ஓசோன் படலத்தை காக்க இலங்கையர் நாம் செய்ய வேண்டியவை

உலகிலுள்ள உயிரினங்கள் சமநிலை பேணி வாழ, ஓசோன் படலமானது இன்றியமையாதது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், பலகாலமாக இந்த புவியில் வாழும் மனிதர்களாகிய நாம் இந்த  ஓசோன் படலத்தையும் அதன் பெறுமதியையும் மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்தநிலை தொடருமானால், ஓசோன் படலத்தை மாத்திரம் நாம் இழக்கப் போவதில்லை. அதனையுடன் இணைந்ததாக, மனிதர்கள் வாழ ஏதுவான ஐந்து பூமியையும் சேர்த்தே நாம் இழக்க வேண்டி இருக்கும்.

1974ம் ஆண்டில் விஞ்ஞானிகள், மனிதர்கள் பயன்படுத்திடும் செயற்கை இரசாயனங்கள் விளைவாக, எமது ஓசோன் படலத்தின் புவியை பாதுகாக்கும் அடுக்குகள் பாதிக்கப்படுவதாக  முதல் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். அதுவரையில், ஓசோன் படலத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நம்மவர்கள் பெரிதாக அறிந்திருக்காதநிலையில், குளோரோகார்பன் (CFCs) மற்றும் ஏனைய தொழிற்சாலை உற்பத்திகள் வாயிலாக வெளியிடப்படும் ஹைட்ரொகார்பன் வாயுக்கள் வளிமண்டலத்தினை தாக்குவதன் வாயிலாக, ஓசோன் மண்டலத்தினை பாதிப்பதாக அறிக்கையினை வெளியிட்டு இருந்தார்கள். இந்த அறிக்கையானது, நாம் ஓசோன் படலத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான முதல் அறிக்கையாக அமைந்ததுடன், சர்வதேச நாடுகள் அனைத்ததுமே ஒன்றிணைந்து இதனை தடுக்கவும், ஓசோன்படலத்தை காக்கவும் முன்வர வேண்டும் என்பதற்காக ஆரம்ப படியாகவும் அமைந்திருந்தது.

ஓசோன் படலத்தில் காணப்படும் துளைகள் ஆபத்தான நிலையை அறிவிக்கும் அறிகுறியாக உள்ளது. credits: Seeker

இதன் பிரகாரம், சர்வதேச நாடுகளினால் 1985ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட வியன்னா உடன்படிக்கையானது ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான முதல்படியாக அமைந்துள்ளது. இது 1987ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மொன்றியல் ஒப்பந்தத்திலும் பின்பற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அனைத்து நாடுகளும் படிப்படியாக  குளோரோகார்பன் (CFCs) பாவனையை குறைத்து இல்லாதொழிக்க வேண்டும். இந்த ஒப்புதலுக்கு அமைய, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை விடவும், அபிவிருத்தி அடைந்த நாடுகள் மிக விரைவாக குளோரோகார்பன் (CFCs) அற்ற நாட்டினை கட்டியெழுப்புவதில் முன்னேற்றகரமான நிலையிலுள்ளது. இதற்க்கு மேலதிகமாக, ஓசோன் படலத்தை பாதிப்பதாக மேலதிகமாக  96 இராசாயனங்களும் இனம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓசோன் படலத்தை குறைப்பதற்காக மனிதனால் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைகள் பல தசாப்தங்களாக ஓசோனை மாசுபடுத்தும் பொருட்களினை  தொடர்ச்சியாக வெளியிடுவது மிகப் பெரிய காரணியாகும். Image credits: Umweltbundesamt

மொன்றியல் ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்னான காலப்பகுதியில், இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. இதன்பிரகாரம், 1990ம்  ஆண்டில் இலண்டன் திருத்தமானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் குளோரோகார்பன் (CFCs), ஹலோன் (halon) மற்றும் கார்பன் டெட்ராக்ளோரைட் (carbon tetrachloride) ஆகியவற்றின் பாவனையை 2000ம் ஆண்டுக்குள் தடை செய்யவேண்டுமென குறிப்பிட்டிருந்தது. இந்த திருத்தத்துக்கு மேலதிகமாக 1992ம் ஆண்டு கோபன்ஹேகன் (Copenhagen) திருத்தம், 1997ம் ஆண்டு மொன்றியல் திருத்தம் மற்றும் 1999ம் ஆண்டு பீஜிங் திருத்தம் ஆகியவை அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும், அடைந்து வரும் நாடுகளுக்கும் ஓசோன் படலத்தை பாதுகாக்கக் கூடியவகையில் எவற்றினை செய்ய வேண்டும், எதனை தடை செய்ய வேண்டும் என்கிற இலக்கினை வழங்குவதாக அமைந்திருக்கின்றது.

மொன்றியல் உடன்படிக்கையின் சமீபத்திய திருத்தமாக பார்க்கப்படுவது 2016ம்  ஆண்டில் கொண்டுவரப்படட கிகாலி (Kigali) திருத்தமாகும். இது முற்று முழுதாக ஹைட்ரொகுளோரோகார்பன் (HFCs) உற்பத்தியையும், பாவனையும் தடைசெய்வதனை நோக்காகக் கொண்டுள்ளது. HFCs பாவனையானது ஓசோன் படலத்தை பாதிக்கக்கூடிய சக்திவாய்ந்த வாயு வெளியேற்றத்தை கொண்டுள்ளமையே இதற்க்கு காரணமாகும். இதன் பிரகாரம், சுமார் 197 சர்வதேச நாடுகள் இந்த திருத்தத்தை அங்கீகரித்து ஹைட்ரொகுளோரோகார்பன் (HFCs) பாவனையை எதிர்வரும் மூன்று தசாப்பதங்களுக்குள் 80%க்குள் குறைப்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

அப்படியாயின், நமது நாடான இலங்கையானது ஓசோன் படலத்தை பாதுகாக்க எவ்வகையான முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளது? என்கிற கேள்வி நமக்குள் எழாமலில்லை. உண்மையில் இலங்கையானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவுள்ள போதிலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு இணையாக சமீபத்திய கிகாலி (Kigali) திருத்தத்தை முன்னெடுப்பதில் முன்னனியில் உள்ளது. இந்த திருத்தத்தின் பிரகாரம் ஹைட்ரொகுளோரோகார்பன் (HFCs) பாவனையை 2020ல் 35% மாகவும், 2025ல் 67.5% மாகவும், 2030ம் ஆண்டில் 100%மாகவும் தடைசெய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், இலங்கையானது ஓசோன் படலத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு இரசாயன வகைகளையம் இங்கே உற்பத்தியோ அல்லது ஏற்றுமதியோ செய்யாத போதிலும், அதனை நாட்டுக்குள் இறக்குமதி மட்டுமே செய்கிறது.

2013ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம், படிப்படியாக ஹைட்ரொகுளோரோகார்பன் (HCFCs) பாவனையை குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 2030ம் ஆண்டில் இலங்கை முழுமையாக ஹைட்ரொகுளோரோகார்பன் (HCFCs) பாவனையை ஒழிப்பதாகவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்றையநிலையில் ஓசோன் படலத்தை பாதிப்பதாக வகைப்படுத்தப்பட்ட 56 இரசாயனவகை பாவனையை இலங்கை இல்லாதொழித்துள்ளது.

உண்மையில், ஓசோன் படலத்தை பாதுகாக்கும் சுற்றறிக்கைகளும், திருத்தங்களும் அரசாங்கங்களாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் வெளியிடப்படுகின்றபோதிலும் அவை தொடர்பிலான உண்மையான மாற்றமானது உலகில் வாழும் ஒவ்வொரு தனிநபரின் நடத்தை மாற்றத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். ஒவ்வொரு தனிநபரும் மிகச் சிறியளவில் ஓசோன் படலத்தை பாதுகாக்க வழங்குகின்ற பங்களிப்பானது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

இவை அனைத்துமே, குளிர்சாதனப்பெட்டி மற்றும் காற்று பதனாக்கி ( AC equipment) ஆகியவற்றினை கொள்வனவு செய்யும்போது, ஓசோனை பாதிக்கும் இரசாயனங்கள் கொண்டவற்றினை தவிர்ப்பதிலிருந்து ஆரம்பிக்க முடியும். இதன்போது, தனிநபர் ஒவ்வொருவரும்  R 600A, R 1234ze, NH3 (Ammonia), and CO2 (Carbon Dioxide) ஆகியவை நீங்கள் கொள்வனவு செய்யும் குளிர்சாதனப்பெட்டி உபகரணங்களில் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும். அதுபோல, காற்று பதனாக்கியை கொள்வனவு செய்யும்போது R 290, R 32, R 1234yf, R 410A, and R 407C ஆகியவற்றின் உள்ளடக்கங்களை தவிர்ப்பது சாலச்சிறந்ததாகும்.

இவற்றுக்கு மேலதிகமாக, உங்களிடமுள்ள குளிர்சாதனப்பெட்டி மற்றும் காற்று பதனாக்கி உபயோகத்தின் மூலமாக ஏற்படும் தேவையற்ற வாயு வெளியேற்றங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதுடன், ஓசோனை பாதிக்கும் இரசாயனங்கள் கொண்ட பாவனை உபகரணங்களை அகற்றும்போது, அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முயற்சி செய்யுங்கள். இந்த பாதிப்பினை குறைக்க நீங்கள் இலங்கையின் தேசிய ஓசோன் அலுவலகத்தினை (National Ozone Unit – 011 203 4222) உங்கள் உதவிக்கு அழைக்க முடியும்.

அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் புதிய சுற்றுச்சூழலுக்கு இணக்கமான தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடியவகையில், ஓசோன் படலத்தில் மாசை தணிப்பதற்கு நாம் மிகவும் சிறப்பானவகையில் பங்களிக்க  வேண்டும். Image credits: Wikipedia

உண்மையில், உலகினை பாதுகாக்கும் ஓசோனை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவரதும் சிறிய செயற்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது. நமது தலைக்கு மேலாகவிருக்கும் ஓசோனுக்கு நாம் நேரடியாக எந்த பாதிப்பினை செய்யாதபோதிலும், நமது செயல்பாடுகளின் விளைவாக ஓசோன் பாதிக்கப்படுவதினை நாம் தற்போதைய நிலையில் உணர்ந்துள்ளோம். எனவே, நமது செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவருவதுடன், நமது எதிர்கால சந்ததி எவ்வித பிரசனைகளுமற்ற வாழ்வினை வாழ்வதை நாம் உறுதி செய்வதும், நமது இன்றைய செயல்பாடுகளில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றத்திலேயே தங்கியுள்ளது.

முகப்பட தலைப்பு : ஓசோன் படலமானது சூரியனின் தீவிர புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பளிக்கும் கவசத்தை வழங்குகிறது. இதன் மூலம் பூமியிலுள்ள உயிர்கள் வளம் பெறுகின்றன. Image credits: Geography and you

Related Articles