உரிமைக் குரலை இசை அரசியலாக்கிய கறுப்பினத்தவர்

 

“ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். முதலாவது வகை, நாம் அன்றாடம் காணக் கூடியவர்கள் – நம்மைப் போலவே உண்டும், உறங்கியும், வேலை செய்துகொண்டும் நம் முன்னே நடமாடக் கூடியவர்கள். இரண்டாவது, மூதாதையர்கள் – முற்காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள்.”
 
“மூன்றாவது வகை யாருப்பா..?”
 
“மூன்றாவது வகை மக்கள்… இனி பிறப்பதற்காகக் காத்திருப்பவர்கள்!”
 
– ‘வேர்கள்’ நூலில் அலெக்ஸ் ஹேலி
 
ஒரு கறுப்பினத்தவரின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கத் தொடங்குங்கள். நிச்சயமாக அவரது பிறப்பு, ஒரு வீட்டிலோ அல்லது ஒரு படுக்கையிலோ நிகழ்ந்திருக்காது. அவருடைய தாய், ஒரு வெள்ளைக்காரரின் வீட்டுச் சமையல்காரராகவோ அல்லது சலவைக்காரராகவோ இருந்திருப்பார். அவருடைய தந்தை, ஒரு தோட்டப் பராமரிப்பாளராக இருந்திருப்பார். 
 
செழித்து வளரும் வயலில் வேலை செய்பவர்களின் முகத்தில் எந்தப் புத்துணர்வும் தென்படாது. அந்தச் சூழலில் சிறுவர்களின் கெடுபிடியான விளையாட்டுப் பருவம்கூட எந்த விதமான புதுக் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தாது. பொழுது ஓய்ந்த நேரங்களில் மக்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து விதிவிலக்கானவரின் புரட்சி உரைகளைப் பற்றி கிசுகிசுப்பார்கள். ஞாயிறு காலைகளில் முதலாளிகளின் வீட்டில் ஒலிக்கும் பிரார்த்தனைப் பாடல்களை கேட்டுவிட்டு, அவர்களுக்குள்ளாகவே வினோதமாக சிரித்துக்கொள்வார்கள்.
 
ஏதேனும் ஒரு சந்தர்ப்ப நாளில், ஓர் அடிமை முதியவர் தனது கூட்டத்திற்கு பரங்கிகள் பாடும் பாடல்களை பாடிக் காட்டுவார். வினோதமான வார்த்தைகளைச் சேர்த்து, கைகளை வானத்தை நோக்கி விரித்து, இறைவனிடன் மன்றாடும் வகையில் சிரித்துக்கொண்டே பாடுவார். இடையிடையே தனது பூர்விக மண்ணின் நினைவு வந்ததும், அவர் குரலில் மாற்றங்கள் செய்து ‘ஊ… …. …. லல… …. … ஏய்…’ எனப் பாடுவார். 
 
அன்றாடங்களில் சிறு இன்பங்களை உருவாக்கி மகிழ்ந்து, சோர்வை மறந்து வைக்கோல் படுக்கைக்கு திரும்பும் தருவாயில் ஒரு மரண ஓலம், அந்த இரவின் நிம்மதியை கலைக்கும். தப்பித்துச் சென்ற ஓர் அடிமையின் கெண்டைக்கால் நரம்புகளை துண்டித்து, அவனை உறைபனியில் வீசியிருப்பார்கள். அந்த அழுகுரல், அந்த முனகலில் படரும் வலி ஒருவரையும் நித்திரை கொள்ளவிடாது.
 
கேள்விகளின்றி, கோரிக்கைகளின்றி விம்மும் ஒரு குழந்தையின் அழுகையை எந்த ஆறுதலாலும் ஆற்றுப்படுத்த முடியாது. அந்த அழுகை, காத்திருப்பின் வலியால் விளைந்தது; எதிர்ப்பார்ப்பின் தாமதத்தால் ஆனது. அது நீடிக்கும். அந்த ஓலங்கள், அந்த நகைச்சுவை பிரார்த்தனை செய்கைகளிலிருந்துதான் தொடர்ந்தது இன்று உலகம் கொண்டாடும் ஜாஸ் (Jazz), ப்ளூஸ் (Blues) முதலான இசை வகையறாக்கள்.
 
இசை அரசியலின் வழி தனது குரலினால், தன் வரிகளால், இசைக்கருவிகளால் தன் வலியினை, கோபத்தினை, ஒடுக்கப்பட்டவர்களின் குரலை இந்த உலகிற்கு காட்டியவர்கள் பலர். வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நிறவெறி அவர்களை துரத்தியிருக்கிறது. ஆனால், இன்று அவர்கள் நினைவுகூரப்படுவது, அவர்களின் நிறத்தால் அல்ல; அவர்களின் பாடல்களால்!
 
ஒரு நூற்றாண்டின் புகழ்பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் பகுதியினர், கறுப்பினத்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. அந்த வலியை அவர்கள் தன் கடைசி மூச்சு வரை பாடினார்கள்; மக்களை தன்வசப்படுத்தினார்கள். அவர்களில் தவிர்க்க முடியாத நால்வர் இவர்கள்:
 
‘புரட்சிப் பாடகி’ நினா சிமோன்!
 
“இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் உயிர்ப்புடையவளாய் அன்று நான் இருந்ததாய் உணர்கிறேன். ஏனென்றால், என்னால் என் மக்களுக்கு உதவ முடிந்தது. அவர்களுக்காக எதேனும் பாட முடிந்தது.” 

பட உதவி: madmimi.com
தன் வரலாற்றில் இந்த வரிகளை குறிப்பிடும் நினா சிமோன் (Nina Simone) தனது பயணத்தை மூன்று வயதிலிருந்து தொடங்கினார். ஞாயிறு சபைகளில் பியானோ வாசித்துக் கொண்டே தான் கற்றுக்கொண்ட ‘இறைவன் உங்களுடன் நிற்கட்டும்’ எனும் பாடலை அவர் பாடுவது வழக்கம். நினா பாடவிருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரது பெற்றோரை வலுக்கட்டாயமாக பின் வரிசையில் அமரச் செய்தார்கள். இதை அறிந்த நினா தனது பெற்றோர் மீண்டும் முன்வரிசையில் அமரவைக்கப்படாத பட்சத்தில், தான் பாடப்போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். இந்தக் கோபத்தை வெளிப்படுத்தியபோது அவருக்கு வயது 12. இந்த நிகழ்வுதான் பிற்காலத்தில் தன் உரிமை இயக்கப் பங்களிப்பிற்கு முக்கிய காரணம் என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் நினா சிமோன்.
 
ஒரு கறுப்பினப் பெண்ணுக்கு கேளிக்கை விடுதியில் வேலை கிடைக்காமலா போகும்..? நினா பகுதிநேர வேலைக்குச் சேர்ந்தார். பாடல்களை தன் விருப்பபடி எழுதி, தனக்கான தனித்த இசையின் போக்கை அமைத்துக்கொள்ள ஒரு கேளிக்கை விடுதியும், மாதம்  90 டாலர் சம்பளுமும் உதவின. பள்ளிப் படிப்பை முடித்த நினா, இசை பயில்வதற்காக ஃபிலடெல்ஃபியாவில் உள்ள இசைக் கல்லூரியில் விண்ணப்பித்தார். நிறத்தின் காரணமாக சீட் மறுக்கப்பட்டதில் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எந்த ஆச்சரியமும் இல்லை. 
 
சிற்சில மேடைகளில் பாடல்களைச் சொந்தமாக எழுதியும் பாடியும் தனக்கென ஒரு குறுகிய ரசிகர் வட்டத்தை எற்படுத்திக் கொண்டார். 
காஸ்பல் (Gospel) எனும் இசை வகைமையில் தொடங்கிய தனது பயணத்தை, பிற்காலத்தில் ப்ளூஸ், ஜாஸ் என மாற்றிக்கொண்டார். 1963-ல் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்குப் பின்னர் நிறவெறிக்கு எதிரான தனது குரலை ‘மிசிசிப்பி காட்டேம்’ (‘Mississippi goddam’) என்ற பாடலில் பதிவு செய்தார்.இ தற்காக அவர் கடுமையான வார்த்தைகள், கொலைமிரட்டலுக்கும் ஆளானார். சிறிதுகாலம் பாடும் வாய்ப்பை இழந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்தப் பாடல் எனக்கு புரட்சியைப் போன்றதுதான். அவர்களை நோக்கி திருப்பி இரண்டு குண்டுகளை எறிவதுபோல் தான் இது” என்றார். 
 
வியட்நாம் போருக்கு எதிர்வினையாக, தன் குடிமை வரியைக் கட்ட மறுத்த நினா சிமோனை கைது செய்ய ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதனால், சிறிதுகாலம் பார்படோஸ் சென்று வசித்தார். தனது பாடல்களால் உச்சத்தை எட்டிய நினா ஒருபோதும் அதிகாரத்திடம் தன் உரிமையை விட்டுத் தரவில்லை. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நினாவின் மரணத்திற்கு சில தினங்கள் முன்பு, அவருக்கு கெளரவப் பட்டம் வழங்கியது இசைக் கல்லூரி. ஆம், அவரது விண்ணப்பத்தை கடைசி வரை பரிசீலிக்காத அதே ஃபிலடெல்ஃபியா இசைக் கல்லூரிதான்!
 
ஜாஸில் மைல்கல் பதித்த மைல்ஸ் டேவிஸ்!
 
ஜாஸ் என்பது ஒரு வகையான யதேச்சை இசை வகையறா. ஒருமுறை பாடப்படும் பாடல் அல்லது கருவியால் வாசிக்கப்பட்ட இசையை மீண்டும் அதே லயத்தில் வாசிக்கப் பிடிபடாத தன்மைக்கு உட்பட்ட ஒரு வகை. இசை நிகழ்த்தப்படும் தருவாயில் கலைஞர்கள் தங்களது ரசனைக்கேற்பவும், அகச் சிதறலுக்கேற்பவும் வார்த்தைகளின் கனத்தைக் கூட்டியும் குறைத்தும் மெருகேற்றுவர். கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு வடிவமற்ற வகையாக தெரிந்தாலும், எடுத்தாளும் வகையில் இது ஓர் எல்லையைக் கொண்டிருந்தது. தனக்குள்ளாகவே ஒரு வடிவத்தை ‘ஜாஸ்’ உருவாக்கிக் கொண்டது.
 
ஜாஸ் இசையைக் கேட்பது என்பது ஓர் அறிவுக்கூர்மை சார்ந்த செயலாக மாறிவிட்டிருக்கிறது. 2016-ல் ஆஸ்கர் விருது பெற்ற ‘லா லா லேண்ட்’ (LA LA Land) எனும் திரைப்படம் ஜாஸ் இசையை மையமாகக் கொண்ட படைப்பு. அதே இயக்குனரின் 2014-ல் வெளிவந்த ‘விப்ளாஷ்’ (whiplash) எனும் திரைப்படமும் ஜாஸ் குறித்த படங்களில் குறிப்பிடத்தக்கது. இத்தகைய படங்களில் நீங்கள் மைல்ஸ் டேவிஸ் (Miles Davis) பெயரை கேட்டிராமல் இருக்க முடியாது. 
பட உதவி: wavenewspapers.com
முன் வரையறுக்கப்பட்ட எல்லா கோடபாடுகளையும் கட்டுடைத்தவர், மைல்ஸ் டேவிஸ். தந்தையின் நண்பர் பரிசாக அளித்த ட்ரம்பெட் (Trumpet) இசைக் கருவியைக் கொண்டு இசையைக் கற்கத் தொடங்கினார். பள்ளியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்ட முயன்றார். “எனது பள்ளியில், நான் போட்டிகளில் வெற்றி பெறாததற்கு காரணம் உண்டென்றால், அது என் நிறம் மட்டுமே…” என்பது டேவிஸின் கூற்று. ஒவ்வொரு தோல்வியிலும் அவரது தேடல் இன்னும் வலுப் பெற்றது. அவர் இசை சார்ந்த கோட்பாடுகளை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினார்.
 
“கோட்பாடுகள் சார்ந்து தெரிந்துகொள்ள என்னால் இயன்றவரையில் எல்லாவற்றையும் தேடி வாசித்தேன்” என்ற டேவிஸ் தனது திறமையால் மிக விரைவிலேயே உயரங்களைத் தொட்டவர். இடைப்பட்ட காலத்தில் போதைப் பழக்கங்களுக்கு ஆளானவர், தனது சிறப்பம்சமான கட்டுடைத்தல் வகையில் தடுமாற்றம் கண்டார். எனினும், மீண்டு வந்தவுடன் அவரின் ட்ரம்பெட் வாசிப்பு முறையில் விமர்சகர்கள் புதிய மாற்றங்களை எடுத்துச் சுட்டினார்கள். மைல்ஸ் டேவிஸ் பயன்படுத்திய ட்ரம்பெட் அவரது நினைவாக, வடக்கு கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
அதிகாரத்தை எதிர்த்த மிரியம் மகேபா
 
“நான் சொன்னதெல்லாம் என் மக்களைப் பற்றி, தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதைப் பற்றியே. நான் இந்த உலகத்திற்கு உண்மையைச் சொன்னேன். அது அரசியல் கூற்றாகுமெனில், என் கையில் எதுவும் இல்லை.”
பட உதவி: nytimes.com
மிரியம் மகேபா (Miriam Makeba) தனது கதையை சொன்னதற்கும், தன் உரிமைக்காக குரல் எழுப்பியதற்கும்தான் இவருக்கு தன் தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. மறுத்த நாடு – தென் ஆப்பிரிக்கா. எப்போதும் அதிகாரத்திற்குப் புரியாத மொழி ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதுதான் ஒரு கலைஞரின் முதல் எதிர்வினை. தன் சார்பில் அதிகாரத்திற்கு இவர் அளித்தது, தன் கிராமிய மொழியான ஜுலு மொழியின் பாடல்கள். புரியாத இந்த மொழியில் அமைத்த வரிகளில்தான் உலகம் அவரது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டது. 
 
பிறந்த 18-வது நாளில் தன் தாயுடன் சிறை தூக்கிச் செல்லப்பட்டு, ஆறு மாதங்கள் சிறையிலே வளர்ந்தார். சபைகளில் பாடத் தொடங்கி தனது முதல் பாடலை புகழ்பெற்ற கியூப சகோதரர்களின் குழுவில் சேர்ந்து பாடினார். அமெரிக்க சுயாதீன இயக்குனரான லியோனல் ரோகோஸின் நிறவெறிக்கு எதிராக ரகசியமாக இயக்கப்பட்ட ‘கம் பேக், ஆப்பிரிக்கா’ (Come back, Africa) என்ற படத்தில் தோன்றிய ஐந்து நிமிடங்களில் இருந்து தொடங்கியது அதிகாரத்திற்கு எதிரான இவரது போராட்டம். 
 
மிரியம் மகேபாவின் நாட்டுப்புற இசை வகைமையே இவருக்கு அமெரிக்காவில் தனிச்சிறப்பையும் கவனத்தையும் பெற்றுத் தந்தது. காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட கென்யா, ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு சுதந்திரக் கொண்டாட்ட பாடல்களைப் பாடத் தொடங்கினார். இத்தாலியில் நிகழ்ச்சி ஒன்றில் பாடும்போது மாரடைப்பால் காலமானார். இந்த வரிகளை வாசித்த பிறகு நீங்கள் கேட்கப்போகும் இந்தப் பாடல்தான் அன்று பாதியில் நின்றது.

 
சமகாலக் கலைஞர் டொனால்டு குளோவர்
 
டொனால்டு குளோவர் (Donald Glover) ஒரு கறுப்பின அமேரிக்க நடிகர், பாடகர்.
பட உதவி : billboard.com
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இவரது ‘திஸ் இஸ் அமெரிக்கா’ (This is America) என்கிற பாடல் பெரும் விவாதத்துக்கு உட்பட்டது. பாடல் காட்சியமைக்கப்பட்ட முறை, நடனப் பாங்கு, உடை, பின்னணிச் சூழல் என பல தளத்தில் தனது அரசியலை வெளிப்படுத்தியிருந்தார் டோனால்டு குளோவர். இந்தப் பாடலின் உள்ளர்த்தத்தை தனி கட்டுரையாகவே விவரித்திருந்தது ‘தி கார்டியன்’ பத்திரிகை. அமெரிக்காவில் நிலவும் ஆயுத வன்முறையையும், நீடித்து வரும் இனவாதத்தையும் முன்வைத்து நினா சிமோன், மகேபா எதிர்த்த ஜிம் க்ரோ (Jim crow) விதிகளையே இந்தப் பாடலும் கேள்விக்கு உட்படுத்தியது. 

“இருண்ட காலங்களில் பாடல்கள் ஒலிக்குமா..?”

கடந்த அகஸ்ட் மாதத்துடன் அடிமை வணிகம் தொடங்கி 500 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், இன்னும் அதையொட்டிய ஓலங்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்கள் கலை, இலக்கியம் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை வெறும் மசாலா பாடல்களாக மட்டும் இடம்பெற்ற கானா இசை இன்று தமிழகத்தின் வடசென்னை மக்களின் அடையாளமாக மாறியுள்ளது. அறம் சார்ந்த படைப்புகளில் ஒரு மண்ணின் கலாசார இசை மீட்டெடுக்கப்படுகிறது. அத்தகைய பாடல்களில் வழக்கமான பாடகர்களின்றி உள்ளூர் கூத்துக் கலைஞர்கள், கிராமியப் பாடகர்களே வாய்ப்பளிக்கப்படுகிறார்கள். சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் இத்தகைய முயற்சிகளில் பாராட்டிற்குரியவர்கள். சென்னையில் ‘நீலம்’ அமைப்பு தொடங்கியிருக்கும் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ (Casteless Collective) தலித் மக்களின் உரிமையை பேசும் புதிய வடிவம்.
 
“மூன்றாவது வகை யாருப்பா..?”
 
“மூன்றாவது வகை மக்கள்… இனி பிறப்பதற்காகக் காத்திருப்பவர்கள்!”
 
நாளை பிறக்கக் காத்திருக்கும் மக்களிடமிருந்தும் இன்னும் காத்திரமான வரிகள் வெளிப்படும். நாளை பிறக்கவிருக்கும் நம்மிடம் அந்த  வரிகள் சொல்லும் கதைகள் கரிசனத்திற்காக அல்ல; ‘சமுக நீதி’ எனும் சொல் நமக்கு போதுமானதாய் இல்லையெனில், அந்த வரிகளில் கோபம் தொனித்துக்கொண்டே தான் இருக்கும்.
 
இங்கே பதியத்தக்க பெர்டோல்ட் பிரெக்ட் வரிகள்:
 
“இருண்ட காலங்களில் பாடல்கள் ஒலிக்குமா..?”
 
“இருண்ட காலங்களில் பாடல்கள் ஒலிக்கும். அவை இருண்ட காலத்தைப் பற்றியதாக இருக்கும்.”

முகப்பு பட உதவி: observer.com
தகவல் உதவி : *Wikipedia
*What happened. Miss Simone documentary by Liz garbus
*ஜாஸ் இசை குறிப்புகள் -இலையுதிராக்காடு-பிரம்மராஜன்
*Miles Davis interview by the rolling stone
http://www.forghieri.net/jazz/MilesDavisRSInterview.html

Related Articles