ஆறுமுகம் ஆறு

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலை சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரமபாகு கட்டுவித்தான். பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு.

பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. (i.ytimg.com)

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர்ப் பிரச்சினை, ஒரு பெரும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் பிரதான தண்ணீர் மூலம் கிணறுகள் தான். கிணறுகளிலிருந்து துலா, கப்பி, வெறும் கயிறு பயன்படுத்தி தண்ணீர் மொள்ளுவது யாழ்ப்பாண வழக்கம்.  தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் தடைபடாத மின்சாரமும் வந்த பின்னர், கப்பியும் துலாவும் காணாமல் போய் விட்டன.

அந்தக்  காலத்தில், யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நிலாவறை கிணற்றிலிருந்து குழாயில் நன்னீர் வரும், அதுவும் காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டும். செல்வாக்குள்ளவர்கள் மாநகர சபையின் அனுமதி பெற்று தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் குழாயை பொருத்துவார்கள். மற்றவர்கள் வீதியில் இருக்கும் பொதுக் குழாயில், குடங்களிலும் வாளிகளிலும் தண்ணீர் எடுக்க வருவார்கள். தண்ணீர் குழாயடியில் இருந்து நாட்டு நடப்பு கதைக்கவும் அரசியலை அலசவும் ஒரு கூட்டம் வந்து சேரும்.

பராக்கிரம்பாகுவின் சிந்தனையை அடியொற்றி, 1930களில் இலங்கையின் சட்டசபையில் உறுப்பினராக இருந்த K பாலசிங்கம் என்பவரால் யாழ்ப்பாண தீபகற்பத்தின் களப்புக்களை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டது. யாழ்ப்பாண தீபகற்பம், ஆறுகள் எதுவுமற்ற ஒரு வரண்ட பிரதேசம், ஆனால் நிலத்தடி நீர்வளமிக்க பிரதேசம். இந்த நிலத்தடி நீரையும் கடும் உழைப்பையும் வளமான மண்ணையும் மூலதனமாக்கி, யாழ்ப்பாண விவசாயி விவசாயத்தில் கோலோச்சுவான்.

இந்த நிலத்தடி நீரையும் கடும் உழைப்பையும் வளமான மண்ணையும் மூலதனமாக்கி, யாழ்ப்பாண விவசாயி விவசாயத்தில் கோலோச்சுவான். (tamil6.ch)

இலங்கைத் தீவு 1948ல் பிரித்தானிய காலணித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், இலங்கையின் நீரப்பாசனத்துறை (irrigation) திணைக்களத்தின் துணைப் பணிப்பாளராக இருந்த ஆறுமுகம் என்பவரால், “யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு” (River to Jaffna) திட்டம், முன் மொழியப்பட்டது. ஆறுமுகத்தால் முன்மொழியப்பட்டதால், “ஆறுமும் ஆறு”, எனும் பெயரை இந்தத் திட்டம் பெற்றது. யாழ்ப்பாணத்தில் மாரி காலத்தில் மட்டும் மழை பெய்யும். மூன்று நான்கு மாதங்கள் பொழியும் மாரி மழை நீர் கடலுக்குள் போவதைத் தடுத்து, முறையாக சேகரித்து, கோடைகாலத்திலும் பயன்படுத்த, இந்த யாழ்ப்பாண ஆறு திட்டம் வழிசமைக்கும்.

வன்னியின் வளமான கனகராயன் ஆறு, ஓமந்தைக்கு அண்மையில் உற்பத்தியாகி, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி என்று வன்னியின் பெரு நிலங்களைத் தழுவிச் சென்று, ஆனையிறவு கடவையின் கிழக்குப்பகுதியில், சுண்டிக்குளத்திற்கு அண்மையில் கடலுடன் கலக்கிறது. “ஆறுமுகம் ஆறு” திட்டத்தின் ஆரம்பப் புள்ளி, இந்த கனகராயன் ஆறு சுண்டிக்குளத்தடியில், ஆனையிறவு ஏரியில் கலப்பதுதான்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தை வன்னி பெருநிலப்பரப்புடன் இணைப்பது ஆனையிறவு கடவை. ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பக்கம் நன்னீராகவும், பாலத்தின் மறுபுறமான மேற்குப் பக்கம் உவர்நீராகவும் இருப்பதன் காரணம், இந்த கனகராயன் ஆற்றின் நன்னீர், ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் கலப்பது தான்.

ஆனையிறவு பாலத்தின் கீழ் ஒரு தடையை எற்படுத்தி, ஆனையிறவு நீரேரியின் கிழக்குப் பகுதியில் சேரும் நன்னீரை, ஆனையிறவு ஏரியின் மேற்குப் பகுதியில் இருக்கும் வங்கக் கடலின் உவர் நீரோடு சேரவிடாமல் தடுப்பது, யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் முதற் கட்டம்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தை வன்னி பெருநிலப்பரப்புடன் இணைப்பது ஆனையிறவு கடவை. (staticflickr.com)

இரண்டாவது கட்டம், ஆனையிறவு ஏரியின் கிழக்குப் பக்கம், சுண்டிக்குளத்திற்கு அண்மையில், ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பினூடாக இந்துமாகடலில் நன்னீர் கலப்பதை தடுக்க, ஒரு தடுப்பரண் கட்டுவது. சுண்டிக்குளம் தடுப்பரண், ஆனையிறவு ஏரியின் நன்னீரை கடலோடு கலக்க விடாமல் தடுப்பதோடு, ஆனையிறவு ஏரியில் அளவுக்கதிகமாக தண்ணீர் நிறைந்தால், வெள்ளத்தை தடுக்க, மிதமிஞ்சிய நீரை கடலுக்குள் பாய விடும் பொறிமுறையை கொண்டிருக்கும்.

“ஆறுமுகம் ஆறு” திட்டத்தின் மூன்றாவதும் முக்கியமானதுமான கட்டம், முள்ளியான் வாய்க்கால். 12 மீட்டர் அகலமும், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமுமுடைய ஒரு வாய்க்காலை, ஆனையிறவு ஏரியின் வடக்கு பக்கமாக, முள்ளியான் கிராமத்தினூடாக அகழ்ந்து, ஆனையிறவு ஏரியின் நன்னீரை, வடமராட்சி நீரேரியுடன் இணைப்பதுதான் முள்ளியான் வாய்க்கால். ஆறுமுகம் ஆற்றுத் திட்டத்தின் இதயப்பகுதிதான் முள்ளியான் வாய்க்கால் என்று சொல்லலாம்.

தெற்கே ஆழியவளைக்கு அண்மையில்  தொடங்கும் வடமராட்சி நீரேரி, உடுத்துறை, மருதங்கேணி, பால்ராஜ் அண்ணர் தரையிறங்கிய குடாரப்பு, பருத்தித்துறை தாண்டி, தொண்டமனாறில் உள்ள செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அண்மையில் கடலுடன் கலக்கிறது.

யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் நாலாவது கட்டம், செல்வச்சந்நிதி தடுப்பரண். சுண்டிக்குளம் தடுப்பரணைப் போல், நன்னீரோடு உவர்நீர் கலப்பதை தடுப்பது, மிதமிஞ்சிய நன்னீரை கட்டுக்கோப்பாக கடலில்  வழியவிட்டு வெள்ளத்தை தடுப்பது என்ற இரட்டை நோக்கங்களைக் கொண்டதாக இந்த செல்வச்சந்நிதி தடுப்பரண் அமைக்கப்படும்.

வடக்கே செல்வச் சந்நிதி அணை, தெற்கே ஆழியவளை, கிழக்கிலும் மேற்கிலும் நிலப்பரப்புக்கள், முள்ளியானில் ஆனையிறவு நன்னீரேரியிலுருந்து வரும் தண்ணீர் என்று வடமராட்சி களப்பை ஒரு நன்னீரேரியாக மாற்றிவிடும் திட்டமே ஆறுமுகம் ஆறு திட்டத்தின் பிரதான குறிக்கோள். ஆனால், வல்லை வெளியின் மேற்கே ஆரம்பமாகும் உப்பாறு எனும் சிறிய களப்பு வடமராட்சி ஏரியுடன் கலக்கிறது.

வடமராட்சியில் தொடங்கி, மேற்காக வளைந்து நெளிந்து சென்று, அரியாலையடியில் கடலுடன் கலக்கிறது, இந்த உப்பாறு. அரியாலையிலிருந்து கடல் நீர் வந்து வல்லை வெளி தாண்டி, வடமராட்சி நன்னீரேரியை மாசுபடுத்துவதைத் தடுக்க, அரியாலையிலும் ஒரு தடுப்பரண் அமைக்கப்பட வேண்டும்.

தொண்டமானாறு (panoramio.com)

அரியாலை தடுப்பரணுடன் முழுமையடையும் யாழ்ப்பாண ஆறு திட்டம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் இரு நன்னீர் ஏரிகளை உருவாக்கி, மாரி கால மழை நீரை சேகரித்து, கோடை காலத்தில் யாழ்ப்பாணத்தாருக்கு நீர் வழங்கும் நோக்கத்தை நிறைவேற்றும். அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளின் நன்னீர் பெருக்கத்தையும் இந்த இரு நன்னீரேரிகளின் உருவாக்கம் ஊக்கப்படுத்தும்.

1950களிலிருந்து கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமான வேலைகளால், ஆனையிறவு, சுண்டிக்குளம், தொண்டமனாறு, அரியாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட அணைக்கள் பழுதாகி விட்டன. முள்ளியான் வாய்க்காலும் தூர்வடைந்து போயுள்ளது.

ஆறுமுகம் ஆறு எனும் யாழ்ப்பாணத்திற்கான ஆறு திட்டத்தை நிதியுதவி வழங்கி செயற்படுத்த இன்று ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. ஆறுமகம் ஆறு திட்டம் அமுலாக்கப்படும் அதே வேளை, யாழ்ப்பாண தீபகற்பத்தில் நிலத்திடியில் சேரும் மலக்கழிவுகளை சுகாதார முறையில் அகற்ற முறையான ஒரு கழிவகற்றும் பொறிமுறையும் (sanitation system) நிறுவப்படுவது அவசியம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்மொழிவுகளில், யாழ்ப்பாண தீபகற்பகத்தில் நிலத்திடிக்கு சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மலக்கழிவுகளைத் தடுக்க, முறையான கழிவகற்றும் பொறிமுறை அமைக்கும் திட்டமும் இருப்பதாக நம்பப்படுகிறது.

வடமாரட்சி நீரேரியும் உப்பாறும் நன்னீரேரிகளாக, நிலத்தடி நீரில் சேரும் மலக் கழிவுகளும் இல்லாமல் போக, யாழ்ப்பாண கிணறுகள் நன்னீரால் நிரம்பி வழியும், விவசாயமும் வளம் பெறும். யாழ்ப்பாண தீபகற்பத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் இந்தத் திட்டம், முதலாவது வடமாகாண தமிழர் ஆட்சியில் முழுமையடைந்து, விக்னேஸ்வரன் ஆட்சிக் காலத்தின் மணிமகுடமாக திகழ, வாழ்த்துக்கள்.

நீர் வளம் உண்டு,

நில வளம் உண்டு,

நிம்மதி ஒன்றுதான் இல்லை

இந்த மண்

எங்களின்

சொந்த மண்

Related Articles