புதிய இறைவரிச்சட்டமும், குழறுபடிகளும்

தற்போதைய இலங்கை அரசானது, வரி செலுத்துகையில் எளிமைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், வரி செலுத்தாமல் இருப்போரை அடையாளம் காண்பதற்கும் புதிய இறைவரிச் சட்டமொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. ஆயினும், தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவிவரும் சர்வதேச நாணய நிதியத்தின் விற்பன்னர்களின் பரிந்துரையின் பேரில் அல்லது கட்டாயத்தின் பேரில்தான் இந்தச் சட்டமானது அமுலுக்கு வரவிருக்கிறது என்பது பலரும் அறிந்திராத உண்மையாக இருக்கிறது.

இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கடன் உதவிகளை வழங்கிவரும் சர்வதேச நாணயநிதியமானது புதிய இறைவரிச் சட்டத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்தியிருந்ததுடன், அதன் அமுலாக்கலின் பின்பே உறுதிமொழி வழங்கப்பட்ட மிகுதிக் கடன்தொகை வழங்கப்படக்கூடும் என்கிறவகையில் அறிவிப்புக்களையும் வெளியிட்டு வந்தது. எனவே, சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நிதியத்தின் விற்பன்னர்கள் உள்ளனர். நிதியத்தில் அங்கத்துவமாகவுள்ள நாடான கானா நாட்டின் மீது தம்மால் அமுலாக்கப்பட்ட இறைவரி சட்டங்களுக்கு ஒப்பான ஒன்றை இலங்கைக்கு பரிந்துரையும் செய்ய அதனையே, தற்போது இலங்கை அரசு நடைமுறைக்கு கொண்டுவர பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவதும், நிதியத்தை திருப்திபடுத்தி நமக்கான நிதியை பெறுவதும் தவறில்லை. ஆனால், அவ்வாறு அறிமுகம் செய்கின்ற வரிச் சட்டங்களானது எவ்வளவு தூரம் நமது நாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கும்? தற்போதுள்ள சட்டத்தை விட வினைத்திறனானதாவென எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளுவதும் அவசியமாகிறது.

இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கடன் உதவிகளை வழங்கிவரும் சர்வதேச நாணயநிதியமானது புதிய இறைவரிச் சட்டத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்தியிருந்ததுடன், அதன் அமுலாக்கலின் பின்பே உறுதிமொழி வழங்கப்பட்ட மிகுதிக் கடன்தொகை வழங்கப்படக்கூடும் என்கிறவகையில் அறிவிப்புக்களையும் வெளியிட்டு வந்தது. படம் – businesstimes.com.sg

ஆனால், கணக்காளர்கள் மத்தியிலும், அக்கறையுடைய தரப்பினர் மத்தியிலும் இலங்கை அரசு ஒரு புறக்கணிப்பு தன்மையுடன் இந்த சட்டத்தை அமுலாக்க விளைவது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

தற்சமயம் நடைமுறையில் உள்ள இலங்கையின் இறைவரிச் சட்டம் கூட காலத்துக்குகாலம் மெருகேற்றப்பட்டுதான் இந்த நிலையினை அடைந்திருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி நடைமுறையானது 1932ம் ஆண்டிலேயே அறிமுகம் செயப்பட்டது. இந்த வரியினை நிர்வகிக்க குறித்த ஆண்டிலேயே இலங்கையில் வருமானவரித் திணைக்களம் உருவாக்கபட்டதும் குறிப்பிடத்தக்கது. அதற்க்கு பின்னதாக ஆதனவரி, முத்திரை வரி என பல்வேறு வரிகளும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வந்ததுடன், அவற்றினை எல்லாம் நிர்வகிக்கும் ஒரு அலகாக வருமானவரித் திணைக்களமானது இறைவரித் திணைக்களமென பெயர் மாற்றம் பெற்றது. அதற்கு பின்னதாக, 1958ம் ஆண்டு கல்டோர் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் பிரகாரம், மேலதிக வரிகள் சட்டத்தில் உள்வாங்கப்பட்டதுடன் இறைவரித் திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் 1974ல் இறைவரித் திணைக்களச் செயற்பாடுகள் மற்றும் வரிச் சேவைகள் மீளமைக்கப்பட்டதுடன், அதன் பின்னதாக தேவை ஏற்படுகின்ற போதிலும், வரவு-செலவு திட்டத்திலும் வரிமுறைமையில் மாற்றங்கள் செய்ப்பட்டே வருகிறது. அண்மையில்தான் RAMIS  என்கிற முறமையினூடாக நவீனமயப்படுத்தப் பட்டிருந்தது. இந்தநிலையில், முழுமையாக புதியவொரு இறைவரிச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது நடைமுறை சிக்கலானதும், சர்ச்சைக்குரியதாகவும் மாறியிருக்கிறது.

புதிய இறைவரிச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் இலங்கையின் தற்போதைய இறைவரிச் சட்டத்தை மேலும் வினைத்திறன் வாய்ந்ததாக மாற்றும் திட்டங்களையும், வரி செலுத்தாதோரை கண்டறியக்கூடிய முறைமைகளையும் கொண்டுள்ளபோதிலும், இன்னமும் வினைத்திறன் வாய்ந்ததாக மாற்றப்படவேண்டிய விவாதத்துக்குரிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை என்னவென்றும் அனைவரும் அறிந்திருக்கவேண்டியது அவசியமே! காரணம், நாளை இந்த சட்டம் அமுலாக்கபட்டால் நீங்களோ உங்கள் குடும்பத்தில் ஒருவரோ இதனால் பாதிக்கப்படும்போது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீங்களும் பாதிக்கப்படக்கூடும்.

புதிய இறைவரிச் சட்டத்தில் தெளிவற்ற தன்மையைக் கொண்டுள்ள சில விடயங்கள் வருமாறு –

  • நடைமுறையில் உள்ள இறைவரிச் சட்டத்தின் பிரகாரம், வரி செலுத்துகையில் ஏதேனும் தவறுகள் இருப்பின், இறைவரி திணைக்களம் தனிநபரையோ அல்லது நிறுவனத்தின் அதிகாரிகளையோ மதிப்பீடு செய்வதற்கு தகுந்த காரணங்களை வழங்கி அழைக்க முடியும் அல்லது வழக்குகளை தொடர முடியும் எனவுள்ளது. ஆனால், புதிதாக வரவுள்ள சட்டத்தில் தகுந்த காரணங்களை வழங்காமலே முறைப்பாட்டையோ அல்லது தண்டப்பணத்தினையோ விதிக்க கூடியதாக உள்ளது. இது, மேன்முறையீடு செய்ய விரும்புபவர்கள் உட்பட அனைவருக்குமே எத்தகைய காரணத்துக்காக இது மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியாமலே போகக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். குறிப்பாக, காரணமின்றி இறைவரி திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேன்முறையீடு உட்பட வழக்குகளை தொடுக்க முடியாத நிலை உள்ளதால், இது வரி செலுத்துவோர் பக்கத்தின் பாதகமாக பார்க்கப்படுகிறது.
  • தற்போதைய இறைவரி சட்டத்தின் பிரகாரம் வருமானவரி தொடர்பிலான மதிப்பீட்டுக்கான கால அளவு சமர்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 18 மாதங்களாக உள்ளது. ஆனால், இது புதிய சட்டத்தின் பிரகாரம் 4 வருடங்களாக மாற்றப்படுள்ளது. இறைவரித் திணைக்கள செயற்பாடுகளை நவீனமயப்படுத்துவதில் தற்போதைய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதன் பிரகாரம், தற்போது நடைமுறையில் உள்ள 18 மாதகால அளவீடுகளை குறைக்கவேண்டுமே தவிர, இவ்வாறு 4 வருடங்களுக்கு அதிகரிப்பது என்பது கேலிக்குரியதாக இருக்கிறது.
  • தற்போதுள்ள இறைவரிச் சட்டம் கூட மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் பிரகாரம், பெரும்பாலான நிறுவனங்களும், தனிநபர்களும் விதிக்கப்பட்ட கால எல்லைக்குள் வரிசார்ந்த விடயங்களை சமர்ப்பிக்கிறார்கள். கால எல்லையை அதிகரிப்பது என்பது, தவறுகளுக்கு அதிக இடம்கொடுப்பதுடன், காலளவை அதிகரித்து செல்லும்போது பழைய தரவுகளை விசாரிப்பதென்பதும் கடினமாகிக்கொண்டே செல்லும். நம்மைவிட பெரிய நாடான இந்தியா கூட மதிப்பீட்டுக்கான கால எல்லையாக ஒரு வருடத்தையே கொண்டுள்ள நிலையில், நாம் நான்கு வருடங்களை நோக்கி செல்வது வேடிக்கையானதே!
  • நடைமுறையில் உள்ள இறைவரிச் சட்டத்தின் பிரகாரம், தனிநபர் ஒருவர் வழங்கப்பட்ட கால எல்லைக்குள் மேன்முறையீட்டை செய்யாதபோதிலும், மதிப்பீட்டுக்கு (assessment) எதிராக ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனால், இது புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் சிறிய வரி செலுத்துவோரும் பாதிப்படையக்கூடும்.
  • புதிய இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் நிறுவனங்களுக்கு அல்லது தனிநபர்களுக்காக ஆண்டு வருமானங்களை தயாரித்து சமர்ப்பிக்கும்போது, அதற்குப் பொறுப்பான கணக்கீட்டாளர் விபரமும், கையொப்பமும் உள்ளடக்கப்பட வேண்டும் என குறிப்ப்பிடப்படுள்ளது. ஆனாலும், தனிநபர் கணக்கீடானது அவரவர் வழங்கும் தகவலுக்கு ஏற்பவே தயாரிக்கப்படுகிறது. எனவே, கணக்காளர்கள் தரவுகளில் உள்ள தவறுகளுக்கு பொறுப்பாக முடியாது. இதுவும் விவாதத்துக்குரியதாகவே புதிய சட்டத்தில் உள்ளது.
  • புதிய சட்டத்தின் பிரகாரம், வருமானத்தினை குறித்தகாலத்திற்குள் தாக்கல் செய்யாதுவிடின், அதற்கான தண்டப்பணமாக சுமார் 400,000/- அறவிடப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், தற்போது அந்ததொகை 50,000/- மாகவே உள்ளது. ஆனாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தண்டப்பணம் அறவிடப்படுவதில்லை. இந்த அதிகரிப்பானது நிச்சயம் சிறு வணிக நிறுவனங்களையும், சிறு வருமானவரி செலுத்துபவர்களையும் பாதிக்கவே செய்யும்.
  • இறைவரித் திணைக்களத்துக்கு எந்த சந்தர்ப்பத்திலும் வழங்கவேண்டிய ஏதேனும் தகவலை தனிநபர் அல்லது நிறுவனம் வழங்கத் தவறியிருப்பின் அவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வரை தண்டப்பணத்தினை விதிக்கக் கூடியதாக அமையும். இதன்போது, மிகச்சிறிய வருமானவரி செலுத்துவோர் ஏதேனும் தகவலை வழங்காதவிடத்து அவரும் ஒரு மில்லியன் தண்டப்பண விதிமுறைக்கு உள்ளாவார்கள். எனவே, தண்டப்பண அளவானது வரி செலுத்துவோரின் தன்மைக்கு ஏற்றவகையில் அமைய வேண்டும்.
  • மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) இந்த புதிய இறைவரி அமுலாக்கலுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனாலும், இந்த வரி அறிமுகப்படுத்தப் படும்போதே, தன்னகத்தே அதீத தெளிவின்மையைக் கொண்டுள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மூலதன ஆதாய வரி 10% மாக அறவிடப்படுகிறது. ஆனால், இந்த வரியானது நபரொருவர் அன்பளிப்பாக சொத்தொன்றை கையளிக்கும்போதும் கூட இந்த வரியினை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. நமது வழக்கங்களின் பிரகாரம், வயது முதிர்ந்தவர்கள் தமது சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கோ அல்லது அடுத்த சந்ததிக்கோ வழங்குவது வழமையாக உள்ளது. ஆனாலும், இந்த வரியின் காரணமாக முதியவர்கள் இந்த சொத்தினை வழங்குவதற்கு வரியாக பெரிய தொகையினை செலுத்தவேண்டி ஏற்படலாம். இது அவர்களது வருமான பரம்பலை பாதிக்கக்கூடும். எனவே, இதுபோன்ற விடயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
  • புதிய இறைவரிச் சட்டமானது எந்தவொருவிடத்திலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (foreign direct investment) தொடர்பிலும், அவற்றுக்கான வரிமூலங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. எதிர்வரும் காலத்தில் இலங்கையில் கணிசமான அளவு பங்களிப்பினை அந்நிய முதலீடுகளே வழங்க உள்ளது. இந்த நிலையில், அவற்றுக்கான வரிமற்றும் வரிச் சலுகைகள் தொடர்பில் வெளிப்படுத்தவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

மேற்கூறிய விடயங்கள்போல இன்னும் பல்வேறு விடயங்கள் போதிய தெளிவற்றதன்மையைக் கொண்டதாக இந்த புதியசட்டம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவும், புதிய இறைவரிச் சட்டங்களுக்கு எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. புதிய சட்டங்கள் என்பது வரிசெலுத்துவோருக்கு ஒரு தண்டனையாக மாறிவிடக் கூடாது. மாறாக, அவர்களது ஒவ்வொரு உழைப்புக்கும் ஏற்றவகையில் வரியானது அமையவேண்டும். இதன்போதுதான், அமுலாக்கப்பட்ட வரிகளும் வினைத்திறன் வாயந்ததாக அமையும். இல்லையெனில், வரி ஏய்ப்பினை தவிர்க்க முடியாத சூழ்நிலையே ஏற்படும்.

Related Articles