோஹிசம் வேண்டும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில். கதை தான் திரைப்படத்தின் ஹீரோ, நடிக்கும் நடிகர்கள் அல்ல என்பதை சத்தமின்றி கூறியுள்ளார். இயக்குனரும் தமிழ் சினிமாவிற்கு தேவையே இல்லாத காட்சிகளை தவிர்த்து தான் மக்களுக்கு கூறவந்த செய்தியை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இசையமைப்பளாரான ஷோன் ரோலன்ட் கதைக்கு தேவையான அளவு இசையை மாத்திரம் வழங்கி கதையின் சுவாரசியத்துக்கு தடையின்றி செயற்பட்டுள்ளார் என்றே கூறவேண்டும். பாடலாசிரியர் ராஜுமுருகன் வரிகளில் உருவான ‘தலைகோதும் இளங்காத்து’ என்ற பாடல் மூலம் கதையின் நோக்கத்தை 4 நிமிடங்களில் பதிவு செய்துள்ளார். 

‘ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையில

பாத உண்டாகும்’

எனும் வரிகள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து அறவழியில் போராடும் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

ஜெய்பீம் பேசும் அரசியல்

சாதியத்தின் அடிப்படையில் பழங்குடியின மக்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்,  நாட்டின் பழங்குடிகள் என அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இவர்களும் நாட்டின் குடிமக்கள் தான், என எவ்வித உறுதியான ஆவணங்களும் வழங்கப்படாமல் இன்றளவு இம்மக்களின் அடிப்படை எவ்வாறு மறுக்கப்படுகின்றது என்பதை ஜெய்பீம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஆரம்பகாட்சியில் சிறையிலிருந்து வெளியே வரும் கைதிகள் சாதியின் அடிப்படையில் பிரிக்கப்படும் போது அங்கு புதிதாக பணியில் இணைந்த காவல் அதிகாரி ‘இவர்கள் அநாதைகளா?’ என்ற கேள்வியை முன்வைப்பார். அந்த ஒற்றை வசனம் இந்தியாவில் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களின் உள்ளக்குமுறலை சற்று சத்தமாவகவும் கூறியுள்ளது. 

திரைப்பட போஸ்டர் – புகைப்பட விபரம் – FaceBook- RanjithKumar

‘சட்டம் என்பது ஒரு ஆயுதம் அதை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்’ என்று கூறும் வசனங்கள் அண்ணல் அம்பேத்கரின் இலக்குகளை அடியொற்றி இருக்கின்றது. 

பொலீஸ் ஆய்வாளர் நாயகம் பெருமாள்சாமி (பிரகாஷ்ராஜ்) சந்துருவை (சூர்யா) பார்த்து, ‘பொலீஸ்க்கும் சமூகத்து மேல அன்பும் அக்கறையும் இருக்கு’ என்று கூற மறுவார்த்தை பேசாமல் டிஜிபி அலுவலகத்தின் முன்னாள் நடக்கவிருக்கும் முற்றுகை போராட்டுத்துக்கான துண்டுபிரசுரத்தை பெருமாள்சாமி கையில் கொடுத்து நகர்ந்துவிடுவார் சந்துரு. என்ன தான் அன்பு, அக்கறை என்று பேசினாலும் பொலிஸ் அதிகாரிகள் போராட்டங்களில் பங்குபற்ற முடியாது. தமக்காக போராட முடியாத போலீஸ், எப்படி மக்களுக்காக போராடமுடியும் எனும் பதில் அதில் பொருந்தியுள்ளது. 

ஜெய்பீமும் ஜெயாவும்   

ஜெய்பீம் பார்த்த அனைவருக்கும் தெரியும், இதன் திரைக்கதை ராசாக்கண்ணு, செங்கணியை சுற்றியே அமைந்துள்ளது என்று. குறிப்பாக காட்சியின் ஓட்டத்தில் செங்கணி திரைக்கதையில் பெரும் பகுதியை பெற்றிருப்பார். நீதிமன்ற வழக்கில் பொலீஸ் சாட்சியங்கள் அனைத்தும் பொய்யென வழக்கறிஞர் சந்துரு நிருபித்ததும், அடுத்த காட்சியில் தினத்தந்தி பத்திரிகையில் தலைப்பு செய்தியாக அச்சம்பவம் இடம்பெற்றிருக்கும், கூடவே முதலமைச்சருக்கு எதிராக பொய்வழக்கு என்று மற்றுமொரு செய்தியும் இடம்பெற்றிருக்கும் அப்போதைய 1996 களில் முதலமைச்சராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா.

அவருக்கு எதிராக சுப்ரமண்ய சுவாமி தொடுத்த சொத்து குவிப்பு வழக்கே அங்கு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும். உண்மையில் ராசாக்கண்ணுவின் வழக்கும், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்கு குவிப்பு வழக்கும் நீண்ட காலம் நடைபெற்று தீர்வு காணப்பட்ட வழக்குகளாகும். உச்சாணி கொம்பில் அமர்ந்துள்ள பெண்ணிற்கும், ஒடுக்கப்படும் பழங்குடியின பெண்ணிற்கும் ஒரே நிலைதான் என்பதையும், மற்றும் சட்டமானது இருவருக்கும் சமமாகவே இருக்கும் என்பதையும அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். தலைமை வழக்கறிஞராக வரும் ராவ் ரமேஷ் ‘இவங்களையெல்லாம் யார் கோர்ட்டுக்குள்ள அனுமதிக்குறாங்க’ என்று செங்கணியை தாழ்த்தி பேசுவதாக காட்சிகள் அமைந்திருக்கும். மறுபுறம் அதே தலைமை வழக்கறிஞர் ‘சீ.எம் என்னோட பெயரையும் எம்.பி லிஸ்ட்ல சேர்த்து இருக்காங்க’ என்று பவ்வியமாக கூறுவது போன்று காட்சிகள் அமைந்திருக்கும். இந்த முரண்பாடான இருவேறு சம்பவங்கள் ‘அதிகாரத்தை கைப்பற்றுவதன் ஊடாக நம் விம்பத்தை மாற்றிட முடியும் என்ற அம்பேத்கரின் கூற்றை உண்மையாக்கியுள்ளார் இயக்குனர்.  

ஜெய்பீமும் இலங்கையும் 

அதிகாரத்தின் துணையுடன் காணமல் ஆக்கப்படும் எளிய மக்களின் நிலைகுறித்தும் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளைப்பற்றியும் இந்த திரைக்கதை பேசும் நிலையில், இலங்கையில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நிலையும் நம் 

கண்முன்னே வந்து செல்கின்றது. 

இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனோர் தொடர்பான போட்டமொன்றின் போது – புகைப்பட விபரம் -justiceinconflict.org

உள்நாட்டு போரின் போது காணமல் போன மக்களின் குரல்களின் விம்பமாகவும் செங்கணியின் குரல் அமைந்துள்ளது. இன்றளவும் காணமல் போயிருக்கும் தமது சொந்தங்களுக்காக போராடும் மக்களுக்கு 

‘மாறுமோ தானா நிலை 

எல்லாமே தன்னாலே

போராடு நீயே அறம்

உண்டாகும் மண்மேலே

மீதி இருள் நீ கடந்தால்

காலை ஒளி வாசல் வரும் 

தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்

நமக்கான நாள் வரும்.’ 

என்ற ராஜுமுருகனின் பாடல் வரிகள் ஆறுதலாக அமைந்துள்ளதோடு, இத்திரைக்கதை அவர்களுக்கான நம்பிக்கையாகவும் அமையட்டும்!

Related Articles