Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு

இலங்கை போன்ற நாடொன்றில் வங்கிகளும் , மக்களும் ஏதோவொருவகையில் ஒன்றோடு ஒன்று இணைந்தவர்களாகவே இருக்கிறார்கள். சேமிப்பு என்பது இலங்கையர் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், முதலீடு என்று வருகின்றபோது, இலங்கையர்கள் ஒரு தயக்கத்துடன் பின்நிற்பவர்களாக இருக்கிறார்கள். காரணம், முதலீடுகள் தொடர்பான பயம். இதன் காரணமாக, சேமிப்பின் விளைவாக கொடுக்கல் வாங்களிலிருந்து வெளியேறும் பணம் முதலீடாக மீளவும் கொடுக்கல் வாங்கல் செயல்பாடுகளுக்கு வருவதில்லை. சேமிப்பு என்கிற பெயரில் மக்களிடம் தங்கியுள்ள பணத்தினை வெளிக்கொண்டுவருவதில் வங்கிகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. வட்டி என்கிற கவர்ச்சி வருமானத்தை வழங்கி சேமிப்புக்களை முதலீடாகக் கொண்டு வருவதில் இவற்றின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். அப்படியான வங்கிகளுக்கு கிடைக்கப்பெறும் நிதியும், அவை பொருளாதாரத்துக்கு முதலீடு செய்யும் தன்மையும் போதுமானதாக இருக்கிறதா ?

இலங்கையைப் பொறுத்தவரையில், நிதியியல் கொள்கைகளும், வங்கியல் செயல்பாடுகளும் ஏனைய அபிவிருத்தி அடைந்தவரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து மிகச்சிறந்த தரத்தில் உள்ளதென்பதனை மறுக்கமுடியாது.

அபிவிருத்தி வங்கிகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அபிவிருத்தி வங்கிகளே கூட்டிணைக்கப்பட்டது. பெரும்பாலும் அபிவிருத்தி வங்கிகளின் முதன்மையான நோக்கமே, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை ஸ்திரப்படுத்துவதற்காக நீண்டகால கடன்களை வழங்குவதாக இருக்கும். அவை, ஆரம்பகாலத்தில் உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் துணைகொண்டு ஆரம்பிக்கபட்டு இருந்தன. இருந்தாலும் அவற்றினால் தொடர்ச்சியாக இத்தகை நிறுவனங்களிடம் நிதியை பெற முடியாது. அப்படியாயின், இந்த வகை வங்கிகள் எவ்வாறு தமக்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் ?

மிகப்பெரிய தொகையை ஒரே தடவையில் வழங்கிவிட்டு அதனை வசூலிக்க நிறைய வருடங்களை செலவிட வேண்டியிருக்கும். ஆனால், அடுத்தடுத்து கடன்களை வழங்க வங்கிகளுக்கு எப்போதுமே நிதியும் இருக்க வேண்டும். இல்லையெனில், புதிதாக முளைக்கும் வணிகங்களுக்கு தேவையான நிதியை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனை அடிப்படையாகக்கொண்டு, மாற்றுதீர்வாக அபிவிருத்தி வங்கிகள் கண்டறிந்த வழிமுறையே மிகநீண்டகால முதலீட்டு நிதிச்சேவையாகும். இதன்மூலம், வங்கிகளுக்கு தேவையான நிதியை நீண்டகால உறுதிப்பாட்டுடன் மக்களிடமிருந்தே முதலீடு என்கிற பெயரில் பெற முடிந்தது.

Caption (Pic: ft)

வணிக வங்கிகள்

ஆனால், வணிகவங்கிகள் என நம்மோடு அதீத அளவில் இணைந்துள்ள வணிக வங்கிகளின் கதையோ வேறுமாதிரியாக இருக்கிறது. வணிக வங்கிகள் பெரும்பாலும் வணிகங்களுக்கான நீண்டகாலக் கடன்களை வழங்குவதில் பின்நிற்கின்றன. இதற்கான பிரதான காரணமே, வணிக வங்கிகளின் நிதியானது சேமிப்பு கணக்குகளில்தான் தங்கியிருக்கிறது. பெரும்பாலான வணிக வங்கிகளின் சேமிப்புக்காலம் என்பது குறுகியதாக இருப்பதன் காரணமாக, மிக நீண்டகால கடன்களை வழங்குவதில் நிதிரீதியாக பிரச்சனைகள் எழுகிறது. அதாவது, சேமிப்பு வைப்புக்களின் முதிர்ச்சி (maturity) காலமானது கடன்களது முதிர்ச்சி (maturity) காலத்துடன் ஒப்பிடும்போது மிக குறுகியதாகும். இதனாலேயே, வணிக வங்கிகள் உயர் வட்டிவீதத்தை அல்லது இறுக்கமான ஆவண கட்டுபாட்டு முறைகளை தன்னகத்தே கொண்டிருப்பதன் மூலம், நீண்டகால கடன்களை மிக குறைந்த அளவிலேயே வழங்க முயற்சிக்கிறது.

இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களால் மிக நீண்டகால அடிப்படையில் வழங்கப்படும் நிதிக்கான செலவுகள் (வட்டிவீதம் உட்பட) அதிகமாக இருப்பதன் விளைவாக, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு மிகப்பாரிய சுமையையே இந்த வங்கிகளின் கடன் ஏற்படுத்தும். வணிகங்கள் உயர்வட்டி வீதங்களில் கடனைப் பெற்று வணிகத்தை கொண்டு நடத்தும்போது, அதனை மீளச்செலுத்த அதிக வருமானத்தை அல்லது இலாபத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் நாளந்த செயல்பாடுகளுக்கான செலவையும், வட்டிச் செலவீனங்களையும் ஈடுசெய்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, இது நடைமுறைக்கு மிக மிக சாத்தியப்பாடு குறைந்த ஒன்றாகவே வணிகங்களை பொறுத்தவரையிலும், வங்கிகளை பொறுத்தவரையிலும் உள்ளது.

அப்படியாயின், வங்கிகள் எவ்வாறு தமக்கு தேவையான நீண்டகால முதலீடுகளை எப்படி திரட்டிக் கொள்ளுகிறது ? வணிகங்களுக்கு நிதியை எவ்வாறு வழங்க முனைகிறது ?

இதற்கென பிரத்தியேகமான வழிமுறையை வங்கிகள் கையாளுகின்றன. மக்களிடமிருந்து மிகநீண்டகாலத்துக்கு கவர்ச்சிகரமான வட்டிவீதங்களை வழங்குகிறோம் எனும் அடிப்படையில் முதலீடுகளை திரட்டி, அவற்றினை பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளுகின்றன. இதன்மூலம், நாளாந்த பாவனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பண அளவானது காணாமல் செய்யப்பட்டு, மக்கள் பார்வையில் சேமிப்பாகவும், முதலீட்டாளர் பார்வையில் முதலீடாகவும் மாற்றப்பட்டு மீளவும் பண அல்லது முதலீட்டு சந்தைக்குள் கொண்டுவரப்படுகிறது. மேற்கூறிய வழிமுறையில் பணத்தை திரட்டிக்கொள்ள முடியாது விடின், நீண்டகால கடன்பத்திரங்களை வெளியிட்டு தமக்கு தேவையான முதலீட்டை வங்கிகள் திரட்டிக்கொள்ளுகின்றன. இவற்றுக்கும் மேலாக, இலங்கை போன்ற நாட்டில் அதிக நிதியை அரச நிறுவனங்களான ஊழியர் சேமலாப நிதியம் , காப்புறுதி துறையின் பணம் ஆகியவை வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலமாக, வழங்குகின்றன. இத்தகைய அரசநிதிகள் மிகநீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யப்படுவதால், இவற்றின் மூலம் வங்கிகள் அதீத பயனை பெறமுடியும். இவற்றுக்மேலாக, அரச வங்கிகள் அரசினால் வெளியிடப்படும் திறைசேரி பத்திரங்கள் ஊடாகவும் நிதியை பெற்றுக்கொள்ளுகின்றன.

மேற்கூறிய நிதிகளில் பெரும்பாலும் நீண்டகால முதலீடுகளாக வங்கிகளுக்கு வருகின்ற நிதியானது, இலங்கையில் வாழும் மக்களில் பெரும்பாலானோரது நேரடி மற்றும் மறைமுக ஓய்வுகாலத்துக்கான தற்போதைய சேமிப்புக்களே ஆகும். ஆனால், அவை வெவ்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டு, வணிகங்களின் செயல்பாடுகளுக்காக வங்கிகளை வந்து சேர்கின்றது.

இதுதான் பெரும்பாலும் எந்தவொருன் நாட்டிலும் வங்கிகள் சார்பிலான செயன்முறையாக இருக்கும். ஆனால், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வங்கிகளுடன் இந்த நிதியை பங்கிட்டுக் கொள்ளுவதில் போட்டியாளர் ஒருவர் உள்ளார். அவர், வேறு யாருமல்ல “இலங்கை அரசாங்கமே” ஆவார். இதனால், வங்கிகளுக்கு கிடைக்கவேண்டிய முழுமையான நிதி கிடைக்காமல் பங்கிடப்படுகிறது.

இலங்கை போன்ற பாதீட்டு குறையைக் கொண்டுள்ள நாடுகள் நீண்டகால அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் என்கிற அடிப்படையில் இவ்வாறு வணிகங்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை முடக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. பெரும்பாலும், அரசினால் வெளியிடப்படும் முறிகள் மற்றும் கடன்பத்திரங்கள் முதலீட்டு பாதுகாப்பின் அதி உச்சத்தைக் கொண்டிருப்பதால், இவற்றுக்கான முதலீட்டு சந்தையானது மிக அதிகமாக இருக்கிறது. எனவே, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வங்கிகள் அரசுடனும் போட்டிபோட்டுக் கொண்டே தமக்கு தேவையான நிதியை திரட்டிக்கொள்ளும் பரிதாபநிலை ஏற்படுகிறது.

அதிலும், பாதீட்டு குறையானது மிக அதிகமாகவுள்ளபோது, அதனை நிவர்த்திக்க அரசும் அதிக வட்டிவிகிதங்களில் கடன்பத்திரங்களை விநியோகிக்கும். இதுவும், வங்கிகளில் நிதி திரட்டல் செயல்பாட்டை பாதிக்கும் மோசமாக பாதிக்கும்.

அப்படியாயின், வங்கிகள் ஏன் வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்து சுயாதீனமாக நிதியைத் திரட்டிக்கொள்ளக் கூடாது ?

அடிப்படையில், குறித்த நாட்டின் அரசோ, வங்கிகளோ சர்வதேச நியமங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடுகளுக்கு அமைவாக நிதியை திரட்டிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒரு நாடு அபிவிருத்தி அடைந்துவரும் மட்டத்திலோ அல்லது அதற்க்கு கீழாகவோ இருக்குமெனின், அத்தகைய நாடும், வங்கிகளும் மிக அதிகளவில் சர்வதேச ஸ்தாபனங்களிடமிருந்து நிதியை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், குறித்த நாடு அபிவிருத்தி அடைந்து வரும் அதன்நிலையில் முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கும்போது, இந்த நிதி வழங்கல் குறைக்கப்படும் அல்லது கடினமாக்கப்படும். இதன் விளைவாக, அரசும், வங்கிகளும் நிதியை பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல் நிலை ஏற்படும். இதனால், உள்நாட்டு நிதியை பெற்றுக்கொள்ளுவதில் போட்டித்தன்மை அல்லது நிலை உருவாக்கப்படுகிறது. இதற்க்கு பிரதான காரணம், ஒரு நாட்டின் தலா நபருக்கான வருமானம் அதிகரிக்கும்போது, மக்களின் வாழ்க்கைமட்டமும் சேர்ந்தே அதிகரிப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதனால், குறித்த நாடு தனது நிதித்தேவையை தானே பூர்த்தி செய்துக்கொள்ளக்கூடிய அடைவுமட்டத்தை நோக்கி நகர்வதாக கணிப்பிடப்படுவதால், இந்த நிதிக் குறைப்பு செய்யப்படுகிறது. இவற்றுக்கு மாற்றாக, வெளிநாட்டு பணச்சந்தை , முதலீட்டு சந்தைகள் என்பவற்றின் ஊடாகவும் நிதியை திரட்டிக்கொள்ள இயலும். ஆனால், இது சலுகை நிதிகளுடன் ஒப்பிடுமிடத்து அதிக வட்டிவிகிதங்களை எதிர்பார்க்கும் நிதியாக அமைவதால், இந்த நிதியின் பயன்பாடு இலங்கை போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

Caption (Pic: brcpartnership)

வட்டிவிகிதம்

இலங்கை போன்ற நாடுகளில் மிக குறுகியகாலத்திற்கு ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுமே, வெவ்வேறு வகைக் கொள்கைகளை கொண்டு ஆட்சிக்கு வருகின்றன. அவற்றில் கடந்தகாலங்களில் ஆட்சியமைத்த அரசும் சரி, தற்போதைய அரசும் சரி தமது நீண்டகால திட்டங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி உட்பட பல்வேறு அரச,தனியார் நிதிமூலங்களை முற்றாக பயன்படுத்துகின்றன அல்லது பயன்படுத்தி விட்டன எனலாம். இதன்விளைவாக, குறிப்பாக அபிவிருத்தி வங்கிகளுக்கான நிதி கிடைப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. இதனால், வங்கிகள் வட்டிவீதத்தை உச்சப்படுத்தி வணிகங்கள் நிதி பெறுகின்ற நிலையை கட்டுபடுத்துகின்றது அல்லது குறைக்கின்றது. இது, வணிகங்கள் மத்தியில், வங்கிகள் தங்கள் இலாபநோக்குக்காக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்காது இலாபநலன் கருதி செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த நிலையில், வங்கித்துறை மீது, மிக நீண்டகால முதலீடுகளுக்கு வட்டிவீதத்தை கட்டுப்படுத்துவதில்லை என்கிற குற்றசாட்டும் சுமத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த குற்றசாட்டு அர்த்தமற்றதாகும். இந்தநிலைக்கு காரணமான அரசே, இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். ஆனால், இதனை நிவர்த்திக்கிறோம் என்கிற பெயரில், இலங்கை போன்ற அரசுக்கள் சிறிய நடுத்தர வணிகங்களுக்காக புதிய அபிவிருத்தி வங்கிகளை உருவாக்குகின்றன. இதனால், போட்டித்தன்மையை உருவாக்கி வட்டிவீதத்தை குறைப்பதாக சொன்னாலும், நீண்டகாலத்தில் உருவாக்கப்பட்ட புதிய வங்கிகளும் வழியின்றி வட்டிவீதங்களை அதிகரிக்கவே ஏற்படுகிறது.

Caption (Representative Pic: newsfirst)

உண்மையில், இத்தகைய நிலையினை கொண்டுள்ள இலங்கை போன்ற அரசுகள் ஆக்கபூர்வமாக பாதீட்டுக் குறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக, ஊழியர் சேமலாப நிதி, காப்புறுதி நிதி உட்பட அரச மற்றும் தனியார் நிதிகளில் ஒரு சேமிப்புத்தன்மையை உருவாக்க முடியும். இது, வங்கிகளின் வழியாக மீளவும் நாட்டின் அபிவிருத்திக்கும் வழிவகுக்கக்கூடிய கதவுகளை திறக்கும் திறவுகோலாக பயன்படும். இதனால், இலங்கை போன்ற நாடுகளின் முதுகெலும்பாகவுள்ள சிறிய மற்றுறம் நடுத்தர வணிகங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதுடன். \வங்கித்துறையும் தங்குதடையின்றி செயலாற்ற முடியும்.

Web Title: Banks On Srilankan Economical Development

Featured Image Credit: newsfirst

Related Articles