மிளகாயும் தெற்காசியாவும்

“வாழ்க்கையில உப்பு உறைப்பு ஒண்டுமே இல்ல”  இது நாம் சாதாரண வாழ்வில் அடிக்கடி கேட்கின்ற ஓர் விரக்தி வசனம். அதென்ன உப்பும் உறைப்பும்? வாழ்க்கைக்கும் அதற்கும் என்ன தொடர்பு? எப்போதாவது இம்மொழிப் பிரயோகத்தின் சிலேடை பற்றி சிந்தித்திருக்கிறோமா! ஆம், உணவின் சுவையை தீர்மானிக்கும் அடிப்படையான இரு கூறுகளே உப்பும் உறைப்பும். சுவையான உணவில் உப்பும் உறைப்பும் அளவாக இருக்கும், அதுபோன்றே வாழ்க்கை சுவையாக இருக்கிறதா இல்லையா என்பதை புலப்படுத்த இவ்வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை? இக்கட்டுரை வாழ்க்கை பற்றியதா உப்பு உறைப்பு பற்றியதா என்ற கேள்வி எழமுன்னர், உப்பிலிருந்து உறைப்பை வேறுபடுத்தி தலைப்பாக இட்டுக்கொள்வோம். வீட்டு உணவு, கடை உணவு, வெளியூர் உணவு, வெளிநாட்டு உணவு இப்படி உணவுகளின் தன்மை இடத்துக்கிடம் வேறுபடும். பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பழக்கவழக்கங்கள், காலநிலை, வளங்களின் கிடைப்பனவு, முதன்மை விவசாயம், மத நம்பிக்கைகள் போன்றவை உணவின் தன்மையில் செல்வாக்குச் செலுத்துவது நாம் அறிந்ததே. இருந்தும் உணவின் கார சுவைக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் வேறுபாடு, மற்றும் உற்பத்தி முறை போன்றவை உணவின் சுவைக்கு ஆதாரம் என்றால் மிகையல்ல.

நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தாங்கள் மாற்றிக்கொண்டாலும், உணவு என்று வரும்போது தங்கள் தங்கள் ஊர்களிலிருந்து பொட்டலம் பொட்டலமாக மிளகாய் பொடியை வரவழைத்து சமையலுக்கு உபயோகிக்கின்றதை கண்கூடு காண்கிறோம். (topnop.ir)

பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், மிளகு, குடமிளகாய், கறிமிளகாய், மிளகாய்த் தூள், துண்டு மிளகாய் இப்படி சமையலின்போது எத்தனையோ வகைகளில் உறைப்புக்கான உள்ளீட்டை உணவின் அடிப்படையில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். இருந்தும் அதன் அளவு மற்றும் சேர்மானம் போன்றவை உணவின் மொத்த அனுபவத்தையே நிர்ணயிக்கும் என்பது சமையல் கலையின் ரகசியம். அது அறிந்தே, இன்று வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் புலம்பெயர்ந்து வாழும் பலர் அங்குள்ள நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தாங்கள் மாற்றிக்கொண்டாலும், உணவு என்று வரும்போது தங்கள் தங்கள் ஊர்களிலிருந்து பொட்டலம் பொட்டலமாக மிளகாய் பொடியை வரவழைத்து சமையலுக்கு உபயோகிக்கின்றதை கண்கூடு காண்கிறோம்.

மனிதன் தனது வாழ்நாள் முழுதும் ஓடி ஓடி உழைப்பது இந்த எண்சாண் உடம்பில் இருக்கும் ஒரு சாண் வயிற்ருக்காகத்தான். ஆக உணவு என்னும் அடிப்படை மனிதனின் சுகாதாரம், சுகவாழ்வு, மனோநிலைகள் போன்றவற்றை தன் பிடியில் வைத்திருக்கிறது.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்.

என நல்வழி சொன்ன ஒளவையார் நினைவுக்கு வருகிறார். இனி உறைப்புக்கு வருவோம், உலகின் அதிகூடிய உறைப்பு நுகர்வு பிராந்தியமான தெற்காசிய வலயத்தில் பாரம்பரிய உணவுகளுக்குப் பெயர்போன நாடுகளில் வசிக்கும் நாம், நமது உறைப்பு மூலம் பற்றி அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்குமல்லவா!

உற்பத்தி

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் விளையும் மருத்துவக் குணமும் கொண்ட காந்தாரி மிளகாய் (bp.blogspot.com)

சிறு வயதில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் வழக்கில் முதலில் தேர்வுசெய்யப்படுவது மிளகாய்தான். நாற்று மேடை அமைத்து அதிக மழைநீர் தேங்கிவிடாது உரிய வடிகால் முறைகளோடு இலகுவாக பயிரிடப்படுவது மிளகாய்ச் செடிகள் என்பது உங்களது ஞாபக அலைகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன். இப்படி சாதாரண காலநிலையில் மணல் அல்லது களிமண் பாங்கான நிலப்பரப்பில் செய்யப்படும் மிளகாய் பயிர்ச்செய்கை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் மிளகாய் செய்கை தென் அமெரிக்காவிலேயே இடம்பெற்றதாகவும், அதுவே பிற்காலத்தில் ஏனைய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் சான்று பகர்கின்றன. இருந்தும் இந்தியாவில் விளையும் மிளகாய் அதன் உறைப்பு மற்றும் நிறம் போன்றவற்றில் பிரசித்தமானது. இவ்வகை மிளகாய்கள் பெரும்பாலும் Capsicum annum என்கின்ற விஞ்ஞானப் பெயர்கொண்ட வகையைச் சார்ந்தவையே  

விதைப்பு முதல் அறுவடை வரை மிளகாய் செய்கையின் வாழ்கை வட்டம் 180 நாட்கள். (pixabay.com)

வருடம் தோறும் சுமார் 1.5 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மிளகாய் செய்கைமூலம் 7 மில்லியன் தொன் மிளகாய் உற்பத்தி உலகளாவிய ரீதியில் நடைபெறுகிறது. இம்மொத்த மிளகாய் உற்பத்தியில் 38% சதவீதமான மிளகாய் உற்பத்தி இந்தியாவிலேயே இடம்பெறுகின்றது. உற்பத்தியோடு நின்றுவிடாது தாம் உற்பத்திசெய்கின்ற மிளகாயின் அளவில் 80% சதவீதமானவை இந்தியாவினுள்ளேயே நுகரப்படுகிறது. இருந்தும் அதிகளவான மிளகாய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியாவே இனங்காணப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மிளகாய்கள் மாநிலத்துக்கு மாநிலம் பல்வகைமை கொண்டவை. வடிவம், நிறம், காரம் மற்றும் பாவனை போன்றவற்றில் வேறுபட்டவை. ஆதலால் அவை குறித்த பிரதேசத்தின் அல்லது வேறு சிறப்பியல்புகளின் அடிப்படையில் பெயரிடப்பட்டு பிரசித்தம் பெற்று விளங்குகின்றன.

ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா (7%), பாகிஸ்தான் (5%), வங்காள தேசம் (5%), பெரு (5%),தாய்லாந்து (4%) போன்ற நாடுகள் மிளகாய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

மிளகாய்க் களஞ்சியமான அண்டை நாட்டின் அருகில் இருக்கும் இலங்கையோ மிளகாயை இறக்குமதிசெய்யும் நாடுகளின் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கின்றது. ஐக்கிய அமேரிக்கா மற்றும் மலேசியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையே அதிகளவில் மிளகாயை இறக்குமதிசெய்கிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இப்படி உலகம் முழுவதும் மிளக்காயக்கான கேள்வி வருடாவருடம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

உலகின் மிகப்பெரும் மிளகாய் சந்தையாக ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் அறியப்படுகிறது (themes.com)

 

எமக்கேயான பாரம்பரிய உணவுகள் மட்டுமல்லாது, நவீன உணவு முறைகளிலும் மிளகாயின் பங்கு இன்றியமையாதது எனலாம். அன்றாடம் எமது வாழ்வில் நாம் பயன்படுத்தும் மிளகாயின் பூர்வீகம், உற்பத்தி பல்வகைமைகள் மற்றும் சிறப்பியல்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் உபயோகிக்கும் மிளகாய் எங்கிருந்து வருகிறது, அதன் பின்னணி போன்றவற்றை ஆராய்ந்தோம், ஆனால் எமது அன்றாடத் தேவைக்கான மிளகாயை எமது வீட்டிலேயே பயிரிடும் வழக்கம் எம்மில் எத்தனைபேருக்கு இருக்கிறது? வீட்டில் விளைந்த மிளகாயை தொட்டுப் பறித்து உபயோகிக்கும் தருணம் ஓர் தனி சுக அனுபவம் என்றால் மிகையில்லை. நீங்களும் இன்றே பயிரிடலாம் உங்கள் உணவுகளை உங்கள் வீட்டிலேயே. உணவில் மட்டுமல்ல வாழ்க்கைக்கும் உறைப்பு முக்கியம்.

Related Articles