இனியொரு விதி செய்வோம்

இனியாவது
கடந்த காலச்
செருப்புக்களைக்
கழற்றி எறிவோம்
எதிர்காலத்திற்கான
சிறகுகளைச் சேகரிப்போம்!

தோள்களைப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கும்
தோல்விகளை நாம்
துரத்தியடிப்போம்!

தகுதியுடையவர்களைத்
தேடி
வந்து சேராவிட்டால்
வெற்றிகளுக்கும்
போடுவோம்
ஒரு
விசாரணை கமிஷன்

உறங்கிக் கொண்டிருக்கும்
போர்வாளைக் காட்டிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழுக்கூட
உயர்ந்ததுதான்!

இனியொரு
விதிசெய்வோம் –
ஒற்றைச் சக்கரத்தால்
வண்டி உருளாது
ஒற்றுமைச் சக்கரத்தால்
உலகையே
உருட்டுவோம்!

எத்தனை உயரமாய்
எழுந்தாலும்
அலைகள்
அடங்கிப் போவது
கரைகளின் ஒற்றுமையைக்
கண்ட பிறகுதான்!

அறுபது கோடியும்
இணைந்து நடந்தால்
பாதைகள் கூட
பயப்படும்!

துளிகள்தாம் நாம் –
என்றாலும்
குடத்தில் எடுத்து நம்மைக்
குறைக்க முடியாதபடி
கலந்து கொள்வோம் – ஒரு
கடலாவோம்.

வானத்து மேகம் நம்மை
வார்த்துக் கொண்டாலும்
மழையாய் மாறி
மறுபடியும் பொழிவோம்!

காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே
இருக்கட்டும்….
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்!

கவிஞர் மு மேத்தா

Related Articles