இலங்கையில் பெருகிவரும் கனிமவளக் கைத்தொழில்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்கள் முக்கிய இடத்தைப்பெறுகின்றன. குறிப்பாக இரத்தினக் கற்கள் மிகப் புராதன காலத்திலிருந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது. காரியம், சுண்ணாம்புக்கற்கள்,களிமண் வகைகள்,கனிய மணல் வகைகள், இரும்புத்தாது, மற்றும் உப்பு முதலியன இலங்கையின் முக்கிய கனிய வளங்களாக இருந்து வருகின்றன. இலங்கை நாட்டின் ஏற்றுமதிகளில் கனிய வளங்கள் மூன்று சதவீத பங்கினை வகித்து வருகின்றது . இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்றின் கைத்தொழில் அபிவிருத்தி கனிய வளங்களை பொறுத்ததாகவே அமையும்.

இலங்கையின் இரத்தினக்கற்கள்

இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் கனியம் இரத்தினக் கற்களாகும். முந்தைய காலத்தில் இருந்தே இலங்கை இரத்தினக்கற்களுக்குப் புகழ் பெற்ற நாடாக இருந்துள்ளது. கிரேக்க, அரேபிய, ரோம வர்த்தகர்கள் இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றுள்ளதாக வரலாறுகள் சொல்கின்றன. அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயர் பெற்று விளங்கியது.

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டம்
பட உதவி : sri-lanka-ratnapura-district-map-ppt-template

இரத்தினக்கற்கல் அகழும் இடங்கள்

இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலும் காணப்படுகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சப்ரகமூவ மாகாணத்தில் அமைந்துள்ள இரத்தினபுரியே இரத்தினக் கற்களுக்கு முக்கியமான பகுதியாகும்.  அந்த ஊரின் பெயரே அந்த உண்மையைப் புலப்படுத்தும். அண்மைக்காலத்தில் ஒக்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, இறக்குவானை போன்ற இடங்களும் இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக உள்ளன.

இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து போன்ற  நாடுகள் முதன்மை வகிக்கின்றன. அத்தோடு குவைத், டுபாய், சவுதிஅரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் இலங்கையின் இரத்தினக் கற்களை விலைகொடுத்து வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிரேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது.

சுண்ணாம்புக்கல்

சுண்ணாம்புக்கல் குவாரி / பட உதவி : exploresrilanka.lk

இலங்கையில் அதிகளவில் பயன்படும் கனிய வளமாகச் சுண்ணாம்புக்கல் விளங்குகின்றது. இங்கு பயன்படும் மூன்று வகையான சுண்ணாம்புக்கற்கள்:

 • அடையற் சுண்ணாம்புக்கல்,
 • பளிங்குருச் சுண்ணாம்புக்கல்,
 • முருகைக்கல்.

அடையற் சுண்ணாம்புக்கற்கள்

இந்த சுண்ணாம்புக்கற்கள் புத்தளத்தையும் முல்லைத்தீவையும் இடைப்பட்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது என்கிறார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக்கல் பாறைகளை காண முடியும்.இலங்கையில் பிரசித்தி பெற்ற காங்கேசன் துறையில்  சீமெந்து ஆலை இச்சுண்ணாம்புக் கல்லை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

பளிங்கு சுண்ணாம்புக்கற்கள்

அநுராதபுரம், கண்டி, பலாங்கொடை, பதுளை மற்றும் வெலிமடை முதலான பிரதேசங்களில் இவ்வகையான சுண்ணாம்புக்கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பளிங்குருச் சுண்ணக்கல் சூளைகளில் சுடப்பட்டு கட்டிடத் தேவைகளுக்குரிய சுண்ணாம்பு பெறப்படுகிறது. இவ்வகை சுண்ணக்கல் மங்கனீசைக் கூடுதலாகக் கொண்டவைகளாகும்.

முருகைக்கற்கள்

பட உதவி : dailynews.lk

கடல்வாழ் நுண்ணுயிர்களின் சுண்ணாம்புச்சத்து நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகவதால் முருகைக் கற்பாறைகள் தோன்றுகின்றன. இலங்கையின் அம்பலாங்கொடை, தெவிநுவரை, கல்குடா மற்றும் நெடுந்தீவு வரை அதிகமாக காணப்படுகின்றன.

காரீயம்

இலங்கையில் காணப்படும் காரீயம் மிகவும் உயர்ந்த தரமானது. உலக சந்தையில் இலங்கை காரீயத்திற்கு நல்ல மதிப்புமுண்டு. காரீயம் என்பது களித்தன்மை வாய்ந்த இறுகிய ஒரு பொருளாகும். பென்சில், வர்ணம் (பெயின்ற்), உலர்மின்கலம், காபன், சப்பாத்து மினுக்கி என்பவை செய்ய காரீயமே பயன்படுகின்றது. அது மட்டுமின்றி இரும்புத்தாதை உருக்கவதற்கும் காரீயம் பயன்படுகிறது.

இலங்கையில் காரியம் காணப்படும் இடங்கள்

வவுனியா, ஹொரவுப் பொத்தானை, நிக்கவரட்டியா, தம்புளை என்னும் இடங்களை இணைக்கும் நாற்கோணப் பிரதேசத்தில் காரீயப்படிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

பின்வரும் பிரதான மூன்று சுரங்கங்களில் அதிகளவில் காரீயம் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றது.

 1. கஹட்டகஹச் சுரங்கம்
 2. கொலன்னாவைச் சுரங்கம்
 3. போகலைச் சுரங்கம்
இலங்கை காரீய சுரங்கம் / பட உதவி : energyandgold.com

காரீயத்தைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய கைத்தொழில்கள் இலங்கையில் அதிகம் இல்லாத காரணத்தால் அகழப்படும் காரீயத்தில் பெரும்பகுதி ஐக்கியஅமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான்  ஆகிய நாடுகளுக்கு கைத்தொழிலுகாக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2008 – 2017 வரையான காலப்பகுதியில் இலங்கையின் கனிப்பொருட்கள் ஏற்றுமதி :

இரத்தினக்கல் ஏற்றுமதி   

 • 2008 – 8,096.2 மில்லியன்
 • 2010  – 7,802.1 மில்லியன்
 • 2015  – 22,132.2 மில்லியன்
 • 2017  – 22,075.6 மில்லியன்

கவுடா ஏற்றுமதிகள் 

 • 2008 – 163.6 மில்லியன்
 • 2010 – 142.4 மில்லியன்
 • 2016 – 101.6 மில்லியன்
 • 2017 – 32.8  மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மொத்த ஏற்றுமதிகள்  

 • 2008 – 73,055  மெட்ரிக் தொன்
 • 2010 – 140,533 மெட்ரிக் தொன்
 • 2015 – 187,236 மெட்ரிக் தொன்
 • 2017 – 231,032 மெட்ரிக் தொன்

இல்மனைற்று    ஏற்றுமதி

 • 2008 – 16,731 மெட்ரிக் தொன்
 • 2010 – 36,692 மெட்ரிக் தொன்
 • 2015 – 40,909 மெட்ரிக் தொன்
 • 2017 –  36,994 மெட்ரிக் தொன்

2008 – 2017 வரை இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டிய கனியம் இரத்தினக் கற்களாகும்.

களிமண் வகைகள்

இலங்கையில் காணப்படும் களிமண் வகைகளில் களிமண், வெண்களி என்பன கைத்தொழில் உற்பத்திக்கு  முக்கியமானவையாகும்.

களிமண்

இலங்கையில் களிமண் பாத்திரங்களானது முந்தைய நாட்களிலிருந்து பயன்படுத்தப்படுகின்றது. பானை சட்டிகள், செங்கற்கள், ஓடுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குக் களிமண் உபயோகமாகின்றது.

இலங்கையில் களிமண் அதிகம் காணப்படும் இடங்கள் :

மகாஓயா,களுகங்கை, களனிகங்கைப் போன்ற பள்ளத்தாக்குகளிலும் குளங்களிலும் அதிகம் களிமண் காணப்படுகின்றது. இலங்கை சிறுகைத்தொழில் திணைக்களமானது களிமண் கைத்தொழிலுக்கான பயிற்சி பாடத்திட்டங்களையும் நிலையங்கள் அமைந்து நடாத்தி வருகின்றது.

இரும்புத்தாது

இலங்கையின் இரத்தினபுரி,பலாங்கொடை, மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய இடங்களில் இரும்புத் தாதுப் படிவுகள் காணப்படுகின்றன. அதே போல கண்டி, மாத்தளை, சிலாபம் ஆகிய இடங்களிழும் சிறிதளவு கிடைக்கப்பெறுகின்றன. அண்மைய ஆய்வுகள் பல புதிய இடங்களிலும் இரும்புத் தாதுப்படிவுகள் இருப்பதை அறியத் தருகின்றன. இலங்கையிலுள்ள இரும்புத் தாதைப் பயன்படுத்த நிலக்கரியின்மை தடையாக இருப்பது கைத்தொழில் துறைக்கு ஓர் வீழ்ச்சியாகும்.

உப்பு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரதான கனிப்பொருள் உப்பு ஆகும். உப்பு உற்பத்தியைப் பொறுத்தளவில் இலங்கை பூரண விருத்தியடைந்துள்ளது. இலங்கையில் ஆனையிறவு, அம்பாந்தோட்டை, நிலாவெளி, புத்தளம், கல்லுண்டாய், செம்மணி ஆகிய பகுதிகளில் உப்பளங்களுள்ளன. நீரைச் சுத்திகரிப்பதற்குக் பயன்படும் குளோரின் போன்றவையும் இந்த உப்பளங்களிலிருந்து பெறப்படுகின்றது.

மேற்குறிப்பிட்டவை மட்டும் இல்லாமல் இலங்கையில் இன்னும் சில கனிய வளங்கள் உள்ளன. மின் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் “மைக்கா” வகைகளும் இங்கு  துட்டுவவ, இரத்தோட்டை, மாத்தளை, உடுமுல்லை, மற்றும் அப்புத்தளை முதலான பிரதேசங்களில் காணப்படுகின்றது. இது போன்ற கனிமங்களால் எதிர்கால இலங்கையின் கைத்தொழில் துறையானது மேலும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி முன்னேறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோ உதவி : YouTube.com

Related Articles