Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஷெர்லக் ஹோம்ஸ் – நூற்றாண்டுகள் கடந்தும் நேசிக்கப்படும் கதாபாத்திரம்!

221B, பேக்கர் வீதி, லண்டன் – இந்த முகவரிதான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லக் ஹோம்ஸ் வசித்ததாக உருவகப்படுத்தப்பட்ட முகவரி. ஒரு காலத்தில் வாடகைக்கு விடும் இடமாக இருந்த இந்த முகவரிக்குரிய மூன்று மாடிகள் கொண்ட கட்டடம், இப்போது ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகமாக, பாரம்பரியச் சிறப்புள்ள இடமாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.

‘ஹோம்ஸ்’ இந்தப் பெயரைக் கேட்டாலே துப்பறியும் கதை விரும்பிகளுடைய இரத்தத்தில் ஒருவிதச் சூடு ஏறுவதை உணரலாம். அதற்குக் காரணம், அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு என்றால் மிகையல்ல.

இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கி, அதனை இரத்தமும் சதையுமாக உலகெங்கும் உலவவிட்டவர் ஜீனியஸ் எழுத்தாளர் எனக் கொண்டாடப்படும் சர்.ஆர்தர் கோனன் டாயில்.

படம் – ihearofsherlock.com

அடிப்படையில் ஒரு மருத்துவரான சர்.ஆர்தர் கோனன் டாயில், விஞ்ஞானப் புனை கதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் எனப் பல விதமான படைப்புகளைத் தந்த ஒருவர்.

The Lost World என்ற இவரது படைப்பு, அழிந்துபோன உலகின் பகுதியொன்றினுள் நுழைபவர்களுடைய அனுபவங்களைச் சொல்வதாக அமைந்தது. இந்த உலகினுள் டைனோசர்கள் போன்ற அரிய உயிரினங்களும் இருப்பதாக அவரது புனை கதை சொல்லியது. இதுவே பின்னாளில் எமக்கு ‘ஜூராசிக் பார்க்’ போன்ற திரைப்படங்கள் உருவாக அடிப்படையான புனைவாகும்.

ஏராளமான சிக்கல் நிறைந்த மர்ம முடிச்சுக்கள், அவற்றை விடுவிப்பதற்கான தடயங்களைத் தேடும் ஹோம்ஸ், இடையில் தடதடவென அரங்கேறிடும் பல கிளைச் சம்பவங்கள் என்று நகரும் கதைகளின் இறுதியில் அத்தனை மர்மங்களின் முடிச்சுகளையும் சிறு புன்னகையோடு ஹோம்ஸ் விடுவிக்கும்போது வாசிப்பவர்களுக்குப் புல்லரிக்காமலிருந்தால் ஆச்சரியம்தான்.

சேர் ஆர்தர் கனன் டாயில். படம் – telegraph.co.uk

இப்படியானதொரு கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு மருத்துவரான டாயிலுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? இதைப்பற்றி விளக்கும் ஆவணப்படங்கூட உண்டு.

எடின் பேர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் ஜோசப் பெல். இவர் தடயவியலில் மிகப் பெரும் ஜாம்பவானாக இருந்தவர். 1877 இல், இவரிடம் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்த டாயில், இவரது ஆற்றலால் ஈர்க்கப்படுகிறார்.

எந்தவொரு சம்பவத்தினையும் தடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு உருவகப்படுத்திவிடக்கூடிய அவரது ஆற்றல் டாயிலிடம் ஒரு தீப்பொறியை உருவாக்குகிறது. டாக்டர் ஜோசப் பெல்லின் ஆற்றலை இன்னும் மெருகேற்றி, ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தைப் படைக்கிறார் டாயில். அதுதான் நூற்றாண்டுகள் கடந்தும் வாசகர்களையும் இரசிகர்களையும் ஈர்த்துவரும் ‘ஷெர்லக் ஹோம்ஸ்!’.

ஹோம்ஸ் கதாபாத்திரம் அறிமுகமானது A Study in Scarlet என்ற நாவலின் மூலமாகத்தான்.

படம் – thisengland.co.uk

இந்தக் கதை, பின்னாளில் ஹோம்சின் வலது கரமாக, நெருங்கிய நண்பராகத் தொடரும் டாக்டர் வாட்ஸனின் பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்டது. தங்குமிடம் தேடிடும் இருவரும் இன்னுமொரு நண்பரின் மூலமாகச் சந்தித்துக்கொள்கின்றனர். அவர்களிருவருமாக வாடகைக்குக் குடிவரும் இடம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 221B, பேக்கர் வீதி, லண்டன் என்ற முகவரியிலுள்ள கட்டிடம்.

ஆரம்பத்தில், ஹோம்சைப் பற்றி அறிந்துகொள்ளவே சிரமப்படும் வாட்ஸன், அவரது அபார தடயவியல், நுண்ணறிவு, தர்க்க சாஸ்திரம், இரசாயன, குற்றவியல் சம்பந்தமான திறமைகளைக் கண்டு அவர்பால் ஈர்க்கப்பட்டு நட்பைப் பலப்படுத்திக்கொள்கிறார்.

பின்னர், இருவருமாக பல்வேறு சாகசங்களை நடத்திட, அவை வாசகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

படம் – lrincondelalienpensador.blogspot.com

டாயில், வெறுமனே மூளை சாலியாக மட்டும் ஷெர்லக் ஹோம்சைப் படைத்திடவில்லை. குத்துச் சண்டை, கத்திச் சண்டையிலும் தேர்ந்தவராக இரசனையுள்ள வயலின் கலைஞராக அவரது பாத்திரத்தை பரிணமிக்கச் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு சம்பவத்தினதும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும்போதும், தன்னுடைய கண்டுபிடிப்புகளைப் பெருமை பொங்க, புன்னகையோடு ஹோம்ஸ் அவிழ்த்திடும் பாணியில், அவர் ஒரு தற்பெருமைக்காரர் என்பதாகவும் காண்பித்துள்ளார்.

ஐம்பத்தாறு சிறுகதைகளும் நான்கு முழு நாவல்களும் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை வைத்து சர்.ஆர்தர் கோனன் டாயிலினால் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் ஆரம்பங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கும்.

பாதிக்கப்பட்ட யாரேனுமொருவர் ஹோம்சுடைய இல்லத்தைத் தேடிவந்து தனக்கு உதவிடுமாறு கூறுவதோடு கதை ஆரம்பிக்கும். சில நேரங்களில், அவ்வாறு தேடி வந்தவரேகூட இறுதியில் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவதுண்டு.

ஹோம்சை எதிர்த்திடும் பிரதான எதிரியாக புரபஸர் மோரியார்டி என்ற கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஹோம்சைப்போலவே பல்வேறு ஆற்றல்கள் கொண்ட, ஆனால் கிரிமினல் புத்திகொண்ட நபராக அவர் உருவாக்கப்பட்டுள்ளார். இந்தக் கதாபாத்திரம், ஹோம்ஸ் கதைகளில் விறுவிறுப்பினை ஏற்படுத்துவதில் உதவிடுகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் காமிக்ஸ் கதைகளாகவும், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களாகவும் பரிணமித்து உலகெங்கும் ஏராளமாக இரசிகர்களை ஈர்த்திருக்கின்றன.  மேடை நாடகங்களில் பார்வையாளர்களைக் கவர ஆரம்பித்த ஹோம்ஸ்,மௌனப்படங்களின் உருவாக்க காலத்திலிருந்தே திரையில் உலாவ ஆரம்பித்துவிட்டார்.

ஏப்ரல் 24, 1984 முதல் ஏப்ரல் 11, 1994 வரை The Adventures of Sherlock Holmes என்ற பெயரில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர்தான், டாயிலின் எழுத்துக்களோடு மிகவும் பொருந்தியதாக அமைந்ததாக ஹோம்ஸ் இரசிகர்கள் கருதுகின்றனர். இந்தத் தொடரில் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த Jeremy Brett தான் இதுவரை அந்தப் பாத்திரத்தை ஏற்றவர்களில் மிகப் பொருத்தமானவராகவும் கொண்டாடப்பட்டுவருகிறார்.

படம் – nplh.co.uk

ஷெர்லக் ஹோம்ஸ் என்ற இந்தக் கதாபாத்திரம் எவ்வளவு வலிமையானதாக வாசகர் மத்தியில் இடம்பிடித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.  The Adventure of the Final Problem  Reichenbach என்ற தலைப்பில் 1983 டிசம்பரில் வெளியான சிறுகதையில், சுவிட்சர்லாந்தின் Reichenbach மலையருவியின் உச்சியில் புரபஸர் மோரியார்ட்டியோடு மோதும் ஹோம்ஸ், காணாமல் போயிவிடுவதாகவும் அவர் இறந்துவிட்டார் என எண்ணப்படுவதாகவும் கதையை முடித்திருப்பர் டாயில்.

தொடர்ச்சியாக ஹோம்ஸ் கதைகளை எழுதிவந்ததால் சலித்துப்போய் அந்தத் தொடருக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திடவே டாயில் அவ்வாறு அந்தக் கதையை நிறைவுசெய்ததாக நம்பப்படுகிறது. ஆயினும், வாசகர்களிடமிருந்து வந்த பலமான எதிர்ப்பினை அடுத்து ஷெர்லக் ஹோம்சை மீளவும் உயிர்ப்பிக்கவேண்டிய கட்டாயம் டாயிலுக்கு நேர்ந்தது. அதனையடுத்து, The Adventure of the Empty House என்ற கதையில் ஹோம்ஸ் உயிரோடு இருப்பதை அவரது சகோதரரும் டாக்டர் வாட்சனும் அறிவதுபோல ஆரம்பித்து, அவரை வெளிக்கொணர்ந்திருப்பார் டாயில்.

இந்த ஒரு சம்பவமே, ஷெர்லக் ஹோம்ஸ் என்ற அற்புதக் கதாபாத்திரத்தின் மேல் வாசகர்களும் இரசிகர்களும் வைத்திருக்கும் அபிமானத்தை நிரூபித்திடப் போதுமானதாகும். நூற்றாண்டுகள் நடந்தும், இந்த நவீன உலகிலும் ஆச்சரியத்தோடு அணுகப்படும் கதாபாத்திரமான இந்த ஷெர்லக் ஹோம்ஸ், இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் வாசகர்களாலும் இரசிகர்களாலும் நேசிக்கப்பட்டுக் கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை.

Related Articles