தனியொருவன் நினைத்துவிட்டால்…. சாதனை மனிதர்கள்

கல்வித் தரம், சமூக செல்வாக்கு, பொருளாதாரம், போன்ற எந்த ஒரு காரணியும் ஒரு மனிதனின் பயனுள்ள வாழ்கை முறைக்கு சவாலாக அமைந்துவிடாது என்பது ஆண்டாண்டுகாலமாக வாழ்ந்துசென்ற சாதனை மனிதர்களின் வாழ்க்கை பறைசாற்றுகின்ற பாடம். மனிதகுலம் இன்று தேடிப்பறக்கும் கல்வி, பொருளாதாரம், பட்டம், பதவி, புகழ் போன்றவை அவர்களது வாழ்க்கைக்கான முழு அர்த்தத்தையும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் ஆயுள் முழுவதும் அதற்காகப் படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் சாதாரண வாழ்க்கை வாழும் குடிசைவாசிகள் வாழ்வுக்கான முழு அர்த்தத்தை இலகுவாக எமக்கு காட்டிவிடுகின்றனர். மனிதன் தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை உருவாக்குவதில் எடுக்கும் பிரயத்தனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் மத்தியில், எந்தவொரு விளம்பர அடையாளமும் இல்லாது தாம் வாழ்ந்த வாழ்க்கையின் விம்பத்தை எதிர்கால சமுதாயத்தின்மீது ஆழப்பதியவைத்துவிடுகிறான் ஒரு சாமானியன்.

உலகுக்கே பாடம்சொல்லும் வகையில் பூமியில் வாழும் ஜீவராசிகளின் நலனுக்காய் தமது வாழ்நாள் முழுவதையும் எளிமையான முறையில் அற்பணித்து நிற்கும் நிஜ வாழ்வின் கதாநாயகர்கள்பற்றித்தான் இக்கட்டுரை அலசி ஆராயப்போகிறது.

இவர்கள் யாரும் பாடசாலைக் கல்வியில் மாநில தேசிய அளவில் சாதித்தவர்களல்ல, வைத்தியர்களோ, பொறியியலாளர்களோ, வியாபாரக் காந்தங்களோ அல்ல. கலைமானி, முதுமானி பட்டங்களைப் படித்தவர்களல்ல, கோடிகோடியாய்ப் பணம் படைத்தவர்களுமல்ல. அரசியல் செல்வாக்கோ, படைபலமோ அவர்களுக்கில்லை. இவர்கள் மனிதகுலத்தின் இருப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் களமிறங்கியிருக்கும் சாதாரண விவசாயிகள், கிராமவாசிகள்.

இந்நீண்ட பீடிகையின் பின்னிருக்கும் சாதாரண மனிதர்கள் இயற்கை விரும்பிகள், கால ஓட்டத்தில் அழிவடைந்துசெல்லும் இயற்கையை மீட்டெடுக்கப் பாடுபட்டவர்கள், மனிதனின் நிலைபேறான இருப்புக்கு ஆவனசெய்யக் களமிறங்கியிருக்கும் காவலர்கள். ஆம், தனிமனிதராக எவ்விதமான பிரதியுபகாரமும் எதிர்பாராமல், தாமாக முன்வந்து மரநடுகை செய்துவரும் பெயர் தெரியாத பல மக்களின் பிரதிநிதிகளாய் திகழும் சாதனை மனிதர்களைப் பற்றியே இங்கு பேசவுள்ளோம்

யாதவ் பாயேங்

"மொலாய்" காட்டு மனிதன் என அழைக்கப்படும் பாயேங் (livingtheimpossibledream.com)

“மொலாய்” காட்டு மனிதன் என அழைக்கப்படும் பாயேங் (livingtheimpossibledream.com)

ஜீவகாருண்யத்தில் ஆரம்பித்த ஒரு இளைஞனின் பயணம், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாம்புகள் பிரம்மபுத்திரா நதியின் மணல் படுக்கையில் ஒதுங்கி, வெள்ளம் வடிந்தபின் நிழலற்ற அம்மணல் திட்டின் வெப்பம் தாழாமல் கருகி இறந்து கிடந்ததை காணப் பொறுக்காமல், எந்தவிதமான தாவரங்களும் வளரும் சாத்தியமற்ற அம்மணற்பரப்பை நிழல்தரு சோலையாக மாற்றும் நோக்கில் அவர் ஆரம்பித்ததுதான் ஒரு மாபெரும் மாற்றத்துக்கான அஸ்திவாரம். வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய ஆரம்பத்தில் மூங்கில் பற்றைகளை அவ்விடத்தில் வளர்க்க ஆரம்பித்த பாயேங், சிறிது சிறிதாக அம்மண்ணை வளப்படுத்தி, ஏறத்தாழ 1360 ஏக்கர் நிலப்பரப்பில் தனிமனிதனாக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் அக்காட்டிலேயே அமைக்கப்பட்ட ஓர் குடிசையில் மின்சார, குடிநீர் வசதிகளுமின்றி தான் வளர்க்கும் ஆடுமாடுகளின் பாலை விற்று வாழ்வாதாரம் தேடி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது பதினாறாவது வயதில் ஆரம்பித்து, தொடர்ந்து முப்பது வருடங்கள் இக்காட்டின் உருவாக்கத்துக்காய் செலவுசெய்தும், தனது பணி அத்தோடு முடியவில்லை, இன்னும் 30 வருடங்கள் இதுபோன்ற இன்னுமொரு காட்டை உருவாக்குவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறும் இம்மனிதர் 2008 ஆம் ஆண்டுவரை இனங்காணப்படாமலேயே இருந்ததுதான் ஆச்சர்யம்.

பத்மஸ்ரீ விருதுபெறும் யாதவ் பாயேங் (thepoliticalfunda.com)

பத்மஸ்ரீ விருதுபெறும் யாதவ் பாயேங் (thepoliticalfunda.com)

2008ஆம் ஆண்டு காடொன்றிலிருந்து இடம்பெயர்ந்த  115 யானைகளைத்  தேடி வனத்துறை அதிகாரிகள் வந்தபோதுதான், தங்கள் பதிவுகளிலேயே இல்லாத இப்பெரும் காட்டை கண்டு வியந்துபோயினர். மரங்களே வளரும் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட இடத்தில் இன்று தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும், சிறுத்தை, யானை, மான்கள், எருதுகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான ஜீவராசிகளும் வாழ்கின்றன.

சுமார் முப்பது வருடங்கள் எந்தவிதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பார்க்காமல், எந்தவிதமான உந்துதலும் இல்லாமல், பொருளாதார பின்னணியும் இன்றி இவர் செய்த இச்சாதனை, மனிதகுலம் திரும்பிப் பார்க்கவேண்டிய நிதர்சனம். இவரது சேவையை கெளரவப்படுத்தி, இந்திய அரசு 2015ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

சாலுமரதா திம்மக்கா

மரங்களைப் பிள்ளைகளாக வளர்க்கும் தாய் (assets.inhabitat.com)

மரங்களைப் பிள்ளைகளாக வளர்க்கும் தாய் (assets.inhabitat.com)

வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படுகின்ற சோதனைகளை சாதனைகளாக்கிப் பார்க்கும் மன உறுதி இன்று எம்மில் பலபேருக்கு இருப்பதில்லை. இறைவன் மூடும் ஒவ்வொரு வாசலின் முடிவிலும் ஆயிரம் வழிகள் வெற்றிக்காய் திறப்பது, நெஞ்சில் உரமுள்ளோருக்கு மட்டுமே. தனது இருபைத்தைந்து வருடகால திருமண வாழ்க்கையில் குழந்தைகளே இல்லாத ஒரு சாதாரண கிராமப்புறப் பெண்ணின் மனநிலைமை என்னவாக இருக்கும்? சமூகத்தில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எத்துணை பாரதூரமானதாக இருக்கும்?

எதற்கும் அசராத திம்மக்கா அம்மையாரும் அவரது கணவரும் பிள்ளைகளே இல்லாத தங்களது பிள்ளைகளாக மரங்களை வளர்க்கத் தொடங்கினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாதாரண விவசாயிகளான இவர்கள் தங்களது ஊரான ஹுலிகல் இலிருந்து குடூர் வரை செல்லும் வீதியின் இருமருங்கிலும் சுமார் 300 நிழல் மரங்களை நட்டு அதனைத் தங்கள் குழந்தைகள் போன்று பராமரித்து வந்துள்ளனர்.

ஒற்றைப் பெண்ணாய் ஆரம்பித்து இன்று பல இளைஞர்களின் முன்னோடியாய் திகழும் திம்மக்கா (thehindu.com)

ஒற்றைப் பெண்ணாய் ஆரம்பித்து இன்று பல இளைஞர்களின் முன்னோடியாய் திகழும் திம்மக்கா (thehindu.com)

மழை அடிக்கடி பொய்த்துப்போகும் நிலையில் மரங்களுக்கு தேவையான நீரை வாரத்துக்கு மூன்று முறை பிற இடங்களிலிருந்து கொண்டுவந்து சேர்ப்பதையும், நடுகைசெய்த மரங்கள் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்வரை அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதுவரை இவர்களது சேவை தொடர்ந்துகொண்டே இருந்தது. BBC நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இவரையும் ஒருவராக அறிவித்துள்ளது. இன்று தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையின் மூலம் இம்மரநடுகை திட்டத்தை வியாபித்த அளவில் பல்வேறு இளைஞர்களின் பங்களிப்போடு செய்துவருகிறார் திம்மக்கா.

சாதிப்பதற்கு வயதும், பாலும் ஒரு தடையே அல்ல என்பதற்கான எளிய உதாரணமாய் திகழும் இப்பெண்மணி மனிதகுலம் பார்த்துப் பெருமைப்படவேண்டிய சரித்திரம்.

ராமையா

மரக்கன்றுகள் நிறைந்த தனது வண்டியில் பதாகைகளைச் சுமந்தவண்ணம் ராமையா (thelogicalindian.com)

மரக்கன்றுகள் நிறைந்த தனது வண்டியில் பதாகைகளைச் சுமந்தவண்ணம் ராமையா (thelogicalindian.com)

இவர் ஒரு வித்தியாசமான சாதனை மனிதர். தெலுங்கானா மாநிலத்தில் 10 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட மரங்களை நட்டதாகக் கூறப்படும் இவர் இன்று அம்மாநிலத்திலுள்ள மக்களில் மூன்றுபேருக்கு ஒரு மரம் என்ற கணக்கில் மரங்களை நட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய சேவையைத் தனி ஒருவராக நின்று செய்துமுடித்த இவருக்கு இப்பொழுது வயது 70.

ஆரம்பத்தில் அனைவரும் இவரை ஓர் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதராகவே பார்த்தனர். காரணம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு வேலையை எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காது ஊக்கத்துடன் செய்பவர்கள் புறநடையானவர்களாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் பார்க்கப்படுவது ஒன்றும் புதிதல்லவே. ஆம், மரக் கன்றுகளும், விதைகளும் நிரப்பப்பட்ட தனது சைக்கிளில் மரநடுகை தொடர்பான சுலோகங்களையும் பதாகைகளையும் சுமந்தவண்ணம் பல மைல்கள் அன்றாடம் பயணித்து மரங்களற்ற தரிசுகளில் தான் கொண்டுசெல்லும் கன்றுகளையும் விதைகளையும் நட்டுவரும் இம்மனிதர் மனிதகுலத்தின் ஆச்சரியமன்றோ!

கன்றுகளையும், விதைகளையும் வாங்குதல், மற்றும் இதற்கான பொருட்செலவை மேற்கொள்ள தனது மூன்று ஏக்கர் காணியையே விற்றிருக்கிறார் இவர். ஒவ்வொரு திருமண வீட்டிலும், விசேஷங்களிலும் மரக்கன்றுகளை பரிசாக வழங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். “நான் நட்ட ஒவ்வொரு மரமும் எந்தவித பாதிப்பும் இன்றி வளர ஆரம்பித்ததை உறுதிப்படுத்தும்வரை நான் ஓய்வதில்லை” என்று கூறும் இவர், மர நடுகை தொடர்பான பிரசுரங்கள், மற்றும் தகவல்களைச் சேகரித்துவைப்பதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்.

விருதுபெறும் ராமையா (thebetterindia.com)

விருதுபெறும் ராமையா (thebetterindia.com)

“வ்ருக்ஷோ ரக்ஷதி ரக்ஷிதஹா” அதாவது, “மரங்களைக் காப்பாற்றுங்கள், அது உங்களைக் காப்பாற்றும்” என்ற தாரக மந்திரத்தை தனது கழுத்தைச் சுற்றி சால்வைபோல் தாங்கிய பதைகையில் பொறித்தபடி வலம்வருகிறது இவரது பயணம். 10ஆம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் இம்மேதைக்கு Academy of Universal Peace கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. இந்திய அரசு இவரது சேவையைப் பாராட்டி 2016 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுவழங்கி கெளரவித்துள்ளது. இப்போது எனது கடமை இன்னும் அதுகரித்துள்ளது. இவ்விருதுகளுக்கு நியாயம் சேர்க்க எனது இறுதிமூச்சுவரை போராடுவேன் என நெஞ்சுநிமிர்த்துகிறது இந்த 70 வயது ஆளுமை.

சாரணியத்தின் தந்தை பேடன் பவல் கூறியதுபோல, “இவ்வுலகை நீ காணும் பொழுது இருந்ததைவிட ஓரளவேனும் மேன்மைப்படுத்திவிட்டுச் செல்” என்ற வாசகம் இச்சாதாரண சாதனை மனிதர்களுக்கே கச்சிதமாகப் பொருந்தும். இன்னும் தாமதமாகவில்லை, உங்களது சரித்திரத்தை எழுதப் புறப்படுங்கள் நெஞ்சுறுதியோடு! மனிதமும், மனிதர்களும் வாழ்க நீடூழி.

Related Articles