மறை நீர் – Virtual Water

பிரபஞ்சத்தில் மிக கொடிய சுயநலம் உள்ள உயிரினம் உண்டு என்றால் அது மனிதன்தான். மனிதனின் நாகரிகமும் விஞ்ஞானமும் இயற்கை அழிவின் முதல் விதைகள். நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாக பார்த்தார்கள், நாம் இன்று அதை நாகரீக வளர்ச்சி என்று அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

உயிரினம் வாழ முக்கிய தேவை நீர், நிலம், காற்று. “நீரின்றி அமையாது உலகு” ஐயன் வள்ளுவன் சொன்ன இவ்வொற்றைக் குறளின் புரிதலை மறந்தால், உலக உயிரினங்களின் அழிவு நிச்சயமே!

மருதமரம், நாவல் மரம், அத்தி, கடம்பம், பிலு, வில்வம் போன்ற மரங்களின் இருப்பிடங்களை வைத்தும், எறும்பு, தவளை மற்றும் மாடு போன்ற விலங்குகளின் நடமாட்டத்தைக் கொண்டும் நீர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொண்டனர் (blogspot.com)

நம் முன்னோர்கள் இந்த விடயத்தில் எவ்வளவு கரிசனத்தோடு இருந்தார்கள்! ஆனால் நாம் அவர்கள் எமக்களித்த அருமையான இயற்கை வளங்களை இழந்துவாடும் நிலைக்கு எமது எதிர்கால சந்ததியினரை ஆக்கிக்கொண்டு இருக்கிறோம். அன்று அவர்கள் நிலத்தடி நீரை ஐந்து அல்லது அதிகபட்சம் பத்து அடிகளுக்குள் கண்டனர், நாம் இன்று ஆயிரம் இரண்டாயிரம் என்று போய்கொண்டே இருக்கிறோம். மருதமரம், நாவல் மரம், அத்தி, கடம்பம், பிலு, வில்வம் போன்ற மரங்களின் இருப்பிடங்களை வைத்தும், எறும்பு, தவளை மற்றும் மாடு போன்ற விலங்குகளின் நடமாட்டத்தைக் கொண்டும் நீர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொண்டனர் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் அத்தியாயம் 53 ல் குறிப்பிட்டுள்ளார்.

கொடுத்துவைத்த எம் முன்னோர்கள் ஆறு, குளம், எரி, கண்மாய் என பல இடங்களில் நீரைக் கண்டனர். ஆனால் நாமோ, பிளாத்திக்கு போத்தல்களிலும், குழாய்களிலுமே காண்கிறோம்.

அவர்கள் வாழ்ந்த வாழ்வை இனி நாம் நினைத்துகூட பார்க்க முடியாது

உலகின் நீர்வளத்தில் 97 சதவீதம் கடல் நீர். எஞ்சிய 3 சதவீதத்தில் 68.7 சதவீதம் பனிக்கட்டி, 30.1 சதவீதம் பயன்படுத்தவே முடியாத கடின நீர், 0.3 சதவீதம் மட்டுமே ஆறு, ஏரி, குளம் மற்றும் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீராக இருக்கிறது. இதுவேதான் நீரியல் சுழற்சியாக மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட மறுபயன்பாடு (re-use) செய்துகொண்டிருக்கிறோம். இதனால் கிடைக்கும் நீரின் அளவு குறையுமே தவிர அதிகரிக்காது. இதைத்தான் நாம் உட்பட உலகின் அத்தனை உயிரினமும் பகிர்ந்துகொண்டாக வேண்டும். ஆனால், நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது என்பது என்பது உங்களுக்கு தெரியுமா?

மறைநீர் – Virtual Water

நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது. (media.licdn.com)

நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர்! இங்லாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன் இதனைக் கண்டுபிடித்தார் இதற்காக “ஷ்டாக்‌ஷோம் வாட்டர்” விருதும் பெற்றார்.

தனது ‘வர்ச்சுவல் வாட்டர்’ கருத்தாக்கத்துக்கு விளக்கம் தர முன்வரும் ஆலன் இவ்வாறு கூறுகிறார். “கோதுமை மணிகளை விளைவிப்பதற்கு நீர் தேவைப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கோதுமை மணி விளைந்தவுடன் அதை உருவாக்குவதற்கு பயன்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. ஆனால், அதே சமயம் அந்த நீர் அந்த கோதுமை மணிக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே அந்த நீர்தான் ‘விர்ச்சுவல் வாட்டர்’ இதை தமிழாக்கத்துக்கு பயன்படுத்துகையில் ‘மறைந்துள்ள நீர்’ என்னும் பொருள்பட ‘மறைந்துள்ள’ என்பதின் வேர் சொல்லான ‘மறை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ‘மறை நீர்’ என்கிறோம்.

“ஷ்டாக்‌ஷோம் வாட்டர்” விருது பெறும் ஜான் அன்டனி ஆலன் (gettyimages.com)

இப்படி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள நீர்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பிரச்சினையை எழுப்புவதில்லை என்கிறார் ஆலன். எடுத்துக்காட்டாக ஒரு நாடு ஒரு டன் கோதுமையை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும்போது அந்நாடு 1300 கன மீட்டர் நீரையும் இறக்குமதி செய்துகொள்கிறது அல்லது 1300 கன மீட்டர் அளவுக்கு தனது நாட்டின் நீர்வளத்தை சேமித்துக் கொள்கிறது என்று பொருள். ஒரு தோராயமான கணக்கீட்டின்படி ஒரு டன் தானியம் 1000 டன் நீருக்குச் சமம் என புரிந்து கொள்ளலாம்.

ஹோக்ஸ்த்ரா, சாப்பகைன் போன்ற அறிவியலாளர்கள், ஆலனின் இந்த ‘மறை நீர்’ கருத்தாக்கத்திற்காக தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்குமான ‘மறை நீர்’ அளவை கணக்கிடத் தொடங்கினார்கள். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காலையில் ஒரு கோப்பை காப்பி அருந்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்காப்பியில் உள்ள மறை நீரின் அளவு 140 லீட்டர் ஆகும்.

அதாவது ஒரு காப்பி செடியைப் பயிரிட்டு, வளர்த்து, கொட்டையை அறுவடை செய்து, தூளாக்கி, அதை கப்பலில் ஏற்றுமதி செய்யும் நாட்டின் நீர் அதில் மறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஏற்றுமதி பொருளுக்கும் பொருந்தும். இப்படி கணக்கிடும் போதுதான் ஒரு கோப்பை காப்பியின் மறை நீர் அளவு 140 லீட்டர் ஆகிறது. இந்த அளவானது ஒரு இங்கிலாந்து நாட்டவர் நேரடியாக புழங்கும் ஒருநாள் நீரின் அளவாகும்!

1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறைநீரின் அளவு 4 லட்சம் லிட்டர்கள். (linv.org)

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீர் தான் மறைநீர். தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இருக்கிறதோ, இல்லையோ? பன்னாட்டு கார் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் தருகிறார்கள் வெளிநாட்டு நிறுவனங்கள். இங்கே கார்களை உற்பத்திசெய்து அவர்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொள்கின்றன. ஏன் இதை அவர்கள் நாட்டிலேயே செய்தால் என்ன? இங்கு வந்து ஏன் செய்ய வேண்டும்? 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறைநீரின் அளவு 4 லட்சம் லிட்டர்கள்.

ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க 56 லிட்டர் மறைநீர் தேவை. திருப்பூரில் மட்டும் நீர் பற்றாக்குறை ஆண்டுக்கு 22 மில்லியன் கனமீட்டர்

ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை? ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்!

உலக உணவுற்பத்தியும் நீர் தடயமும் (temp.waterfootprint.org)

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்கள்  பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்! மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். இயற்கை ஆர்வலர்களும் அமைப்புகளும் அவ்வழிவைக் கட்டுப்படுத்த சமூகத்தில் மக்களிடம் இயற்கை குறித்த புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்.

Related Articles