Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :01

வாசிப்பில் சிறிதேனும் ஆர்வமுடையவர்கள் எவராகிலும் கட்டாயம் கடந்து வந்திருக்கக் கூடிய ஒரு புத்தகத்தின் பெயர் “பொன்னியின் செல்வன்”. வாசித்தது இல்லையென்றாலும் கூட பெரும்பாலான தமிழ் பேசும் மக்கள் இந்த நாவலின் இருப்பைப்பற்றியேனும் தெரிந்து வைத்திருப்பார்கள். வெளிவந்து 70 வருடங்கள் ஆகியும் கூட ஒவ்வொரு வாசகனும் இந்நாவலை வாசிக்கும் போது அன்றிருந்த வாசர்க்கூட்டம் அடைந்த அதே சிலாகிப்பை இன்றும் அடையுமாறு அமைந்துள்ள இந்நாவல் நிச்சயமாய் காலத்தின் வேகத்தை  கடந்து நிற்கும் வெகு சில படைப்புகளில் ஒன்றேயாம். “சங்கதி தெரியுமா?!” என்ற இந்த கட்டுரை தொடரின் அமைப்பையும், போக்கையும் உங்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த முதல் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. [பி. கு: இந்த தொடர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புச்சமான பொன்னியின் செல்வனை விமர்சிக்கவோ, தரப்படுத்தகவோ, அல்லது வாசகர்களின் எண்ணத்தை தாக்கவோ உண்டாக்கபடவில்லை. ஒரு சராசரி வாசகனாக பொன்னியின் செல்வன் நாவலை அணுகியபோது எனக்குள் ஏற்பட்ட தேடல்களுக்கான விடைகளும், விளக்கங்களுமே இவை.] எழுதுவது என்று முடிவாகிப்போன பிறகு முதலில் யார் பற்றி எழுதுவது என்ற கேள்வியும் உடனே தொற்றிக்கொண்டது. ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரைக் கேட்டாலே வீராணத்து ஏரிக்கரையில் குதிரை மீது ஒய்யாரமாய் நடைபோட்டு வந்த வந்தியத்தேவன் தான் நான் உட்பட பெரும்பாலான வாசகர்கள் மனதில் வந்து விழும் முதல் சிந்தனை. ஆகவே நம் காவியத்தலைவனையே முதலில் வரலாற்றின் ஒளியில் நிறுத்துவோம். 

The five volumes of epic novel Ponniyin Selvan by Kalki Krishnamurthy _ Photo Credit to S. Siva Saravanan

வல்லவரையன் வந்தியத்தேவன் 

நாவலின் பெயர் என்னவோ கோராஜகேசரி வர்மரான ராஜராஜ சோழ தேவரைக் குறித்தாலும் கூட கதையின் நாயகன் வந்தியத்தேவனே.  இன்றளவும் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு கதாபாத்திரம். நாவலின் கதையோட்டத்தை பல இடங்களில் முன்னெடுத்துச் சென்ற பாத்திரம். இருப்பினும் வரலாற்றின் பார்வையில் இதுதான் உண்மையான வந்தியத்தேவனா?

அமரர் கல்கி தன்னுடைய காவியத்தில் இளமையும் துடிப்பும் நிறைந்த வந்தியத்தேவனை வாணர் குழத்தவன் என ஐயமன்றி கூறியிருப்பார். ஆனால் இதற்கான எந்தவொரு நேரடி வரலாற்று ஆதாரமும் இல்லை. சமகாலத்தில் வாழ்ந்த பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கு முரணாக செல்ல கல்கியை தூண்டியதற்கு ஒரே காரணம் தான்.  சோழர் கால கல்வெட்டுக்களில் குந்தவை பிராட்டியாரின் கணவனாக வல்லவரையர்  வந்தியத்தேவன் என்ற பெயரில் நம் நாயகன் அறியப்படுவதே. வல்லவரையர் என்பதன் பொருள்(வல்ல+அரையர்) வல்லம் பகுதியின் ஆட்சியாளர் என்பதே ஆகும். இந்த வல்லம் எனப்படும் பகுதியே வாணர்களின் தலைநகராக நீண்டகாலம் செயற்பட்டது. வந்தியத்தேவன் வல்லத்தின் அரசர் என்று அறியப்படுவதால் இவர் வாணர்குலத்தை சேர்ந்தவராக இருந்திருக்கக் கூடும் என கல்கி முடிவுக்கு வந்தார். இதனை நிறுவுவதற்கு கல்கியிடம் போதியளவு ஆதாரம் இல்லாத கரணத்தாலேயே வந்தியத்தேவனின் தாய், தந்தை குறித்தோ அல்லது எவ்வாறு அவன் வாணர்குலத்துடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றோ கல்கி விளக்கம் தரவில்லை. 

வல்லவரையன் வந்தியத்தேவன் / Vanthiyathevan – Image Credit – Ragavi ‘s blog

வந்தியத்தேவன் பெரும்பாலும் சோழராதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பல சிற்றரசர்களில் ஒருவனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சார்பான ஆதாரங்களை கல்கியே தன்னுடைய நாவலில் குறிப்பிடுகிறார். சோழராட்சி உட்பட பெரும்பாலான தமிழ் மன்னர்கள் தமக்கென தனிப்பெரும்படையை கொண்டிருப்பது மிகக்குறைவு. மாறாக போர்க்காலங்களில் தங்கள் சிற்றரசர்களிடம் இருந்தே படைகளைத் திரட்டிக் கொள்வது வழக்கம். ஆகவே சிற்றரசர்களின் நட்பும் ஆதரவும் பெருமன்னர்களுக்கு மிக முக்கியம். இதற்காக சிற்றரசர்களுடன் கொள்வினை-கொடுப்பினை தொடர்புகளை பேணுவது அரசர்களின் இயல்பாகும். அந்த வகையில் நோக்கும் போது சுந்தரச்  சோழரின் ஏகப்புதல்வியான குந்தவை பிராட்டியின் கணவன்; நம் கதாநாயகன் நிச்சயம் சக்தி வாய்ந்த ஒரு சிற்றரசனாக இருந்திருக்க வேண்டும். சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வந்தியத்தேவன் கீழை-சாளுக்கிய இளவரசனாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். வேறு சிலர் இவன் ராஷ்ட்ரகூட வம்சத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இவை இரண்டுக்குமே போதிய ஆதாரங்கள்  இல்லை. அதே போல ஆதித்த கரிகாலருடன் வந்தியத்தேவனுக்கு நட்பு நிலவியது என்பதை நிறுவவும் எந்த வரலாற்று ஆதாரங்களும் கிடையாது. 

வந்தியத்தேவனின் பூர்வீகம் குறித்து தெளிவான பதில்கள் இல்லாத போதும் வந்தியத்தேவன் சோழநாட்டில் கொண்டிருந்த பொறுப்புகள் குறித்து தெளிவான தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. ஏற்கனவே கூறியது போல வந்தியத்தேவன் வல்லம் எனும் ஊரை தலைமையாகமாக கொண்டு தமிழகத்தின் வடக்கு பகுதிகளை (தற்போதைய வேலூர் மாவட்டம், காஞ்சி மாவட்டம், திருவண்ணாமலை மற்றும் சில தென் ஆந்திரப் பகுதிகள்)ஆட்சி செய்துள்ளார். ராஜராஜ பெருவேந்தர் காலத்திலும், ராஜேந்திர தேவர்  காலத்திலும் சோழநாட்டின் முக்கியப் படைத்தலைமைகளில் ஒருவராக பணிபுரிந்துள்ளார். ராஜேந்திரன் காலத்திலும் வந்தியத்தேவன் படைத்தலைமையில் பணிபுரிந்திருப்பதைப் பார்க்கும் போது, நிச்சயம் வந்தியத்தேவன் ராஜராஜரைக் காட்டிலும் அதிக காலம் உயிர்வாழ்ந்துள்ளது தெளிவாகிறது. ஆகவே பெரும்பாலும் பொன்னியின் செல்வனில் குறிப்பிடுவதை போலல்லாமல் வந்தியத் தேவனுக்கும் அருண்மொழிவர்மருக்கும் கணிசமான அளவு வயது வேறுபாடு இருந்திருக்கலாம். அல்லது ராஜராஜர் நெடுநாட்கள் வாழ்ந்திருக்க முடியாது போயிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. வல்லத்து அரையாராகிய வந்தியாதேவன் பால் ராஜராஜருக்கும், ராஜேந்திரருக்கும் பெரும் மதிப்பு இருந்திருக்க வேண்டும். இதனாலயே எப்போது அரசர்கள்  பெயராலும், அரசிகள் பெயராலும், இளவரசர் பெயராலும் மட்டுமே வழங்கப்படும் நாடுகளின் பெயர்களுக்கு மாறாக, வந்தியாதேவன் ஆட்சிபுரிந்த நாட்டை வல்லவரையர் நாடு என அவர் பெயராலேயே கல்வெட்டுக்களிள் பொரித்தனர் தந்தையும் தனையனும். கல்கியும், வரலாறும் பொருந்திப்போகும் ஒரு தருணம் உண்டு. காதல் மன்னனாக கதையில் வலம் வரும் நம் நாயகன் நிஜவாழ்விலும் காதல் மன்னனாகவே இருந்திருக்க வேண்டும் போலும். குந்தவை பிராட்டியார் தவிர்த்து சின்னவை, இளமணி நங்கை, பழுவேட்டையர் மகள் அபாராஜித சேவடிகள் என மேலும் 4 அல்லது 5 மனைவிகள் நம் நாயகனுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதற்க்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. 

Vanthiyathevan-  Image Credit to Viyuka.com

 

வல்லவரையன் வந்தியத்தேவன் பிராட்டியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் என்ற ஒற்றை கல்வெட்டு வாசகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பெருங்கதைக்கான நாயகனையே அமரர் கல்கி படைத்துள்ளார். ஆனால் உண்மையில் கல்கியின் அடிப்படை திட்டத்தில் வந்தியத்தேவன் நாயகனாக இருக்கவில்லை. சிவகாமி சபதம் நாவலில் வரும் பரஞ்சோதி கதாப்பாத்திரம் போன்றே, வந்தியத்தேவனையும் கதைக்களத்தையும் , கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வைக்க மாத்திரமே உண்டாக்கினார். அருள்மொழி வர்மரான ராஜராஜரே கதாநாயகன். இருப்பினும் மக்களிடையே  வந்தியத்தேவனுக்கு பேராதரவு எழுந்த காரணத்தினாலேயே அவரை வளர்த்தெடுத்தார் ஆசிரியர். பயர் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவனின் கதாபாத்திரம் முழுவதும் கல்கியின் கற்பனை பிரவாகத்தின் உச்சம் என்றால் மிகையாகாது.  வரலாற்றில் இருந்து வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஒரு பெயரக்கொண்டு பல லட்சம் வாசகர் மனதுகளில் வல்லவரையன் வந்தியத்தேவனை என்றென்றைக்கும் நிறுவி விட்டு போய்விட்டார் கல்கி. 

அடுத்தப் பகுதியில் பொன்னியின் செல்வனில் கூறப்படும் சோழ அரச குடும்பத்தைப் பற்றி காண்போம்… 

தொடரும்…

எழுத்தாக்கம் நேசிகன் கணேசன்

Related Articles