இதுதான் புற்றுநோய்

பல வருடங்கள் வளர்ந்த ஒரு பெரிய மரத்தில்கூட, ஒரு நோய் ஏற்பட்டால் அது அந்த மரத்தின் கொப்பு கொப்பாக எல்லா இலைகளுக்கும் பரவி, மொத்த மரத்தையும் அழிக்கும் பலம் கொண்டது. அது குறித்து அறிந்துகொண்ட நம் முன்னோர், நோய் ஏற்பட்ட பகுதியை மரத்திலிருந்து வெட்டி நீக்கினர். புற்றுநோயும் இதனை ஒத்ததுதான். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். அல்லது, புற்றுநோய் பரவியுள்ள பகுதியை உடலிலிருந்து நீக்கி, குணப்படுத்தலாம். ஆனால், எல்லா புற்றுநோய்களையும் அவ்வாறு குணப்படுத்த முடியாது.

நமக்கோ, நமது உறவினருக்கோ அல்லது அயலவருக்கோ புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்போது, வாழ்கை குறித்த எதிர்பார்ப்புக்களை துறந்து விட்டு, என்ன செய்ய வேண்டும்?, எங்கே போக வேண்டும்? என்று புரிந்துகொள்ள முடியாது போகின்றது. உண்மையில், அப்படியான சந்தர்ப்பத்தில் நாம் ஆதரவற்றவர்களாகிப்போகிறோமல்லவா? என்னைப் போன்றே, இக்கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் சிலபோது இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். இன்று இந்தக் கட்டுரை மூலம், புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்கள் குறித்தே, நாம் விளக்கவுள்ளோம்.

(imgur.com)

எந்தவித கட்டுப்பாடுமின்றி அசதாரணமாக பிரிகின்ற அழிவுகளை ஏற்படுத்தும் செல்களைத்தான் (Malignant cells) புற்றுநோய் என்கிறோம். (imgur.com)

முன்பெல்லாம் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டால், அடுத்து அவர் மரணம் குறித்தே எண்ணுவார். ஆனால், இப்போது நிலை மாறியுள்ளது. ஏனெனில், தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக, புற்றுநோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், பெரும்பாலும் மருத்துவ உதவியுடன் அதனைக் குணப்படுத்தலாம். புற்றுநோய் உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகையிலை, மது, இரசாயனப் பொருட்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், தொழிலின்போது புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு முகம்கொடுத்தல், மரபியல் காரணிகள், சூழலியல் காரணிகள், ஹோமோன்களின் செயற்பாடு, பல்வேறு மருந்துகளை பயன்படுத்தல், ஒட்டுண்ணி மற்றும் சிறு விலங்குகளின் செயற்பாடுகள், வேறு நோய்களின் பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகள், அதிகளவு உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல், முதுமையடைதல் போன்ற காரணிகள் அவற்றில் சிலவையாகும்.

புகையிலை மற்றும் மது பயன்படுத்தல்

நடத்தை மற்றும் சமூகக் காரணிகளே புற்றுநோயை உருவாக்கும் பிரதான காரணிகளாக உள்ளன. மது அருந்துதல் இவற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றது. சிகரட்டில் புற்றுநோயை உருவாக்கும் விடயங்கள் 40 க்கும் மேல் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீரா? சிகரட்டில் உள்ள மிகவும் அபாயகரமான இரசாசயனப் பொருள் ‘டார்’ (Tar) என்பதாகும்.

புகை பிடிப்போர் இரண்டு வகைப்படுகின்றனர். முதலாவது வகையினர் உண்மையாகவே புகைப்பிடிப்போர். இரண்டாவது வகையினர், புகைபிடிப்போருக்கு அருகாமையில் இருப்பதனால், புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை உடலுக்குள் உள்வாங்குபவர். உண்மையிலேயே புகைப்பிடிப்போரை விடவும், புகைப்பிடிப்போருக்கு அருகாமையில் இருப்பவர்க்கு, புற்று நோயை உருவாக்கும் காரணிகள் உடலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு 50 மடங்கு அதிகமாக உள்ளமை பலருக்கும் தெரியாது.

(thetruthaboutcancer.com)

நடத்தை மற்றும் சமூகக் காரணிகளே புற்றுநோயை உருவாக்கும் பிரதான காரணிகளாக உள்ளன. மது அருந்துதல் இவற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றது. (thetruthaboutcancer.com)

புகைப்பிடிப்போருக்கு மத்தியில் சுவாசப்பை புற்றுநோய் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். அவ்வாறே, தொண்டை பகுதியில் ஏற்படும் புற்றுநோய், கணையத்தில் ஏற்படும் புற்றுநோய், சிறுநீரகம், சிறுநீர்பை, கர்ப்பப்பை பகுதிகளிலும் புற்றுநோய் எற்படுவதற்கான வாய்ப்பும் புகைப்பிடிப்போருக்கு இருக்கின்றது. புகைப்பிடிப்பது தவிர, மது அருந்துவோருக்கும் இவ்வாறான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.

வெற்றிலை மெல்லுவதன் மூலமாக வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படுகின்ற பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருக்கின்றன. இது குறித்து இலங்கையர்கள் ஆகிய நாம் அதிக கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

இரசயானப் பொருட்களின் பயன்பாடு

பல்வேறு இரசாயனப் பொருட்கள் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படுவதாக விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, எஸ்பஸ்டோல் (Asbestos) மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு இடையில் உள்ள தொடர்பை குறிப்பிடலாம். எஸ்பஸ்டோஸிலிருந்து விழும் துகள்கள் சுவாச வழி ஊடாக உடலுக்குள் செல்வதனால் நுரையீரல் புற்றுநோய் உருவாகின்றது. அத்தோடு, சில பூச்சிகொல்லிகளில் உள்ள ஆசனிக் (Arsenic) எனப்படும் இரசாயனப் பதார்த்தம் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோயை உருவாக்குவதோடு, இறப்பர் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பென்சீன் (Benzene) எனப்படும் இரசாயனப் பதார்த்தம் லியுகீமியாவை உருவாக்கும்.

(ehatlas.ca)

அத்தோடு, சில பூச்சிகொல்லிகளில் உள்ள ஆசனிக் (Arsenic) எனப்படும் இரசாயனப் பதார்த்தம் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோயை உருவாக்கும் (ehatlas.ca)

உணவுப் பழக்கவழக்கம்

உணவுக்கும் பல்வேறு நோய்களுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன என்று கூறப்படுவது குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். புற்றுநோய் உருவாவதற்கும் சில உணவுகள் காரணமாக அமைகின்றன.

அதிக எண்ணெய் கொண்ட உணவுகளையும், மிருக கொழுப்பு பெருமளவு அடங்கிய உணவுகளையும் உட்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயும், பெருங்குடல் புற்றுநோயும் உருவாகின்றன. உணவுகளை நீண்ட காலம் பாதுகாப்பதற்கும், நிறமூட்டுவதற்கும், சுவையூட்டுவதற்கும் பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

(organiclivingchic.com)

அதிக எண்ணெய் கொண்ட உணவுகளையும், மிருக கொழுப்பு பெருமளவு அடங்கிய உணவுகளையும் உட்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயும், பெருங்குடல் புற்றுநோயும் உருவாகின்றன. (organiclivingchic.com)

பல்வேறு உணவுகளின் மேல் வளர்கின்ற நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்கின்ற நச்சுக்கள் மூலமாகவும் புற்றுநோய் உருவாகின்றது. அத்தோடு, பல்வேறு போசனைகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் புற்றுநோய் உருவாகின்றது. உதாரணமாக, விட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஒக்ஸிஜனேற்ற விட்டமின் வகைகளும், ஸின்க் (Zinc), செலினியம் (Selenium) போன்ற கனிமங்களையும் குறிப்பிடலாம்.

தொழிலிலின்போது, புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு முகம்கொடுத்தல்

சில தொழில்களில் ஈடுபடுவோருக்கு புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தொழில்களில் ஈடுபடும்போது புற்றுநோயை உருவாக்கும் காரணிகளுக்கு உடல் திறந்து கொடுக்கப்படுவதனாலேயே புற்றுநோய் உருவாகின்றது. உதாரணமாக, தொழிற்சாலை தொழில்கள், பெட்ரோலிய உற்பத்திகள், சாயங்களுடன் (Dye) தொடர்பான தொழில்கள், இறப்பர், தோல், வாயுக்களுடன் தொடர்பான தொழில்களைக் குறிப்பிடலாம்.

(rackcdn.com)

கதிர்வீச்சுக்கள் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. (rackcdn.com)

நீண்டகாலமாக உடல் கதிர்த் தாக்கத்திற்கு உட்படுவதனாலேயே இவ்வாறு புற்றுநோய் ஏற்படுகின்றது. இதன் மூலம் உடலிலுள்ள DNA க்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் உருவாகின்றது.

மரபியல் காரணிகள்

உறவினருக்கு புற்றுநோய் இருந்தால், அது தலைமறை தலைமுறையாக கடத்தப்படும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனாலும் அதிகமான புற்றுநோய்கள் தொடர்பில் இது உண்மையான நிலையல்ல. ஏனெனில், அதிகமான புற்றுநோய் வகைகள் பரம்பரை நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், சில வகை புற்றுநோய்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் என்பவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

(geneticliteracyproject.org)

சில தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் காரணிகள், ஒருவரில் புற்றுநோய் உருவாகவதை தடுக்கின்றன. இன்னுமொரு புறத்தில், சில மரபியல் நோய்கள் உள்ளவர்களுக்கு, சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. (geneticliteracyproject.org)

பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தல்

ஸ்டரொயிட் (Steroids) வகையைச் சேர்ந்த சில மருந்துகளை பயன்படுத்தினால், புற்றுநோய் உருவாகலாம். ஆனால், அது அரிதாகவே நடைபெறுகின்றது. சில அவயவங்களை இணைத்ததன் பின்னர், நோயாளிகள் நீண்டகாலம் பயன்படுத்துவதற்கு ஸ்டரொயிட் மருந்துகள் வழங்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதால், அவர்களுக்கு பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படலாம்.

சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக வழங்கப்படுகின்ற புற்றுநோய் கொல்லிகளாலும், புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் கதிர் சிகிச்சை மூலமாகவும், வேறு வகை புற்றுநோய்கள் அரிதாக ஏற்படுகின்றன.

ஒட்டுண்ணி மற்றும் சிறிய விலங்குகளின் செயற்பாடுகள்.

பற்றீரியா, வைரஸ் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகளால் மனிதனில் புற்றுநோயை உருவாக்க முடியும். ஹெபடைடிஸ் (Hepatitis) B மற்றும் C  ஆகியனவே கல்லீரல் புற்றுநோயை உருவாக்குகின்றன. எப்ஸ்டைன் பார் (Epstein Bar) எனப்படும் வைரஸ் மூலம் லிம்ஃபோமா (Lymphoma) மற்றும் மூக்குக்கு பின்னால் உள்ள பகுதிகளில் புற்றுநோய் உருவாகுவதாக கண்டயறிப்பட்டுள்ளது.

மனித பெபிலோமா வைரஸ் (Human Papilloma Virus) பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய், ஆணுறுப்பு புற்றுநோய் மற்றும் பாலியல் உறுப்பு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களை உருவாக்குகின்றன. அத்தோடு, சிஸ்டஸொமைசீஸ் (Schistosomiasis) எனப்படும் ஒட்டுண்ணி சிறுநீர் பகுதி புற்றுநோயை உருவாக்குகின்றது

வேறு நோய்களின் பின்னர் உருவாகும் பக்க விளைவுகள்

வேறு நோய்கள் ஏற்பட்டதன் பின்னர் உருவாகின்ற பக்க விளைவுகளாலும் புற்றுநோய் ஏற்படுகின்றது.

கர்ப்பப்பை வாய் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் புற்றுநோயாக மாற முடியும். இனப்பெருக்க உறுப்பு மருக்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற மனித பெபிலோமா எனப்படும் வைரஸ் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாவதற்கான காரணமாக அமைவதாகவும் கண்டயறியப்பட்டுள்ளது.

சிறுநீர் பகுதியில் உருவாகும் கல் நீண்ட காலம் நிலைப்பதன் மூலம் சிறுநீர் பகுதியில் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தோடு, உடைந்த பற்கள் மற்றும் முறையாக பொருத்தப்படாத செயற்கைப் பற்களினால், வாயின் சளிச்சுரப்பி பகுதி மற்றும் நாக்கு என்பன அடிக்கடி எரிச்சலுக்கு உட்படுவதனால், வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் உருவாக முடியும்.

சிறுநீரக புற்றுநோய்க் கலங்கள் (uncnri.org)

சிறுநீரக புற்றுநோய்க் கலங்கள் (uncnri.org)

இலங்கையில் பலருக்கும் கேஸ்ட்ரைடிஸ் நோய் உள்ளது. நாம் இந்த கேஸ்ட்ரைடிஸ் குறித்து அதிகம் சிந்திக்காதபோதும், கேஸ்ட்ரைடிஸ் காரணமாக உருவாகக்கூடிய வயிற்றுப் புண் நீண்ட காலம் நிலைப்பதால் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல்

உடற்பருமன் மற்றும் சுறுசுறுப்பு குறைதல் ஆகியனவற்றால், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், தைரொயிட் சுரப்பி புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என்பன உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இன்று பலரும் ஒரே வகையான வாழ்வமைப்புக்கு பழக்கப்பட்டுள்ளனர். ஆனால். இந்த ஒரே வகையான வாழ்வமைப்பிலிருந்து விலகி, சுறுசுறுப்பான வாழ்வமைப்புக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், நமக்கு புற்றுறோயிலிருந்து மட்டுமன்றி, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெற முடியும்.

இப்போது முன்பை விடவும் புற்றுநோய்க்கு உட்படுவோர் தொகை அதிகரித்துள்ளது. பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற வேறுபாடு புற்றுநோய்க்கு இல்லை. எந்த வயதைச் சேர்ந்த எந்த மட்டத்திலுள்ளோருக்கும், எந்த நேரத்திலும் புற்றுநோய் உருவாக முடியும். எனவே, புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்களிலிருந்து முடியுமானளவு தூரமாகி இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போது, இந்த உலகிலிருந்தே புற்றுநோயை துடைத்தெறியலாம்.

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles