இது டொலர்களினாலான உலகம்!

‘‘அமெரிக்கா டொலர்களை உற்பத்தி செய்கிறது, உலகின் பிற பகுதியினர் அந்த டொலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்”- என டொலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, கிழக்குக் கரிபியன் பகுதிகள், ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர், புருணை, கிழக்குத் திமோர், எக்குவடோர், சூரினாம், எல் சல்வடோர், பனாமா, மற்றும் பெலிசு உற்பட  20  நாடுகள் தங்களின்   நாணய அலகாகப் டொலரினை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றபோதிலும், டொலர் என்றால் அமெரிக்காவின் டொலர்தான்  சர்வதேச நாணயமாக  செல்வாக்குடன் இருக்கிறது.

அமெரிக்க டொலர் மட்டும் எப்படி இவ்வாறு உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை பார்பதற்குமுன், இந்த டொலர் என்கிற  பெயர் எப்படி வந்தது ?தற்போதைய செக் குடியரசின் ‘ஜோசிம்ஸ்தல்’ (Joachimsthal ) என்ற நகரத்தில் 16ம் நூற்றாண்டில் வெள்ளிச் சுரங்கம் ஓன்று தோண்டப்பட்டு , அகழ்ந்தெடுக்கப்பட்ட  வெள்ளியில் இருந்து வெள்ளி நாணயம் வார்க்கப்பட்டு அந்நாணயத்திற்கு  ஜோக்கிம்ஸ்தாலர்  (Joachimsthaler)  என்று பெயரிடப்பட்டதாம் .அப்போதைய காலகட்டத்தில் அந்நகரம் ஜெர்மனியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தமையால் ,   ஜெர்மனிய  மொழியில் ‘தால்’ (thal) என்பதற்குப் “பள்ளத்தாக்கு” என்கிற அர்தத்தினை கொடுக்கும்வகையில்  ஜோக்கிம்ஸ்தாலர் “தாலெர்”  (Thaler/ Taler) எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டதாம்.

இப்பெயர் பின்னர் வேறு மொழிகளுக்கும் பரவியபோது ஒவ்வொரு மொழிகளுக்கும் ஏற்ப ரிக்ஸ்டாலெர், டொலரி, டொலோரோ என மருவி, பின்னர்  ஆங்கிலத்தில்  டொலர்  என மாறியதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த அமேரிக்கா, அதுவரை தான் பயன்படுத்திவந்த நாணய அலகான (Pounds) பவுண்டினை தொடர விரும்பாமையால் ,  ‘டேலர்’ என்ற சொல்லை, “டொலர் ‘ என உச்சரித்த சிலரின் முன்மொழிவால், டொலர்  என்பதை தனது நாணயத்தின் பெயராக வைத்துக் கொண்டது. ஆங்கில ‘யு’, மற்றும் ‘எஸ்’ யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்பதன் சுருக்கமான  “யு எஸ்” என்பதையே தனது டொலரின் குறியீடாக மாற்றிக்கொண்டது .

சர்வதேச தர நிர்ணய பட்டியலின்படி உலகளவில் 185 நாணயங்கள் உள்ளபோதிலும் , அவற்றுள் சில நாணயங்கள் உள்நாட்டுக்குள் மட்டுமே வலுவானதாக இருக்கும். ஆனால் பொருளாதார அடிப்படையில் உலகெங்கிலும் சுமார் 85 % வர்த்தகத்தில் டொலரின் ஆதிக்கம் இருப்பதுடன் 39 % கடன்கள் டொலர்களிலேயே வழங்கப்படுகின்றன. ஆகவே வெளிநாட்டு வங்கிகளுக்கு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு டொலர்கள் தேவை. அதுமட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் அந்நிய செலவாணிகளில் 60 % டொலர்களாகவே காணப்படும். உலகமே இப்படி டொலரில் வர்த்தகம் செய்வதுதான் அமெரிக்க பொருளாதாரத்தின் பலமாக உள்ளதெனலாம் . இதனாலேயே அமேரிக்கா ஒரு நாடுமீது பொருளாதார தடையினை விதித்தால் அந்நாடு கடும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனவாம்.

  உண்மையில் இரண்டாம் உலகப்போரின் முடிவுவரை உலகின் முதன்மையான பரிமாற்று நாணயமாக இருந்தது என்னவோ பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்தான். எனினும் அக்காலகட்டத்தில் பிரித்தானியா தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை அவர்களது காலனித்துவ நாடுகளுக்குக்கூட கொடுக்காது, தமது நாட்டுக்குள்ளேயே வைத்திருந்தமை மற்றும் ஏராளமான நாடுகள் தங்களத்துன் பொருளாதார தேவைக்காக ஐரோப்பாவிலேயே தங்கியிருந்தமையினால், வெள்ளி நாணயங்கள் மீண்டும் மீண்டும் ஐரோப்பாவுக்குள்ளேயே கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்த சமயத்திலேயே   பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்காவுக்கான டொலர் நாணயங்களை காகித நோட்டுக்களாக உருவாக்க காரணமாக இருந்துள்ளார். எனினும் அப்போது அமெரிக்கா பிரித்தானியாவின் காலனி நாடாக இருந்தமையால் காகித நாணயங்கள் செல்லுபடியாக மாட்டாது என பிரித்தானியாவினால்  தடைவிதிக்கப்பட்டது. 

டொலர் நாணயங்களை காகித நோட்டுக்களாக உருவாக்க காரணமாக இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின்பட உதவி:www.americanacorner.com

அமெரிக்க டொலருக்கு மதிப்பு பெரும்பாலும் குறைவதே இல்லை. மற்ற நாடுகளின் மதிப்புப் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையாகவோ  அல்லது உயர்ந்து கொண்டோ செல்லக்கூடியது.நாடுகள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக அமெரிக்க டாலரை கையிருப்பில் வைத்துக்கொள்கின்றன. அமெரிக்க டொலரை பொதுவான கரன்சியாகப் பலரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்துவதும் இதன் மதிப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கியக்காரணம். இணையத்தில் சேவையை, பொருளைப் பெற பெரும்பாலான வெளிநாட்டுத் தளங்கள் அமெரிக்க டொலரையே பொதுவான கரன்சியாகப் பயன்படுத்துகின்றன. தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையிலேயே அமெரிக்க டொலரின் மதிப்பும் கணிக்கப்படுகின்றது என்பதாலும் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கையான ஒரு நாட்டின் நாணயமாக இருப்பதாலும் டொலர் சர்வதேச நாணயமாக மாறியுள்ளது என்றாலும் மிகையில்லை .

மேற்கூறிய காரணங்களால் டொலரின் முக்கியத்துவம், தேவை அதிகம் என்றாலும், உலகளவில் அதிகமாக டாலர் பயன்படுத்தப்படுவது கச்சா எண்ணெய் தேவைக்காகவே. இவ்வாறு கச்சா எண்ணெய் வாங்க அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க டொலர் தேவைப்படுவதால், டொலருக்குத் தேவை இருந்து கொண்டே உள்ளது. எனவே, டொலருக்கான மதிப்பு உயர்வாகவே உள்ளது.அமெரிக்க அதிபர்  Franklin D. Roosevelt   மற்றும்  சவூதி அரேபிய மன்னர் Abd al-Aziz இருவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டதாக கூறப்படும் ஓர் உடன்படிக்கையின்படி(பெப்ரவரி  14, 1945) கச்சா எண்ணெயினை இந்த உலகம் முழுவதற்கும் விநியோகிப்பதற்கு அமெரிக்க டொலரினையே பரிமாற்று நாணயமாக பயன்படுத்தப்படவேண்டும் . மத்திய கிழக்கு நாடுகள் பெரிதாக வளர்ச்சியடையாத அக்காலகட்டத்தில் கச்சா எண்ணெயினை அகழ்ந்தெடுப்பதற்காக சவுதியில் முதலீடு செய்த அமெரிக்க நிறுவனத்தினை அடிப்படையாகக்கொண்டு சவூதி அரேபியாவின் பல்வேறு உற்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்துகொடுத்ததன்மூலம் அதற்கான பிரதியீடாக பெட்ரோல் அமெரிக்க டொலரில் விற்கப்படவேண்டும் என்கிற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அதிபர்  Franklin D. Roosevelt   மற்றும்  சவூதி அரேபிய மன்னர் Abd al-Aziz இருவருக்கும் இடையே 1945ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்திப்பு: பட உதவி: ambridgeforecast.wordpress.com

டொலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டொலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகின்றது.

Related Articles