நாயகன் : வரதராஜ முதலியாரும் வேலு நாயக்கரும்

நாயகன் 1987ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். அந்த காலக்கட்டத்தில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படமும் அதுவே. இதனை தயாரித்த திரு.முக்தா ஸ்ரீநிவாசன், இத்திரைப்படத்தை வெளியிட மறுத்த காரணத்தினால், இப்படத்தின் இயக்குனரான மணிரத்னத்தின் சகோதரர் G.வெங்கடேஸ்வரன், G.V.Films சார்பில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களில் நாயகனும் ஒன்று என்பதை எந்த சினிமா ரசிகனும் மறுக்க முடியாது. பிரபல பத்திரிக்கையான “டைம்” பத்திரிக்கை, உலகின் தலை சிறந்த 100 திரைப்படங்களின் வரிசையை வெளியிட்டது. அதில் இரண்டே இரண்டு இந்திய படங்கள் தான் இடம் பெற்றன. ஒன்று ”சத்யஜித்ரே”வின் ”அபூ” மற்றும் “நாயகன்”. இது தமிழ் சினிமாவுக்கு பெறுமை தான்.

வர்தாபாய் தான் வேலுபாய் யா?

1970 களிலும் 1980 களிலும் தாராவியில் வாழும் மக்களுக்காக தனி ராஜ்ஜியமே நடத்தி வந்த வரதராஜ முதலியாரின்  வாழ்க்கை சரிதத்தை மையப்படுத்தியே “நாயகன்” திரைப்படம் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் அத்திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னமும், கதாநாயகனாக நடித்த கமல்ஹாசனும். ஆனால் “நாயகன்” திரைப்படம் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை ஒற்றி இருப்பதைக் காட்டிலும் “மெர்லின் ப்ராண்டோ” நடிப்பில் வெளி வந்த “தி காட்ஃபாதர்” திரைப்படத்தின் தாக்கமே அதிகம் தெரிகிறது என்று பல காலமாக பல இடங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இதற்கு முக்கிய காரணம், “நாயகன் திரைப்படம் துவங்கிய காலம் தொட்டே, படத்தின் தயாரிப்பாளரான முக்தா ஸ்ரீநிவாசனும், இயக்குனர் மணிரத்னமும், பல விவாதத்திற்கு பிறகு கதைக் கருவை முடிவு  செய்தது தான்.

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் துணிச்சலான நடவடிக்கைகளால், வேலு நாயக்கரின் குடும்பம் பாதிக்கப்படுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக வேலு நாயக்கரின் மனைவியின் மறைவு போன்ற காட்சிகள். ஆனால் வரதராஜ முதலியாரின் நடவடிக்கையால் அவரது குடும்பம் எந்த காலத்திலும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அதற்கு ஒரே காரணம் தான், மும்பை காவல் துறையே வரதராஜ முதலியாரைக் கண்டு அச்சம் கொள்ளும். மும்பையின் தாராவில் வாழும் தமிழர்களுக்காக முதலியார் ஒரு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தியுள்ளார். நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த வரதராஜ முதலியார், வேலை தேடி மும்பைக்கு வந்ததாக சொல்கிறது சில குறிப்புகள். அது வேலை தேடி பட்டணத்திற்கு செல்லும் காலம். மும்பைக்கு வந்து சேர்ந்த வரதராஜ முதலியார் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என்று அழைக்கப்படும் அன்றைய விக்டோரியா டெர்மினஸ்ஸில் தஞ்சம் அடைந்தார் என்பது தான் வரலாறு. அதை காட்சி படுத்துகையில் சிறு வயது வேலு நாயக்கர், கம்யூனிச போராளியான தனது தந்தையை சுட்டுக்கொன்ற காவல் துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்று, தப்பித்து, மும்பைக்கு ஓடி வந்த்தாக சித்தரித்திருந்தார், மணிரத்னம்.

Vardabhai (Pic: dnaindia.com)

ஹஜி மஸ்தான் 

சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடி வந்ததால் வரதராஜ முதலியாரால் தனது படிப்பை தொடர முடியவில்லை. விக்டோரியா டெர்மினஸ் அருகே அமைந்துள்ள தாராவி என்கிற இடத்தில் தான் வளர்ந்தார். ஹஜி மஸ்தான் என்பவருக்கு கைக்கூலியாக செயல்பட்டு வந்தார். ஹஜி மஸ்தான் என்பவர் மும்பையில் ஒரு நிழல் உலக தாதா. அவர் கடல்வழியே பிலிப்ஸ் ரேடியோ மற்றும் கை கடிகாரங்களை இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வரவழைத்து வணிகம் செய்து வந்தார். அவரிடம் தான் வரதராஜ முதலியார் தனது வாலிபப் பருவத்தில் வேலை செய்து வந்தார். ஹஜி மஸ்தானிடம் வேலை செய்து வரும் காலத்தில் காவல் துறையினரால் தாராவியில் வாழும் அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தான், தானும் ஹஜி மஸ்தான் போன்றதொரு வலிமையான மனிதனாக வளர முடிவு செய்தார் வரதராஜ முதலியார். வரதராஜ முதலியாரின் துணிச்சலும், பிரச்சனை என்றால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பண்பும் அன்று ஹஜி மஸ்தானுக்கு போட்டியாக கடத்தல் செய்து வந்த பண முதலைகளை பொறாமை அடைய செய்தது. காரணமே இல்லாமல் காவல் துறை அதிகாரிகள் தாராவி மக்கள் மீது வீன் பழிகளை சுமத்தி வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்திய கதைகள் உண்டு.

மேலே குறிப்பிட்ட செய்தி, திரைப்படத்தில் கிட்டத்தட்ட உண்மை சம்பவத்தை ஒட்டியே சித்தரிக்கப்பட்டிருந்தது. வரதராஜ முதலியார் கதாப்பாத்திர சித்தரிப்பான வேலு நாயக்கர் கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு தன்னிறைவாக அமைந்திருக்கும். அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் வரதராஜ முதலியாரின் உடல் மொழியை முழுவதுமாக புரிந்து, கிரகித்து வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. கமல்ஹாசன், வரதராஜ முதலியாரை சந்தித்திருக்கவே வாய்ப்பில்லை. இருப்பினும் கமல்ஹாசனால் அந்த கதாப்பாத்திரத்தை நம் கண் முன் நிறுத்த முடிந்ததற்கு காரணம், ”மெர்லின் ப்ராண்டோ” வாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருபத்தேழு வயதே ஆன கமலுக்கு ஒரு தாதாவின் உடல்மொழி பற்றிய அறிவு கொஞ்சம் இருந்திருந்தாலும், நாயகன் திரைப்படத்தில் கமலின் நடிப்பில் காட்ஃபாதர் திரைப்படத்தில் ”மெர்லின் ப்ராண்டோ” வின் உடல் அசைவுகளை உற்றுப் பார்த்தால் கண்டுகொள்ள முடியும்.

Vardhabhai & Haji Masthan (Pic: bhindibazaar.asia)

மணிரத்னத்தின் துணிச்சல் 

வரதராஜ முதலியார் உயிருடன் இருக்கின்ற காலகட்டத்திலேயே அவரது வாழ்க்கை சம்பவங்களை ஒட்டி காட்சிகளைக் கொண்ட ஒரு படத்தை இயக்கிய மணிரத்னத்தின் துணிச்சல் நிச்சயமாக 1960 முதல் 1980 வரை தாராவியில் வாழ்ந்து வந்த தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த வரதராஜ முதலியாரின் துணிச்சலுக்கு நிகரானதுதான். அதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, திரைப்பட்த்தின் உச்சக்கட்ட காட்சியை படம்பிடிப்பதற்கு முன் மணிரத்னம், முதலியாரை சந்தித்து, தங்களது முடிவு எவ்வாறானதாக இருக்க விரும்புகிறீர் ? என்று கேட்டு, பின் சில விடயங்களை பகுத்தாய்ந்து உச்சக்கட்ட காட்சியை படம் பிடித்தார் என்கின்றனர்.

நாயகன் படத்தில் வேலு நாயக்கரின் இளம் வயது தோற்றம், வரதராஜ முதலியாரின் இளம் வயது தோற்றத்தோடு பெரிதாக ஒற்றுப்போகவில்லை என்றாலும், முதிய தோற்றத்தில் கிட்டத்தட்ட வரதராஜ முதலியாரை கொண்டு வந்திருப்பார் அந்த ஒப்பணைக் கலைஞர். இந்த உருவ ஒற்றுமையைப் பற்றி அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் ஒப்பணை கலைஞரின் நேர்த்தியை குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.

Smiling Maniratnam (Pic: bfi.org.uk)

வரதராஜ முதலியாரின் மந்திரம் 

ஒரு நிழல் உலக தாதாவை கதா நாயகனாக சித்தரித்து எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்கும் வரதராஜ முதலியார் கூறும் ஒரு வாக்கியம் காரணமாக அமைந்தது தான் ஆச்சர்யம். “தர்மத்தை நிலை நாட்ட என்ன வேண்டுமானாலும் செய்யலாம்”,என்பதே அந்த வக்கியம் ம்ம்ம் இல்லை இல்லை மந்திரம், ஆம் பகவத் கீதையில் கூறப்படுகின்ற நீதியே வரதராஜ முதலியாரின் பிரதான மந்திரமாக இருந்தது. அதை அப்படியே வேறு வடிவத்தில் வசனமாக்கியிருப்பார், நாயகன் திரைப்பட்த்தின் வசனகர்த்தா… “ நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை “ என்பதே அது.

”தயவான்” என்கின்ற பெயரில் வினோத் கண்ணா நடிப்பில் இந்தியில் ”நாயகன்” படத்தை எடுத்தார் பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஃபெரோஸ் கான், அது பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan, Maniratnam & Balakumaran  (Pic: twitter.com/www.desimartini.com/alchetron.com)

அவரது வெள்ளை மனம் 

வரதராஜ முதலியார், தாராவியின் அநேக மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பதற்கு காரணம் அவர் துணிச்சலாக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தது மட்டுமல்லாது அவரோடு வாழ்ந்த மக்களின் வருமையையும் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தார். தாராவியில் இருக்கும் தர்காவிற்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவந்தார். தாராவியில் வாழும் மக்களின் நலன் காக்க தனது சொந்த செல்வில் ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்தார். அதுவும் அது தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் என்கின்ற வழக்கமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண குப்பத்தில் இருக்கும் ஒரு தனி மனிதன் தனது மக்களுக்காக தனியாக ஆம்புலன்ஸ் வசதி துவங்கி நடத்தியது, மும்பையையே மெய் சிலிர்க்க வைத்தது.

மேலே குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் சம்பவத்தை ஒட்டி அமைக்கப்பட்ட காட்சி திரைப்பட்த்தில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். அதிலும் கமலது நடிப்பும் மணிரத்னத்தின் காட்சி மொழியும் P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் ஒருங்கே இணைந்து பார்வையாளரின் மனதை குடையும் வண்ணம் நேர்த்தியாக அமைந்திருக்கும்.

பொதுவாக ஒரு சுயசரிதைத் திரைப்படங்களில் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் கதைகள் கூட மக்களுக்கு ஓரளவுக்கு பரீட்சியமான கதைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த திரைப்படங்கள் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். ஊடகங்கள் பெரிதாக வளர்ச்சி பெறாத அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு வரதராஜ முதலியாரை தெரிந்திருப்பதே பெரிய விடயம் தான். அந்த காலக்கட்டத்தில் அந்த மாமனிதனின் சுயசரிதையை சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கிய மணிரத்னத்தை பாராட்டியாக வேண்டும்.

Puer Hear of Vardha Bhai (Pic: youtube.com )

ஆலமரமாய் வளர்ந்த விதை 

நாயகன் திரைப்படத்தில் சித்தரித்தது போல் வரதராஜ முதலியாருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை தானா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் வரதராஜ முதலியாரின் குடும்பத்தார் இன்றும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தாராவியை ஒட்டிய ரயில் நிலையத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்களாம். அது தனது குணத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்தியிருப்பது புலப்படுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய விடயம் தலை சிறந்த திரைப்படத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மணிரத்னம், கமல், முக்தா ஸ்ரீனிவாசன் மட்டுமல்ல வரதராஜ முதலியார் என்கிற மாமனிதரும் தான்.

Web Title: Nayakan veluNayakkar is Vardha Bhai
Featured Image Credit : upperstall.com

Related Articles