“கர்ணனின் யுத்தம்”

கர்ணன், இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத சலனத்தை ஏற்படுத்திச் சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படைப்பான கர்ணன் மூலம் தமிழ் சமூகத்துக்கு ஒரு பாடம் கற்பித்து உள்ளார் என்றே கூறவேண்டும்.

முதலில் கர்ணன் திரைப்படத்தின் விமர்சனத்தையும் அத்திரைப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம். 90களில் இடம்பெற்ற சாதி வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி இந்த திரைப்படமானது அமைந்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டத்தை களமாக  கொண்டுள்ளதோடு களத்துக்கேற்ற வட்டார மொழிகளை இயக்குனர் லாவகமாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கர்ணனாக தோன்றும் நடிகர் தனுஷ், இந்த வட்டார வழக்குகளைமிக அழகாக கையாண்டு இருப்பதன் மூலம் திரைப்படம் முழுவதும் கதை களத்தில் தன்னைத் தக்கவைத்துள்ளார் என்றே கூறவேண்டும். 

ஒரு சிறுமியின் மரணத்தோடு ஆரம்பிக்கும் படம், முதல் காட்சியிலேயே அடுத்து வரப்போகும் விஷயங்களுக்கு தயார்படுத்துகிறது. எளிதில் ஊகிக்கிற கதையோட்டமாக இருந்தாலும், சட்டென்று கோபப்படும் நாயகன், அவனைக் கொண்டாட ஒரு கூட்டம், எதிர்க்கும் ஊர் பெரியவர்கள், ஆதரிக்கும் ஊர் தலைவர், நிற்காத பேருந்தின் பின்னால் இருக்கும் அரசியல், பேருந்தை நிற்கவைக்க தனுஷும், நண்பர்களும் செய்யும் காரியம், அங்கிருந்து சங்கிலித் தொடராக அதன் விளைவுகள், எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கும் இறந்துபோன சின்னப் பெண்ணின் ஆன்மா என நம் எதிர்பார்ப்புக்கு தொடர்ந்து தீனி போடுகிறார் இயக்குனர்மாரி செல்வராஜ்.

முதலாவது காட்சியில், தார் வீதியில் துடித்துக் கொண்டிருக்கும் சிறுமி, அவளை கடந்து செல்லும் பல்வேறு நிறத்திலான பேருந்துகள், உயிரிழந்த சிறுமி நாட்டார் தெய்வமாக மாறுவது குறியீடுகளின் மூலம் களத்தில் காணும் பிரச்சனையை தெளிவாக கூறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

“கண்டா வர சொல்லுங்க” என்ற பாடலின் காட்சிகளின் மூலம் கதையின் மாந்தர்களை அறிமுகம் செய்வதும், அப்பாடல் வரிகளின் மூலம் கதையின் வேட்கையை கூறுவதும் என புதிய பாணியை மாரிசெல்வராஜ் கையாண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கர்ணனின் புறப்பாடு திரைப்பட டீசரிலிருந்து

திரைக்கதையில் கதை மாந்தர்களை தவிர மிருகங்களையும் பயன்படுத்தி இருப்பது அதன் மூலம் கதையை கூற முற்பட்டிருப்பது, இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்றாக விளங்குகின்றது. படத்தின் இடைவேளை வரை கதையோடு ஒன்றிப் பயணிக்கும் கால் கட்டுண்ட கழுதை ஒடுக்கப்பட்ட கதை மாந்தர்களின் மனவோட்டத்தின் வெளிப்பாடாக காண்பித்துள்ளது. குறிப்பாக போலிஸ் நிலையத்தில் ஊர் பெரியவர்கள் அடிவாங்கும் காட்சியை பட்டாம்பூச்சின் படபடப்பில் காட்டியிருப்பது பிரமாதம். இந்த படத்தில் யானை, குதிரை, நாய் என மிருங்களையும் நடிக்க வைத்து உயிர்கள் அனைத்தும் சமம் என்ற உண்மையை இயக்குனர் உரக்க கூறியுள்ளார்.

தலை துண்டிக்கப்பட்ட புத்தரின் சிலை, தலையை மட்டும் வரையாமல் ராணுவ உடையில் இருக்கும் ஓவியம், காவல் நிலையத்தில் அம்பேத்கர் படம் எனப் படம் முழுவதும் பல குறியீடுகள் உள்ளன. அத்துடன் வாளால் மீன் வெட்டும் மரபு, நாணயங்களை வைத்து சூதாடுவது என மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களையும் படத்தில் வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

கர்ணனின் திரைப்பட டீசரிலிருந்து- புகைப்பட உதவி- SocialNews.XYZ/NewsHelpline.com

இந்த படம் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியான டீசர் மற்றும் போஸ்டர்களில் நடிகர் தனுஷ் இரட்டை முனை வாளொன்றை கையில் ஏந்தியிருப்பதை நாம் பார்த்தோம். வாள் என்றாலே அது வீரத்தின் அடையாளம் தான் என்ற எண்ணம் நம் மனதிலும் இருக்ககூடும். ஆனால்; கதையோட்டத்தில், அது வெறும் ஆயுதம்; தான். அதை வைத்து விறகும் வெட்டலாம், வெங்காயமும் நறுக்கலாம் என நையாண்டியாக போகிறபோக்கில் கூறிச்செல்லும் இயக்குனர், அதே வாள் எந்த நோக்கத்திற்காக பயன்படுகிறது என்பதை வைத்தே, அது வீரத்தின் அடையாளமாக விளங்கும் என்பதை இறுதிக்காட்சியில் உணர்த்தியுள்ளார்.

கதையின் இடைவெளி காட்சிகளில் கர்ணன் கதாபாத்திரம் கழுதையின் கால்களில் கட்டியுள்ள கயிறுகளை கற்களால் அடித்து கழற்றுவதும், கட்டவிழ்க்கப்பட்ட கழுதை துள்ளியோடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் கோபம் கட்டவிழ்க்கபடுவதும், கோபத்தில் மக்கள் பேருந்தை அடித்து உடைப்பதும், மக்களின் கோபத்தால் என்றும் நிற்காத அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலால் தேங்கி நிற்பதும் பார்வையாளர்களை மயிர்க்கூச்சிட செய்துள்ளது.

அத்துடன் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு போக்குவரத்து என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை இந்த படம் நமக்கு தெளிவாகவே உணர்த்தியுள்ளது. சாதியின் பெயரால் போக்குவரத்து வசதி மறுக்கப்படுவதையும், சாதாரண போக்குவரத்து உரிமை மறுக்கப்படுவதால் கதை மாந்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை துல்லியமாக திரைக்கதையில் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்லூரி வாய்ப்பு கிட்டியும் போகமுடியாமல் தவித்து நிற்கும் மாணவி, பேருந்துக்காக கால்கடுக்க நிற்கும் கர்ப்பிணித்தாய், நேர்முக பரீட்சைக்கு நேரத்துக்கு செல்ல முடியாத இளைஞர்கள், சரியான மருத்துவ உதவியின்றி மரிக்கும் உயிர்கள் என சாதாரண உரிமை மறுப்பினால் நிகழும் அவலங்களை அடிகோட்டிட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜின் எழுத்து எந்த அளவுக்கு பலம் சேர்த்துள்ளதோ,  அதே அளவுக்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் கலை இயக்குனர் ராமலிங்கம் அவர்களின் உழைப்பும், முயற்சியும் அவ்வெற்றிக்கான பங்காக பார்க்கப்படுகிறது. கர்ணன் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிராமம் மொத்த அமைப்பும் திரைப்படத்துக்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீனை வெட்டும் காட்சியில், அந்தக் குளம் குளத்தின் அருகில் உள்ள பாறைகள் என அனைத்தும் செட் ஆகவே போடப்பட்டுள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கத்தின் துணையுடன் கிராமத்தின் உயிர்ப்பான தன்மை காட்சிகளில் இழையோடி உள்ளது.

கர்ணனின் திரைப்பட காட்சிகளிலிருந்து- புகைப்பட உதவி- SocialNews.XYZ/NewsHelpline.com

அத்துடன் தனது இரண்டாவது படத்திலும் மாரி செல்வராஜ் எவ்வித தயக்கமும் இன்றி இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் கை கோர்த்துள்ளார். காட்சிக்கு காட்சி இசை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளதுடன் திரைப்படத்தைப் பார்க்கும் அனைவரையும் சந்தோஷ் நாராயணன் தனது இசையால் கட்டி ஈர்த்துள்ளார் என்றே கூறவேண்டும் போலீசுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான சண்டையின்போது பின்னணியில் ஒரு கர்ப்பிணியின் கதறலை பின்னணி இசையாக  சேர்ந்திருப்பதும் , திரைப்படத்தின் இறுதியில் மனம் கனத்துப் போய் இருந்தாலும் பறை இசையில் நம் மனதை குத்தாட்டம் போட வைத்திருப்பதும், சந்தோஷ் நாராயணனின் அசாத்திய திறமையாகவே பார்க்கப்படுகிறது. படத்தில் பாடல்கள் குறைவாக இருந்தாலும் அனைத்து பாடல்களும் மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு பாட்டின் வரிகளும் இசையும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அப் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தி யுள்ளனர். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் துணை நடிகர்களாக தோன்றியவர்கள் பிரதான நடிகர்களுக்கு இணையாகவே தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்கள். அத்தோடு “யமராஜ்” ஆக நடித்த லால் அவர்களின் நடிப்பு இத்திரைப்படத்தைப் பார்த்த அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். மஞ்சனத்தியை நெஞ்சார நேசிக்கும் ஒரு தபுதாரக் கிழவன், வயதானாலும் இளைஞர்களோடு இளைஞர்களாக ஒன்று சேர்ந்து இருக்கும் அவரது மனநிலை, ஊருக்காக பாடுபடும் அவரது வீரம் என அந்த கதாபாத்திரம் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது.

கண்ணபிரான் ஆக வரும் நடராஜ் அவர்களின் நடிப்பு பார்வையாளர்களின் பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளது என்றே கூறவேண்டும். சதுரங்க வேட்டை, மிளகாய் என்ற படங்களின் மூலம் தானும் ஒரு ஹீரோதான் என பலர் மனதிலும் நிலைத்து நின்ற நட்டி நடராஜ், தனது சிறப்பான நடிப்பாற்றல் மூலம் மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்து விட்டார். கர்ணன் திரைப்படத்தின் மூலம் ஓர் சிறந்த குணச்சித்திர நடிகனை தமிழ் சினிமா அடையாளம் கண்டுவிட்டது.

கர்ணன் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் கதாநாயகன் தனுஷ் –புகைப்பட உதவி- cinema Express

கர்ணன் திரைப்படத்தை பார்த்த அனைவரும் கர்ணனின் அக்காவாக வரும் நடிகை லக்ஷ்மி பிரியாவின் (‘பத்மினி’) நடிப்பை மிகவும் பாராட்டியிருந்தார்கள். அதற்கு காரணம் அந்த கதாபாத்திரம் திரைக்கதைக்கு பெரும் தூணாக அமையப்பெற்றிருந்தமை. காட்சிக்கு காட்சி தம்பிக்காக வரிந்து பேசினாலும், கர்ணன் குடித்துவிட்டு வரும் காட்சியில், சாப்பிட்டு கொண்டு இருக்கும் தம்பியை காலால் எட்டி உதைந்து, ‘நீ சம்பாதிச்ச காசுல சாப்பிடும் வரைக்கும் இந்த வீட்ட விட்டு நான் போமாட்டன்’ என்று வீராப்பாக பேசுவது போன்;ற காட்சிகள் அந்த கதாபாத்திரத்தின் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தி விட்டதென்றே கூறவேண்டும்.

அடுத்ததாக வடமலையான் என்ற கதாபாத்திரமாக தோன்றும் யோகி பாபு தனது கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்த்துள்ளதோடு தனது இயல்பான நடிப்பினால் மனதில் நின்றுள்ளார். தனது வழக்கமான நகைச்சுவை பேச்சு எதுவும் இன்றி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ள யோகி பாபு, திரைக்கதைக்கு பெருமளவில் வலு சேர்த்துள்ளார்.

நடிப்புக்காக 2 தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட நடிகர் தனுஷ் கர்ணன் படத்தின் மூலம் தனது மூன்றாவது தேசிய விருதுக்கு அத்திவாரம் போட்டுள்ளார். தனது முதல் காட்சியிலேயே வட்டார வழக்கு மொழியினை லாவகமாக கையாண்டிருக்கும் நடிகர் தனுஷ், கதை களத்தினில் நிலைத்து நின்று விட்டார் என்றே கூற வேண்டும். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒடுக்கப்படும் ஊர் மக்களின் உரிமைகளுக்காக தைரியமாக குரல் கொடுப்பது, எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்ற ஆர்வம், ஊரில் எந்த ஊரு நிகழ்விலும் கலந்து கொண்டு அதற்கு உதவும் தன்மை, என்ன மக்களோடு மக்களாக போராடும் கர்ணன் கதாபாத்திரத்தின் வேட்கை நம்  அனைவரது வேட்கையாக மாறிவிடுகிறது.

கர்ணனின் திரைப்பட Poster  – புகைப்பட உதவி- Twitter India

மகாபாரத கதாபாத்திரங்களான கர்ணன், துரியோதனன், அபிமன்யு மற்றும் திரௌபதி ஆகிய பெயர்களை பயன்படுத்தியதன் மூலம் இயக்குனர் மாரி செல்வராஜ் வம்பு இழுத்து இருக்கிறாரா என்ற கேள்வி நம் மனதில் எழத்தான் செய்கிறது. ஆனால் மகாபாரத மன்னர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல, இந்த மக்கள் என்ற காரணத்தை அடி கோடிடும் வகையிலேயே இத்திரைகதையானது அமைந்துள்ளது.

படத்தில் ஒடுக்கப்படும் மக்கள் ஆயுதமேந்திப் போராடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது பலரது கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த போதும். இதற்கான பதிலை இயக்குனர் மாரி செல்வராஜ் சாதுரியமாக படத்திலேயே வழங்கியுள்ளார். “என் பிரச்சனை என்னங்கறது உனக்கு முக்கியமில்ல. நான் எப்படி பேசுறன், எப்படி நிக்கிறதுங்குறது தான் உனக்கு முக்கியம்”  என சாட்டை அடி கொடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

சாதியை மையப்படுத்தி திரைப்படமெடுப்பது ட்ரென்டிங் ஆகியுள்ள நிலையில் நிலையில், மாரி செல்வராஜ் தனது வளர்ச்சிக்காக சாதிப் பிரச்சினைகளை பயன்படுத்துகிறாரா? என்ற கேள்வியை பலரும் முன்வைத்திருந்தார்கள். ஆனால், சாதிய வன்கொடுமைகளை அடையாளப்படுத்தும் திரைப்படங்களின் தேவை எக்காலத்திலும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளத் தான் வேண்டும். காரணம் சாதி ஒடுக்குமுறை என்பது காலத்துக்கு காலம் மாறிக் கொண்டுதான் இருக்கின்றது. மாறி வரும் சாதிய வன்கொடுமைகளை சுட்டிக் காட்டுவதற்காக வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை காட்சிகளாக மாற்றுவது சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான தடுப்பூசிகளாகவே பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் கர்ணன் திரைப்படமும் வரலாற்றை ஆவணப்படுத்திய சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு காவியமாகவே  அடையாளப்படுத்தப்படுகிறது.

திரைப்பட காட்சிகளிலிருந்து- புகைப்பட உதவி- SocialNews.XYZ/NewsHelpline.com

மகாபாரதக் கதையை பொருத்தவரை எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல கர்ணன். வில்வித்தையில், வீரத்தில், தர்மத்தில் என பாண்டவர்களை விஞ்சியவன். சூரிய பகவானுக்கே மகனாக பிறந்தாலும், சத்ரியன் அல்லாத காரணத்தால் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும் அந்த கர்ணனும், இந்த கர்ணனும் காலத்தாலும் கதையாலும் வேறுபட்டு நின்றாலும், இன்னும் வெற்றிபெற முடியாத சாதிய வன்முறைகளுக்கு எதிராக போர் வாள் தூக்கும் மன்னர்களே!

கர்ணன் வெறும் திரைப்படம் மட்டுமல்ல, தமிழ் சமூகத்தில் சாதியின் பெயரில் நிகழ்த்தப்பட்ட, நிகழ்ந்து கொண்டு இருக்கின்ற வன்கொடுமைகளை சுட்டிக்காட்டி, சூடுபோடும் ஓர் ஆவணம்.

Related Articles