Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஷர்லொக் ஹோம்ஸ் மற்றும் ஆதர் கொனன் டொயில்

நீங்களும் துப்பறியும் கதைகளை வாசிப்பதற்கு விரும்பும் ஒருவரா? அப்படியென்றால், ஷர்லொக் ஹோம்ஸ் எனப்படும் துப்பறிபவர் குறித்தும். அவரது உதவியாளரான டாக்டர் வொட்சன் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம், உலகம் முழுவதும் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷர்லொக் ஹோம்ஸ் கதைத் தொடர் குறித்தும், அத்தொடரை எழுதிய ஆதர் கொனன் டொயில் குறித்தும் விளக்குகின்றோம்.

டொயிலின் இளம் பருவமும் கல்வியும்

ஆதர் கொனன் டொயில் (fictionfanblog.wordpress.com)

ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில், 1859 மே 22 ஆம் திகதி, சார்ல்ஸ் டொயில் மற்றும் மேரி ஃப்ளொய் ஆகியோரின் குழந்தையாக ஆதர் இக்னேசியஸ் கொனன் டொயில் பிறந்தார்.

ஆதர் கொனன் டொயிலின் தந்தை, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தவர். அவ்வளவு வெற்றிகரமான ஒரு சித்திரக் கலைஞராக இருக்காததனால், அவரால் அவ்வளவு சம்பாதிக்க முடியவில்லை. எனவே, ஆதர் கொனன் டொயிலுக்கு சிறு பராயத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு வாழ்வு அமையவில்லை. ஆனாலும், சிறந்த கதை சொல்லியான அவரது தாயார், குறைபாடுகளுடன் கூடிய சிறு பராயத்தை, கதைகள் சொல்லி சுவையூட்டியதாக, ஆதர் கொனன் டொயில், தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், ஆதர் கொனன் டொயிலுக்கு 9 வயதாகும்போது, அவரது குடும்பத்தின் பணக்காரர்கள் சிலர் அவரது கல்விக்கான செலவை பொறுப்பெடுப்பதற்கு உடன்பட்டனர். ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றதன் பின்னர், டொயில் குடும்பத்தின் சம்பிரதாயமான சித்திரக் கலையை கற்பதை புறந்தள்ளிவிட்டு, மருத்துவத் துறையில் கற்பதற்காக, எடின்பரோ பல்கலைக்கழகத்துக்கு 1877 இல் அவர் நுழைந்தார்.

பேராசிரியர் ஜோசப் பெல்லின் சகவாசம்

இளம் மருத்துவ மாணவரான ஆதர் கொனன் டொயிலுக்கு, ஜேம்ஸ் பெரி மற்றும் ரொபட் லுவி ஸ்விட்சன் போன்ற தலைசிறந்த சில எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. ஆனாலும், அவரது வாழ்வில் அதிக தாக்கம் செலுத்தியது, அப்போது அந்த மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் ஜோசப் பெல்லின் சந்திப்புத்தான். பேராசிரியர் பெல் ஒரு கெட்டிக்கார வைத்தியராக இருந்ததோடு, நோயாளிகளை அவதானித்து, அதன் மூலம் முடிவுகளுக்கு வர முடியுமான ஒரு கெட்டிக்காரராகவும் இருந்ததாக் கூறப்படுகிறது. பின்னர், ஆதர் கொனன் டொயில் எழுதிய ஷர்லொக் ஹோம்ஸின் பாத்திரம், பேராசிரியர் ஜோசப் பெல்லின் பாத்திரத்தை தழுவியே உருவாக்கப்பட்டது.

எழுத்து வாழ்வும் ஷர்லொக் ஹோம்ஸும்

A Study in Scarlet (arthurconandoyle.com)

ஆதர் கொனன் டொயில் மருத்துவக் கல்லூரியில் கற்கும்போது, “The Mystery of Sasassa Valley” எனும் ஒரு சிறுகதையை எழுதினார். அது அப்போது எடின்பரோவில் வெளியிடப்பட்ட ஒரு சஞ்சிகையான செம்பர்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

அதன் பின்னரும் அவர் பல்வேறு கதைகளை எழுதியபோதும், அவர் ஒரு எழுத்தாளராக பிரபலமடைந்தது, ஷர்லொக் ஹோம்ஸ் கதையை உருவாக்கியதன் பின்னராகும். அவர் ஒரு வைத்தியராக தனது வாழ்க்கைத் தொழிலை ஆரம்பித்தபோதும், அதில் அவர் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, அவர் தனது ஓய்வு நேரத்தில் கதைகள் எழுதத் தொடங்கினார். 1886 மார்ச் மாதம், அவர் தனது முதலாவது ஷர்லொக் ஹோம்ஸ் கதையை A Study in Scarlet என்ற பெயரில் எழுதினார். பின்னர், சிறிது காலத்தில் இந்த ஷர்லொக் ஹோம்ஸ் கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அத்தோடு, கொனன் டொயில் இன்னும் பல ஷர்லொக் ஹோம்ஸ் கதைகளை எழுதினார். இந்த வகையில் 56 சிறுகதைகளாகவும், 4 பெரிய கதைகளாகவும் அவை எழுதப்படுகின்றன. உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இக்கதைகள் பல்வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டன.

உலகெங்கும் பரவிய ஷர்லொக் ஹோம்ஸ் பித்து

(lorcan.biz)

ஷர்லொக் ஹோம்ஸ் கதைகள் எழுதப்பட்டு, இப்போது நூற்றாண்டையும் தாண்டியுள்ளபோதும், இன்னும் அது உலகம் முழுவதும் வாசகர்களின் நேசத்துக்குரிய ஒரு கதைத்தொடராகவே உள்ளது. இக்கதைகளில் வரும் ஷர்லொக் ஹோம்ஸ் லண்டன் நகரில் 221/B என்ற இலக்கத்துக்குரிய இடத்தில் வாழ்வதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடம், லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவதானத்துக்கு உட்படுகின்ற ஒரு இடமாக ஆகியுள்ளது.

அத்தோடு, இன்றுவரையிலும் ஷர்லொக் ஹோம்ஸின் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்களும் நாடகங்களும் உருவாகியுள்ளன.

1930 ஜூலை 07 ஆம் திகதி கொனன் டொயில் மரணித்தார். ஆனாலும், அவர் எழுதிய ஷர்லொக் ஹோம்ஸ் எனும் துப்பறியும் நபர் வாசகர்களின் உள்ளங்களில் இன்னும் வாழ்கிறார்.

உசாத்துணை: arthurconandoyle.com

ஹிமாலி அநுருத்திகா

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

 

Related Articles