Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பிரபலங்கள் ரசித்த தமிழ் சினிமா-இயக்குனர் நடிகர் ஓவியர் எழுத்தாளர் பொன்வண்ணன்


‘என் வாழ்வில் நான் அதிகப்படியாக சொன்ன பொய்கள், என்பவை சினிமா பார்ப்பதன் பொருட்டு என் பெற்றோருக்கு சொன்ன பொய்கள் தாம்.’


சினிமா, அரசியல், இலக்கியம், கலை ஆகிய எந்த தளத்தை எடுத்து கொண்டாலும் அவை பற்றிய சரியான புரிதல் ஏற்பட வயது வரம்பு ஒன்று தேவைப்படுகிறது. ஒரு மனிதனின் பத்து வயது வரையான காலகட்டப் பகுதியில், அவனுக்கான சினிமாவை தீர்மானிப்பது அவனது வீடு. இப்பருவ காலகட்டத்தில் பார்க்கப்படுகின்ற சினிமா,  புத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையடுத்து பத்து வயது முதல் இருபது வயது வரையான காலகட்ட பகுதியில் ஒருவனால் தேடப்படும் சினிமா என்பது அவனது நண்பர்களாலும் சுற்றத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. 

இக்கால கட்டத்தில் ஏற்படுகின்ற உடலியல் மாற்றங்கள், அம் மாற்றங்கள் சிந்தனையில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் என்பவை ஒருவனுடைய சுயமான பயணத்திற்கும், அவன் எதை நோக்கி நகர விரும்புகிறான் என்ற தேடலுக்கும் மெல்ல வழி கோலுகின்றன. குறிப்பாக பதினாறு வயது முதல் இருபது வயது வரை ஒருவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் விடயங்களில் ஒன்று எதிர்ப்பாலினம் மீதான கவர்ச்சி, மற்றையது சினிமா. பாலின கவர்ச்சி ஒருவரில் ஏற்படுத்தி விடக் கூடிய ஆதிக்கத்துக்கு ஈடான தாக்கத்தை சினிமாவும் ஏற்படுத்த வல்லது. இத்தகைய பருவப்படி நிலைகள் பலதை தாண்டி தனக்கான சுயத்தை ஒருவன் கண்டடைந்த பின்னர் ஒருவனால் விரும்பப்படும் சினிமாவை அவனுக்கான முக்கிய சினிமாவாக நான் கருதுகிறேன்.

16 Vayathinilea Movie Poster- Image credit to imdb.com

1974 வருடம் முதல் 1984 ஆவது வருடம் வரையான காலப்பகுதியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்கியராஜா, ருத்ரய்யா, மகேந்திரன் இப்படியான பலரின் திரைத்துறைப் பிரவேசம் தமிழ் திரைத்துறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது ‘இருபதாவது வயது’ கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் நிகழ்கிறது. என் சிந்தனையில் ஏற்பட்ட முதிர்ச்சி நிலையும் தமிழ் சினிமாவின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றமும் என இரண்டும் இணைந்த இக்காலகட்டத்தில் ‘பதினாறு வயதினிலே‘   வெளியாகிறது. இத்திரைப்படம் வெளியாகி  நீண்ட நாட்கள் கடந்த நிலையில் ஈரோட்டில் உள்ள திரையரங்கொன்றில் இத்திரைப்படத்தை நான் பார்க்கிறேன். அதை நான் பார்த்த போது அத்திரைப்படத்தில் இருந்த அனைத்துமே என் வாழ்வில் ஏற்கனவே சந்தித்தவையாக இருந்தன.

‘ அட ! என் சித்தப்பன் பெரியப்பன் இப்படிதான் இருப்பாங்களே….அட! நான் போற பாதை இப்படித்தான் இருக்கும்ல….இப்படித்தான் சுவரு இருக்கும்ல”

என அந்த சினிமாவில் காட்டப்பட்ட புவியியல், பண்பாடு, பழக்க வழக்கம், மொழி வழக்கு என எதுவுமே எனக்கு புதிதில்லை. ஆனால் என்னால் ஏற்கனவே அறியப்பட்ட அத்தனை மீதும் அதுவரை  இல்லாத புதியதான பார்வை ஒன்று அத்திரை ஊடு எனக்கு உண்டாயிற்று. இதற்கு முன்னர் எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தின் வாழ்வியல் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நான் பார்த்திருந்தாலும் இத்திரைப்படத்தின் வழியாக நான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் மீது எனக்கு உணர்த்தப்பட்ட புதிய சுவை என்பது, என்னை சூழ்ந்துள்ள அனைத்தின் மீதும் என் ரசனையையும் புதிய தரிசனத்தையும் தூண்டி விட்டது.

16 Vayathinilea- Image Credit to Behindwoods.com

பதினாறு வயதினிலே என் சிந்தனை மீது நிகழ்த்திய செல்வாக்கு, யாரோ ஒருவர் எம் வாழ்க்கைக்கான ஒரு புதிய மார்க்கத்தை எமக்கு இனம் காட்டுவது போலும் தனிப்பட்ட  வழி காட்டலின் குண நலன்களைக் கொண்டது. அதற்கு பின்னரான என் பயணம் என்னைச் சுற்றி அமைந்த பண்பாட்டின் மீதான களிப்பான பார்வையோடும் அழகியல் உணர்வோடும் எனை நகர்த்திற்று. பதினாறு வயதினிலே தனி மனிதனான என்னில் நிகழ்த்திய உணர்வு ரீதியான தாக்கத்தை தாண்டி, கதை, திரைக்கதை, வசனங்கள், தொழிநுட்பம், பாத்திர படைப்புகள் என்ற பலவற்றின்  நவீனத்தால் தமிழ் திரைத்துறையில் அன்று ஏற்படுத்திய அறிவார்ந்த தாக்கமும் இங்கு மிக முக்கியமானது.  தமிழ் திரை வரலாற்றின் ஒரு மைல் கல்லாக, நம் படைப்பு சமூகத்திற்கு கிடைத்த மிக முக்கியமான சினிமா என்ற வகையிலும் பதினாறு வயதினிலே எனக்கான முக்கிய தமிழ் சினிமாவாகும்.

என் வாசிப்பு பழக்கம் தீவிரம் அடைந்து நூலகங்களை நோக்கி நான் அலைந்து கொண்டிருந்த காலச் சூழலில், நூல்கள் சம்மந்தப்பட்ட அனைத்திலுமே எனக்கு ஓர் பிரமிப்பு இருந்தது. அக்கால கட்டத்தில் முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படுகிறது. இத்திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் என்பன நான் வாசித்த ஒரு புத்தகத்தை ஒட்டி இருந்தமை என்னுள் பெரும் வியப்பை ஏற்படுத்திற்று. எழுத்து திரைவடிவமாகும் மாதிரியையும் அதன் சுவாரசியத்தையும் முள்ளும் மலரும் திரைப்படத்தில் நான் அனுபவிக்கிறேன். கூடவே ‘புத்தகங்கள் சினிமா ஆக  முடியுமா?’ என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

Mullum Malarum Poster -PC- Google.com 

அந்த கேள்வி சினிமா பற்றிய விவாதங்களையும் உரையாடல்களையும் என்னிடத்தில்; தோற்றுவிக்க அக்கேள்விக்கான பதிலைத்  தேடி அதற்கு முன்னரான  சினிமா வரலாற்றை நான் ஆராய ஆரம்பிக்கிறேன். இப்படியாக சினிமா பற்றிய என் தேடலின் துவக்க புள்ளியாக முள்ளும் மலரும் அமைந்தது. அதுவரை நான் ரசித்த தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட நேர் எதிர் தோற்றத்தில் பறட்ட தலையும், கறுப்பு தோற்றமும், கழட்டி விடப்பட்ட பட்டன்களும்’ என இருந்த கதையின் நாயகன் மீது ஏற்பட்ட மாறுபட்ட ரசனை, இதற்கு முன்னர் ‘கதாநாயகன்’ பற்றி நான் கொண்டிருந்த விம்பத்தை உடைத்தது. 

கதையில் காணப்பட்ட உறவுகளின் முரண்கள், இத்திரைப்படத்தில் இருந்த தொழிநுட்பம் என்பனவும் அதுவரை இல்லாத புதிய சினிமா அனுபவத்தை எனக்கு தந்தன. முள்ளும் மலரும் என் ரசனையில் செலுத்திய இத்தகைய தனித்துவமான தாக்கத்தை போலவே தமிழ் சினிமா உலகிலும் தனித்தளத்தை பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய திரைப்படம்.

அக்கால கட்டத்திலேயே டீ.ராஜேந்தர், பாக்கியராஜ் ஆகியோரது  திரை உலக பிரவேசத்தால் புதுப்புது வடிவங்களில் சினிமாக்கள் வர ஆரம்பித்தன. அவை  எனக்கு விதவிதமான ரசனை அனுபவங்களை தந்தன. என் சினிமா ரசனையும் மெல்ல தீவிரம் அடைந்தது. அக் காலப்பகுதியில் பலவிதமான சினிமாக்களையும் உடனுக்குடன் பார்க்க ஆரம்பித்திருந்தேன். என் வாழ்வில் நான் அதிகப்படியாக சொன்ன பொய்கள்; என்பவை சினிமா பார்ப்பதன் பொருட்டு என் பெற்றோருக்குச் சொன்ன பொய்கள் தாம். 

நடிகர்களை மையப்படுத்தி சினிமாவை தேடுவதிலிருந்து நகர்ந்து இயக்குனர்களை மையப்படுத்தி என் சினிமாத் தேடல் ஆரம்பித்தது. இந்நேரத்தில் முள்ளும் மலரும் தந்த அதே இயக்குனர் ‘சிற்றன்னை’ என்கிற சிறுகதையை படமாக்கும் தகவலை அறிய நேர்கிறது. அந்த சிறுகதையை வாசிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு அதை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்திற்காக காத்திருந்து அந்தக் கதையை முதலில் திரை வடிவமாகப் பார்க்கிறேன். மிக சொற்பமான கதாபாத்திரங்களையும், மிக சொற்பமான வசனங்களையும் வைத்து தமிழ் சினிமா இதுவரை கையாளாத திரைமொழியில் எடுக்கப்பட்டிருந்தது அத்திரைப்படம். அதன் பெயர் உதிரிப் பூக்கள்.

Uthiri Pookkal – Image credit to JioSaavn.com

 அதுவரை நான் பார்த்த சினிமாக்களில் இல்லாத ஒரு பேரமைதியும் ஆழமும் அதன் திரைமொழியில் தொனித்தது. ‘சொல்லல்’ என்ற பதத்திற்கும் ‘உணர்த்தல்’ என்ற பதத்திறக்கும் இடையேயான நுட்பமான வேறுபாட்டை போல் அதுவரை எடுக்கப்பட்ட சினிமாக்களின் திரை மொழியினின்று மாறுபட்ட நுணுக்கமான திரை மொழி ஒன்றை அது கையாண்டிருந்தது. சினிமா ஒரு பாடமாக, சில பக்கங்களே ஆன சிறுகதையை ஒரு முழு நீள படமாக்குவது எப்படி என்கின்ற கற்றல் அனுபவத்தை உதிரிப்பூக்கள்  தந்தது. 

அதற்கு பின்னரான காலப்பகுதியில் என் திரைத்துறை பிரவேசம் நிகழ்கிறது. நான் திரைத்துறைக்குள் நுழைந்த தொடக்க காலங்களில் என்னை  பாதித்த சினிமாக்களும் கூட இலக்கியங்களின் பாதிப்பை கொண்டவைதான். அவற்றில் மிக முக்கியமானது முதல் மரியாதை. அதுவரை தமிழ் சினிமாவில் போற்றப்படாத உறவு நிலை ஒன்றை நுட்பமான உளவியல் அணுகுமுறையால் எடுத்தாண்டு ஜெயித்த திரைப்படம் முதல் மரியாதை. அத்திரைப்படத்தின் கதையும், கதை மாந்தர்களும், கதைக்களமும், இசையும் இன்றளவும் தனித்துவமான குணாதிசயங்கள் கொண்டவை. அதே காலத்தில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு கதைக் களத்தில் ஆண் பெண் உறவுச்சிக்கல்களை பேசிய மௌனராகமும் கதை சொல்லும் முறையாலும் , தொழிநுட்பத்தாலும், கதாபாத்திரங்களாலும், புதிய  போக்காலும் என் மேல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நூதனமான படைப்பு. 

எனை பாதித்த தமிழ் சினிமாக்களை நான் பின் நோக்கி ஆராய்ந்து கொண்டு போனால் அதில் அனேகமானவை இலக்கியங்களின் பாதிப்பு கொண்டவை என்பதை நான் உணர்கிறேன். இந்த ரசனைக்கான  காரணம் வாசிப்பின் மீதான என் நேசமாக இருக்கலாம். அதே போல் இத்தகு சினிமாக்கள் தந்த பாதிப்பே, ஜமீலா, அன்னை வயல் ஆகிய எனது திரைப்படங்களுக்கான கதைகளை இலக்கியங்களிலிருந்து நான் பெற்றுக் கொண்டதற்கான காரணங்களாக இருக்கலாம். 

இத்தகைய என் ரசனை போக்கை தாண்டி, நான் மிக அதிகமாகப் பார்த்த தமிழ் சினிமா அவ்வை சண்முகி. தமிழின் ஜனரஞ்சகமான சினிமாக்களின் மீதான என் ரசனை பட்டியலில் சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, ஜெகன் மோகினி போன்ற திரைப்படங்களை  குறிப்பிடலாம். தமிழ் சினிமாவிற்கு பல்வகை போக்குண்டு. தமிழ் சினிமாவின் இந்த பன்முகத்தன்மை சிறு வயது முதலே எம் ரசனைக்குள்ளும் நுழைந்து கொண்டதை எம்மால் மறைக்க முடியாது.

Avai Shanmuki -Image Credit Youtube.com

தமிழ் சினிமாவின் தனித்துவமான குண நலன்கள் உணர்ந்தே அதை நான் என்றும் அணுகுகிறேன். தமிழ் சினிமாவின் தாக்கம் என்பது தொழிநுட்பம தாண்டி அதன் கதையாலும், கதை சொல்லும் முறையாலும், கதா பாத்திரங்களாலும், நிர்ணயிக்கப்படுகிறது. தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. தொழிநுட்பம் இன்று தரும் வியப்பு என்பது, அதன் பின்னரான புதுமைகளில் மங்கிப் போக கூடும். ஆனால் ஒரு சினிமாவின் இருப்பென்பது அத்திரை எங்கள் மேல் உணர்வு ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் ஏற்படுத்தும் அதிர்வலைகளுடன் இறுக்கமாக பின்னப்பட்டது. 

நேர்காணல் மற்றும் கட்டுரை ஆக்கம் – அபிராமி பற்குணம்

Related Articles