சங்ககாலத்து மங்கையர் நிலை | #தமிழ்பாரம்பர்யமாதம்

பெண்ணியம். தற்போதைய நாட்களில் அதிக ஆதரவையும் விமர்சனத்தையும் ஒருங்கே சம்பாதித்து வரும் ஒரு கருத்தியல். ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் அதே அளவில் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வலுப்பெற்று வரும் நிலையில் மறு புறத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், துஷ்பிரயோககங்களும் தொடர்ந்து மாற்றமின்றி அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சமூகத்தில் இது மிக அப்பட்டமாக தெரியவருகிறது. அன்னை தெரேஸாவின் நினைவலைகளும், நாட்டுக்காக பதக்கம் வென்றெடுத்த பெண்ணின் வெற்றிபயணமும், குறைவான புள்ளிகள் பெற்று தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செயலும், 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட துயரசம்பவமும் ஒரே செய்தித்தாளின் அடுத்தடுத்த பக்கங்களை பங்கிட்டுக்கொள்ளும் அவல நிலைக்குரிய சமுதாயமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்.  இறந்த காலத்தைக்கொண்டு நிகழ்காலத்தை திருத்திக்கொண்டாலே எதிர்காலம் சிறப்பாக அமையும். அந்த வகையில் தமிழ் சமூகத்தின் பதிவு செய்யப்பட்ட முதல் வரலாற்றுக்கலாமாகிய சங்ககாலத்தில் இருந்து கிடைக்கப்பட்டுள்ள இலக்கிய ஆதாரங்களை கொண்டு பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நோக்குவோம். 

இயல்பு நிலை வாழ்க்கை

கி.பி 10ம் ஆண்டு. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மதுரையம்பதியின் ஒரு குடியிருப்பு பகுதியில் எழுந்தமானமாக ஒரு வீட்டின் கதவை தட்டி அங்கிருக்கும் பெண்ணின் ஆகப்பெரும் கனவு என்னவென்று கேட்டால் அவள் பதில் ‘கனவில் நான்கண்ட என் தலைவனே என்னை மணக்க வேண்டும்’ என்றோ ‘பொருள் தேட புறப்பட்டு சென்ற கணவன் எந்த ஊறும் இல்லாது வீடடைய வேண்டும்’ என்றோ ‘குறைவில்லாத குழந்தை செல்வம் வேண்டும்’ என்றோ தான் பதில் கிடைக்கும். மனதளவில் பெரும் அழுத்தங்கள் எதுவும் இல்லாத மிகவும் எளிமையான வாழ்க்கையே அப்போது நிலவியது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவையே பெண்ணின் குணமாக கூறப்பட்டாலும்,

‘உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’ (தொல். களவியல் 23) என்ற தொல்காப்பிய பாடலுக்கு அமைவாக உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்பே பெரிது என நெறிவழுவாது வாழ்ந்த சங்ககாலத்து பெண்களின் வாழ்க்கை கவனிக்கத்தக்கது. 

படஉதவி : blogspot.com

பெண்குழந்தைகள் பிறந்தால் பெரும் பொறுப்பு தம் மீது வந்து சேரும் என எண்ணும் மனப்போக்கு எல்லாம் அப்போது இருக்கவில்லை. ஆணோ பெண்ணோ குழந்தைகள் என்றாலே பெரும் செல்வம் என கருதப்பட்டது. பால்வேறுபாடுகள் இல்லாது அனைத்து குழந்தைகளும் ஒன்று போலவே பாவிக்கப்பட்டது. ஆண்களுக்கு போர்ப்பயிற்சி, வணிகம், நீதி என்பன பயிற்றப்பட்டது போன்றே பெண் பிள்ளைகளுக்கும் கல்வி போதிக்கப்பட்டது. ஆனால் அவை பெரும்பாலும் திருமணத்துக்கு பின்னர் இல்லறவாழ்வுக்கு உதவும் திறன்களாகவே இருந்திருக்க வேண்டும். சிறுமியர்களும், திருமணப்பருவம் எய்தாத கன்னிப்பெண்களும் வெளியில் சென்று விளையாடாது வீட்டிலேயே முடங்கி இருப்பது அறமாகாது என கருதப்பட்டது. பொம்மை பாவைகளுடன் விளையாடல், வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல், கழற்காயாடுதல் மற்றும் புனலாடுதல் என பெண்களுக்கே உரிய பல விளையாட்டுகள் சங்கப்படல்களில் கூறப்பட்டுள்ளது. 

படஉதவி : siragu.com

பெண்களின் குரல் இயல்பிலேயே மென்மையாக இருந்தமையால் இசை பயிற்சி பல பெண்களுக்கு இருந்தது. தாலாட்டு தொடக்கம் அனைத்து நற்காரியங்களில் இருந்து துக்க காரியங்கள் வரை அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் பாடும் வழக்கம் இருந்தது. இசைத்தமிழ் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு மிகுதியாக இருந்தது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் தாம் வாழும் சமூகம் மற்றும் சுற்றாடலை பொறுத்து விவசாயம் மற்றும் வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதையும் காண முடிகிறது. மலைவாழ் மகளிர்கள் தினைப்புலங்களில் கிளிகளை ஓட்டி தினைப்புலங்களை பாதுகாப்பதும், கடல் புறங்களில் வாழ்ந்த பெண்கள் சங்கு, சிப்பிகளை கொண்டு ஆபரணங்கள் செய்வதும், மருத நிலத்து பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதும், குறிஞ்சி நிலத்து பெண்டுகள் வேட்டையாடலுக்கு உதவுவதும் வழக்கமாக இருந்தது. இந்த சாதாரண வாழ்க்கையை கடந்து பெண்களுக்கே உரிய கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் கூட இருந்தன. மாரிகாலத்தில் புத்தி வெள்ளம் ஊற்றெடுக்கும் வைகை கரையிலும், காவிரிக்கரையிலும் பெண்கள் தங்கத்தால் ஆன சங்கு அல்லது நண்டு உருவை நீரில் இட்டு இயற்கைக்கு நன்றி செலுத்தி நீராடியும் விளையாண்டும் கொண்டாடும் புனலாட்டு விழா பற்றி பரிபாடலிலும், அகநானூற்றிலும் கூறப்பட்டுள்ளது. 

இந்த கன்னிப்பருவ வாழ்க்கை எல்லாம் கழிந்து திருமணம் என்ற பகுதிக்கு நுழையும் போது தற்காலப்பெண்களை காட்டிலும் சங்ககால பெண்களுக்கு அதிகளவு உரிமையும், சுதந்திரமும் இருந்தது என்பதே உண்மை. பொதுவாக பெண்கள் காதல் திருமணத்தையே அதிகம் விரும்பினர். தான் விரும்பும் ஆண் மகனை முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அகநானூறு பாடல்கள் இவ்வாறு தலைவன்-தலைவி காதலின் அனைத்து உணர்வுகளையும் மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்தி நிற்கிறது. இதனை தாண்டி சில போட்டிகளில் இருந்து தங்களுக்கான மணவாளனை தேர்ந்து எடுக்கும் முறைகளும் இருந்தது. குறிப்பாக முல்லை நில மகளிர் தாம் வளர்த்த காளையை அடக்கும் ஆண்மகனையே திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. இன்றுபோல் இல்லாமல் அப்போதெல்லாம் மணமகனே பெண்வீட்டாருக்கு பெருமளவு பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து பெண்ணை மணந்து கொள்வான். அதற்காக தகுதியற்ற ஆண்மகன் அதிகம் பொருள் தருகிறான் என்பதற்காக தங்கள் மகளை அவனுக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர்கள் சம்மதிப்பது இல்லை. 

படஉதவி : ttamil.com

இறை நம்பிக்கை என்ற விடயத்தில் அக்காலத்து பெண்கள் அதிகம் நாட்டம் கொண்டிருந்தனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் மனதுக்கு பிடித்த ஆண்மகன் கணவனாக வரவேண்டும்  என முருகப்பெருமானை வழிபடுதல் வழக்கமாய் இருந்தது. மேலும் கணவன், பிள்ளைகள் செய்யும் காரியங்கள் நிறைவேற சிவன், மாயோன், முருகன், கொற்றவை என பல தெய்வங்களை வழிபடும் வழக்கம் இருந்தது. பெண்களுக்கு திருமணம் ஆகும் போது சிலம்பு கழி நோன்பு என்ற சடங்கு செய்யப்படும். சிறுமியாக இருந்த போதும் காலில் அணிந்திருந்த சிலம்பை திருமணத்தின் முன்பாக கழித்து விடுவதே இந்த நோன்பு. திருமணம் ஆன பெண்கள் தாய்மை அடையும் போது அவளுக்கான பொறுப்புகள் உயர்வடையும். தந்தை வழியில் இருந்து வீரத்தையும் தாய் வழியில் இருந்து அறத்தையும் பிள்ளைகள் பெற்றார்கள். எனவே தாயாக தரமுயரர்ந்த பெண் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அதிக பொறுப்பு மிகுந்த பகுதியை வகித்தாள். குடும்பத்தின் ஆண்கள் பொருளீட்டவும், போர் புரியவும் வீட்டை விட்டு அடிக்கடி விலகியிருக்க வேண்டியதால் பெண்களே வீட்டின் தலைமையாக செயல்பட்டனர். இதனாலேயே மனைவி, இல்லாள் முதலிய சொற்கள் தோற்றம் கொண்டன. இவற்றின் அர்த்தம் வீட்டின் தலைவி. இதற்கு ஒப்பாக யாரும் ஆண்களை மனைவன் என்றோ, இல்லான் என்றோ உரைப்பது இல்லை. இதில் இருந்தே குடும்ப அமைப்புகளில் பெண்களுக்கு இருந்த முதன்மை நிலை தெளிவாகத்தெரிகிறது. வீரமுடைய ஆண்களையும், பண்புடைய பெண்களையும் சமுதாயத்துக்கு வழங்குவதே குடும்பத்து பெண்களின் குறிக்கோளாக இருந்தது. 

போற்றுதலுக்குரிய மாதர்கள்

ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் பெண்ணியலாளர்களாய், கவிஞர்களாய், சாதனையாளர்களாய் நம்மில் பலரும் வியந்து பார்க்கக்கூடிய விதத்தில் வாழ்ந்து சென்ற சங்கத்து சாதனை பெண்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். சங்ககாலம் குறித்து நாம் அறியக்கிடைக்கும் பிரதான மூலம் இலக்கியங்கள் மட்டுமே. ஆகவே இந்த இலக்கியங்களை உண்டுபண்ணிய புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் உள்ளனர். ஏறக்குறைய 473 கடைச்சங்க புலவர்களிலே சுமார் 47 பேர் பெண்பாற் புலவர்கள். அதிலும் அதிகம் பாடல்களை பாடியவர் ஒளவையார். 

தமிழ்நாடு மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள ஒளவையின் சிலை
படஉதவி : timesnownews.com

சங்கப்பாடல்களிலே சுமார் 59 பாடல்களை பாடியுள்ள ஒளவையார் வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல ஒளவைகளில் ஒருவர் மாத்திரமே. மூதுரையும், நன்னெறியும் தந்த ஒளவை வேறு. சுந்தர மூர்த்தி நாயனாருடன் கயிலை சென்ற ஒளவை வேறு. ஒளவை ஒரு விறலி என்பது அவரது பாடல்களில் இருந்து அறியக்கூடிய ஒரு தகவல். விறலியர் எனப்படுவோர் சங்ககாலத்தில் வாழ்ந்த பெண் கவிபாடகர்கள். ஊரூராக சுற்றித்திருந்து தங்கள் கவிதைகளை மக்களிடமும், மன்னர்களிடமும் பாடி பொருளீட்டி வாழ்ந்தவர்கள். இம்மாதிரியான எளிய வாழ்க்கை இப்போது கனவில் கூட எட்டாத கனியே. ஒளவையின் வாழ்க்கையில் தமிழுக்கு என அவர் ஆற்றிய தொண்டுகள் பல. அவருடைய தமிழ் ஆர்வமும், கவித்திறனும் ஆய் நாட்டரசன் அதியமானின் நட்பை ஈட்டித்தந்தது. ஒளவை வெறுமனே விறலியாக மட்டும் வாழவில்லை. அதியமானுக்காக காஞ்சி வரைக்கும் தூதுவராகவும் கூட சென்றுள்ளார். வரலாற்றில் காஞ்சி மன்னனுக்கும், ஆய்நாட்டு அரசனுக்கும் எந்த போரும் நடந்ததாக குறிப்பில்லை. எனவே ஒளவையின் தூது வெற்றியே கண்டது. 

பாரி மகளிர் அங்கவை-சங்கவை, மலைக்குறத்தியான இளவெயினி, தன்னுடைய பிரிவுதுயரை கவிதையாக்கிய வெள்ளிவீதியார், காக்கைப்படானியார் நற்செல்லையார், நக்கண்ணையார், நட்பசலையார், காவற்பெண்டு, ஆடிமந்தி, மதுரை ஓலைக்கடையந்தார் என தமிழ் பாடிய பெண்கள் பலரும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளனர். இது தவிர ஆண் புலவர்கள் எழுதிய பாடல்கள் பலதும் கூட பெண்ணின் மனநிலை, தலைவிக்கு தோழிக்கும் இடையிலான உரையாடல் என பெண்சார்ந்தே அமைந்திருப்பது நேரடியாகவும், மறை முகமாகவும் பெண்கள் சங்க இலக்கியத்தில் ஏற்படுத்தி இருந்த தவிர்க்க முடியாத தாக்கத்தை காட்டுகிறது. மேலும் சங்ககாலத்தில் தோற்றம் கொண்ட ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டை காப்பியங்கள் என விவரிக்கப்படும் சிலப்பதிகாரம்-மணிமேகலை கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகிய பெண்களை மையம் கொண்டே உருவாகி உள்ளது. மேலும் குண்டலகேசி காவியமும், நீலகேசி என்ற சிறுகாப்பியமும் கூட பெண்களை முன்னணிப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் பெண்கள் போற்றப்பட்டும், வாழ்த்தப்பட்டும் இருப்பதை காணமுடியும். காலங்கள் பல கடந்தும் இவர்கள் விட்டுச்சென்ற படைப்புகளும், இவர்களின் பெயர்களும் இன்றும் பலரை உயிர்ப்புடன் இருக்க செய்கிறது என்பது நம் நினைவில் இருக்க வேண்டியது. 

எல்லாமே இனிதல்ல..

சங்ககாலம் பெண்களுக்கு பல முன்னுரிமைகளையும் சுதந்திரத்தையும் கொண்ட காலமாக விளங்கினாலும் அங்கும் பெண்களுக்கு பல அழுத்தங்களும் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்தன. 

படஉதவி : tamilnews.com

சங்ககாலத்தில் பெண்கள் காதல் செய்வதில் கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லாது இருப்பினும், பெண்கள் தங்கள் காதலை முடியுமான வரை ரகசியமாகவே பேணி வந்தனர். பெண்ணின் களவுக்காதல் வெளிப்படும் போது அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பெண்ணின் வாழ்க்கை குறித்தான அச்சமும், நெருக்கடியும் உண்டாகும். இவை பெரும்பாலும் பெண்ணின் தாயையும் பெண்ணையுமே அழுத்தத்துக்கு உள்ளாக்கும். ‘தனித்து ஓர் தேர்வந்து’ என்ற குறுந்தொகை பாடல் இதனை அழகாக வெளிப்படுத்தி உள்ளது. சங்ககாலத்தில் பெண்களுக்கு கற்பொழுக்கம் கட்டயமாக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும் ஆண்களுக்கு அவ்வாறு இருக்கவில்லை. ஆண்கள் பரத்தையரிடம் செல்லும் வழக்கம் அதிகமாக இருந்தது. தன் மனைவி கருவுற்றுள்ள போதும், மாதவிடாயில் உள்ள போதும் ஆண்கள் பரத்தையரிடம் செல்வதை யாரும் கட்டுப்படுத்துவது இல்லை. அதே போல ஒரு ஆண்மகனால் பரத்தை கருவுற்றாலும் அவளை அவனின் மனைவிக்கு நிகராக மதிக்கும் வழக்கம் இருக்கவில்லை. மனைவியோ பரத்தையோ பெண்களிடத்தில் ஆண்மகனின் நிலையில்லாத மனநிலையையே இது காட்டுகிறது. இது உள்ள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களுக்கு பல அழுத்தத்தை கொடுத்துள்ளது. 

திருமணமான பெண் கணவன் இறந்த பின்னர் கைம்பெண் நோன்பு இருப்பது கட்டயமாக்கப்பட்டது. தலையை மழித்துக்கொள்வதும், மங்கள நிகழ்வுகளில் இருந்து தம்மை விலக்கிக்கொள்வதும், நெய் முதலிய பண்டங்களை உண்பதை தவிர்ப்பதும் என பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. பூதப் பாண்டியன் பெருங்கடுக்கோ பாடிய “காழ் பேர் நல்விளர்” என்ற புறப்பாடல் இதனை திட்டவட்டமாக விவரிக்கிறது. மேலும் இந்த பாடலில் இவ்வாறான கட்டுப்படுகளுடன் வாழ்வதை காட்டிலும் பெண்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கைக்கொள்வது சிறப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

படஉதவி : youtube.com

இதிலிருந்து பெண்கள் உடன்கட்டை ஏறும் மரபு சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக இருந்தமையே விளங்குகிறது. மேலும் காலப்போக்கில் கல்வியும் கேள்வியும் கற்புடைய மாதருக்கு உரியது அல்ல என்ற நிலை உண்டானது. அதனை சிலப்பதிகாரத்தில் காண முடியும். இளங்கோவடிகள் கண்ணகி கற்றறிந்த மங்கை என்று எங்கும் கூறவில்லை. ஆனால் மாதவி கோவலனுக்கு கடிதம் வரைவதாய் ஒரு காட்சியை வடித்திருப்பார். இதுவே குடும்பத்து பெண்கள் கல்விகற்பதை சமூகம் விரும்பாத நிலை தோற்றம் கொள்வதை காட்டுகிறது. இதன் தொடர் விளைவாகவே கடந்த இரு நூற்றாண்டு வரை கல்வி என்பது நம் தமிழ் சமூகத்துக்கு பெண்களுக்கு எட்டாகணியாகவே இருந்து வந்தமைக்கு அடிப்படை. 

முடிவாக

சங்ககாலமோ, சமகாலமோ பெண்கள் எப்போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காட்ட தங்கியது இல்லை என்பதே உண்மை. கல்வி, விளையாட்டு, போர் என தான் விரும்பும் துறைகளில் எல்லாம் மின்னிய பெண்கள் ஏராளம். சங்ககாலத்து பெண்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு, அங்கு அவர்களுக்கு உரிய வரங்களும் சாபங்களும் இருந்தன. இந்த காலத்து பெண்களுக்கு தங்களுக்கே உரிய வரங்களும் சாபங்களும் உள்ளன. குறைகளை தவிர்த்து நிறைவை மட்டுமே நோக்குவோமானால் சங்கத்து பெண்கள் போல இன்று நம் பெண்சமூகத்துக்கு உரியளவு சுதந்திரமும், குடும்பங்களில் அதிக முக்கியத்துவமும் வழங்குவது அவசியமாகும். இன்றைய கல்வியும், அன்றைய சுதந்திரமும் பெண்களுக்கு வாய்க்குமெனில் நிச்சயம் நம் சமூகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். 

Related Articles