ஆட்டம் காணும் இலங்கைப் பொருளாதாரம்

அண்மைக்காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதார செயல்பாடுகளானது கவலைக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி என்பதற்கு பதில் வீழ்ச்சி எனும் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரமே பொருளாதார வளர்ச்சியானது 3.8%மாக வளர்ச்சி கண்டிருக்கிறது. (இங்கு குறிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி என்பது, கடந்த ஆண்டுடன் அல்லது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதா? அல்லது அதே அளவு வளர்ச்சியை கொண்டுள்ளதா? என்பதையே குறிப்பிடுகிறது)

2016ம் ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து, 2017ம் ஆண்டின் முதலாம் காலாண்டு வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். இருந்தபோதிலும், நம்பிக்கையான முன்னெடுப்புக்கள் காரணமாக இரண்டாம் காலாண்டில் இந்தநிலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2017ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் உற்பத்தித்துறை 6.3% மாகவும், சேவைத்துறை 3.5%மாகவும், விவசாயத்துறை 3.2%மாகவும் வளர்ச்சியை காட்டியுள்ளது. இலங்கையின் கட்டிட நிர்மாணத்துறை 2017ம் ஆண்டின் ஆரம்பத்திலும், அதனை தொடர்ந்து இரண்டாம் காலாண்டிலும் விரிவாக்கம் பெறுவதன் விளைவாக, இந்தநிலையில் நிச்சயமாக ஏறுமுகமான மாற்றத்தை அவதானிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இருந்தாலும் இதிலும் ஒருசில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி நிலையும், மற்றொரு பக்கம் நிலவும் வெள்ள அனர்த்த நிலையும் குறிப்பிட்டளவில் விவசாயத்துறையை பாதிப்படையச் செய்யக்கூடும். இதுவரையான கணிப்பீடுகளின் பிரகாரம் குறைந்தது ஒட்டுமொத்த விவசாயத்துறையின் பங்களிப்பானது 40%த்தினால் 2017ல் குறைவடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இது இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடும் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் எதிர்பார்க்கபட்டதுக்கும் குறைவான வளர்ச்சி நிலைக்கே வழிகோலும்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளும் பல்வேறு வகைகளில் துணையாக நிற்கின்றன. அந்தவகையில், இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவினை எட்டாது போனால், தனித்து விவசாயத்துறையை மாத்திரம் குறை சொல்ல முடியாது. காரணம், விவசாய துறையின் பங்களிப்பானது அண்மைய காலங்களில் குறைவாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக, அதிலும் 2016ல் விவசாயத்துறையின் பங்களிப்பு 10%க்கும் குறைவாக 7.1%மாகவே இருந்திருக்கிறது. எனவே, தனித்து விவசாயத்துறையில் மாத்திரம் பழி சுமத்தி விடமுடியாது.

பொருளாதார மந்தநிலைக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக, உற்பத்தித்துறையில் போதுமான செயல்திறனின்மையும் குறிப்பிட முடியும். குறிப்பாக, இலங்கையின் உற்பத்தி துறையின் உப பிரிவான கட்டுமானத்துறையில் அபரீதமான வளர்ச்சியை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. இதன்விளைவாக, பொருளாதார வளர்ச்சியோ அல்லது உற்பத்திதுறையில் மேம்பாடு ஏற்படுவது போலவோ தோற்றப்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையில் கட்டுமானத்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடம்பெறும் சமயத்தில் மாத்திரமே பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாக இருக்க முடியும். ஆனால், இலங்கையின் கட்டுமானத்தை பொறுத்தவரையில், ஒப்பீட்டளவில் வெளியீட்டை விட இறக்குமதி அளவு அதிகமானதாக இருக்கிறது. எனவே, எதிர்பார்த்த அதிகரிப்பை இதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியாதநிலை தற்போது காணப்படுகிறது. எனவேதான், இலங்கையின் பிரதான உற்பத்தி செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பின்தங்கிய நிலையானது, உற்பத்திதுறையின் வீழ்ச்சிக்கும், பொருளாதார மந்தநிலைக்கும் வழிவகுத்துள்ளது.

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில், இலங்கையின் 2017ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவுமட்டத்தை அடைவது கேள்விக்குரியதாகவே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் நிலவும் பாதகமான காலநிலை இதில் ஒரு காரணியாக அமைந்தாலும், அதனைவிடவும் நிறையவே காரணிகள் பொருளாதார மந்தநிலைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. குறிப்பாக, பொருளாதார கொள்கைகளில் காணப்படும் தளம்பல் நிலைமை, அரசியல் ஸ்திரமற்றதன்மை, நிர்வாக குழப்பநிலைமை , நிதி நிர்வாக ஊழல் மோசடிகள் என்பனவும் இதற்க்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளது. இவைதவிரவும், ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி , மற்றுறம் வெளிநாட்டு நாணயங்களின் உள்வருகையில் ஏற்பட்ட தளம்பல்நிலைமை போன்றனவும் இதற்க்கு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார உயர்ச்சியானது சிலகாலங்களுக்கு பிறகு புத்துயிர் பெற்ற சுற்றுலாத்துறையை சுற்றியதாகவே இருக்கிறது. உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு சமனான அல்லது மேம்பட்ட சுற்றுலா போட்டியாளர்கள் அதிரித்துவரும் நிலையில், தொடர்ந்தும் இலங்கை சுற்றுலாத்துறை வருமானங்களை மாத்திரமே நம்பியிருப்பது கவலைக்குரியதாகும். இந்த சமயத்தில், சேவைத்துறைக்கு ஏற்றால்போல உற்பத்திதுறையும், ஏற்றுமதிகளையும் வளர்த்தெடுக்கவேண்டியது அவசியமாகிறது.

ஏற்றுமதிகளை பொறுத்தவரையில் மந்தகரமான சூழ்நிலையை கடந்தகாலங்களில் எதிர்நோக்கியிருந்த போதிலும், 2017ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் கிடைக்கப்பெற்ற ஜரோப்பிய ஒன்றியத்தின் சலுகையானது மிகப்பாரிய ஊக்குவிப்பு காரணியாக அமைந்துள்ளது. இந்த ஊக்குவிப்புடன், ஏற்றுமதிகளை அதிகரித்து அதனூடாக, சென்மதிநிலுவையில் சாதக அதிகரிப்பினை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், இலங்கை தனது சென்மதி படுகடன் நிலையை ஈடுசெய்ய மேலும் மேலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையே உருவாகும்.

இலங்கையி ஏற்றுமதி தரவுகளை நோக்கும்போது, 2017ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதியானது 3.5% மாக உள்ளது. இந்த ஏற்றுமதியில் மிகப்பெரும் பங்கினை தேயிலை ஏற்றுமதியும், அதற்க்கடுத்ததாக வாசனைத் திரவியங்கள் , இயந்திர உபகரண ஏற்றுமதி , பெற்றோலிய பொருட்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் ஏற்றுமதியும் கொண்டுள்ளது. அதுபோல கடந்தகாலங்களில் ஏற்றுமதியில் வருமானத்தை ஈட்டித்தந்த ஆடை உற்பத்தி , நகைகள் மற்றும் புகையிலை பொருட்கள் என்பனவற்றின் வருமானத்தில் வீழ்ச்சியையும் காணக்கூடியதாக உள்ளது.

சித்திரை 2016ம் ஆண்டின் பெறுபேறுகளையும், சித்திரை 2017ம் ஆண்டின் பெறுபேறுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஏற்றுமதியில் விவசாயத்துறையின் பங்களிப்பானது 11.9%மாக அதிகரித்துள்ளது. அதுபோல,இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், அச்சிடும் தொழில் தயாரிப்புகள் மற்றும் காகிதத் தயாரிப்பு ஏற்றுமதி மூலமான வருமானமும் 2017ல் அதிரித்துள்ளது நற்செய்தியாகவே உள்ளது.

ஏற்றுமதியில் மேற்கூறியவாறு, விவசாயத்துறையின் பங்களிப்பானது அதிகமாக இருப்பதற்கு மிகமுக்கியமான காரணிகளில் ஒன்று தேயிலையின் சந்தை விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அதிரிப்பும் ஒரு முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் அளவினை கடந்தகாலங்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தோமானால், அதன் அளவானது குறைவடைந்திருக்கிறது. அதுபோல, கடல்வாழ் உயிரினங்களின் ஏற்றுமதியானது கடந்தகாலங்களுடன் ஒப்பிடும்போது 57%மாக உயர்வடைந்துள்ளது. இதற்க்கு பிரதான காரணமாக, ஜரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை கிடைக்கப் பெற்றமையை சொல்ல முடியும்.

இவற்றின் தொகுப்பாக நமது நாட்டின் 2017ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எத்தகைய நிலையை நோக்கி நகருவதாக உள்ளது என பார்த்தோமானால், 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து சிறந்த வளர்ச்சி நிலையையும், ஆனால் திட்டமிடப்பட்டு அடையப்படும் என எதிர்பார்க்கப்படும் இலக்குக்கு குறைவான வளர்ச்சியையும் கொண்டதாக காணப்படும். காரணம், பொருளாதார வளர்ச்சியில் விவசாய உற்பத்தியானது ஒரு சிறிய விகிதத்தை மட்டுமே பங்களிப்பதாக உள்ளமையும், எதிர்பார்த்ததைவிட மந்தகதியில் வளர்ச்சி அடையும் உற்பத்திதுறையையும் நோக்கி கைகாட்ட முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக, பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குளறுபடிகள் காரணமாக, மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. இது இலங்கை மீதான முதலீட்டளர்களின் நம்பிக்கைதன்மையானது கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து செல்வதனையே காட்டி நிற்கிறது. இவை அனைத்தையும் நிவர்த்திக்க வேண்டிய அவசர சூழலில் இலங்கை அரசும், அதன் நிதி நிர்வாகமும் உள்ளது. இல்லையெனில், நாம் மீண்டும் மீண்டும் நமது பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க ஏனைய நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

படங்கள் – pixabay.com

Related Articles