சங்கதி தெரியுமா? – மூன்று ஆதித்தர்கள்

இப்போதைய நாட்களில் நாடு, மொழி, பின்புலம் என எல்லா வரம்புகளையும் கடந்து இளைய சமுதாயம் முழுவதுக்கும் பொழுதுபோக்காகவும், வேட்கையாகவும் மாறியிருக்கும் மார்வெல் திரையுலகு, சமீபத்தில் புதிய குறுந்தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது: What If. ‘ஒருஎதிர்பாரா சிறு சொல்லின், செயலின், அசைவின் விளைவால் நாம் அறிந்த அனைத்தும் எவ்வாறு மாற்றம் காணக்கூடும்’ எனும் அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது இத்தொடர். இது இவ்வாறு நடந்திருப்பின், எவ்வாறு மொத்த வரலாறும் மாறியிருக்கும் என்ற பல வரலாற்றுத் தருணங்களை பற்றி நாம் எப்போதேனும் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருப்போம். இது போன்ற தென்னிந்தியாவின் வரலாற்றை மட்டுமல்லாது, பல வெளிநாடுகளின் வரலாற்றிலும் தாக்கத்தை உண்டாக்கிய சோழர் சரிதத்தில் பல்வேறு திருப்புமுனைகள் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறு இன்று நாம் அறியும் சோழ வரலாற்றை வடிவமைத்த மூன்று முக்கிய திருப்புமுனைப் போர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் கூறப்படுகிறது. மயிர்க் கூச்செரியும் இம்மூன்று போர்களை குறித்தும் இவற்றுக்கு இடையே நிலவும் சாமந்தரத்துவம் பற்றியும், சோழ அரச குடும்பதிதில் நிலவிய ஒரு மர்மமான தொடர்பு பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.  

பொன்னியின் செல்வன் கதையோட்டத்தில் நேரக்கிடையாக எந்த போர்க் காட்சிகளும் இல்லையென்றாலும் பல்வேறு கதாப்பத்திரங்களின் வழியாகவும், கல்கியின் விவரணைகளாலும் நாம் மூன்று முக்கிய போர்க்களங்களை கடந்து சென்றிருப்போம்; திருப்புறம்பியம், தக்கோலம் மற்றும் சேவூர். இம்மூன்று போர்களும் தென்னக வரலாற்றில் வெவ்வேறு அளவுகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பெருந்தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.  

மூன்று நூற்றாண்டுகளாக களப்பிரர்களால் வீழ்த்தப்பட்டும், மூன்று நூற்றாண்டுகளாக பல்லவர்களாலும், பாண்டியர்களாலும் அலைக்கழிக்கப்பட்டும் இருந்த சோழர்கள், விஜயாலயர் காலத்திலேயே மெல்லத் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பாண்டியர்களின் ஆதரவாளர்களாக இருந்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றியதே சோழ மீட்சிக்கு அடித்தளமாக இருந்தாலும் கூட, விஜலாயரின் மகன் ஆதித்தன் காலத்திலேயே சோழர்கள் பேரரசு நிலையை நோக்கி முன்னகரத் தொடங்கினார்கள். சோழர்களின் ஆட்சியின் மீளாரம்பத்திற்கு முதல் அத்தியாயமாக அமைந்திருந்த திருப்புறம்பியம் போரானது பல்லவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போட்டியின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாம் நந்திவர்மப் பல்லவனின் மகன் நிருபதுங்கவர்மனுக்கும், அவனது சகோதரன் மகனான அபாராஜிதவர்மனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளில் சோழர்களும், கங்கர்ளும் பின்னவனையும், பாண்டியர்கள் முன்னவனையும் ஆதரித்தனர். பல்லவ வாரிசுரிமைப் போர் உடனடிக்காரணமாக இருந்த போதிலும், பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நிலவிய நூறாண்டுகால அதிகாரப்போட்டியாகவே இப்போர் நடந்தேறியது. போரில் பாண்டியர்கள் கங்கமன்னன் பிருத்வீபதியை கொன்ற போதிலும், இறுதி வெற்றி பல்லவர் கைகளுக்கே சென்றுசேர்ந்தது. எனினும், இறுதி நன்மை சோழர்களையே அடைந்தது. இக்காட்சியை கல்கி பகைவன் பள்ளிப்படை என்ற அத்தியாயத்தில் கூறியிருப்பார். பொன்னியின் செல்வன் விவரணம் செய்த முதல் பெரும்போர் இத்திருப்புறம்பியம் போரே. ஆனால் அதில் பழுவேட்டரையர் வாயிலாக கல்கி விவரணம் செய்த விஜயாலயரின் வீரம் கல்கியின் கற்பனை மட்டுமே. அபாராஜித பல்லவன் காலத்தில் ஆதித்தனே சோழ அரசனாக இருந்திருப்பான். திருப்புறம்பியம் போரின் விளைவால் பாரதத்தின் தென்னக சக்திகளான பல்லவர்கள் முற்றாகவும், பாண்டியர்கள் கடுமையாகவும் தங்கள் அதிகாரத்தினை இழந்தனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திய ஆதித்த சோழர் தேர்ந்த மதியூகி என பல்லவர்களை வீழ்த்தி தொண்டை நாட்டை தன் அரசுடன் இணைத்துக் கொண்டார். 

தக்கோலம் போர். பட உதவி:facebook/deiva_arts

ஆதித்த சோழர் தன்னுடைய வெற்றியை நிலைநிறுத்தும் வகையில் சேரர்களுடன் நட்புறவு மேற்கொண்டார். அதன் விளைவாக சோழ நாட்டின் அடுத்த அரசியாக சேரன் மகள் கோக்கிழான் அடிகள் பராந்தகரை திருமணம் செய்து கொண்டார். ஆதித்தரின் வெளியுறவுக் கொள்கைகளால் உண்டான இந்த நல்லுறவே சோழ நாட்டின் அடுத்த பெரும்போரில் அவர்களுக்கு பேராதரவாக அமைந்தது. தந்தையின் தடத்தைப் பின்பற்றி சிறப்பான வெளியுறவுக் கொள்கையைப் பேணிய பராந்தகர் தன்னுடைய மகள் வீரமாதேவியை இராஷ்ட்டிரகூட மன்னனான நான்காம் கோவிந்தனுக்கு மணம் செய்துவைத்தார். எனினும், கோவிந்தனின் திறமையற்ற ஆட்சி மற்றும் வேங்கியில் உண்டான கலகம் என்பவற்றின் விளைவால், தன்னுடைய சிற்றப்பனான மூன்றாம் அமோகவர்ஷனாலும் அவன் மகன் மூன்றாம் கிருஷ்ணனாலும் தோற்கடிக்கப்பட்டு, தன் மாமனாரான பராந்தகனின் ஆதரவில் காஞ்சியில் அடைக்கலாமானான் கோவிந்தன். அமோகவர்ஷனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கிருஷ்ணன் உடனடியாக தென்திசையை நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பினான். அந்நேரத்தில் பராந்தகனின் நம்பிக்கைக்குரிய சிற்றரசாக இருந்த கங்க நாட்டின் மன்னன் இரண்டாம் பிருத்வீபதி காலமானான். கிருஷ்ணனின் ஆதரவால் அவன் மைத்துனன் இரண்டாம் பூதுகன் கங்க நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். நிலைமை எல்லை கைமீறுவதை உணர்ந்த பாராந்தர் தன்னுடைய மகனும், முடியிளவரசனுமான இராஜாதித்தன் தலைமையில் பெரும் சைனியத்தை சோழ நாட்டின் வடமேற்கு எல்லையான திருமுனைப்பாடி நாட்டுக்கு அனுப்பிவைத்தார். சேர நாடு அக்காலத்தில் சோழர்களின் முக்கிய ஆதரவாளர்களாய் இருந்தமையால், சேர இளவரசிக்குப் பிறந்த இராஜாதித்தனின் படைகளில் கணிசமான அளவினர் கேரளர்களாகவே இருந்தனர்.  கேரளப் படைப்பிரிவின் தலைவனாக வெள்ளங்குமரன் முன்னணி வகித்தான். அவர்களுடன் இராஜாதித்தனின் மாற்றாந்தாய் சகோதரனான அரிஞ்சயனும் போருக்காக காத்திருந்தான்.  இராஷ்ட்டிரகூடப் பெரும்படை, கங்கர்களுடனும், சோழர்களால் வீழ்த்தப்பட்ட வாணர்கள் மற்றும் வைதும்பர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டுவந்தது. தக்கோலத்தில் நடைபெற்ற பெரும்போரின் முடிவில் பூதுகன் கைகளில் யானை மீதமர்ந்திருந்த இராஜாதித்தன் கொல்லப்பட்டான். உடனே சோழப்படைகள் பின்வாங்கத் தொடங்கின, கிருஷ்ணனின் வெற்றி உறுதியானது. இப்போரின் விளைவுகளே பொன்னியின் செல்வனின் அரியாசனப் போட்டிக்கான கதைக்களத்தை வகுக்கிறது. இப்போருக்கென பெரும்படைகளுடன் காத்திருந்த வேளையிலேயே இராஜாதித்தார் வீரநாராயண ஏரியை செய்வித்தார் என கல்கி கூறியிருப்பினும் அதுவும் வரலாற்றுக்குப் பொருத்தம் அற்றதே. 

மூன்றாவதும், முக்கியமானதுமான போர்; சேவூர் போர். சுந்தர சோழர் ஆட்சிப்பொறுப்பேற்ற சில காலத்துக்குள்ளாகவே, பாண்டிய நாட்டை மீண்டும் தன் அதிகாரத்துக்கு கொண்டுவர நினைத்த வீரபாண்டியனை எதிர்த்து இப்போர் நடைபெற்றது. சோழ இளவலான ஆதித்தகரிகாலன், பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளிர்கள் உட்பட பெரும் படையுடன் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சேவூர் எனும் இடத்தில் பாண்டியப் படைகளை எதிர்கொண்டான். மிகவும் இளம் வயதிலேயே அசகாய சூரனாய் போரிட்டு வீரபாண்டியனின் தலையைக் கொய்த ஆதித்தகரிகாலனின் பராக்கிரமம் பற்றி சோழ சாசனங்கள் புகழாரம் சூட்டுகின்றன. இந்த போரின் விளைவால் பாண்டிய ஆபத்துதவிகளால் ஆதித்தன் கொல்லப்படுவதாக கல்கி மிகவும் பூடகமாக கூறிச் சென்றிருப்பார். ஆனால் நிஜ வரலாற்றில் உண்மை அவ்வளவு தெளிவாய் இல்லை என்பதை கடந்த பாகங்களில் கண்டோம். எனினும் ஆதித்தனின் செயல்களே அவன் மரணத்துக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. 

சேவூர் போர். பட உதவி: /studymateriall.com

இப்போது இந்த மூன்று போர்களுக்கும் இடையே காணக்கூடியத் தொடர்புகளைக் காண்போம். திருப்புறம்பியம் போரும், சேவூர் போரும் தென்னகத்தில் நெடுங்காலம் பாண்டியர்களின் ஆதிக்கத்தை முடக்கச் செய்தன. மேலும் இரு போர்களின் முடிவிலும், வெற்றி பெற்ற அரசனைக் காட்டிலும் அவனது ஆதரவாளர்களே அதிகம் நன்மையடைந்தனர். திருப்புறம்பியம் போரைத் தொடர்ந்து சோழர்களும், சேவூர் போரைத் தொடர்ந்து பழுவேட்டரையர்களும், வேளிர்களும் அதிகாரபலம் அடைந்தனர். இரு போர்களிலும் வெற்றி பெற்ற அரசகுடும்பத்தவர்கள் அதன் பலனை அனுபவிக்க நெடுங்காலம் வாழவில்லை. ஒரு வகையில் அபாராஜிதனும், ஆதித்தகரிகாலனும் துரோகத்தின் விளைவாலேயே தங்கள் மரணத்தைத் தேடிக்கொண்டனர். திருப்புறம்பியம் போரும், தக்கோலம் போரும் தென்னகத்தின் வரலாற்றை முடிவுசெய்த பெரும் போர்கள். இரு போர்களுமே வேறொரு அரச குடும்பத்தில் ஏற்பட்ட அரியாசனப் போரின் விளைவாக சோழர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த போர்களென வகைப்படுத்தப்படாலம் (முந்தையதில் பல்லவர்களும், பின்னையதில் இராஷ்டிரக்கூடர்களும்). திருப்புறம்பியம் போரில் சோழர்களுடன் தோள் தொட நின்று போரிட்டவர்களும், பின்னாட்களில் சோழர்களின் விசுவாசத்துக்குரிய நண்பர்களாயும் இருந்த மேலைக்கங்கர் மரபு, தக்கோலப்போரின்போது இராஷ்டிரக்கூடர்களின் பங்காளிகளாக மாறிவிட்டனர். கங்கன் கையாலேயே இளவரசர் இராஜாதித்தர் மரணமடைந்தார். தக்கோலம் போரின் விளைவாகவும், சேவூர் போரின் விளைவாகவும் முடியிளவரசர்கள் தங்கள் உயிரை இழந்தனர். தக்கோலத்தில் இராஜாதித்தர் முறைமை மீறி பூதுகனால் கொல்லப்பட்டதையும், சேவூர் போரில் காயமுற்று நோயில் கிடந்த பாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்லுவதையும் கல்கி குறிப்பிட்டிருப்பார். எக்காலத்திலும் போர்களில் அறமீறல்கள் நடந்து கொண்டே இருக்கும் என்பதை ஆசிரியர் இங்கு மறைபொருளாக கூறுகிறார். இவ்வாறாக இந்த மூன்று போர்களுக்கும் இடையே இருக்கும் வரலாற்று இணைப்பையும், ஒருமைத் தன்மையையும் பொன்னியின் செல்வன் நாவலை அழுத்திப் படித்தவர்கள் எவரும் மிக இயல்பாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.   

வரலாறு என்பது மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுகளின் சுழற்சி என அதை நுணுகி ஆராய்பவர்களால் இலகுவாக தெரிந்துகொள்ளமுடியும். அதற்கு சோழர் வரலாறு விதிவிலக்கல்ல. சோழர் குலத்து தலை வாரிசுக்கும், அரியாசனத்துக்கும் இடையே எப்போதும் மர்மமான ஒரு இருள்வெளி நிறைந்திருப்பதை வரலாறு எங்கும் தெளிவுற நாம் காண்கிறோம். பல்லவர்களை வென்ற ஆதித்த சோழன் முதல் விஜயாலயரின் கடைக் குருதி வாரிசான அதிராஜேந்திரன் வரையில் இந்த ஊழ்வினை தொடர்ந்தே வந்தது. 

விஜயாலய சோழரை அடுத்து அரசனான ஆதித்த சோழருக்கு இரு மனைவிகள். பல்லவ இளவரசியான வயிரியக்கன், இராஷ்டடிரகூட இளவரசியான இளங்கோன்பிச்சி. முறைமைப்பிரகாரம் பட்டத்து அரசியான இளங்கோன் பிச்சியின் மகனான ஆதித்தன் கன்னரன் எனப்பட்ட கன்னரத்தேவனே அரசனாகியிருக்க வேண்டும். எனினும் அரசியல் காரணங்களுக்காக பல்லவ இளவரசியின் மகன் பராந்தகன் மன்னனானான். தன் பெயரன் அரசிழந்ததை அறிந்த கன்னரனின் பாட்டானாரான இரண்டாம் கிருஷ்ணன் பராந்தகனின் ஆரம்ப ஆட்சிக் காலத்திலேயே சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தார். எனினும், பராந்தகனின் கைகளால் வல்லாளம் எனும் இடத்தில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது சோழர்களுக்கும், இராஷ்டடிரகூடகளுக்கும் இடையில் உருவாகிய பகையின் விளைவே தக்கோலத்தில் இன்னொரு முடியிளவரசனான இராஜாதித்தரின் உயிரைப்பறித்தது. பராந்தகனைத் தொடர்ந்து அரியணை ஏறிய நான்கு மன்னர்களின் காலத்திலும் சோழ முடியுரிமை சர்ச்சைக்குரிய விடயமாகவே தொடர்ந்தது. அக்குழப்பமான காலத்திலும் இன்னொரு முடியிளவரசனான ஆதித்தகரிகாலன் மரணமடைந்தான். அதைத்தொடர்ந்து இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் என இரு தலைமுறைகளுக்கு மட்டுமே இச்சிக்கல் ஓய்ந்திருந்தது. இராஜேந்திரனை அடுத்து ஆட்சிக்கு வரவேண்டிய அவனது மூத்த மகனுக்கு பதிலாக இராஜாதிராஜனே பட்டத்து இளவரசனானான். இதற்கான தெளிவான காரணம் தெரியாதபோதிலும், மூத்த இளவரசன் ஏதேனும் போரில் இறந்திருக்கக்கூடும் எனக் கருதலாம். ஆட்சிப் பொறுப்பேற்ற இராஜாதிராஜனும் சாளுக்கியர்களுடனான கொப்பம் போரில் வீரமரணம் அடைந்தான்.  இராஜாதிராஜனின் இறப்பும், இராஜாதித்தனின் இறப்பும் ஒரேமாதிரி அமைந்தது. இருவரும் தங்கள் போர் யானையின் மீது இருந்தவாறே உயிரிழந்தவர்கள்.  இராஜாதிராஜனுக்கு அடுத்து அவன் மகன்களுக்கு பதிலாக, அவன் தம்பி இரண்டாம் இராஜேந்திரனே மன்னனானான். இவனது ஆட்சியின் போது இவன் மகனான இராஜமகேந்திரன் பட்டத்து இளவரசனாக பட்டமேற்றான். எனினும் அவனும் அரசனாக முன்னமே உயிரிழந்தான். இரண்டாம் இராஜேந்திரனுக்கு பிறகு அவனது தம்பியான வீரராஜேந்திரன் சோழ சாம்ராஜ்ஜிய மன்னனென பதவியேற்றான். அவனது ஒப்பீட்டளவில் குறுகியதும், மிகவும் வெற்றிகரமானதுமான ஆட்சியைத் தொடர்ந்து, அவன் மகன் அதிராஜேந்திரன் மன்னன் ஆனான். விதியின் வலியால் அவனும் ஒரே ஆண்டில் மறைந்து போனான். அவனே சோழர்களின் இறுதி நேரடிக்குருதி வாரிசாவான். இவர்களைத் தொடர்ந்து சோழ ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்டது சோழர்களின் மகள்வழி மரபில் வந்த குலோத்துங்கனும், அவனது வாரிசுகளுமே. 

இவ்வாறு பல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் சோழ வரலாற்றில் நடைபெற்றதை நம்மால் பார்க்க இயலும். சங்கதி தெரியுமா?! தொடரின் அடுத்த பகுதியில் பொன்னியின் செல்வன் நமக்கு காட்டிய சோழ நாட்டு வாழ்வியல் பற்றி காண்போம். 

Related Articles