Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

2001 ஆம் ஆண்டின் பின் இலங்கையில் மிக மோசமான வரட்சி

கடந்த மாதம் இலங்கையின் பல பகுதிகளையும் தாக்கிய மோசமான சூறாவளி, பருவப்பெயர்ச்சி மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு, வெள்ள அனர்த்தங்கள் 213 உயிர்களை காவு கொண்டிருந்தன. 14 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கினால் ஏறத்தாழ 600,000 மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் தற்போது இலங்கையானது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகவும் மோசமான வரட்சியை எதிர்கொண்டுள்ளது என்ற விடயம் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல பாகங்களுக்கு 2016 ஆண்டின் ஆரம்பத்திலிருந்து மிகவும் குறைந்தளவு மழைவீழ்ச்சியே கிடைக்கப் பெற்றிருந்த காரணத்தினால், இவ்வரட்சியை அண்மைய காலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றாக கருத இயலாது.

தற்போதைய நிலைமை

சமணல அணைக்கட்டின் வான்வழி புகைப்படம். இந் நீர்நிலையின் சில பகுதிகள் முழுவதுமாக வற்றிப்போயுள்ளன. இப்புகைப்படத்தில் தெரியும் மண் திட்டுக்கள் பொதுவாக நீரினுள் காணப்படும் பகுதிகளாகும்.
படம்: Roar/Christian Hutter

அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து (DMC) கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் வட மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களின் 11 மாவட்டங்களில் வரட்சி நிலவி வருகின்றது. இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படும் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருணாகலை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களே தென்-மேல் பருவப்பெயர்ச்சி மழையை பெறாத நிலையில் வரட்சியை எதிர்கொண்டுள்ளன.

எமக்கு கிடைத்திருக்கும் புள்ளிவிபரங்களுக்கு ஏற்ப, வரட்சியின் அதிக தாக்கம் வட மாகாணத்திலேயே உணரப்பட்டு வருகின்றது. மழையின்மை காரணமாக அம்மாகாணத்தின் 130,931 குடும்பங்களை சேர்ந்த  450,௦௦0க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மதிப்பீட்டின்படி குறித்த நான்கு மாகாணங்களில் மொத்தமாக 243,683 குடும்பங்களை சார்ந்த 850,000 மக்கள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையினால் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரட்சியின் போது 300,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் ஏறத்தாழ 110,000 ஹெக்டயர் அளவிலான விவசாய நிலப்பரப்புக்கள் அழிவடைந்திருந்தன. எனவே அவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் தற்போது நிலவி வரும் வரட்சியானது பல மடங்கு மோசமானதாகவே காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி எதிர்வரும் காலப்பகுதியிலும் வடமாகாணம் எவ்வித மழைவீழ்ச்சியையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உலகின் பல பாகங்களிலும் உணரப்படும் காலநிலை மாற்றத்தின் ஒரு பிரதிபலனாகவே இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் தேசிய சூழலியல் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குட்பட்ட காலப்பகுதியின் சராசரி புவி வெப்பநிலையானது 20 ஆம் நூற்றாண்டுடன் ஒப்பிடுகையில் 0.95 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 20 ஆம் நூறாண்டின் சராசரி புவி வெப்பநிலை 13.7 டிகிரி செல்சியஸாக காணப்பட்டதுடன், இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையானது 1880 ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவான அதியுயர் வெப்பநிலையாகும்.

அறுவடை நாசம்

நீர்ப் பற்றாக்குறையானது நாட்டின் பயிர்ச்செய்கைக்கு பாதகமான விளைவினை ஏற்படுத்தியுள்ளது. படம்: Gwenael Piaser

இவ்வருடம் ஏற்பட்ட வரட்சியின் மிக மோசமான விளைவானது குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறையாகும். மழைவீழ்ச்சியின்மை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக 2016 ஆம் ஆண்டின்போது 35 சதவீதமான (இலங்கையின் மொத்த நெற்பயிர்ச்செய்கை நிலமான 804,838 ஹெக்டயர் நிலப்பகுதியில் 281,910 ஹெக்டயர் அளவிலான நிலப்பகுதி)  விவசாய நிலங்களில் மாத்திரமே நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் குறைவான நெற் சாகுபடி இதுவாகும். அது மட்டுமன்றி பெரும்போகத்தின் போது (செப்டம்பர் 2016 – மார்ச் 2017) நிலவிய வரண்ட காலநிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான விளைச்சல் நிலங்கள் அழிவுக்குள்ளாகின. இதன் காரணமாக உலக உணவுத் திட்டத்தின் முன்கணிப்பைப் போன்றே 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான நெல் அறுவடை 63 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

நெற் பயிர்ச்செய்கையே இலங்கையில் 1.8 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரமாக காணப்படுகின்ற நிலையில், குறித்த அழிவானது இலங்கையின் கிராமப்புற சமூகத்திற்கு பட்டினியை மட்டுமன்றி பாரிய கடன் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. IRIN செய்திச் சேவை மேற்கொண்ட கண்காணிப்பின் பிரதிபலனாக தீவிர பாதிப்புக்குள்ளாகியுள்ள 80,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. மேலும் இவ்வருடம் மார்ச் மாதமளவில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மேற்கொண்ட மதிப்பீட்டின்படி இலங்கை முழுவதிலும் அண்ணளவாக 365,232 சிறுவர்கள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையினால் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கையின் பிரதான உணவுப் பயிராக நெல் காணப்படுகின்றதுடன், நாட்டின் சுய தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில் நெல் பயிரிடப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லுற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நாட்டின் அனைத்து பாகங்களிலும் உணரப்படும் நிலைமை ஏற்படுவது திண்ணம். எவ்வாறாயினும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஒரே பயிராக நெற்பயிரை குறிப்பிட இயலாது. நாடு பூராகவும் பல விதமான உணவுப் பயிர்களின் விளைச்சலானது கணிசமான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. ஏனைய பயிர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விளைச்சல் நிலங்களில் 44 சதவீதமான நிலங்களில் மாத்திரமே கடந்த நவம்பர் மாதமளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கௌப்பி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவான விளைச்சல் நிலங்களில் மாத்திரமே பயிரிடப்பட்டிருந்தன. இப்பயிர்களின் விளைச்சலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் நாட்டின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரண்ட காலநிலை மற்றும் ஏனைய வானிலை மாற்றங்கள் இலங்கையின் தேங்காய் உற்பத்தியையும் பாதித்துள்ளன. நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான தேங்காய், பெரும்பாலும் புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றது. வரட்சியினால் இவ்விரண்டு மாவட்டங்களும் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தேங்காய் மற்றும் தென்னம்பயிர் சார்ந்த ஏனைய உற்பத்திகளின் ஏற்றுமதியும் எதிர்வரும் காலத்தில் சரிவினை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது.

ஏனைய பாதிப்புக்கள்

இலங்கையின் பிரதான சக்தி மூலமாக நீர்மின்சக்தியே காணப்படுகின்ற நிலையில் மழையின்மை காரணமாக வெப்ப சக்தியை கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்காக மேலதிக எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் சரிவுக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே வரட்சியின் காரணமாக இவ்வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது முன்னர் கணிக்கப்பட்டதை விட கணிசமான அளவு குறைவாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் மாதங்களில் தொடர் மழை கிடைக்கப் பெற்றாலும் விவசாயத் துறையில் இலங்கை சந்தித்த இழப்பினை ஈடுசெய்ய முடியாதிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதத்திற்கு உரிமை கூறும் விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான விளைச்சல் நிலங்கள். படம்: humanosphere.org

வரட்சியினால் ஏற்படக்கூடிய மற்றுமொரு பாதக விளைவாக நிலச்சீரழிவை கருதலாம். மண்ணின் மீது கவசமாக காணப்படும் தாவரங்கள் வரட்சியின் காரணமாக அழிந்து போவதால், காற்று மற்றும் நீரினால் மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. இதனால் மண்ணின் மேற்படை இழக்கப்படுவதால் மண்ணின் வளம் குன்றி பிற்காலத்தில் பயிர்ச்செய்கை செய்வதற்கு இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் வரட்சியின் காரணமாக மண்ணின் ஈரப்பதன் இழக்கப்படுவதனால், நிலக்கீழ் நீரின் அளவு குறைகின்றது. இவ்வாறான சேதங்களினால் விவசாய நிலமானது மீள் சீரமைக்க இயலாத நிலைக்கு தள்ளப்படலாம்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நோக்குடன் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகள் பெறப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10,000 ரூபாய் என்ற வகையில் வரட்சியினால் அழிவுக்குள்ளான விவசாய நிலங்கள் அனைத்திற்கும் மாதா மாதம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக நிதியமைச்சினால் 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த 24,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றது. நாம் யாழ் நீர்ப்பாசன திணைக்களத்தை தொடர்பு கொண்டிருந்ததுடன், சுத்தமான நீர் தொண்டமானாறு மற்றும் மணல்காடு பிரதேசங்களிலிருந்து குழாய்களினூடாக யாழ் நகரம், நல்லூர், கொடிகாமம், கரவெட்டி, கைத்தடி, சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக அறியப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளும் எவ்வித பிரச்சினைகளுமின்றி குடிநீரை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில தினங்களாக அடைமழை பெய்த போதிலும் நீர்நிலைகளில் நீரின் மட்டம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைமை நிர்வாகியான M. துரைசிங்கம் Roar உடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, நாட்டின் ஏனைய பாகங்கள் மழைவீழ்ச்சியை பெற்ற போதிலும் வடகிழக்கு மற்றும் வடமேல் பிராந்தியங்கள் எவ்வித மழைவீழ்ச்சியையும் பெறாமையே மேற்குறித்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்தார். எனினும் கிழக்கு மாகாணத்தில் பயிர்ச்செய்கைக்கு போதியளவு நீர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தின் நீர்நிலைகளில் ஏறத்தாழ 30 சதவீதமளவிற்கு நீர் காணப்படுவதாகவும் சிறுபோக பயிர்ச்செய்கையானது (மே – ஆகஸ்ட் 2017) அந்நிலையை கருத்திற்கொண்டு திட்டமிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாண்டு சிறுபோகத்தில் வெற்றிகரமான விளைச்சலை பெற வேண்டுமாயின் நீர்நிலைகளில் குறைந்தது 50 சதவீதமளவிற்கு நீர்மட்டம் காணப்படுதல் அவசியமாகும். எனினும் தற்போதைய நீர்மட்டத்தை கருத்திற்கொள்ளும் பட்சத்தில் அண்ணளவாக 50 சதவீதமான விளைச்சல் நிலங்களில் மாத்திரமே பயிற்செய்கையில் ஈடுபட இயலும். எனினும் வரட்சி நிலைமையை எதிர்கொண்டு பயிர்ச்செய்கையை பாதுகாப்பதறகான சகல நடவடிக்கைகளையும் தமது திணைக்களம் மேற்கொண்டு வருவதாக துரைசிங்கம் கூறினார்.

அனர்த்தங்களை தடுப்பது எப்படி?

பைங்குடில் வாயுக்களை மிகக்குறைவாக உமிழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனினும், காலநிலை மாற்றங்களின் பாதகமான விளைவுகளை அதிகமாக எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை காணப்படுகின்றது. காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலின் மிகச்சிறந்த உதாரணமாக ஒரே காலப்பகுதியில் இலங்கையின் ஒரு பகுதி வெள்ளப்பெருக்கினாலும் மற்றைய பகுதி வரட்சியினாலும் இடர்களை எதிர்கொண்டுள்ளன. நாடளாவிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கரிசனையுடன் செயற்பட்டு, அடிப்படை காரணிகளை கண்டறிந்து அவற்றை களைவதன் மூலமே இவ்வாறான அனர்த்தங்களை தடுக்கக் கூடியதாகவிருக்கும். உலகின் முன்னணி நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலமே இந்நிலை சாத்தியமாவதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற நிலையில், கடந்த மாதம் ஐக்கிய அமெரிக்காவானது பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கியமை காலநிலை மாற்றத்திற்கெதிரான நகர்வுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அனர்த்தங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை போன்றே அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் சிறந்த தயார்நிலையில் இருப்பதும் முக்கியமானதாகும். காலநிலை மாற்றங்கள் மற்றும் நிலையான விவசாய முறைகள் தொடர்பில் விவசாயிகளையும் அரச அதிகாரிகளையும் தெளிவுபடுத்தல், அனர்த்தங்கள் தொடர்பிலான முன்கூட்டிய எச்சரிக்கைகள், அனர்த்த முகாமைத்துவம், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குதல் என்பன கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். கடந்த 17 ஆம் திகதி உலக வரட்சி ஒழிப்பு மற்றும் பாலைவனமாதலுக்கெதிரான தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், நாமனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்களை தவிர்த்துக் கொள்வதுடன் எதிர்கால சந்ததியினருக்காக எமது செழிப்பான நிலங்களை பேணிப் பாதுகாக்க கூடியதாகவும் இருக்கும்.

ஆக்கம் – ஆயிஷா ஜவுபர்

தமிழில் – ப்ரணீத் மனோகரன்

Related Articles