பொன்ஸாய் சொல்லும் வாழ்க்கைப் பாடம்

தமிழாக்கம்: சரீமா லாஃபிர்

“கராதே கிட்” திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து ‘பொன்ஸாய்’ மீதான எனது ஆவல் தோன்றி வளர ஆரம்பித்தது. அதே ஆவலுடன் அன்று முதல் இன்றுவரை பொன்ஸாய் கலை தொடர்பில் நான் தேடியறிந்தவைகள் என் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

இத்தனை நாட்களாக நான் கற்றறிந்த விடயங்களை உங்களுடன் பாகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.பொன்ஸாய் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் பத்தைப்பற்றி இங்கே கலந்துரையாடுவோம்.

1. இறுதி முடிவு தொடர்பான தெளிவான நோக்கு

படம் – pixabay.com

பொன்ஸாய் மரமொன்றை உருவாக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் போதே, உற்பத்தியாளரின் மனதில் அதன் எதிர்கால தோற்றம் பற்றிய எண்ணமொன்று காணப்படும். அதன் வடிவம் மற்றும் தோற்றம் எவ்வாறு அமைய வேண்டும், அதன் விசாலத்தன்மை எவ்வாறு அமைய வேண்டும் என்பது போன்ற விடயங்களை, அந்த மரத்தை உருவாக்க ஆரம்பிக்கும்போதே தீர்மானித்திருப்பார்.

வாழ்வின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் நோக்கங்களையும் இலக்குகளையும் அமைத்துக்கொள்ள விரும்புவோம். எனினும் அதனைத் தாண்டி நாம் எமது எதிர்காலத்தினை ஓவியமாகக்காண முயற்சிசெய்ய வேண்டும். அந்த ஓவியத்திற்கு ஏற்ப உறுதியான அடித்தளத்தை அமைக்க வேண்டும். பொன்ஸாய் மரமொன்றினது அழகு, ஆரோக்கியம் என்பவை அதன் அடித்தளத்தின் உறுதிப்பாட்டைக் கொண்டே அமையும்.

2. பொருத்தமான சூழலையும் சரியான உபகரணங்களையும் தெரிவு செய்தல்

படம் – pixabay.com

பொன்ஸாய் மரமொன்றை அலங்காரப்படுத்தி வெட்டுவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. தகுந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான உபகரணங்களை உபயோகித்து உற்பத்தியாளர் தனது செயற்பாட்டை மேற்கொள்வார். அது போலவே பொன்ஸாய் மரத்திற்கு தகுந்த சூழல் அமைவதும் அவசியமானதாகும். சிறந்த மண், போதிய சூரிய ஒளி, நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையான நடவடிக்கைகள், அவசியமான உரம் போன்றவற்றை உற்பத்தியாளன் எப்பொழுதும் பொறுப்புடன் வழங்கிப் பராமரிக்க வேண்டும்.

உங்கள் எதிர்கால அடைவை அடைய, உங்கள் நோக்கத்திற்கு ஏற்ப தேவையான சந்தர்ப்பத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். ஒன்றுக்கொன்று சமமமான தீர்வுகள் உங்கள் முன் காணப்படும்போது அவற்றில் பொருத்தமான தீர்வை தெரிவு செய்ய வேண்டிய  சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டும். அது போலவே உங்கள் நோக்கங்களை வளப்படுத்துவதற்கான தகுந்த சூழலையும் நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும்.

3. சிறிய படிமுறைகளை மேற்கொள்வதனூடாக பெரிய அடைவை அடைதல்.

படம் – pixabay.com

அலங்காரமான பொன்ஸாய் மரமொன்று ஒரே இரவில் உருவாக மாட்டாது. அதற்காக பல்வேறு படிமுறைகளை மேற்கொள்ளல் வேண்டும். சுருக்கமாக கூறுவதானால் மரமொன்றை தெரிவு செய்வது முதல் பல்வேறுபட்ட ஒன்றுடனொன்று தொடர்புடைய படிமுறைச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே பூரணமான பொன்ஸாய் மரத்தினைப் பெறலாம்.

பொன்ஸாய் கலைஞர் படிமுறை படிமுறையாக பொன்ஸாய் மரத்தை நிர்மாணிக்கும் வகையிலேயே, நாமும் பயணிக்க வேண்டியுள்ளோம். உதாரணமாக கூறுவோமானால், நீங்கள் ஒவ்வொரு பரீட்சையிலும் சித்தியடைந்து நீங்கள் எதிர்பார்த்த தொழிலைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. வியாபாரியொருவரை எடுத்துக்கொண்டால் சிறியளவில் வியாபாரத்தை தொடங்கி, படிப்படியாக அவர் எதிர்பார்த்தளவில் பாரியளவிலான வியாபாரத்தை மேற்கொள்ளக்கூடிய நிலையை அடைவதைக்கூறலாம்.

4. தொடச்சியாக கவனம் செலுத்தலும் குறைநிறைகளைக் கண்டறிதலும் வேண்டும்

படம் – walldevil.com

பொன்ஸாய் மரமொன்றின் மீது தகுந்த கவனமெடுக்காதவிடத்து, அவசியமற்ற கிளைகள் வளர ஆரம்பிக்கும். இல்லையேல் நீர், சூரிய ஒளி ஆகியவை முறையாக கிடைக்காதவிடத்து மரத்தின் சுகாதார நிலைமையில் பாதிப்பு ஏற்படும். சிலவேளை நீண்ட நாட்களாக கவனமெடுக்காதவிடத்து, மீள யதார்த்த நிலைக்குக் கொண்டுவர முடியாத வகையில் அழிவுக்கு உட்படக்கூடும்.

எமது எதிர்கால இலக்கை அடையவும் இத்தகைய கவனம் தேவைப்படுகின்றது. தமது அன்றாட வாழ்வில் நேர முகாமைத்துவத்தில் தேவையற்ற விடயங்களுக்கு எவ்வளவு நேரம் செலவாகின்றது?, நாம் எதிர்கால இலக்கை அடைவதற்கான சரியான பாதையில் பயணிக்கின்றோமா? இல்லையென்றால், அத்தகைய பாதையிலிருந்து தவறியிருக்கின்றோமா? ஆகியவை தொடர்பில் தொடர்ச்சியான சுய கற்றலை மேற்கொள்ளல் வேண்டும்.

5. வளர்ச்சிக்கும் கற்றலுக்குமான விதையே தவறுகளாகும்

படம் – google.lk

பொன்ஸாய் மரத்தை உருவாக்குபவர் ஒருபோதும் தவறுதலுக்காக அஞ்சமாட்டார். ஏதேனுமொரு பிழை ஏற்பட்டால், அப்பிழையைக்கொண்டே அம்மரத்தை அவர் அலங்கரிப்பார். அதனால், இறுதியாக உருவாக்கப்படும் பொன்ஸாய் மரத்தை பார்ப்பவருக்கு அதிலுள்ள குறைகள் வெளித்தெரியாது.

உங்கள் எதிர்கால இலக்கை நோக்கி பயணிக்கும்போது நேரக்கூடிய தவறுகளை உங்களது வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் மாத்திரம் பிரயோகியுங்கள். இறுதி இலக்கை மிகவும் சிறப்பானதாக்கிக்கொள்ள அது உதவுமென்பது உறுதி. அதுமட்டுமன்றி உங்களால் தவறொன்று இழைக்கப்பட்டதென்றால் அதுவே நீங்கள் உங்கள் இலக்கினை நோக்கி முன்னேறுவதற்காக முயற்சி செய்தமையைக் காட்டக்கூடிய ஒரு அடையாளமாகும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.  

6. பின்வாங்காது முயற்சி செய்தல்

படம் -proflowers.com

பொன்ஸாய் மரமொன்றை உருவாக்குவதற்கான முதலாவது முயற்சியிலேயே மிகவும் வெற்றிகரமான பொன்ஸாய் மரமொன்றை அமைத்துக்கொள்ள முடியுமென நீங்கள் எண்ணுகிறீர்களா? இது அவ்வாறானதன்று, பயிற்சிபெறும் காலகட்டத்தில் தவறுகள் ஏற்படுவது சாதாரணமானதாகும். சில சந்தர்ப்பங்களில் மரங்கள் அழிவடைந்துபோகக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதனால், பின்வாங்காது திடமாக செயற்படுவதன் மூலம் இறுதியில் வெற்றியை அடைந்துகொள்ளலாம்.

உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். அவற்றில் சில உங்கள் கட்டுப்பாடின்றியும், சில உங்களுடைய செயற்பாடுகள் காரணமாகவும் ஏற்படலாம். எவ்வாறெனினும் உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கையில் அத்தகைய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், சலிக்காது இலக்கை நோக்கி மனதை ஒருமுகப்படுத்துவதனை பொன்ஸாய் கலை எமக்குக்கற்றுத்தருகின்றது.  

7. மாற்றங்களுக்காக மாற்றமடையுங்கள்

படம் – wallpapercave.com

பொன்ஸாய் மரமொன்றை அமைக்கும்போது கலைஞரொருவரின் மனதில் உதித்த எண்ணத்திற்கேற்ற மரமொன்றை உருவாக்குவதற்காக அதில் சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியேற்படலாம். மரத்தின் சில பாகங்களை அல்லது அவசியமற்ற கிளைகளை வெட்ட வேண்டியேற்படலாம். சிறியளவிலான மற்றும் பாரியளவிலான மாற்றங்களையும் செய்ய வேண்டியேற்படலாம்.

எவ்வாறாயினும், எதிர்கால படைப்பின் அலங்காரத்திற்கும் பரிபூரணத்தன்மைக்கும் ஏற்றவகையில் அத்தகைய மாற்றங்கள் அமைதல் வேண்டும். பொன்ஸாய் கலைஞரொருவர் சுதந்திரமாக இத்தகைய மாற்றங்களை செய்வது போலவே, நீங்களும் உங்கள் எதிர்கால இலக்கை அடைய தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்.

8. தொடர்ச்சியாக ஏதேனுமொன்றை கற்றுக்கொள்ளல்

படம் – ebayimg.com

பொன்ஸாய் கலை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதி, அதற்கு ஒரு முடிவில்லை என்பதாகும். அதாவது, ஒவ்வொரு நொடியிலும் அது தொடர்பில் ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள முடிகின்றது.

உங்கள் அடைவை நோக்கிப் பயணிக்கும் பயணமும் அத்தகையதே. இவ்வளவு நாட்களாக கற்றிராத விடயங்களை கற்க நேரிடலாம். இறுதியில் நீங்கள் உங்கள் பயணத்தின் முடிவை அடையும் கட்டத்தில் கற்றிருக்கும் விடயங்கள் விலைமதிக்க முடியாததாக இருக்கும்.

9. பூரணமற்ற தன்மையும் பரிபூரணமானதே

படம் – ak0.pinimg.com

எச்சந்தர்ப்பத்திலும் இரண்டு பொன்ஸாய் மரங்கள் ஒரே மாதிரியானவையாக அமையாது. ஒவ்வொரு மரத்திற்கும் அந்த மரத்திற்கேயுரிய பூரணமற்றதன்மை மற்றும் வேறுபட்ட குணாதிசயங்கள் காணப்படும். அதனைக்கொண்டு அம்முயற்சி வெற்றியளிக்கவில்லையென கூறிவிட முடியாது. அத்தகைய பூரணமற்ற தன்மையிலேயே அம்மரத்தின் பரிபூரணத்தன்மையானது பொதிந்துள்ளது.

இதனால், நீங்கள் உங்களுக்கேயுரிய அழகைக் கொண்டிருப்பதனால் நீங்கள் உங்களை ஏனையவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

10. பொறுமையை பெருக்கிக்கொள்ளுங்கள்

படம் – bonsaiworld.altervista.org

பொன்ஸாய் மரமொன்றை அதன் பராமரிப்பாலரால் அவசரமாக அமைத்துவிட முடியாது. அது இறுதிக் கட்டத்தில் ஆச்சரியப்படத்தக்க விதமாக அமையும்.

உங்களது எதிர்கால அடைவையும் ஒரே இரவில் அடைந்துவிட முடியாதிருக்கலாம். எனினும் சரியான சந்தர்ப்பத்தில் அதனைக் கண்டுகொள்ள முடியும். அதுவரையில் பொன்ஸாய் கலஞரொருவரைப் போல உங்கள் இலக்கை அடைந்துகொள்வதற்கு அவசியமான பின்னணியையும் ஏற்பாடுகளையும் படிப்படியாக உருவாக்கிக்கொள்ளுங்கள்    

 

Related Articles