தானியக் களஞ்சியமான சர்வதேச விமான நிலையம்

இந்த உலகத்திலேயே ஒரு விமான நிலையம், தானியக் களஞ்சியமாக மாற்றப்பட்டதென்றால், அது மத்தள சர்வதேச விமான நிலையமாகத்தான் இருக்க முடியும். எந்தவொரு விமான நிலையத்திலும் விமானமொன்று தரையிறங்குவது ஒரு பெரிய விடயமல்ல. வெகு சாதாரண விடயம் தான். ஆனால், மத்தள விமான நிலையத்தில் ஒரு விமானம் தரை இறங்குமானால் அது செய்தியில் காண்பிக்கப்படும் அளவுக்கு வெகு அபூர்வமானதாக பேசப்பட்டது. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்த விடயத்தின் உட்புறத்தில் அரசியற் பூசல்கள் இருந்த போதும், நாட்டின் கடைக்கோடியில் பின் தங்கிய பகுதியில், உள்ள சர்வதேச விமான நிலையம் என்ற வகையில் மத்தள விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகின்றது.

மத்தள விமான நிலைய அமைவிடம்

அம்பாந்தோட்டை நகரத்திலிருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்த மத்தளை சர்வதேச விமான நிலையம், இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆகும். இலங்கையின் பிரதான விமான நிலையமான பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அதிகரித்துவரும் நெருக்கடி நிலைமை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு, மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உணரப்பட்டது. அத்துடன் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்த காலப்பகுதியான அந்த நாட்களில், சுற்றுலாத்துறையை மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் காணப்பட்டது.

புதிய விமான நிலையம் அமைய வேண்டிய பகுதியாக அம்பாந்தோட்டை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டது. சுர்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அறுகங்குடா மற்றும் யால தேசியப் பூங்கா ஆகியவை அதற்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. மேலும், அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஷவின் சொந்த ஊர் என்ற வகையிலும் அம்பாந்தோட்டைக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

மத்தள எப்படி தெரிவாகியது?

இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்பட்டு வந்த வீரவில விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அபிவிருத்தி செய்ய முடியுமா என்றும் விற்பன்னர்கள் ஆலோசித்தனர். எனினும், அது அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால், சர்வதேச விமான நிலையமாக உருமாற்றம் பெறுமிடத்து பல்வேறு உயிரினங்களின் புகலிடங்கள் அழிக்கப்படும் என்பதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இறுதியில் மத்தள தெரிவாகியது.

209 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி

கட்டுமானப் பணிகள் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பித்துள்ளன. 209 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இந்த நிர்மாணச் செயற்றிட்டத்திற்குச் செலவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிர்மாணம் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளன. அதே ஆண்டின் அக்டோபர் மாதம் 16 ஆம் திகதியன்று Hawker Beechcraft B200 King Air என்று அழைக்கப்படும் விமானம் முதல் தடவையாக மத்தள விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது. இது பாகிஸ்தானின் சிவில் விமானச்சேவை அதிகாரசபைக்குச் சொந்தமானது. இது ஒரு சோதனைப் பறப்பாக அமைந்தது. இவ்வாறான சோதனைப்பறப்புகள் தொடர்ந்து அடுத்த 8 நாட்களுக்கு இடம்பெற்றன. விமானச்சேவைக் கட்டுப்பாட்டுச் சாதனங்களின் செயற்பாடுகளும் சோதனை செய்யப்பட்டன.

மத்தள விமான நிலையம் திறப்பு விழாவின் போது

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று மத்தள சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக, அப்போதைய சிவில் விமானச்சேவைக்கான அமைச்சராக இருந்த பியங்கர ஜயரட்ன நாடாளுமன்றுக்கு அறிவித்தார். அதற்கு முன்னதாக ஸ்ரீ லங்கன் விமானசேவைக்குச் சொந்தமான Airbus A330-200 விமானமொன்று மத்தள விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்த இந்த விமானம் தன்னுடன், 125 ஆதரவற்ற குழந்தைகளை மத்தளவுக்கு அழைத்து வந்திருந்தது. மேலும், மத்தள விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கிய இரண்டாவது விமானம் என்ற பெருமை இதற்குக் கிடைத்தது.

தரையிறங்கிய விமானங்கள்

உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதன் பின்னர், அங்கு வந்த முதலாவது விமானம் டுபாய் நகரிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமானசேவைக்குச் சொந்தமான விமானமாகும். அதனையடுத்து எயார் அரேபியாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்று சார்ஜாவிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. அதனைத்தொடர்து Flydubai விமானச்சேவைக்குச் சொந்தமான விமானமும் டுபாயிலிருந்து அங்கு வந்தது.

அரச அனுமதி அளிக்கப்பட்ட நெற் களஞ்சியம்

இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மத்தள விமான நிலையத்திலும் பிரதிபலித்தது. உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சில ஆண்டுகளாகியிருந்த போதும் கூட, அந்த விமான நிலையம் எதிர்பார்த்த பயனை அடைந்திருக்கவில்லை. மிகக் குறைவாகவே அங்கு சர்வதேச விமானங்கள் வந்திருந்தன. அதனால், அந்த விமான நிலையத்தின் சரக்கு வைக்கும் பகுதிகளை, நெல் சந்தைப்படுத்தும் சபை பயன்படுத்திக் கொள்வதற்கு அரச அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்தள சர்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியப்படுத்தும் இடமானது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. பல சர்ச்சைகளும் இது தொடர்பில் எழுந்தன.

விசித்திர சம்பவம்

இன்னுமொரு விசித்திரமான சம்பவமும் இங்கு நிகழ்ந்தது. யானைகள் நடமாடும் பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்திருந்தமை காரணமாக, இரவு வேளைகளில் அவை தொடர்ந்தும் நடமாடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2016 ஆம் ஆண்டில் 300 பாதுகாப்புப் படை வீரர்களும் காவல்துரையினரும் மற்றும் தன்னார்வலர்களும் இந்த விமான நிலையத்திலிருந்து வன விலங்குகளை விரட்டும் பணியில் இறக்கி விடப்பட்டார்கள். எனினும் அவர்களது பணியில் தோல்வியே கிடைத்தது.

மத்தள விமான நிலையத்தின் நெடுஞ்சாலையில் யானை நிற்கும் படம்

இந்த விமான நிலையம் திறக்கபட்ட ஆரம்ப காலத்தில், SriLankan Airlines, Mihin Lanka, Cinnamon Air, Air Arabia, Flydubai ஆகிய விமானச்சேவைகள் தமது விமானங்களை அங்கு தொடர்ந்து தரையிறக்கி வந்தன. விமான நிலையம் திறந்து ஆறாவது வாரத்திலேயே Air Arabia சார்ஜாவிலிருந்தான தனது விமானச்சேவையை நிறுத்திக் கொண்டது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சேவை மையம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி மூடப்பட்டது. எனினும், தற்போது மீண்டும் ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஆட்சி இலங்கையில் வந்திருக்கின்ற காரணத்தினால், இந்த விமான நிலையம் சிறந்ததொரு நிலைக்குக் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை பல தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles