Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தென்னிந்திய பாரம்பரிய வீர விளையாட்டுகள்

பாரம்பரியம் என்பது தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டுகள் கடந்து நம்முடன் கலந்தவை. இவ்வாறாக நம்முடன் தொடரும் விஷயங்களில் விளையாட்டுகள் முக்கியமான ஒன்று. பாரம்பரிய விளையாட்டுகள் என்பது நம் கலாச்சாரம் மற்றும் அதன் பிறப்பிடமான நிலத்தின் மொழியோடு பின்னி பிணைந்தவை. வம்சாவளியாக வரும் விளையாட்டுகள் நம் அறநெறி, ஒழுக்கம், பண்பாடு, வீரம் ஆகியவற்றை விதைக்கின்றன என்றால் அது மிகையாகாது. தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகள் ஆடவர், மகளிர், சிறுவர், சிறுமியர் என்று அனைத்து தரப்பினருக்குமான நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை உள்ளடக்கியது. இதில் ஒரு சில விளையாட்டுகள் மட்டும் நம்முடன் நீண்ட நெடிய வரலாற்றுச்சுழற்சி மற்றும் வாழ்க்கை சக்கரத்தில் நம்முடன் பயணிக்கின்றன. ஆடவர்க்கான வெளிக்கள விளையாட்டுக்கள் தற்காப்புக்காகவும், போர் பயிற்சிக்காகவும் வீரத்தையும் கம்பீரத்தையும் பறைசாற்றவும் விளையாடப்பட்டன.

தென்னிந்திய வீர விளையாட்டுகள்

தென்னிந்தாவை சார்ந்த தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் அவர்களது விளையாட்டுகள் உடலை வலுப்பெறவும், விவசாயத்தை ஒட்டிய விலங்குகளை கொண்டும் இருந்தன. சேவல் சண்டை, சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல், ரேக்ளா பந்தயம், கர்நாடகாவில் விளையாடப்படும் கம்பாலா எருது பந்தயம், ஆந்திராவின் மாட்டு வண்டி பந்தயம் போன்றவைகள் பெரும் வரவேற்பை பெற்றவை. கேரளத்தின் பெரும்பகுதி நீர் நிலைகளால் சூழ்ந்தமையால் அங்கு நடைபெறும் கண்ணை கவரும் படகு பந்தயம் உலக பிரசித்தி பெற்றது.

Traditional Games (Pic: newindianexpress)

சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல்

மாடுகளின் கழுத்தில் உள்ள வளையம் சல்லி எனப்படும். பழங்கால நாணயங்களை “சல்லிக்காசு” என்றும் அழைத்தனர். மாட்டை அடக்கி அதன் கழுத்தில் இருக்கும் நாணய முடிச்சுகளை அவிழ்ப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவதால் “சல்  லிகட்டு” என்று அழைக்கப்பட்டு அது மருவி “ஜல்லிக்கட்டு” என்றாயிற்று. மாடுகளின் கொம்புகளிலும் பண முடிச்சுகளை  கட்டி போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கும் நடைமுறையும் உள்ளது.

சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் வாயிலாக சுமார் 20௦0 ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு விளையாடப்பட்டதை நாம் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களிலும் இவற்றை பற்றிய குறிப்புகள் பாடல்களாக உள்ளன. முல்லை நில மக்களின் வாழ்வியல் பண்புகளை விவரிக்கும் பாடல்களில் ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் மாலை ஆயர் குல ஆடவர் மற்றும் பெண்கள் ஆடிப்பாடி மகிழும் பொழுது பெண் தன் ஆடவரை ஏறு தழுவ தூண்டும் வண்ணம் பாடல்கள் இருக்கும். வீரமிக்க ஆயர்மகனுக்கே தன் மகளை மணமுடிப்பார் தந்தை. அது போல் வீரமுள்ள ஒருவனையே காதல் கொள்வாள் ஆயர் குலமகள்.

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், அவ்வேரி மலர்க்கொதையாள்’

என்று வரும் சிலப்பதிகாரப் பாடலில் சீறி வரும் கருப்பு நிற ஏற்றினை அஞ்சாமல் அடக்குபவரை தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்தவள் விரும்புவாள் காதல் கொள்வாள் என்பதை உரைக்கும் இப்பாடல்.

முல்லை பிரதேசம் என்று இலக்கியங்கள் குறிப்பிட்டிருந்தாலும் மதுரை மற்றும் அதன் பகுதிகளில் சல்லிக்கட்டு இன்று வரை பிரபல்யம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே போட்டிகள் நடந்தாலும், வருடம் முழுவதும் வாரம் தோறும் காளைபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளுக்கேற்ற சத்தான உணவு புரதத்துடன் வழங்குகின்றனர். கலாச்சார சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் தை பொங்கல் அன்று ஆண்டுதோறும் மதுரையை வந்தடைகின்றனர்.

Jallikkattu (Pic: rahulsadagopan)

புகழ்பெற்ற கம்பாலா எருது பந்தயம்

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதிகளான தட்சிண கர்நாடகா என்று அழைக்கப்படும் மங்களூர் மற்றும் உடுப்பி ஆகிய பிராந்தியத்தில் விளையாடப்படுகிறது. விவசாயிகளுக்கான பண்டிகையான கம்பாலா கத்திரி மஞ்சுநாதா எனும் கடவுளுக்கு காணிக்கையாக அளிப்பதாக ஒரு நம்பிக்கை. கத்திரி மஞ்சுநாதா சிவ பெருமானின் மறு பிறப்பாக வழிபடுகின்றனர். வரலாற்று சுவடுகளில் தட்சிண கர்நாடகத்தை ஆண்டு  வந்த ஹொய்சாலா மன்னர்கள் எருதுகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை போர்களுக்கு பயன்படுத்தி வந்தனர். போர்க்களத்தில் அதன் வேகம் மற்றும் சீற்றத்தை கண்டு வியந்த மன்னர்கள் எருதுகளை கொண்டு ஓட்டப்பந்தயங்களை நடத்தி மகிழ்ந்தனர். அரச குளத்தின் ராஜ விளையாட்டாக ஆரம்பித்த கம்பாலா பின் அது மக்களிடையே தொடர்ந்து விளையாடப்படுகிறது. நூற்றாண்டுகளைக் கடந்து வரும் கம்பாலாவிற்கு மக்களிடையே பெருந்திரளான வரவேற்பு எப்போதும் உண்டு. சேரும் சகதியுமான 12 மீட்டர் அகலமும் 16௦ மீட்டர் நீளமும் கொண்ட பாதை அமைக்கப்பட்டு எருதுகளை ஒடவிடுவர். இது ஒருவகை போட்டி என்றால் மற்றொரு வகையில் ஏர்பூட்டிய எருதுகளின் பின்னால் ஏரின் பின் பகுதியில் ஒரு நபர் ஏறி நின்று கொண்டு எருதை செலுத்துவார். தண்ணீர் தெறிக்க அதிவிரைவாக எருதுகள் சீறிப்பாயும் பொழுது காண்பதற்கு மிக அழகான பரபரப்பான விளையாட்டை கண் இமைக்காமல் ரசிக்காத கண்கள் இல்லை.

Kambala (Pic: youtube)

சேவல் சண்டை

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் சேவல் சண்டையும் ஒன்று. சண்டைகளுக்காக வளர்க்கப்படும் சேவல் வகைகள் பல நூற்றுக்கானவை. அவைகளின் போர் குணம், பார்வை, கம்பீரம், நடை, வீரம் ஆகியவற்றை கொண்டு வாங்கப்பட்டு பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. வரையப்பட்ட வளையத்தில் சேவலின் கால்களில் சிறிய கத்தி ஒன்றை அதன் நகத்தோடு கட்டி ஒன்றோடு ஒன்று மோத விடுவர். காயமடைந்த அல்லது மீண்டும் தாக்கமுடியாத கட்டத்தில் உள்ள சேவல் தோற்ற சேவலாக அறிவிக்கப்படும். வென்ற சேவலின் உரிமையாளருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். நூற்றாண்டுகள் கடந்த வரலாறு “கட்டு சேவல்” என்றழைக்கப்படும் சேவல் சண்டைக்கு உண்டு. இது நமது சிந்து சமவெளி நாகரீகத்தின் விளையாட்டு என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் பரவலாக ஆங்காங்கே விளையாடப்பட்டாலும் தென் இந்தியாவில் மிக பிரபலம்.

Cock Fight (Pic: livelaw)

மற்ற வீர விளையாட்டுகள்

இதே போல் “ஜத்ரா” எனும் பண்டிகையின் போது மகாராஷ்டிரா மக்கள் நடத்தும் ஏர் பூட்டிய மாடுகளின் ஓட்டப்பந்தயங்கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் பரவலாக நடத்தப்படும் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயம், ராஜஸ்தானில் புஷ்கர் திருவிழாவன்று நடத்தப்படும் ஒட்டக பந்தயம் மற்றும் குதிரை பந்தயம் இவையனைத்தும் அதனதன் கலாச்சாரத்தோடு ஒன்றியவை. நம் நாட்டில் மட்டும் அல்லது ஸ்பெயின், பிரான்ஸ், மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் பாரம்பரிய விளையாட்டான பெரிய எருதுகளுடன் வீரர்கள் சண்டையிடுதல், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கும் யானை மேல் அமர்ந்து போலோ விளையாடுதல், கொலம்பியா, பிரான்ஸ், மெக்ஸிகோவில் நடைபெறும் சேவல் சண்டைகள், ஜப்பான் மற்றும் ரஷியாவின் ஒரு சில பகுதிகளில் நடக்கும் நாய்களுக்குள்ளான சண்டை போட்டி, உலக புகழ் பெற்ற நமது ஒலிம்பிக் போட்டிகளின் குதிரை சவாரி மற்றும் துருக்கி நாட்டின் ஒட்டகங்களுக்கான மல்யுத்தம் போன்ற போட்டிகளில் பெரும் பகுதி இன்றளவும் விளையாடப்பட்டு வருகிறது.  பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அவை நம்மை பூர்வீக பந்தத்தை, வேர்களை நினைவூட்டுகின்றன. சமூக தொடர்பு, பரிவர்ந்தனை, தாய்மொழி வளர்ச்சி என்று பல காரணங்களும் உள்ளன.

மாநில விளையாட்டு ஆணையத்தில் இவ்வகை விளையாட்டுகள் சேர்க்கப்படுவதில்லை. இவ்வகை விளையாட்டுகளை கலாச்சார அல்லது பாரம்பரிய விளையாட்டுகள் பட்டியலில் சேர்க்க கோரி ஆண்டுதோறும் கோரிக்கைகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. விலங்குகள் நல ஆணையம் இயற்கையின் வரங்களான சூரியன், மண், நீர் மற்றும் கொண்டாடப்பட வேண்டிய அறுவடைக்கு உதவும் விலங்குகளை போற்றி பேணி பாதுகாப்பது மட்டுமே அவைகளுக்கு நாம் செலுத்தும் நன்றி என்ற வாதத்தை முன் வைக்கிறது. ஆயிரக்கணக்கானோர் நிறைந்த அரங்கில் விலங்குகளை சாட்டையால் அடித்தல் மற்றும் சண்டையிடும்படி மிரட்டுதல் போன்றவற்றால் அவை பயம் கொள்ளுதல், மலட்டுத்தன்மை அடைதல் மற்றும் அவைகளின் இறப்புகள் போன்றவற்றால் இதற்கான தனி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Boxing (Pic: dnaindia)

வீர விளையாட்டில் விலங்குகள்

இந்திய விலங்குகள் வதை தடுப்பு சட்டம், வருடம் 1960 ன் படி விலங்குகளின் நலத்திற்கு தீங்கு விளைவித்தல், காரணமின்றி வலி மற்றும் துன்பத்தை தருதல் போன்றவை தடை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கட்டுப்பாடுடன் நடத்தப்பட்ட இவ்வகை விளையாட்டுகள் காலப்போக்கில் கட்டுபாட்டை இழந்து சூதாட்ட களமாகவும் மாறி விட்டதாலும், தவிர்க்க முடியாத உயிரிழப்புகளினாலும் இவ்வகை போட்டிகளில் பெரும்பாலானவை இப்பொழுது தடை உத்தரவில் உள்ளன.

விலங்கியல் ஆர்வளர்கள், மனித உரிமை ஆணையம், நீதி துறை மற்றும் அரசு இவ்வாறான போட்டிகளில் ஒன்றை விலக்கி மற்றொன்றை அனுமதிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறது. இதுவரை உலகம் கண்டிராத வகையில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து நாள் கணக்காக நடத்திய போராட்டத்தின் விளைவாக சல்லிக்கட்டு தடையில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துள்ளது. இப்பொழுது கர்நாடகா மக்கள் கம்பாலா தடையை நீக்க கோரி போராட்டங்கள் நடத்துகின்றனர். மகர சங்கராந்தியன்று ஆண்டுதோறும் சில நூறு கோடி ருபாய் பரிசுகள் அறிவித்து அணைத்து விதமான போட்டிகளையும் நடத்தும் ஆந்திர மக்கள் இப்பொழுது அவைகளை அறிவிப்பின்றி சிறியளவில் நடத்த துவங்கி விட்டனர்.

Protest (Pic: cbkwgl)

இதற்கென்று ஒரு தனி ஆணையம் அமைத்து அனைத்து மாநில பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவித்தல் நலம். சூதாட்டம் போன்ற சட்ட விரோதமான விஷயங்களை தவிர்க்க தொலைக்காட்சி உரிமம், விளம்பர தாரர்களை ஊக்குவித்தல் போன்றவற்றால் போட்டிகளை முறைப்படி நடத்தி கொள்ளலாம். தொழில்நுட்ப புரட்சியால் சிதிலமடைந்த மனித உறவுகளும், மனித ஆரோக்கியமும் மீண்டும் தழைத்தோங்கும். ஆரோக்கியமான சமுதாயம் வளமான ஒரு எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

Web Title: South Indian Tradiitonal Sports

Featured Image Credit: livelaw

Related Articles