2023 இல் உலகம் எதிர் கொள்ள காத்திருக்கும் 5 முக்கிய பிரச்சினைகள்

சர்வதேச பிரச்சினைகள், பொருளாதார வீழ்ச்சிகள், கொவிட் – 19 பரவல் அதனால் ஏற்பட்ட ஊரடங்குகள், அவசரகால நிலைமைகள் இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிய சவால் மிகுந்த ஆண்டுதான் 2022. இற்றைக்கு அவை இறந்த காலத்திற்குள் சென்று விட்டாலும் கூட அதன் தாக்கம் இனியும் தொடரத்தான் போகின்றது. அந்தவகையில் ரஷ்யா – உக்ரைன் மோதல் அவற்றில் மிக வலுவானது.

கொவிட் தொற்றுநோய் தொடர்பான கவனமும், அவதானமும் படிப்படியாக குறைந்து வந்தாலும் கூட, சீனா கொவிட் தொடர்பில் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை தளர்த்தியதால் சீனாவில் மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகியுள்ளது. இப்போது சீனாவில் உருவாகியுள்ள இந்த கொவிட் அலையானது அந் நாட்டைத் தாண்டி ஏனைய நாடுகளுக்கும் செல்லுமா என்பது தொடர்பில் உலகம் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. எப்படியாயினும் 2023இனை கடந்த ஆண்டுகளை விடவும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர் கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது. அப்படியான சூழலை உருவாக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயலாம்.

01. ரஷ்யா – உக்ரைன் மோதல்

இந்த போர்ச் சூழலானது ஒரு முடிந்த கதை என்றே பலரும் நினைத்திருக்கலாம். ஒரு பக்கத்தில் அது உண்மை என்ற போதிலும், இது இரு தரப்பு போர் அல்ல என்பதையும் நினைவு படுத்த வேண்டும். இந்த ரஷ்ய – உக்ரைன் மோதலானது சர்வதேச ரீதியில் எதிரொலிப்பதோடு உலகலாவிய அதிகாரப் போட்டியாகவும் மாறியுள்ளது. இதனால் 2023 என்ற ஆண்டில் உலகப் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான தாக்கங்களை உருவாக்கும் முக்கிய காரணியாக இந்த போர் அமையப்போகின்றது.

கடந்த பெப்ரவரி 24 (2022) அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனை ஆக்கிரமிக்க முடிவு செய்தார். இது 21ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.இந்த தீர்மானம் மீதான சர்வதேசத்தின் பார்வைகள், அது சார் நகர்வுகள் என்பன ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாகவே அமைகின்றது என்பதே உண்மை. அதனை பட்டாம்பூச்சி விளைவு போன்றே குறிப்பிடலாம்.

இப்போர் காரணமாக உணவு, பொருளாதாரம், சந்தை, உற்பத்திகள் போன்ற பலவை சீர்குலைய ஆரம்பித்தன.இதற்கு நடுவே சீனா சிறந்த உத்திகளைப் பயன்படுத்தி உலகலாவிய விநியோகச் சங்கிலியை மறுசீரமைக்க முயற்சி செய்கின்றது. என்றாலும் இந்த போர்ச் சூழலை சரியாக அவதானித்து பயன்படுத்தும் வாய்ப்புகளை மட்டுப்படுத்த சீனாவின் முன் பெரிய சவால் நிற்கின்றது.அது கொவிட் எனும் தொடர் கதை. குறிப்பாக பல நாடுகள் கொவிட் தொற்று நோய்க்கு வெற்றிகரமான செயல்பாடுகளை முன்னெடுத்த போதிலும், சீனாவின் நிலைமை கைமீறி செல்வதனையே அவதானிக்க முடியுமாகவுள்ளது.

புகைப்பட உதவி – thechinaproject.com

எப்படியிருப்பினும் இரு நாடுகளுமே பின்வாங்காத நிலையில் இது இப்போதைக்கு முடிவுக்கு வரும் ஒன்றாக இருக்கப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.  இதனால் மறுபக்கம் கோதுமை ஏற்றுமதி வீழ்ச்சியடையும், கச்சா எண்ணெய் விலை உயர்வடையும் அத்துடன் பாரிய உயிரிழப்புகளுக்கும் இது காரணியாக அமையும். உக்ரைனில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்கு இது ஒரு கடுமையான அடியாகவே பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் அதிகார சமநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும் வரையிலும் இந்தப் போர் நிற்கப்போவதில்லை என்பது அவதானிப்புகளின் சாரம். அதன் படி 2023இல் மிகப்பெரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் காரணியாகவும் இது அமையப்போகின்றது.

02. சீனாவின் மறுதிறப்பு

2022 நவம்பர் முதலாகவே சீனா பூஜ்ஜிய கொவிட் கொள்கையினை காட்ட மிக ஆர்வமாக இருந்தது. எனவே கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டதோடு மறுதிறப்பும் விரைவாக்கப்பட்டது. மறுபக்கத்தில் அதற்கு ஏற்றாப்போலவே கொவிட் பரவவும் ஆரம்பித்தது. ஒரு மிகப்பெரிய தொற்று நோய்க்கு முகம் கொடுத்து அதிலிருந்து மீண்டு நாட்டை திறக்கும்போது, உலகின் பல நாடுகள் இதனை கையாண்ட விதம் குறித்த அனுபவத்தை சீனா பெற்றுக் கொள்ள வேண்டும். பெரிய சனத்தொகை கொண்ட நாடு அவரசமாக இதனை கையாளும் போது பெரிய தாக்கங்கள் ஏற்படும், பொருளாதாரம், செலவீனங்கள் போன்றவை சிக்கலை சந்திக்கும். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் இப்படி சிக்கலைச் சந்திக்கும் போது அது உலக அளவிலான பணவீக்கத்திற்கும் காரணியாக அமையும். ஆனால் இதுவே முறையான படிப்படியான செயல்முறைகளால் திறக்கப்படும்போது குறைவடையும் சாத்தியம் உண்டு.

அடுத்த பெரிய பிரச்சினை சுகாதார கேள்வி. சீனா முழுக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து நாட்டை திறப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட உலகம் இந்த செயல்முறையில் தயக்கத்தையும், அதிருப்தியையும் காட்டுகின்றது. தற்போதைய சூழலிலும் சீனா, சர்வதேச வருகைகளின் தனிமைப்படுத்தல்களை நீக்கி வருகின்றது. அதேபோன்று சீனர்கள் நாட்டை விட்டு வெளியேறும் கட்டுப்பாடுகளையும் தளர்த்துகின்றது. தனிமைப்படுத்தலின் பின்னர் பயணம் செய்ய சீன மக்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.

புகைப்பட உதவி – www.dw.com

சுற்றுலாத்துறைக்கு இது நல்ல செய்தி என்றாலும் இது மற்றுமோர் பாரிய கொவிட் அலையை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது.சீனாவின் மோசமான பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பின்தங்கிய செயல்திறன் ஆகியவை சீன சுற்றுலாப் பயணிகளின் சுகாதார நிலை குறித்த உத்தரவாதங்களை உருவாக்குவதில் கேள்விகளை எழுப்புகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சீன சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் செயற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. சீனாவின் இந்த அவசர செயல்முறைகள் மீண்டும் உலகம் கொவிட் பிரச்சினையை சந்திக்கும் காரணியாக அமையும் என்பதை 2023 இன் பெரிய அச்சங்களில் ஒன்று.

புகைப்பட உதவி – www.schwab.com

3. உலகலாவிய பொருளாதார மந்தநிலை

சீனா உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய புள்ளி. அதேபோன்று உலகளாவிய உற்பத்தி மையமும் சீனா தற்போது இந்நாடு மீண்டுமோர் கொவிட் அலையை எதிர்கொள்ளும் நிஜலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது உலக பொருளாதார இயக்கத்தினை மந்தப்படுத்தும். மறுபக்கம் ரஷ்ய – உக்ரைன் போர்ச் சூழல் எரிசக்தி நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமான அமைகின்றது அவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் சீனாவில் ஏற்படும் தாக்கம் அனைத்தையும் ஒன்றிணைத்து பொருளாதார பிரச்சினைகளை உண்டு பண்ணும்.

புகைப்பட உதவி – www.bbc.com/news

விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு நிறுவனங்களின் வியாபார வீழ்ச்சிக்கும், தயாரிப்பு தாமதங்களையும் அல்லது நிறுத்தங்களையும், பொருள் பற்றாக்குறையும் ஏற்படுத்துவதோடு வேலையிழப்பினையும் அதிகரிக்கும். உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இச் சூழ்நிலைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளன.  

2022 ஆம் ஆண்டில் உலகளவில் வட்டி விகிதங்கள் ஒரு மேல்நோக்கிய போக்கைக் கண்டன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஒரு வருட அனுசரிப்பு அடமான விகிதம் 5.6% ஆகும். இது 2022 இன் தொடக்கத்தில் 2.7% விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். நீண்ட கால நிலையான விகித நிதியுதவி இல்லாத வீட்டு அலகுகள் இங்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு முழுவதும் உலகில் இதுபோன்ற ஒரு போக்கு உருவாகும் சாத்தியம் பலரை பாதிக்கும்.

உலக பொருளாதார மந்த நிலையின் மற்றுமோர் குறிப்பிடத்தக்க தீவிர அம்சம் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவது ஆகும். இதனால் வாழ்வாதார சீர்குழைவு ஏற்படுமிடத்து வாடிக்கையாளர்கள் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறன் குறைவடையும். எனவே கடன்களை மீள் செலுத்தாத நிலைமை அதிகரிக்கும். 

இந்த நிலைமை ஐக்கிய இராச்சியம், நோர்வே, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் அதிக ஆபத்துள்ள சூழ்நிலையாகவும்,  அவுஸ்ரேலியா, ஸ்வீடன் மற்றும் கனடாவில் ஓரளவிற்விற்குமான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

புகைப்பட உதவி – www.schwab.com

அதே சமயம் குறைந்த வருமானம் மற்றும் அதிக ஊழல்கள் நிறைந்த நாடுகளில் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு முன்னரும் பொருளாதார வீழ்ச்சி எனும் புயல்கள் தாக்கியுள்ளன என்றாலும், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு என்பன சமாளிக்கும் வகையில் இருந்ததன் காரணத்தால் இலங்கை போன்ற நாடுகள் நிமிர முடிந்தது. என்றாலும் இனி அந்த வாய்ப்பு எமக்கு மிகக் குறைவு.

4. காலநிலை மாற்றம்

“கற்களிலால் ஆன சுவரை நோக்கிச் செல்லும் ஒரு பெரிய வண்டிக்குள் நாம் இருக்கின்றோம். ஆனாலும் அந்த வண்டியில் எங்கே அமருவது என்றே அனைவரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்”

டேவிட் சுசூகி எனப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலரே இவ்வாறு கூறுகின்றார். 

உண்மையில் மேலே நாம் பார்த்த பிரச்சினைகளும், சிக்கல்களும் மேற்குறிப்பிட்டதைப் போன்று வண்டிக்கு உள்ளே இருக்கும் பிரச்சினைகள். ஆனால் அந்த கற் சுவரைப் பற்றி நாம் கவலைகள் கொள்வது இல்லை. அது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக  2023இல் உருவெடுக்கும்.

புகைப்பட உதவி – www.commonwealthfund.org

உக்ரேனிய – ரஷ்ய போர் காரணமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முழுமையாக அணுகுவதற்கான முயற்சிகளை சில நாடுகள் தற்காலிகமாக நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போரினால் பல நாடுகள் தங்கள் ஆற்றல் பாதுகாப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே நிலக்கரி மூலமான மின் உற்பத்தி நிலையங்கள் கூட மீண்டும் தொடங்க வேண்டிய நிலைமை உருவானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய தங்கள் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, 2023 என்பது ஆண்டு கார்பன் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும் என்தில் ஐயமில்லை.

தோல்வியடைந்த COP27 (ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு)

கடந்த நவம்பரில் எகிப்தில் நடத்தப்பட்ட COP27 (ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு) மாநாட்டில் வெற்றிகள் ஏதும் ஏற்படவில்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை நிர்வகிப்பதற்காக பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே பண ஒதுக்கீடு செய்வதில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை.

புகைப்பட உதவி – punchng.com

இங்கிலாந்தின் வானிலை ஆய்வு மையமானது “கடந்த ஆண்டினை விடவும் 2023 இல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இவ்வாண்டில் உலக வெப்பநிலை சராசரியை விடவும் குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். 

எல் நீனோ எனப்படும்  ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் விளைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதன் படி இந்த 2023 ஐ வெப்பமான ஆண்டு என்றும் அழைக்கலாம். இவை முன்பை விட அதிகமாக உயரக்கூடிய கார்பன் உமிழ்வுகளுடன் இணைக்கப்படும்போது, ​​​​இயற்கை பேரழிவுகள் படிப்படியாக வளர்வதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. 

நிச்சயமாக அதன் விளைவுகளை எதிர் கொண்டே ஆகவேண்டும். இவற்றின்படி பார்க்கும் போது முன்னைய காலத்தை விடவும் இந்த நடப்பு ஆண்டில் வாழ்வையும், பிரச்சினைகளையும் இன்னும் சவாலாக, தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே கணிப்பு.

Related Articles