Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சங்கதி தெரியுமா? | பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :04

செம்பியன் மாதேவி

பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் வருகின்ற மிக மூத்த சோழ அரச குடும்பத்து உறுப்பினராக கண்டராதித்தரின் விதவை செம்பியன் மாதேவி நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்.  பெரிய பிராட்டியார் என்று அழைக்கப்படும் இவரே சோழ சாம்ராஜ்யத்தின் உண்மையான ஒரே ராஜமாதா. சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில், சோழ சிற்றரசான மழபாடியை ஆண்ட மழவரையர் குலத்தில் பிறந்த இவ்வம்மை, கண்டராதித்த சோழரை திருமணம் செய்த பின்னர் செம்பியன் என்ற சோழ அரச பட்டத்தை சூடிக்கொண்டார். அதன் பின்னரே செம்பியன் மாதேவி என அறியப்பட்டார். ஆரம்பகால கல்வெட்டுகளில் மழ பெருமானடிகள் மகளார் என்றே அறியப்பட்டார்.

பொன்னியின் செல்வன் நாவலில் செம்பியன் மாதேவியார், கண்டராதித்தரை முதன் முதலில் காணும் காட்சியும், அவர்களிடையே மலரும் உறவும், திருமண வாழ்வும் மிகவும் நயம்பட கூறப்பட்டிருக்கும். திருவிசைப்பா பாடிய காண்டாரதித்தரையும் விஞ்சும் சிவபக்த செல்வியாக அம்மையார் விளங்கினார். பல்லவர் காலத்தில் குடைவரை முதலிய கற்றளி அமைப்புகள் பிரபல்யம் அடையும் முன் தமிழகத்தில் செங்கற்கள், சுதை, மரம் ஆகியவற்றைக் கொண்டே ஆலயங்கள் கட்டப்பட்டு வந்தன. இவை காலத்தைக் கடந்து நீடிக்க கூடிய வகையில் இருக்கவில்லை. மாதேவியாரின் அயராத உழைப்பாலும் முயற்சியாலும் தமிழகம் முழுவதும் இருந்த பல செங்கற் கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. திருக்கொடைக்காவல் பல்லவ கற்றளி, நாச்சியார் கோவில் விண்ணகரம், திருவாவடுதுறை அருகே உள்ள ஆனங்கூர் சிவன் கோவில், தஞ்சை அருகே உள்ள கருத்தட்டான்குடி சிவன் கோயில், திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில், திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், திருமேச்சுர் இளங்கோயில், திருமழபாடி கோயில் ஆகியன செம்பியன் மாதேவியால் புணருத்தாரணம் செய்யப்பட்டன.  

பொன்னியின் செல்வன் நாவலில், ஓவியர் மணியம் வரைந்த செம்பியன் மாதேவி ஓவியம். புகைப்பட விபரம் : wikipedia.org

புனரமைப்பு பணிகளை தவிர பெரிய பிராட்டியாரால் குறிப்பிடத்தக்க சில கற்றளிகள் தமிழக பரப்பெங்கும் நிறுவப்பட்டன. கும்பகோணம் அருகே உள்ள திருநல்லம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில், ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில், குத்தாலம் சோழீஸ்வரர் கோயில், திருநறையூர் சித்தீஸ்வரம், நாதன் கோவில் விண்ணகரம், வட திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் என்பன இன்றளவும் நீடித்து நிலைக்கும் பெருங்கோயில்கள். இந்த ஆலயங்களிலேயே மிக குறிப்பிடத்தக்கது திருநல்லம் கோனேரிராஜபுரம் கோவிலாகும். இவ்வாலயம் அப்பர் பெருமானால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் செம்பியன் மாதேவியால் கருங்கல் திருப்பணிக்கு உள்ளானது. இவ்வாலயத்தில் கிடைக்கும் மதுராந்தக உத்தம சோழரின் கல்வெட்டுக்கள் இவ்வாலயத்துடன் பெரிய பிராட்டிக்கு இருந்த நெருங்கிய உறவை பறைசாற்றுகிறது. இவ்வாலயம் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் மூலமுர்த்தியான இறைவனின் திருப்பெயர் ஆதித்தேஸ்வரம் உடைய மகாதேவர் என்றே அறியப்படுகிறது. இப்பெயர் கண்டராதித்தர் என்ற பெயரில் பின்னரைப் பகுதியில் இருந்து உருவானது. மறைந்த தன்னுடைய கணவனின் நினைவாகவே அம்மையார் இந்த ஆலயத்துக்கு அளவிறந்த நிவந்தங்கள் அளித்துள்ளார். இவ்வாலயத்தின் உமாமஹேஸ்வர சன்னதியின் தெற்கு சுவரில் மேற்க்கெழுந்து அருளின தேவர் கண்டராதித்தர் உருவமும், அதனருகே செம்பியன் மாதேவி உருவமும் லிங்க ரூபத்தில் உள்ள சிவனை வழிபடும் வண்ணம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நுந்தா விளக்கு எரிக்கவும், மார்கழி திருவாதிரை மற்றும் வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் கொண்டாடவும், நந்தவனங்கள் அமைக்கவும், நித்திய பூசனைகள் நடக்கவும், மலர் கைங்கரியங்கள் நடக்கவும், வாத்தியங்கள் இசைக்கவும், கோயிலுக்காக பணியாற்றும் கொள்ளார்கள், தச்சர்கள் முதல் பிராமணர்கள் வரை அனைத்து குடும்பங்களும் உண்ணவும் பாரியளவு கொடைகளும், நிவந்தங்களும் அம்மையாரால் செய்யப்பட்டன. இந்த ஆலயத்துக்கு மாதேவிகள் செய்த நற்பணிகளுக்காக அவரின் பிறந்த நாளான சித்திரை மாத கேட்டை நட்சத்திரத்தன்றும், மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரம் தோறும் திருநல்லம் ஆலயத்தில் விசேட ஸ்ரீ பலி சடங்குகள் நடத்தப்பட்டன. இவ்வழமை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதற்கென செம்பியன் மாதேவியின் வெண்கலத் திருமேனி ஒன்றும் அவர் மகன் உத்தம சோழரால் இவ்வாலயத்துக்கு வழங்கப்பட்டது.

கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவி புடைப்பு சிற்பம்.   புகைப்பட உதவி: thehindu.com

தன்னுடைய கணவனை இழந்த பின்னரும் கூட, ஒரு அரசியாக இல்லாது ஒரு அன்னையாக செம்பியன் மாதேவி சோழ நாட்டுக்கே பெரும் பணியை ஆற்றியிருக்கிறார். தன் கணவன் பால் கொண்ட மிகையன்பு விளைவாகவே திருநல்லம் இறைவனுக்கு ஆதித்யேஸ்வரர் என திருப்பெயர் சூட்டினார் அம்மையார். மேலும் கல்வெட்டுகள் தோறும் கண்டராதித்த தேவ தம்பிராட்டியார் என்று இவர் அறியப்படுகிறார். இவருக்கும் கண்டராதித்தருக்கும் இடையே இருந்த அந்நியோன்யம் மிக்க உறவின் நிமித்தம், காவிரிக்கரையில் பெரிய பிராட்டிகள் பிறந்த திருமழபாடிக்கு அருகில் உள்ள கிராமத்தை கண்டராதித்தம் என்று சோழ மன்னர்கள் பெயரிட்டனர். பெரிய பிராட்டியின் இடையறாத சிவப்பணியால் சோழ கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் செம்பியன் என்ற கிளை மரபு ஒன்று உண்டானது. செம்பியன் மரபு ஆலயங்கள் ஒன்பது முதல் பதினாறு தேவ கோஷ்டங்களை கொண்டவையாக காணப்படும். செம்பியன் மாதேவியால் பல ஆலயங்களுக்கு தெய்வ திருவுருவ சிலைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. செம்பியன் கலைப்பாணி சிற்பங்கள் தமிழகத்தில் பல கோயில்களில் காணக்கூடியதாக இருக்கும். இலங்கையில் அமைந்துள்ள யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் செம்பியன் மாதேவியால்  உலோக திருமேனிகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவை இன்று வரையில் அங்கு வழிபாட்டில் உள்ளன.

அமெரிக்காவின் Freer Gallery of Art காட்சியகத்தில் உள்ள செம்பியன் மாதேவி திருவுருவ சிலை புகைப்பட உதவி : wikipedia.org

இவருடைய ஆலயத்திருப்பணிகளால் பல கொள்ளர்களும், தச்சர்களும், சிற்பக்கலைஞர்களும், ஆலயத்துடன் தொடர்புடைய பல தரப்பினரும் நல்ல வாழ்வாதாரத்தை அடைந்தார்கள். இதன் விளைவாக செம்பியன் மாதேவி மக்களிடையே மிகவும் போற்றி புகழப்பட்ட பெண்மணியாக விளங்கினார்கள். பெரிய பிராட்டி தன் மைந்தரான உத்தம சோழரை மிகவும் நேசித்தார்கள். கணவன் இறந்த பின்னரும் அவர் உயிர் வாழ்ந்தமைக்கு ஒரே காரணம் மதுராந்தகன் மட்டுமே. மதுராந்தகனின் நலத்துக்காக பல ஆலயங்களுக்கு அணையா சுடர் நிவந்தங்கள் வழங்கியுள்ளார் இவ்வம்மையார். உத்தம சோழர் ஆட்சி பீடம் ஏறிய பின்னரான பல கல்வெட்டுகளில் பெரிய பிராட்டியார் கண்டன் மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழரை திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியான ஸ்ரீ பராந்தகன் மாதேவியான ஸ்ரீ செம்பியன் மாதேவியார் என்றே குறிப்பிடப்படுகிறார். உத்தம சோழனின் ஆட்சி அமைதியான நல்லாட்சியாக இருந்தமையால், அவருடைய தாயார் செம்பியன் மாதேவி மீது மக்களிடையே நன்மரியாதை அதிகம் விளைந்தது. உத்தமர் தன்னுடைய ஆட்சியில் செம்பியன் மாதேவி என்ற பெயரில் ஒரு சதுர்வேதி மங்கலத்தை தற்போதைய நாகப்பட்டினத்தின் மேற்கே அமைத்தார். இன்றும் செம்பியன் மாதேவி என்ற பெயருடனேயே விளங்கும் இவ்வூரில், சமீபத்தில் இங்கு செம்பியன் மாதேவிக்கு ஆளுயர உலோகத் திருமேனி ஒன்று இவ்வூர் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் உத்தம சோழனின் மனைவியர் கண்டராதித்தர் விதவையின் பால் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தமை கிடைக்கப்பெறும் ஆதாரங்களைக் கொண்டு புலனாகிறது. முதல் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் செம்பியன் மாதேவியில் உள்ள திருக் கைலாயம் உடையார் கோயிலுக்கு பெரிய பிராட்டியின் திருவுருவ சிலையை காணிக்கை செய்ததுடன், அதன் வழிபாட்டுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளார். எனினும் இந்த திருச்சிலை ஆங்கிலேயர் ஆட்சியின் போது கைப்பற்றப்பட்டு இப்போது அமெரிக்க நூதன சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய சிவபக்தியின் தாக்கத்தையே நாம் ராஜராஜனிலும், குந்தவையிலும் காணக்கூடியதாக உள்ளது. கண்டராதித்தர் முதல் முதலாம் இராஜேந்திரன் வரை ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியை கண்டதோடு, நெருக்கடியான சமயங்களில் சோழர் ஆட்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்த செம்பியன் மாதேவி அம்மையாருக்கு இணையான அளவு அன்பையும், மரியாதையையும் வேறெந்த பெண்ணும் பெற்றிருக்க வாய்ப்பில்லை. இத்தகைய முக்கியத்துவம் மிக்க வரலாற்று உருவுக்கு கல்கி தன்னுடைய நாவலில் மிகச் சிறப்பாக நியாயம் செய்துள்ளார் என்பதே உண்மை. 

மதுராந்தக உத்தம சோழன்.

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இன்னொரு குழப்பகரமான மற்றும் யதார்த்தமான கதாபாத்திரம் மதுராந்தகன் உடையது. ஆதித்த கரிகாலனின் இறப்பைத் தொடர்ந்து சோழ நாட்டில் உண்டான குழப்பகரமான சூழ்நிலையில் பட்டத்துக்கு வந்தார் மதுராந்தகர். மதுராந்தருடைய சிம்மாசன உரிமை குறித்து பலரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்ட பல முன்னணி வரலாற்று ஆய்வாளர்கள் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு உத்தம சோழன் உறுதுணை அளித்ததாக கூறியதும் உண்டு. ஆனால் புதிதாக கிடைக்கப் பெற்ற கல்வெட்டு ஒன்று அக்கொலைக்கான சூத்திரதாரிகள் என வேறு சிலரை கைகாட்டியது.  இத்தகைய முரண்பாடான சூழ்நிலையில் கல்கி இச்சிக்கல் குறித்து வித்தியாசமான அணுகுமுறை ஒன்றை பின்பற்றினார். செம்பியன் மாதேவியால் சோழ நாட்டில் வளர்க்கப்பட்ட மதுராந்தகர் ஒருவர் என்றும், சோழ அரியாசனம் ஏறிய உத்தம சோழ மதுராந்தகர் பிறிதொருவர் என்றும் ஒரு கதையோட்டத்தை உண்டு பண்ணினார். இந்த விளக்கம் அக்காலத்தில் வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வந்த முரண்பாடுகளுக்கு இடையே நடுநிலையாக நின்றது. ஆனால் தற்போது சோழ வரலாறு குறித்து கிடைக்கபெறும் மேலும் தெளிவான ஆதாரங்களை கொண்டு உத்தம சோழர் குறித்து தெளிவான நோக்கு ஒன்றைப் பெறுவோம். 

பழைய” மதுராந்தக தேவர் – பொன்னியின் செல்வன் ஓவியம் புகைப்பட உதவி : wikipedia.org

இராஜாதித்தர் தக்கோலம் போரில் இறந்ததை தொடர்ந்து அவருடைய தம்பி கண்டராதித்தர் கி. பி 949 இல் அதிகாரத்துக்கு வந்தார். அவருக்கு வீரநாராயணி மற்றும் செம்பியன் மாதேவி ஆகிய இரு அரசிகள் இருந்தனர். இவர்களில் செம்பியன் மாதேவிக்கு பிறந்தவரே மதுராந்தகர். பொன்னியின் செல்வன் கதையில் கண்டராதித்தர் தன்னுடைய மத்திம வயதுக்கு பின்னரே செம்பியன் மாதேவியை திருமணம் செய்து குழந்தை பெறுவதாக கூறப்பட்டிருக்கும். ஆனால் இதற்கான எந்த எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை. இவ்வாறான முடிவுக்கு கல்கி வருவதற்கு காரணமாக இருந்தது யாதெனில், கண்டராதித்தரின் இறப்பை தொடர்ந்து அவரது தம்பி அரிஞ்சயரும், அவன் மகன் சுந்தர சோழனும் பட்டத்துக்கு வந்தமையே. மதுராந்தகன் உரிய வயதில் இல்லாத காரணத்தினாலேயே அரிஞ்சயன் ஆட்சிப் பீடமேற வேண்டிய நெருக்கடி உருவானது என்பது கல்கி முன் வைத்த கருத்து. இதனை நிறுவும் விதமாக தமக்கு பின்னர் சோழ நாட்டின் அதிகாரம் அரிஞ்சயருக்கும் அவருடைய வம்சாவழிக்கும் செல்ல வேண்டும் என பராந்தகனும், கண்டராதித்தரும் விரும்பியதாக கதையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் இதுவும் வரலாற்று ஆதாரங்கள் அற்றதே. கண்டராதித்தரின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு திருவொற்றியூர் கல்வெட்டு ஒன்றில் மதுராந்தகர் “உடையார் ஸ்ரீ உத்தம சோழ தேவர்” என குறிக்கப்படுகிறார். எனவே கண்டராதித்தர் உயிருடன் இருந்த சமயத்திலேயே மதுராந்தகன் அடுத்த அரச வாரிசாக நியமிக்கப்பட்டு இருந்தமை தெளிவாகிறது. மேலும் அந்த கல்வெட்டை நோக்கும் போது மதுராந்தகனுக்கு என தனியே பெருந்தரத்து அதிகாரிகள் இருந்தமையும் தெளிவாகிறது. இதன் மூலம் கண்டராதித்தரின் ஆட்சியின் போது மதுராந்தகன் அரச பொறுப்புகளில் ஈடுபடக்கூடிய அளவு வயதுடனும் திறனுடனும் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆக கிடைக்கபெறும் அனைத்து தரவுகளும் மதுராந்தகரின் ஆட்சி உரிமைக்கு சாதகமாக இருந்த போதும் ஏன் அவர் தான் தந்தையை தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

மூன்றாம் கிருஷ்ணனின் தென் திசை படையெடுப்பு சோழ அரசுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. கண்டராதித்தரின் ஆட்சியின் போது சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் சுதந்திரம் அடைந்தன. மேலும் ராஷ்டிரகூட படைகள் சோழ நாட்டை தொடர்ந்து தாக்கிய வண்ணம் இருந்தது. அந்த சமயத்தில் அரசரின் தம்பியான அரிஞ்சயரே வடதிசை படைகளை தலைமை தாங்கி ராஷ்டிரகூட படைகளை முறியடித்த வண்ணம் இருந்தார். கண்டராதித்தர் மேற்கே எழுந்து அருளின பின்னர் சோழ நாட்டின் அரியணைக்கு தேவைப்பட்டது வீரத்தில் சிறந்த, திறமையான போர் அனுபவம் மிக்க ஒரு தலைமையே, அந்த காரணத்தால் மட்டுமே அரிகுலகேசரியான ஆழ்வார் அரிஞ்சயன் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். எனினும் அவரும் துரதிஷ்டவசமாக மிக குறுகிய காலத்தில் இறந்தமையால் அவருடைய மைந்தன் பராந்தக சுந்தர சோழன் அரியணை அமர்ந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில், அவர் மகன் ஆதித்த கரிகாலன் மற்றும் ஏனைய சோழ சிற்றரசர்களின் அயராத முயற்சியினால் சோழ பேரரசு தான் இழந்த பெருமையை மீண்டும் ஈட்டியது.     

இந்த நிலைமை தான் சோழ நாட்டுக்குள் அடுத்த அரியணை சிக்கலை உண்டு பண்ணியது. தன்னுடைய வீரத்தாலும் விவேகத்தாலும் சோழ நாட்டை மாண்படையச் செய்த சுந்தர சோழன் வழியினரே சோழ நாட்டை ஆளவேண்டும் என்று ஒரு தரப்பும், உண்மையான அரச உரிமையைக் கொண்ட வாரிசான மதுராந்தகருக்கே அரியாசனம் திரும்ப வழங்கப்பட வேண்டும் என இன்னொரு தரப்பும் கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளானது. எனினும் ஆதித்த கரிகாலனின் வீரம் புகழும் அவர் தரப்புக்கு வலு சேர்த்தது. இத்தகைய சூழ்நிலையில் ஆதித்த கரிகாலனின் அகால மரணம் மேலும் பல குளறுபடிகளை நோக்கி சோழர்களை தள்ளியது. ஆதித்த கரிகாலன் இறந்தமையால் மதுராந்தகர் ஆட்சிக்கு வர வேண்டும் என அவருடைய ஆதரவாளர்களின் குரல் ஓங்கிய அதே நேரம், ஆதித்த கரிகாலனின் தம்பியும், சோழ மக்களின் அபிப்பிராயத்திற்கு பாத்திரமானவருமான அருண்மொழி வர்மனை மன்னனாகுமாறு வேறொரு தரப்பு விருப்பம் தெரிவித்தது. இரு தரப்புகளிலும் நியாயமான கருத்துக்கள் இருந்தமையால் முடிவெடுக்கும் சூழல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. 

இதுவரை உலகில் ஆட்சி புரிந்த பெரும்பாலான அரச குடும்பங்கள் உள்ளக கலவரங்களினாலேயே தங்கள் முடிவுகளை தேடிக்கொண்டன. அதிலும் குறிப்பாக பல்லவர்கள் தங்களுடைய அதிகாரத்தை இழந்தமை முக்கியமானது. அபராஜித பல்லவனுக்கும் அவனுடைய சிறிய தந்தை நிருபதுங்க வர்மனுக்கும் இடையில் நடந்த வாரிசுரிமைப்போரே (திருப்புறம்பியம் போர்) பல்லவர்களின் பேரரசை முடிவுக்கு கொண்டு வந்து சோழர்களின் ஆட்சிக் காலத்தை உண்டாக்கியது. இதற்கு ஒப்பான ஒரு தருணம் தான் சோழ நாட்டில் மதுராந்தகனுக்கும், அருண்மொழிக்கும் இடையே உண்டானது. அந்த சமயத்தில் பாண்டியர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடி கொண்டிருந்த காலம். இதனை நன்கு அறிந்திருந்த அருண்மொழி வர்மன் தன்னால் சோழ நாட்டில் உள்ளக கலகம் உருவாகி சோழராட்சி முடிவுக்கு வருவதை தவிர்க்க எண்ணி தன்னுடைய சிறிய தந்தையான மதுராந்தருக்கு ஆட்சியை ஒப்படைத்து விட்டு தன்னுடைய காலம் வரும் வரை காத்திருந்தார். இந்த குறிப்பு திருவாலங்காட்டு செப்பேட்டில் தெளிவாக கூறப்படுகிறது.

கி. பி 970 இல் மதுராந்தகர், பரகேசரி உத்தம சோழன் என்ற பட்டத்துடன் சோழ அரியணை ஏறினார். அவருடைய 15 ஆண்டு கால ஆட்சியில் சோழ நாட்டில் எந்தவொரு போரும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்தது. அவருடைய பட்டத்து அரசியார் ஒரட்டனம் சொரப்பையார், பிற அரசிகளான பட்டன் தானதுங்கியார், நம்பிராட்டியார் சோழமாதேவி, தென்னவன் மாதேவி, நக்கன் வீரநாராயணியார், வானவன் மாதேவியார் உள்ளிட்ட 17 மனைவியர் மற்றும் தாயார் செம்பியன் மாதேவி ஆகியோரால் சோழ நாடெங்கும் பல நிவந்தங்களும், அபிவிருத்தி பணிகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. அருண்மொழியின் மீது உத்தமர் கொண்டிருந்த அன்பினால் சோழர் படைப்பிரிவொன்றுக்கு அருண்மொழியின் பெயர் சூட்டப்பட்டது.  சிவ பக்தியில் சிறந்தவரான இவரால் பல ஆலயங்கள் பெரும் நன்மைகளை கண்டன. இவருடைய ஆட்சியின் போதே சோழ நாட்டின் முதல் தங்க நாணயமான உத்தம சோழ மாடை வெளியானது. சுந்தர சோழரின் அயராத உழைப்பால் சோழர் வசமான தொண்டை நாடும், திருமுனைப்பாடி நாடும்

கல்கி ராஜேந்திரன் (கல்கி அவர்களின் மகன்) அவர்கள் பின்னாட்களில் வழங்கிய நேர்காணல்களில் ஒன்றின் போது கூறியதாவது, கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை ஆரம்பித்த நேரத்தில் சேந்தன் அமுதனை புதிய மதுராந்தகாணாக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. கதை மெல்ல வளர்ந்து வரும் பொழுது தான் கதையில் இரு வேறு மதுராந்தகர்கள் இருப்பது சுவாரசியமாக அமையும் என எண்ணியுள்ளார்

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்- புகைப்பட உதவி: guruguha.org

இந்த முடிவு எடுக்கப்பட்ட பின்னரே வெறும் கைப்பாவை என இயங்கிக்கொண்டிருந்த பழைய மதுராந்தகனுக்கு தன்னுடைய லட்சியத்தை அடைய எதையும் செய்யக்கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தது. இந்த மாற்றத்தை இரு இடங்களில் காணலாம். அதிலவன்று,  சேந்தன் அமுதன்-பூங்குழலி ஜோடியின் காதல். கல்கி பொன்னியின் செல்வன் கதையில் பல கற்பனை பாத்திரங்களை உட்புகுத்தி இருந்தாலும் சோழ அரியணை என வருகிற போது மிகுந்த கவனத்துடன் வரலாற்று ஆதாரங்களுக்கு இணங்கவே பாத்திரங்களை வடிவமைப்பார். அந்த வகையில் பார்க்கும்போது ஒரு ஓடக்கார பெண்ணாக வரும் பூங்குழலி சோழ அரசியாக ஆவது என்பது வரலாற்று ஆதர்களுடன் இணங்கிப் போகவில்லை. எனினும் சேந்தன் அமுதன்-பூங்குழலி ஜோடியின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பும், கல்கியின் திடீர் முடிவும் ஒரு ஓடக்கார பெண்ணை ராணியாக்கிவிட்டது என்பதே உண்மை. மற்றைய விவரம், உத்தம சோழரின் அரசிகளில் ஒருவர் பழுவேட்டரையர் மகளார். பழைய மதுராந்தகரின் முதல் மனைவியாக கதையில் வருபவர், சிறிய பழுவேட்டரையர் காலாந்த கண்டரின் மகள் என நமக்கு கூறப்படுவதில் இருந்து கல்கி உண்மையில் யாரை அரசனாக்க எண்ணினார் என தெளிவாக உய்த்துணரலாம். 

உத்தம சோழ மாடை புகைப்பட உதவி : meiezhuththu.com

கல்கியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணமாக அமைந்தது ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் யாவர் என்ற தெளிவின்மை ஆகும். இந்த குளறுபடிகளை முடிவுக்கு கொண்டு வரும் மிக முக்கிய கல்வெட்டு ஒன்று பின்னாட்களில் கண்டறியப்பட்டதன் மூலம் ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளி யார் என்ற உறுதியான பதில் கிடைக்கிறது. ஆதித்தனை கொன்று துரோகிகளானவர்களை பற்றியும், உலகெங்கும் சோழர் புகழ் பரவச்செய்த இராஜேந்திர சோழனை பெற்ற திருவருட் செல்வி குறித்தும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Related Articles