நீர் அதிசய வரலாறும் நிலையில்லா எதிர்காலமும்

“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”

பரிமேலழகர் உரை: யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது.

உயிரின் மூலம் தேடி ஆராயும் முதற்கணமே, கண் முன் வரும் விடையாக நீரே நிற்கும். ஒரு செல் உயிரின் தோற்றத்திலிருந்து, ஒரு செல்லும் இல்லையெனும் இறுதி வரை நீரே ஆதாரமாக விளங்குகிறது.

பஞ்சபூதங்களில் நீரின் பங்கு

பஞ்சபூதங்களை வரிசைப்படுத்தும் பொழுதே, “நீர்” அதில் இரண்டாம் இட முக்கியத்துவத்தை பெறுகிறது. நிலவமைப்பை மறுசீரமைப்பதிலும், காற்றில் தன் நிலை மாற்றி, ஆவியாகி, நெருப்பென தகிக்கும் பூமியை தண்படுத்தி, உயிர் செழிக்க, ஆகாயத்தில் கார்மேகங்களாகி, மீண்டும் சுயநிலையான தண்ணீராய் மாறும் பாங்கு “நீருக்கே” உரித்தானதாகும்.

Water (Pic: 5elementsrejuvenation)

நீரின் பிறப்பு

சுமார் 4.6 அற்புத(Billion) வருடங்கள் பழமையான ‘கார்பனேசிஸ் காண்டிரைட்’ (Carbonaceous Chondrite) விண்கல் மற்றும் மிகப்பெரிய உடுக்கோளான ‘வெஸ்டாவின்’ (Vesta) மூலக்கூறுகளை ஆராய்ந்த டபிள்யு.எச்.ஓ.ஐ விஞ்ஞானிகள், நீரானது, பாறையைப்போல கோள உருவாக்கத்தின் போதே இருந்ததாக கண்டறிந்துள்ளனர்.

Birth Of Water (Pic: qygjxz)

உயிரில் நீர்

உயிரணுவின் தோற்றத்தில் நீரின் வினை, ஆதி என்பது நாம் அறிந்ததே! இன்று 87 இலட்சம் உயிரினங்களின் வசிப்பிடமாக இருப்பது, நம் புவி. அதில் 86% உயிரினங்கள் பற்றிய அறிதலே இன்னும் நமக்கு இல்லையெனினும், அத்தனை உயிரிகளுக்கும் உயிரோட்டமாய் விளங்குவது நீர்தான்.

அதே சமயம், இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்தும் பொறுப்பினையும் அவ்வப்பொழுது நீரே ஏற்றுக்கொள்கிறது. அதன்பொருட்டு, மழை வெள்ளம், ஆழிப்பேரலை, சூறாவளி மற்றும் புயல் போன்ற பேரழிவுகளை  நேரடியாகவும், தன் பங்கினை குறைத்துக்கொள்வதன் மூலமாக, அனல் காற்று, காட்டுத்தீ, சூறைக்காற்று போன்ற வெப்பம் சார்ந்த சீற்றங்களை மறைமுகமாகவும் செயல்படுத்துகிறது.

கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்கள் 1,09,202 பேர்.

2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில், 14 நாடுகளைச்சேர்ந்த சுமார் 2,30,000 மக்கள் உயிரிழந்தனர்.

சில உயிர்களின் மொத்த எடையில் 90% நீராகும். மனித உடல் எடையில் சுமார் 60% நீர்தான். ஆழ நோக்கினால், மூளையும் இதயமும் 73% நீரினையும், நுரையீரல் 83% நீரினையும், தோல் 64%, தசை மற்றும் சிறுநீரகம் 79% நீரினையும் கொண்டுள்ளது. நம் எலும்பு கூட 31% நீரால் ஆனதுதான்.

உணவில்லாமல், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 21 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்ததாக ஒரு செய்தி உண்டு. ஆனால், நீர்விரதம் என ஒன்று இருந்தால், 1 முழு வாரம் நம் உயிர் தாக்குபிடிப்பது பிரம்ம பிரயத்தனம் ஆகி விடும்.

Water In Living Organisms (Pic: scubadivingezine)

அறிவியல் தேடலில் நீர்

புவி வெப்பமயமாதல் காரணமாக, ஒவ்வொரு நாளும் நாம் புதிய, உயிர் வாழ தகுதியான கிரகங்களை தேடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதில் நம் துணைக்கோளான நிலவும், அண்டைய கிரகம் செவ்வாயும் பலமுறை ஊடகங்களில் பேசப்படுவதுண்டு. இரு கிரகங்களிலும் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிப்பதில்  உலகளாவிய விஞ்ஞானிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. செவ்வாயின் மேற்பரப்பில் மீத்தேன் எனும் உயிர்க்கழிவு இருப்பது தெரிந்தபின் ஆய்வின் அடுத்த படி, துரிதமானது.

ஏன் நீர் ஒரு முக்கியப்பொருளாக தேடப்படுகிறதென்றால், நீரின் மூலக்கூறிலேயே அதற்கான விடை ஒளிந்துள்ளது. நீரின் அறிவியல் பெயர் H₂O. ஹைட்ரஜன் 2 பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் கலந்ததே நீர். இதில், வியப்பு என்னவென்றால், ஹைட்ரஜன் எரிபொருளாகவும், ஆக்சிஜன் எரியூட்டு பொருளாகவும் உள்ள கலவை, நீராக இருப்பதுதான். நம்மால் நீரைக்கண்டறிய முடிந்தால், நம் விண்வெளி ஓடங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருளையும், நாம் சுவாசிக்க மற்றும் பயிரிட ஆக்சிஜனையும் உபயோகப்படுத்த முடியும்.

Water In Scientific Research (Pic: 2.bp.blogspot)

புனிதத்தில் நீர்

ஏறக்குறைய பல மதங்களும் நீரை புனிதத்திற்கான அடையாளமாகவே கருதுகின்றனர். இந்து மதத்தின் பல புனிதத்தலங்கள் ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்திருக்கும். ஆறுகளல்லாத பகுதிகளில், குறைந்தபட்சம் ஒரு தெப்பக்குளமாவது இருக்கும். அதில், குளித்து உடலை சுத்தம் செய்த பின்னர்தான், தெய்வ வழிபாடு என்பது. கிருத்துவ சமயம், புது நன்மையின் போது, நீரை புனிதத்திற்கான வழியாகவே கொண்டிருக்கிறது. இஸ்லாமியத்திலும், தொழுகைக்கு முன்பாக நீரினைக்கொண்டு உடலை சுத்தம் செய்து புனிதப்படுத்தும் நடைமுறை உள்ளது. இரத்தத்தின் நிறம் போல, மதச்சார்பற்ற, புனிதமே நீராகும்.

Water In Holiness (Pic: 4.bp.blogspo)

வரலாறு மற்றும் அரசியலில் நீர்

இயற்கையின் அனைத்து வளங்களும் எல்லா உயினங்களுக்கும் சமமே. ஆனாலும், நாடுகள், மாகாணங்கள் மற்றும் மாநிலங்கள் என நிலவெல்லைக்கும், ஆற்றுரிமைக்கும், கடல் மார்க்க எல்லைகளுக்கும் சண்டையிட்டுக்கொண்டிருப்பது, நாம் தினந்தோரும் பார்த்தும், கேட்டும் கொண்டிருக்கும் உண்மையாகும்.

முதல் உலகப்போர் நிறைவடைந்ததும், “பால்டிக் கடல்” போலிஷ் காரிடாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. போலந்தின் வசமிருந்த அதை, தன் வசப்படுத்த அடால்ப் ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தமே “இரண்டாம் உலகப்போர்” எனும் கூற்றும் உள்ளது.

வெகு சமீபத்தில், நீர் பற்றாக்குறையால், பொலிவிய நாட்டின் மூன்றாம் முக்கிய நகரமான “கோகபாம்பா”-வில் மிகப்பெரிய அளவில் கலவரங்களும், எதிர்ப்புகளும் நடந்தேறியது. அது அங்கிருக்கும் அரசியல் சூழல்களை வெகுவாக பாதித்தது.

இண்டஸ் ஆற்றுப்படுகையை ஒட்டி, பாகிஸ்தானிற்கு செல்லும்  ஆற்றினை தடுத்து, அணைகளையும் கால்வாய்களையும் கட்டவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியாக, சில விரும்பத்தகாத இன்னல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் மிகப்பெரும் இருகட்சிகளில் ஒரு கட்சியின் தலைவராக இளம் வயதில் பொறுப்பெற்றவர் கூட, காவிரி இடர்பாடு தொடர்பாக நடுநிலைமை கொள்ளாது, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில், அதை வைத்து அரசியல் செய்ததும் இங்கு நடந்தேறியதே.

இன்னும் பல தமிழகத்து பகுதிகளில் சரியான நீர் விநியோகம் அளிக்கப்படுவது இல்லையென்று, வீதிகளிலும் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

cochabamba Water War (Pic: arenaria)

அழிவை நோக்கி நீர்

முதற்கண், இங்கே நான் குறிப்பிட வேண்டியது, நீர் பற்றாக்குறை மற்றும் நீர் மாசுபாடு பற்றிதான். பல பெரு நகரங்களில், அதிகப்படியான குடிபெயர்தல் மற்றும் நகரமயமாக்களின் காரணமாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சி அதீதமாக பயன்படுத்துவதாலும், நீர் மாசுபாடு மற்றும் பற்றாக்குறை உண்டாகிறது.

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 2017-ல், 7.9788 கோடியாகும். அதில், சென்னையில் மட்டும் 98 இலட்சத்து 80,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலத்தின் மக்கள்தொகையில், எட்டில் ஒரு பங்கினை ஒரு கடல்சார் சிறிய பகுதி கொண்டிருந்தால், இஃது எத்தனை பெரிய இடர்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

கடலில் கலக்கும் எண்ணெய், கடல் வாழ் உயினங்களை  பாதித்து, பின் நாம் உட்கொள்ளும் உணவின் வழியாக நம்மையும் பாதிக்க வல்லது.

“கேப்டவுன்” என்ற பகுதியில் நீர் முழுமையாக தீர்ந்துபோனது, உலகிற்கே மிகப்பெரும் எச்சரிக்கையாக பார்க்கப்பட்டது. அதை “பூஜ்ஜிய நாள்” என்றே அழைக்கின்றனர். நாம் பல நேரங்களில் நீரை வீணாக்கும் அதே நேரத்தில், உலகின் பல பகுதிகளில் குடிக்கவும் நீரில்லாத அவல நிலை உள்ளது. பல வேளாண் விவசாயிகள், மழை பொழியாததால், நீரின்றி வறண்டுபோன தங்கள் நிலங்களைப்பார்த்து ஏங்கி தினம் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள்தாம்.

‘வருணா’ மற்றும் ‘அசி’ என இரு நதிகள் கங்கையில் கலக்கும் இடமான வாரணாசியில், புனித நதி என்ற நிலையை இழந்து, கங்கை ஒரு சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது. அண்மையில், 100 கி.மீ தூர கங்கை நதியின் நீரை,  குடிக்கவோ அல்லது குளிக்கவோ உகந்தது அல்ல என என்.ஜி.டி (National Green Tribunal) தெரிவித்துள்ளது.

காவிரி நதியானது, கங்கை நதியை விட 600% அதிகமான நச்சினை கொண்டுள்ளது. நதிகள் மாசுபாட்டில், காவிரி முதலிடத்தில் உள்ளது. முறையே, கங்கை இரண்டாம் இடத்தையும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி, மூன்றாம், நான்காம் இடத்தினையும் கொண்டுள்ளன.

இந்தியாவின் தலைநகரான தில்லி, யமுனை நதியை மாசுபடுத்துவதில், 79% பங்கினை வகிக்கிறது. அதைத்தொடர்ந்து, மதுரா 4%, ஆக்ரா 9%, எட்டவா 1%, பானிபட் 3% சோன்பட் 2% மற்றும் பக்பட் 2% பங்கும் வகிக்கின்றன.

தமிழகத்தின் பவானி நதியும் இதற்கு விதி விலக்கல்ல. தொழிற்சாலை கழிவுகளும், நகராட்சியின் 28 கால்வாய் வழியாக கலந்துவிடப்படும் கழிவுகளும், மனித கழிவுகளும் கலந்து, நதி நீரை முற்றிலும் பாதுகாப்பற்ற ஒன்றாக, பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழ்படுத்தியுள்ளது, வேதனைக்குரிய செயலாகும்.

உறுதியாக ஓர்நாள், எண்ணெய் வளம் தீரும் என்பதுபோல், பயன்பாட்டிற்கு தேவைப்படும் நன்னீர் வளமும் தீரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Polluted Yamuna River (Pic: tunza.eco-generation)

எந்த நீர் மூலம் உயிரின் ஆரம்பமாய் இருந்ததோ, அஃதே, நம் தீவினைகளுக்கு இறுதி செய்யும் தருணம் தொலைவிலிருப்பதாய் தோன்றவில்லை. பல போராட்டங்களின் மத்தியில், செயல்முறை முன்னெடுப்பாக நீராகிய நதியினை பாதுகாக்க ஏதேனும் முயற்சி எடுத்தால் நலம்.

Web Title: Everything About Water

Featured Image Credit: guoguiyan

Related Articles