
ஒவ்வொரு கதாநாயகனுக்கும் பல்லாயிரம் ரசிகர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அத்தனை ரசிகனும் ரசிக்கின்ற, பெருமைப்படுகின்ற, ஆராதிக்கின்ற ஓர் நாயகன் இருக்கின்றான் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தவிர வேறு யாராகவும் இருக்க இயலாது. அவரது ஆரம்ப வாழ்க்கை, இயக்குனர் சிகரத்துடனான சந்திப்பு, அதன் பின்னர் அவர் கடந்துவந்த பாதை, இன்று அவர் இருக்கின்ற இடம் இப்படி அவரது சரித்திரம் அனைவரும் அறிந்த ஓர் சகாப்தமாகவே உள்ளது.
இன்று வியாபார ரீதியான வெற்றிக் கதாநாயகன், அதிகூடிய பட்ஜெட்டுகளில் இறங்கிக் கலக்கும் நடிகர்களுள் முதன்மையானவர், வயது செல்லச்செல்ல இன்னுமின்னும் புதுமையாகத் தோன்றும் புரட்சிநாயகன் என ரஜினியின் பெருமை உயர்ந்துகொண்டே இருக்கின்றது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிவாஜி-எம்.ஜி .ஆர் என்ற இரு பெரும் கலைஞர்களுக்குப்பின் ரஜினி-கமல் என்ற சமநிலை எப்போதும் ஒரு வாய்ப்பாடாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இருந்தும் ரஜினி என்ற நடிகனை இன்றுள்ள நிலையில் ஒரு சூப்பர் ஹீரோ என்ற அடையாளத்துடன் நோக்கும் அதேவேளை, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு ரஜினி என்ற கலைஞன் எத்துணை தகுதியானவர் என்ற உண்மை பெரும்பாலும் மறக்கப்படுகின்றது. ஒரு நடிகனாக தனது நடிப்பில், கதை தாங்கிநிற்கும் பாத்திரத்தை எவ்வளவுதூரம் சிறப்பாக வெளிக்கொணர முடியும் என்பதற்கு ரஜினி ஓர் சான்று. கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் அவரை கம்மேர்சியல் ஹீரோவாகவே பெரும்பாலும் பார்த்த புதியவர்கள் நிறையப்பேர் அவரது பெயர்சொல்லும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களை அறிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு.
ரஜினி சுமந்த பாரமான கதாபாத்திரங்கள் அவரால் மட்டுமே சுமக்க முடிந்தவை என்றால் அது மிகையில்லை. அவருக்கென்ற பாணி, பாத்திரத்தோடு ஒன்றி வெளிவரும்போது அதன் சுவையே தனி எனலாம். இதுவே அன்றும் இன்றும் மக்களை அவர்பால் காந்தம்போல ஈர்த்துவைத்திருக்கிறது. நடை, உடை, பேச்சு இப்படி எல்லாவற்றிலும் தனக்கான பாணியை வகுத்து, தான் செய்கின்ற அனைத்தையும் ஸ்டைலாக காட்டும் வழமைக்கு அவரே பிள்ளையார் சுழியும்கூட. “நெற்றியிலே சரிந்துவிழும் நீளமுடி அழகு, அந்தமுடி கோதுகின்ற அஞ்சுவிரல் அழகு” என்ற வரிகள் ஒலிக்கும்போதே அவரது முகமும், முடியும், அதைக் கோதிநிமிரும் தோற்றமும் எம்கண்முன்னே விரியும். “பன்ச் டயலாக்” என்கின்ற ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் நம்ம சூப்பர் ஸ்டாரே! பள்ளிசெல்லும் பாலகன்கூட “நா ஒரு தடவே சொன்னா, நூறு தடவே சொன்ன மாதிரி” என்று வசனம் பேசுமளவு அவரது பஞ்சுகள் பவர்புல்லானவை. ஆரம்ப காட்சியில், அறிமுகப்பாடலுக்கு முன்னே அவரது க்ளோசப்பில் பூக்கும் ஒரு சிறு நகைக்கு நம் ரசிகர்கள் போடும் கூச்சல் ஒன்றே அவரது பெருமையைச் சொல்லப் போதுமானது.
இப்பேர்ப்பட்ட ஓர் நடிகனை கபாலியில் ஓர் தேர்ந்த நடிகனாகவும் நீண்டநாளுக்குப் பின்னர் பார்த்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த்தின் நடிப்பினால் உயிர்பெற்று கதாபாத்திரங்களாக இன்றும் எம்நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் பாத்திரங்கள் சில….
பாண்டியன் – அபூர்வ ராகங்கள்
பிரசாத் – மூன்று முடிச்சு
ராமநாதன் – அவர்கள்
பரட்டை – பதினாறு வயதினிலே
காளை – முரட்டுக் காளை
காளி – முள்ளும் மலரும்
தீபக் – நினைத்தாலே இனிக்கும்

அலெக்ஸ் பாண்டியன் – மூன்று முகம்

ஜானி, வித்யாசாகர் – ஜானி

இந்திரன் சந்திரன் – தில்லு முல்லு
தர்மதுரை – தர்மதுரை
சூர்யா – தளபதி
வானவராயர் – எஜமான்

அண்ணாமலை – அண்ணாமலை
