சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி 02

பொன்னியின் செல்வன் நாவலை படித்த ஒவ்வொருவருக்கும் சோழ நாட்டின் மீதும், சோழர்களின் வரலாறு மீதும் அதீத பற்றொன்று உண்டாகியிருக்கும். அதற்கான பிரதான காரணங்களுள் ஒன்று கதையின் களம். பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம் கி.பி 10ம் நூற்றாண்டின் மத்தியில் சோழப் பேரரசில் நடைபெறுமாறு அமரர் கல்கி வடிவமைத்துள்ளார். பிற்கால சோழர்களின் வரலாற்றிலேயே மிகுந்த குழப்பாகரமான காலமாக அடையாளப்படுத்தப்படுவது இந்த காலப்பகுதியே.

முதலாம் பராந்தகச் சோழத்தேவரின் இறப்பில் இருந்து இராஜராஜ பெருவேந்தனார் ஆட்சிக்கட்டில் ஏறியது வரையான 30 ஆண்டுக்காலப்பகுதியில் (கி.பி 955 – கி.பி 985) மாத்திரம் சோழ நாடும், அதன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளும் நான்கு மன்னர்களாலும், ஒரு முடி இளவரசனாலும் ஆளப்பட்டுள்ளது. இன்றளவும் சரியாக வரைமுறை செய்ய முடியாதபடி குளறுபடியாகி இருக்கும் சோழ வரலாற்றின் இந்த காலப்பகுதியை தன்னுடைய கற்பனையாலும், கிடைக்கப்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களும் சீர்படுத்தும் வகையில் பொன்னியின் செல்வன் புதினத்தை கல்கி அமைத்துள்ளார்.

கல்கி தனக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு ஒரு வரலாற்றுப் புதினத்தை அமைத்த போது கதையின் சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பு ஆகியவற்றைக் கருதி தன் எழுத்து சுதந்திரத்தைக் கொண்டு உண்மையான வரலாற்றில் இருந்து சற்றே வேறுபட்ட விடயங்களை தன்னுடைய நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறார். சோழ அரச குடும்பத்தை கல்கி வடிவமைக்கும் பெரும்பாலும் வரலாற்றுடன் இயைந்தே கல்கி செயற்பாட்டாலும், ஒரு சில திருந்தங்களை அவர் உட்புகுத்தியும் இருக்கிறார். அவை குறித்து இந்த பகுதியில் ஆராய்வோம்.

பொன்னயின் செல்வன் நாவல் ஆசிரியர் கல்கியுடன் அக்கதையின் கதாபாத்திரங்கள் ஒன்றாக அமர்ந்திருப்பது போன்ற ஒரு கற்பனை சித்திரம் – பட உதவி ittlegirlblogspot.wordpress.com

பொன்னியின் செல்வன் காலகட்டத்தில் சோழநாட்டின் பட்டத்து அரசராக இராசகேசரி சுந்தரச்சோழப் பராந்தகரும் (பராந்தகன் ii), உடைய பிராட்டியாக திருக்கோவிலூர் மலையமான் மகள் வானவன் மாதேவியும் அறியப்படுகின்றனர்.  கி.பி 956/957 ஆண்டளவில் சோழ நாட்டு மன்னராகிய பரகேசரி அரிஞ்சயர் (அரிகுலகேசரி) தமிழகத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஆற்றூர் எனும் பகுதியில் மறைந்தார். அதனைத் தொடர்ந்து அரிஞ்சயருக்கு வைதும்ப இளவரசியான கல்யாணியில் பிறந்த மைந்தனாகிய பராந்தகர் ii  ஆட்சிக்கு வந்தார். இவரது நிகரற்ற அழகின் காரணத்தால் சுந்தர சோழன் என பிறரால் விளிக்கப்பட்டிருக்கக்கூடும். அரச பொறுப்பேற்ற சில காலத்திலேயே தெற்கே பாண்டிநாட்டின் மீது படையெடுத்து, சேவூர் எனும் இடத்தில் வீரபாண்டியனை தோற்கடித்து காட்டுக்கு விரட்டினார் சுந்தரச் சோழர். இதனால் பாண்டியனை சுரம் இறக்கின பெருமாள் மற்றும் மதுரைக் கொண்ட இராசகேசரி ஆகிய விருதுப்பெயர்களை அடைந்தார். இப்போரில் சோழப்படைகளுக்கு தலைமை ஏற்று நடாத்திச் சென்றது கொடும்பாளூர் சிற்றரசர் குலத்தை சேர்ந்த பராந்தகன் சிறிய வேளார், இவரே பொன்னியின் செல்வன் நாவலில் இளவரசி வானதியின் தந்தையாக கல்கியால் இனங்காணப்படுகிறார். பாண்டிய நாட்டுப்போர் முடிந்த கையோடு சோழப்படைகள், பாண்டியர்கு படையுதவி நல்கின சிங்கள அரசனை  வெல்லும் நோக்குடன் ஈழத்தின் மீது படையெடுத்தன. போரின் விளைவுகள் சோழர்களுக்கு சாதகமாக அமையவில்லை, சிங்களப்படைகள் சோழப்படையை வீழ்த்தியதோடு, படைத்தலைமை வகித்த சிறிய வேளாரையும் கொன்றது. இலங்கை வரலாற்றைக்கக்கூறும் மகாவம்சம் நூலின் பிரகாரம் ஈழப்போரில் தோல்விகண்ட சோழ அரசன் இலங்கை மன்னனுடன் நட்புறவு செய்துகொண்டான் என்பதை அறிய முடிகிறது. சுந்தர சோழரின் 17 வருட ஆட்சியில் பெரும்பாலான காலத்தை தன் பாட்டனார் முதலாம் பராந்தகர் ஆட்சியில் தக்கோலம் போரின் விளைவால் இழக்கப்பட்ட தொண்டை மண்டலப் பகுதிகளை மீண்டும் சோழராட்சிக்கு உட்படுத்துவதில் செலவிட்டு அதில் வெற்றியும் கண்டார். வாணர்கள், கீழைச் சாளுக்கியர்கள் ஆகியோருடன் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னயின் செல்வன் புத்தக மேல் அட்டை – புகைப்பட உதவி- கூகுல்

பொன்னியின் செல்வனில் குறிப்பிடும் வகையில் சுந்தர சோழர் நோய்வாய்ய்ப்பட்டு தஞ்சாவூரில் அடைபட்டு இருந்தமைக்கான எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை. இது கதையின் சுவாரஸ்யம் கருதி இணைக்கப்பட்டதே, இருப்பினும் சுந்தர சோழரின் காலத்தில் எழுதப்பட்ட வீரசோழியம் எனும் பாமாலையின் பாடல்கள் ‘நந்திபுரத்து மன்னனான சுந்தர சோழரின் செல்வாக்கையும், உடல் நலத்தையும் காத்தருள வேண்டும்‘ என புத்த பகவானை பிரார்த்திபதாக அமைந்துள்ளன. இந்த பாடல்களில் இருந்தே சுந்தர சோழர் தன் வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் தீவிரமாக நோய் வாய்ப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு கல்கி வந்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வன் விவரிக்கும் வகையில் சுந்தர சோழருக்கும், அன்பில் அநிருத்த பிரமாதிராயருக்கும் இளமை நட்பு நிலவியமை குறித்தும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை. சுந்தர சோழப் பாராந்தகனுக்கு சேர இளவரசியான பராந்தகன் தேவியம்மன் (சேரன் மாதேவி), திருக்கோவிலூர் மலையமான் மகளான வானவன் மாதேவி ஆகிய இரு முக்கிய அரசி இருந்தனர். இவர்கள் மூலம் ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழிவர்மன் ஆகிய மூன்று மக்களும் இருந்தனர். ஆதித்த கரிகாலன் மறைவை தொடர்ந்து சில காலத்திலேயே  காஞ்சி பொன்மாளிகையில் பராந்தகர் காலமானார். இதனால் இவர் பொன்மாளிகைத் துஞ்சின தேவர் என கல்வெட்டுகளில் பின்னாட்களில் அறியப்பட்டார். அருண்மொழி வர்மரின் அன்னையான வானவன் மாதேவியும் சுந்தர சோழருடன் உடன்கட்டை ஏறினார். எனவே சுந்தர சோழருக்கும், வானவன் மாதேவிக்கும் இடையே மிக வலுவான திருமண உறவு நிலவியிருக்க வேண்டும். அடுத்து சோழ இளவல்களை குறித்து காண்போம்.

சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மூன்று குந்தவையார்கள் அறியப்பட்டாலும் சுந்தரச் சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்த ஒரே பெண்பிள்ளையாக வரலாற்றில் அடையாளம் காணப்படும் குந்தவை நாச்சியார், சோழ வரலாற்றிலேயே மிக முக்கியமான இளவரசியாக கருதப்படுகிறார். தனது தந்தை அரிஞ்சயரின் பிற அரசிகளில் ஒருவரான சாளுக்கிய இளவரசி  வீமன் குந்தவையாரின் பேரில் கொண்டிருந்த பெரும் மதிப்பின் விளைவால் தன் மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டார் சுந்தர சோழர். பொன்னியின் செல்வனின் முக்கிய கதாநாயகியாக கல்கியால் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட ‘இளைய பிராட்டியார்’ பல வாசகர்கள் மனதிலும் தங்கிவிட்ட பெயர்களில் ஒன்று. ‘வல்லவரையர் வந்தியத்தேவன் பிராட்டியார்’ என்றும், ‘ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார்’ என்றும், ‘அக்கன்’ என்றும் இராஜராஜாரின் கல்வெட்டுக்களில் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டே கல்கி நம் கதாநாயகியை வடிவமைத்துள்ளார்.

குந்தவை நாச்சியார் – பட உதவி -Pinterest

கடந்த பதிவிலே கூறியது போலவே சோழர்கள் காலத்தில் அரச திருமணங்கள் எனப்படுவது சுய விருப்பு வெறுப்பு என்பவற்றைக் கடந்து தனித்து அரசியல் நோக்கங்களை முன்நிறுத்தியே நாடாத்தப்பட்டன. அந்தவகையில் ராஷ்டிரகூட படையெடுப்பால் துவண்டு போயிருந்த சோழ அரசை மீட்கும் நோக்குடன் அயராது உழைத்த சுந்தர சோழர் தன்னுடைய ஏக புதல்வியின் திருமணத்தை தனியே காதலை கருத்தாகக் கொண்டு நடாத்தி இருக்க வாய்ப்பில்லை. வந்தியத்தேவன் சோழர் அதிகாரத்து உட்பட்ட / உட்படுத்த நினைக்கப்பட்ட ஒரு வலுவான சிற்றரசர் மரபை சார்ந்தவனாக இருந்திருக்க வேண்டும்.  அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே குந்தவை-வந்தியர் திருமணம் நடந்தேறியிருக்க வேண்டும். பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் இளைய பிராட்டியார் வானதியிடம் தான் ஒரு போதும் சோழநாட்டை நீங்கிச் செல்லமாட்டேன்.திருமணமான பின்பும் கூட! எனக் கூறுமாறு ஒரு காட்சியை அமைத்திருப்பார் கல்கி. அது வெறுமனே கல்கியின் கற்பனையின் எழுந்தது இல்லை. குந்தவை நாச்சியாரின் இறுதிக்காலம் வரை அவர் சோழ நாட்டிலேயே தங்கி நாடெங்கும் உள்ள பல ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும், விகாரங்களுக்கும் செய்த நிவந்தங்கள், திருப்பணிகள் குறித்து பல கல்வெட்டாதாரங்கள் கிடைத்துள்ளன. இதனைக் கொண்டு நம் கதாநாயகி தன் சொல்காத்து வாழ்வுள்ள வரை சோழநாட்டிலயே வாழ்ந்தது புலனாகிறது. அதே சமயம் வந்தியத்தேவர் வல்லம் பகுதியை சிற்றரசாராக ஆண்டு வந்தார். பிரிந்தே பலகாலம் வாழ்ந்தாலும் கூட பெரும்பாலும் இளையபிராட்டியார் வந்தியத்தேவர் மனையாளாகவே கல்வெட்டுக்களில் இனங்காணப்படுகிறார். எனவே குந்தவை நாச்சியார் தம் கணவன் பால் மிகுத்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தமை தெளிவாகிறது. 

இளைய பிராட்டியார் தம் தாய், தந்தை மீது பெரும் மதிப்புக் கொண்டிருத்தமையும் கல்கியால் நன்கு நிறுவப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போலும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குந்தவை நாச்சியார் தன்னுடைய காலத்தில் சுந்தரசோழ விண்ணகரம் எனும் வைணவ ஆலயத்தையும், சுந்தரச்சோழப் பெரும்பள்ளி எனும் சமணப்பள்ளியையும், சுந்தரச்சோழ ஆதூரசாலை எனும் வைத்திய நிலையத்தையும் தன் தந்தையின் பெயரால் எடுப்பித்துள்ளார். மேலும் குந்தவையார் தான் தந்தை பெயரால் இரவிகுல மாணிக்கேஸ்வரம் என்ற ஒரு சைவத் திருக்கோயிலும், பௌத்த விகாரம் ஒன்றும் எடுப்பதிருக்க வேண்டும். தன் தம்பியான அருண்மொழித்தேவன் பெரிய கோயில் எடுப்பித்த பொழுது அதற்கு  தன்னுடைய தாய், தந்தையின் ஐம்பொன் திருவுருவச் சிலையை காணிக்கையாக கொடுத்து, அவற்றுக்கு நாள் தோறும் நித்திய அனுட்டானங்கள் நடைபெறுவதற்கு தேவையான நிவந்தங்களையும் அளித்துள்ளார். மறைந்து போன தாய், தந்தையையும் கூட இறைவனுக்கு இணையாக மதித்த குந்தவையாரின் பற்றும் பக்தியும் போற்றப்படத்தக்கது. குந்தவையார் தான் தந்தை மீது கொண்டிருந்த பெரும் அன்பினாலும், அவரை முந்தைய குந்தவையில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் இருந்தமையாலும் அவரை ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் ஸ்ரீ குந்தவை நாச்சியார் என பாட்டனார் அரிஞ்சயரின் பெயருடனும், தந்தை பராந்தக சுந்தரச்சோழரின் பெயருடனும் இணைத்தே கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டார்.

குந்தவை நாச்சியார் – பட உதவி -Pinterest

இராஜராஜச் சோழரின் வாழ்க்கையில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு நபராக  குந்தவை நாச்சியார் இருந்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வன் நாவலில் அருண்மொழிக்கும், குந்தவைக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதாகவும், தீர்க்கமானதாகவும் காட்டப்பட்டிருக்கும். அது எந்த வகையிலும் கல்கியின் கற்பனையினால் எழுதப்பட்டது அல்ல. கிடைக்கப்பெறும் வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் கல்கியின் எழுத்துக்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. உலகம் கண்டிராத மாபெரும் கற்றளியை இராஜகேசரி வர்மன் எடுப்பித்தபோது, அதற்கு தரப்பட்ட அனைத்து நிவந்தங்களையும் சிறியது, பெரியது என வேறுபாடு பாராமல், கொடுத்தவர் பெயருடன் கல்வெட்டுக்களில் பதியுமாறு இராஜராஜர் திருவாய்மொழிந்த கல்வெட்டு ஒன்று பெரிய கோயிலின் அணுக்கன் திருவாயிலில் வெட்டப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு “நாம் கொடுத்தனவும் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும்…. ஸ்ரீ விமானத்திலே கல்லிலே வெற்றுக என திருவாய் மொழிந்தருள” எனக் கூறுகிறது. இதில் உடையார் இராஜராஜ தேவருக்கு அடுத்து, அவர் மனைவி, மக்கள் அனைவரையும் விடுத்து தன்னால் மிகவும் மதிக்கப்பட்ட குந்தவையாரையே குறிப்பிடுகிறார். அதிலும் குந்தவையாரை அரச முறைமைப்பிரகாரம் பெயர் கூறி அழையாமல், ‘அக்கன்’ என உரிமையுடன் குறிப்பிட்டிருப்பது அவர்களிடையே நிலவிய மதிப்பையும், அன்னியோனியத்தையும் ஒரு சேர விளக்குகிறது. சோழப் பேரரசிலே இராஜராஜருக்கு அடுத்தபடியான மதிப்பும், அதிகாரமும் குந்தவையாருக்கு இருந்தது தெளிவாகிறது. தன் அக்கன் மீது கொண்டிருந்த இணையற்ற பாசத்தின் விளைவாலேயே தம்முடைய இளைய புதல்விக்கும் குந்தவை என பெயரிட்டார் அருண்மொழித்தேவர்.

குந்தவை நாச்சியார் தன் தம்பி எடுப்பித்த பெருங்கோயிலுக்கு அளவிறந்த நிவந்தங்களை அளித்துள்ளார். சுமார் ஐந்தாயிரம் கழஞ்சு பொன் (26 கிலோ), நூற்று முப்பது கழஞ்சு எடையுள்ள வைரம், முத்து, இரத்தினம் பதித்த திருப்பட்டம், அம்பாளின் பாதங்களுக்கு எழுபத்தியேழு கழஞ்சு எடையுள்ள தங்க ஆபரணங்களும் தானமாக வழங்கியுள்ளார். இவை அனைத்தைக் காட்டிலும் குந்தவையாரின் பிரசித்தி பெற்ற இன்னொரு தானம் உண்டு. பெரிய கோயிலுக்கு எவரும் தானமளிக்கலாம் என்ற நிலை இருந்தாலும் கூட, இராஜராஜர் பெரிய கோயிலுக்கு தானமாக வழங்கிய நடராஜர் சிலையான தட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார் திருச்சிலைக்குரிய உமாதேவியின் சிலையை நிவந்தமளிக்கும் உரிமை குந்தவை நாச்சியாருக்கே வழங்கப்பட்டது. எனவே குந்தவை அதிகாரமும், சுதந்திரமும் மிக்க அரசகுடிப் பெண்ணாகவே வாழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய நெருக்கமான தமக்கை-தம்பி உறவு நிலவி இருப்பினும், கல்கி கூறியது போல அருண்மொழிவர்மனை இளமையில் வளர்த்தது குந்தவையார் என்ற கருதுகோள் எவ்வளவு உண்மையானது என்பது கேள்விக்குரியதே. அருண்மொழி குழந்தையாக இருக்கும் போதே சுந்தர சோழர் இறந்திருப்பார் எனில் இவ்வாதம் உண்மையாயிருக்க வாய்புள்ளது, எனினும் திருவாலங்காட்டு செப்பேடுகளின் படி சுந்தர சோழர் இறந்த போது அருண்மொழி நாடாளும் அகவையை எட்டியிருந்தார் என்ற முடிவுக்கு வர முடிகிறது. மேலும் பொன்னியின் செல்வனின் பிரகாரமும் குந்தவைக்கும், அருண்மொழிக்கும் மிகையான வயது வேறுபாடு இருக்கவில்லை. ஆகவே  இந்த ஒரு அணுகுமுறை மட்டும் கல்கியின் கற்பனையில் எழுந்த ஒன்றாக இருக்க முடியும். இராஜராஜரின் காலத்திற்கு பின்னர் இராஜேந்திரன் ஆட்சியிலும் குந்தவையார் பெரும் மதிப்புடன் வாழ்ந்து தொண்டாற்றியுள்ளார். சுந்தர சோழர் முதல் இராஜராஜர் காலம் வரை கண்டராதித்தர் விதவைக்கு கிடைத்த மரியாதை, இராஜராஜாரின் காலம் முதல் இராஜேந்திரன் காலம் வரை குந்தவையாருக்கு கிடைத்துள்ளது. இதிலிருந்து செம்பியன் மாதேவியின் ஆளுமை குந்தவையில் நன்கு எதிரொலிப்பதை காணமுடிகிறது. இராஜேந்திரன் தன் அத்தை குந்தவையார் பிறந்த ஆடி மாத அவிட்ட நட்சத்திர திருநாள் அன்று பழையாறையில் திருவிழா எடுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வாழவுள்ளவரை சோழ நாட்டுக்காக சேவையாற்றிய நம் கதாநாயகி தன் இறுதிக்காலத்தை பழையாறையில் கழித்து அங்கேயே மண்ணுலகை நீத்தார்.

இந்த தொடரின் அடுத்த பகுதியில் இராஜராஜப் பெருவேந்தரின் இளமைப்பருவத்தையும், சோழ வரலாற்றிலும், கல்கியின் நாவலிலும் மர்மமாக முடிந்து போனவொரு அத்தியாயமான பரகேசரி பார்த்திவேந்திர ஆதித்த கரிகாலனை பற்றியும் ஆராய்வோம்.

Related Articles