Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

2018 வரவு-செலவு திட்டமும், எதிர்பார்க்கைகளும்

ஒவ்வொரு வருடத்தினதும் இறுதி நாட்களில் அடுத்துவரும் ஆண்டு எவ்வாறு இருக்கப் போகின்றது? எவ்வாறு நம் வரவு-செலவுகளைத் திட்டமிடப் போகின்றோம் என நமக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கும். ஒரு வீட்டுக்கே இந்த நிலமையென்றால், ஒரு நாட்டைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இலங்கை போன்ற நாடொன்று தனது அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்மொழியும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் எவை? சமாளிக்க வேண்டிய அழுத்த சக்திகள் யார்? நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவை? என ஏராளமான அழுத்தங்களையும், எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டியதாகவே இருக்கும். அப்பேர்ப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் உள்ளதா? என ஒவ்வொரு சாமானியரும் எதிர்பார்ப்பது தவறில்லையே?

2018ம் ஆண்டுக்காக அறிவிக்கப்படவுள்ள வரவு-செலவு திட்டத்தின் முதன்மையான நோக்கமே, “வரவு-செலவு திட்டத்தின் மூலமாக நிதிப் பற்றாக்குறையை குறைவடைய செய்வதுடன், இலங்கையின் வருமான மூலங்களை அதிகரித்து அதன் ஊடாக, சமூக மற்றும் பொருளாதாரம்சார் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்தலாகும்”.

இந்த வரவு-செலவு திட்டம் இலங்கையில் தேர்தலொன்றுக்கு அண்மித்த காலப்பகுதியில் வரவிருப்பதால், வெறுமனே மக்களுக்கு வழங்கும் கானல்நீர் வாக்குறுதிகள் போலல்லாமல், உண்மையாகவே இலங்கையின் அபிவிருத்திக்கு உகந்ததாக அமையுமெனின், மேற்கூறிய நோக்கம் அல்லது இலக்கு பாராட்டக்கூடியதே!

நிதிப் பற்றாக்குறையை குறைப்பது தொடர்பில் அரசு எடுத்துள்ள சில முன்னேற்பாடுகள் இந்த வரவு-செலவு திட்டம் தனியே கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மாத்திரம் கொண்டிருக்காது என்கிற சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. வரி வருமானத்தை அதிகரித்தமை, புதிய இறைவரி சட்டத்தை அமுலாக்கியமை, நிதியாண்டுக்கான பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 5.4% த்திலிருந்து குறைக்க எடுத்த முன்னேற்பாடுகள் என்பவை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும்.

ஆனாலும், அடுத்துவரும் 2018ம் ஆண்டில் இலங்கை முக்கியமான தேர்தல் களங்களை சந்திக்கவிருப்பதால், இதனையொட்டியதாக மக்களுக்கு வழங்கப்படக்கூடிய மானியங்களும், சலுகைகளும் எதிர்பாராத செலவினங்களை அதிகரிக்கவோ அல்லது நிதிப் பற்றாகுறையை மேலும் சுமையுள்ளதாக செய்யக்கூடுமோ என்கிற ஐயமும் எழாமலில்லை. இவற்றுக்கு மேலதிகமாக, வருடம்தோறும் நட்டம் உழைக்கும் அரச ஸ்தாபனங்களுக்கு இறைக்கப்படும் நிதியின் அளவு இம்முறையும் அதிகரிக்கப்படும் என்பது மேலதிக கவலைக்குரிய விடயமாகும்.

இதுவரை வெளியான நம்பத்தகுந்த கணிப்பீடுகளின் பிரகாரம், 2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வாகனங்களுக்கான வரி விதிப்பிலும், அதன் விலையிலும் மாற்றங்களைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான விலையில் பெருமளவு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நம்பப்படுகிறது. அத்துடன், இலங்கையில் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கத்தக்கவகையிலான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதுடன், ஒரு மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய வகையிலான சலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்க உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பின்வரும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும், நன்கொடைகள் தொடர்பிலுமான தரவுகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறன. அவை –

அரச மொத்த செலவினம் – 3,982 Billion

மீண்டெழும் செலவினம் – 1,308.9 Billion

முதலீட்டு செலவினம் – 668 Billion

வெளிநாட்டு நன்கொடை மூலமான எதிர்பார்க்கை வருமானம் – 1,275 Billion

எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கடன் நிதி – 1,813 Billion

இவை அனைத்துமே, வரவு-செலவு திட்டத்தில் வருமானங்களும், செலவினங்களும் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்பதற்கான சிறு தரவுகளே ஆகும். உண்மையில், இலங்கையின் இனிவரும் ஆண்டுகளிலான வரவு-செலவு திட்டம் வினைத்திறன் வாய்ந்ததாக அமைவதற்கு வரி முறைமையில் சீர்படுத்தலை கொண்டுவருவதுடன், செலவுகளை வினைத்திறன் வாய்ந்ததாக மாற்றி நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனையே, இந்தவருடம் இலங்கையின் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் வலியுறுத்தி இருக்கிறது.

இலங்கையின் 2017ம் ஆண்டின் பொருளாதாரமானது அடையவேண்டிய இலக்குகளில் உள்ள உண்மையான தடைகளை வெளிக்காட்டி இருக்கிறது எனச் சொல்லலாம். கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் திட்டமிட்டதன் பிரகாரம் அபிவிருத்திகளை அடையமுடியாமைக்கு பிரதான காரணங்களில் ஒன்று பலவீனமாகவுள்ள பொது நிதி முகாமைத்துவம் ஆகும். பலவீனப்படுத்தப்பட்ட அல்லது பலவீனமான பொது நிதி  முகாமைத்துவத்தின் விளைவாக இலங்கையினால் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எட்ட முடியவில்லை. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வினைத்திறன் முதல் முதலீடு வரை பாதிப்பை தந்திருந்தது. எனவே, 2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் இவற்றினை எல்லாம் படிப்பினையாகக் கொண்டு பின்வரும் திட்டங்களை உள்ளடக்க வேண்டியது அவசியமாகிறது.

  • ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரித்தல்,
  • தொழிலாளர் செயல்திறனை மேம்படுத்த உதவுதல்,
  • மாற்று வருமானங்களை தரும் வழிகளுக்கு நிதிச் சலுகை வழங்கல்,
  • சுகாதார நலன்களுக்கான நிதிமுறையை சீர்படுத்தல்,
  • வளங்களை திறனாக பயன்படுதத்துவத்துடன் வறுமையை குறைக்க வழி செய்தல்.

2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு நிதிசார் சவால் இலங்கையின் “பொதுப்படுகடன்” ஆகும். இலங்ககையின் அதிகரித்து செல்லும் சென்மதி நிலுவை பற்றாக்குறையானது இலங்கையின் கடன் பெறுநிலையை அதிகரிப்பதுடன், அதுசார்ந்து பணவீக்க அழுத்தத்தை பொருளாதாரத்தில் உருவாக்குகிறது. இது இலங்கையின் வருமானத்தில் பொது செலவீனங்களுக்காக கொடுக்கப்படும் முன்னுரிமையை குறைத்து, கடனை செலுத்த வருமானத்தை பயன்படுத்த நிர்ப்பந்திக்கிறது. இதன்விளைவாக, அபிவிருத்தி செயல்திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவோ அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியாத நிலையினையோ ஏற்படுத்துகிறது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முதல் தற்போதுள்ள நிதி அமைச்சர் வரை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்ட விடயங்களிலொன்று, இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் நிதி ஒருங்கிணைப்பு செயல்பாட்டை மேற்கொள்ளுவது கடினமான ஒன்றாகும் என்பதையாகும். காரணம், கடந்தகாலங்களில் பெற்ற பொதுப்படுகடன் கழுத்தை இறுக்கும் நிலையில், அவ்வாறு கடன் பெற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்ட செயல்திட்டங்கள் அனைத்தும் வினைத்திறன் அற்றதாக அல்லது தோல்வி அடைந்ததாக உள்ளமை மேலதிக பளுவை வழங்குகிறது. இது நிதி ஒருங்கிணைப்பை செய்வதில் சிக்கல் நிலைமையை தொடர்ந்தும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.

2020ம் ஆண்டளவில் இலங்கையின் நிதிப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 3.5%மாக குறைக்க வேண்டுமெனின், அதற்கான முன்னெடுப்புக்களை இந்த அரசு 2018ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டியது அவசியமாகிறது. அப்படியாயின், மக்களுக்கு வீண் வாக்குறுதிகளை வழங்கும் வழமையான வரவு-செலவு திட்டமாக இது அமையாமல், சீரான பொருளாதார வளர்ச்சியுடன், பொதுப்படுகடனை குறைவடையச் செய்யத்தக்கவகையில் வரவு-செலவு திட்டத்தை வடிவமைக்க வேண்டியது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இம்முறை வரவு-செலவு திட்டம் நாட்டின் வருமானத்தை அதிரிக்கும் பொறிமுறைகளை தன்னகத்தே கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அதேபோல, அவ்வாறு அதிகரிக்கப்பட்ட வருமானமானது தனியே கடன்களையோ, கடனுக்கான வட்டியை செலுத்தவோ முழுமையாக பயன்படுத்தாமல், கல்வித்துறை , சுகாதாரத்துறை உட்பட வளர்ச்சி அவசியமான துறைகளுக்கு வினைத்திறன் வாய்ந்த நிதிப் பங்கீட்டை கொண்டதாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

Related Articles