தமிழர்களின் ஜல்லிக்கட்டு

தென் தமிழகத்தில் மாத்திரமே சிறப்பு பெற்றிருந்த ஜல்லிக்கட்டுக்காக ஏன் 2017 ஆம் ஆண்டு தமிழகமே மெரினாவில் திரண்டுவந்து போராட்டம் நடத்தியது? இதற்கு விடைகான வரலாற்றில் நாம் சங்ககாலம் வரையில் சென்று பார்க்கவேண்டும் . ஏறுதழுவுதல் , ஏறுகோள் , மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு,   என பெயர்களைப்பெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டே இது . இவ்விளையாட்டு முல்லைநில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாக பண்டைக்காலத்தில் இருந்தது . முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று மிகப்பெரிய பண்பாட்டு திருவிழாவாக பொங்கல் திருநாளையொட்டி  நிகழ்த்தப்படுகின்றது . பண்பாட்டு திருவிழாவாகவும் சமயம் சார்ந்த விழாவாகவும் நடைபெறும் ஏறு தழுவுதல் பற்றி ஏராளமான இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலி , மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், போன்றவை அவற்றுள் சில. முல்லைநில மக்களும் குறிஞ்சிநில மக்களும் தங்களது வலிமையான எருதுகளை ஒன்றுடன் ஓன்று பொறுத்தும்படியாக செய்து அதன் வெற்றியை  தம்முடைய வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்தனர். முல்லைக்கலியில் மாடுகளின் நிறம், அவற்றின் வகைகள், வீரம், அவற்றை அடக்கும் இளைஞர்களின் செயல்கள், பரண் மீது அமர்ந்திருந்து அவற்றை கண்டு ரசிக்கும் பெண்களின் பேச்சுக்கள் என அனைத்தும் கூறப்பட்டுள்ளது.

ஜல்லிகட்டு போராட்டத்தின் போது – -புகைப்படவிபரம் www.hindustantimes.com

உண்மையில் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியின்போதே ‘ஜல்லிக்கட்டு” எனும் பெயர் உருவானது. அதற்குமுன்புவரை ஏறுதழுவுதல் என்கிற பெயரே இருந்து வந்துள்ளது. திராவிட நாகரீகத்தின் தொல்பொருள் தரவுகளை நமக்குத் தந்த சிந்துவெளி அகழ்வாராச்சிகளின்போது ஒரு காளையின் கொம்பை ஒரு மனிதன் பிடிப்பது போன்ற முத்திரை தரவுகள் கிடைத்தன. இதுவே ஏறு தழுவுதலின் தொடக்கமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது .

மாடு என்ற சொல்லுக்கு தமிழில் செல்வம் என்று பொருள் ஜல்லி என்பது சல்லி எனும் சொல்லின் திரிபு. காளையின் கொம்பில் கட்டப்படும் சல்லிக் காசுகள் சார்ந்து ஜல்லிக்கட்டு எனும் பொருள் தரக்கூடியது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் காங்கேயன் பகுதியில் ஏறு தழுவுதல் நிகழ்பெற்றதிற்கான  “நடுகல்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காளைகள் செல்வத்தின் குறியீடாக இருப்பதனால் ஒரு இனக்குழுவை வீழ்த்த இன்னொரு இனக்குழு அவர்களது கால்நடைகளை கவர்வது அப்போதைய ஓர் வழக்கமாக இருந்துள்ளது என்றும் இந்த போராட்டத்தில் காளைகளை காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக நடப்பட்ட நடுக்கல்லே அவையாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.  

விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெற்ற, ஜல்லிகட்டு காட்சிகளிலிருந்து -புகைப்படவிபரம் www.dailyo.in

பழந்தமிழர் வாழ்வும் ஏறுதழுவலும்:

ஏறுதழுவல் எனும் விளையாட்டு இன்று நேற்று நிகழ்வது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சிந்துசமவெளி நாகரிகத்தின் போதே, காளையை அடக்கும் விளையாட்டு நடைபெற்றதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருப்பதாக, எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள் தெரிவிக்கிறார். இதுதவிர பல தொல்லியல் இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள், கோவில் சிற்பங்கள் ஆகியவற்றில் இம்மாதிரியான சித்திரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.கல்வெட்டுக்கள் ஒருபுறமிருக்க, நம் வளமான இலக்கியங்களில் ஆநிரைகளுக்கு நாம் கொடுத்த உயர்ந்த இடம் மூலமாகவும், ஏறுதழுவல் குறித்த பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

ஜல்லிக்கட்டில் நோக்கம் மாடு பிடிப்பது அல்ல, மாட்டினால் குத்தப்படும் வீரர்களின் தூய இரத்தம் நிலத்தில் சிந்தும்போது, அந்த ஆண்டு விளைச்சல் அதிகமாகும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சிதான் இன்றுவரை தொடர்கிறது. அதாவது ஜல்லிக்கட்டு என்பது காளையை அடக்கும் விழா அல்ல வீரனை அடையாளப்படுத்தும் விழா என்பதுதான் உண்மை. பல லட்சங்கள் செலவழித்து பராமரிக்கப்படும் இந்த காளைகள் ஜல்லிக்கட்டில் அடக்கப்பட்டால் வீரியம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு காயடிக்கப்பட்டு வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும். ஜெயிக்கும் காளைகள் இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படும். காளைகளில் உள்ள பல்வேறு வகைகளும் ஜல்லிக்கட்டில் மூலமாகவே பாதுகாக்கப்படுவதாக கருதப்படுவதனாலேயே ஜல்லிக்கட்டு தடைக்கு அவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது . ஒரே மாதிரியான மரபணு காளைகளை வணிக ரீதியாக முதன்மைப்படுத்துவதே இந்த தடையின் பின்னணி என  சொல்லப்பட்டது. 

புகைப்படவிபரம் -www.medium.com

தமிழகத்தில் ஆலம்பாடி, காங்கேயன், புலிக்குளம், உம்பளஞ்சேரி, குருகூர், மலைமாடு எனப்படும் காளையினங்கள்   உள்ளன . இதில் ஆலம்பாடி இனம் மட்டும் அழிவுற்றுவிட்டது.

ஜல்லிக்கட்டு  வகைகள் எனப்பார்ப்போமாயின்,

01 வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு

“வாடிவாசல்” எனும் வாயில் வழியாக வரும் காளையை ஒருவர் மட்டும் அதன் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும்.  காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.

02 வேலி மஞ்சுவிரட்டு

திறந்தவெளியில் அவிழ்த்துவிட்ட காளையை வீரர்கள் அடக்கவேண்டும். இந்த விளையாட்டு ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும்.

03 வடம் மஞ்சுவிரட்டு

வடம் என்றால் தமிழில் “கயிறு” என்று பொருள்படும். ஒரு காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளேயே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் அடக்கவேண்டும்.

இன்றைய சூழலில், அயல்நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் என்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நாட்டு மாடுகளும் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு மாடுகளில் இருத்து வந்த பல்வேறு வகையின் பரம்பரைகள் அழிவதற்கு முக்கியமான காரணமும் இதுதான். இனிவரும் காலங்களில் எம் நாட்டு மாடுகள் தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. எம்மோடு வளர்ந்த வந்த பாரம்பர்யத்தின் இன்னுமோர் அடையாளம் இதன் மூலம் காக்கப்படும் கடமையை உணர்ந்து தமிழர்கள் செயற்படவேண்டும். என்னதான் மிருகவதை  தடை சட்டங்கள் போடப்பட்டாலும், எல்லாவற்றையும் தாண்டி ஜல்லிக்கட்டு என்கிறவொன்றை தமிழரின் பண்பாட்டில் இருந்து அவ்வளவு எளிதில் பிரித்துவிடவியலாது என்பது மட்டும் உண்மை 

 

Related Articles