Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கொலைக்களமாகும் பாதசாரிகள் கடவை

இலங்கையில் வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றால்போல, விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. இன்றைய நிலையில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள், சில சமயங்களில் உயிரிழக்கவும் செய்கிறார்கள். தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பெரும்பாலும் வீடுகளிலிருந்து புறப்படும் நமது பயணம் பாதுகாப்பான முறையில் முடிவடைவதை, நம்மை சுற்றி வீதியில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு மோசமான வீதி விதிமுறைகளை கொண்டவர்களாக நாம் இருக்கிறோம் என்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.

வருடம்தோறும் முறையாக விதிமுறைகளை பின்பற்றி பாதசாரி கடவையினூடாக வீதியை கடக்கும் சுமார் 100 பேர் முறையற்ற வாகன சாரதிகளால் உயிரிழப்பதாகவும், சுமார் 1,000 பேர் காயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (nelincs.gov.uk)

அண்மையகாலத்தில் வீதிப்பாதுகாப்பு பொலிசாரினால் வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் பிரகாரம் வருடம்தோறும் முறையாக விதிமுறைகளை பின்பற்றி பாதசாரி கடவையினூடாக வீதியை கடக்கும் சுமார் 100 பேர் முறையற்ற வாகன சாரதிகளால் உயிரிழப்பதாகவும், சுமார் 1,000 பேர் காயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் வீதிவிபத்துக்களின் வாயிலாக மரணமடைந்தவர்களில் சுமார் 103 பேர் பாதசாரிகள் கடவையில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களைத் தவிரவும், 452 பேர் கொடிய காயங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். இது, சாதாரணமாக ஒருவர் வீதியை கடக்கும் இலகு செயன்முறையில்.

மின் சமிக்ஞைகளை பின்பற்றி வீதியை கடப்பவர்களுக்கும் சரி, மின் சமிக்ஞையை பின்பற்றாமல் அவசரகதியில் வீதியை கடப்பவர்களுக்கும் சரி ஒரே விதமான பாதிப்பை ஏற்படுத்தும் விபத்தாக இருக்கிறது. 2015ல் பாதசாரிகள் கடவையில் மாத்திரம் இடம்பெற்ற விபத்துக்களாக 1,084 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், இது 2016ல் 1,282 விபத்துக்களாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த தரவுகளை வழங்கிய வீதிப்போக்குவரத்து பொலிசாரின் கருத்துக்களின் பிரகாரம், பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனம் காரணமாக இடம்பெறுவதாகவே தெரிவிக்கப்படுள்ளது.

அதேபோல, 2017ம் ஆண்டின் முதல் ஜந்து மாதங்களில் இடம்பெற்ற விபத்துக்களின் தரவுகளின் பிரகாரம் பாதசாரி கடவைகளில் 325 பேர் விபத்திற்குள்ளாகி மரணமடைந்து இருக்கிறார்கள் எனவுள்ளது. இதில் 10 பாதசாரிகள் அவர்களது கவனயீனம் காரணமாக உயிரிழந்ததுடன் மிகுதி அனைவரது இறப்புக்கும் வாகன சாரதிகளின் கவனயீனமே காரணமாக உள்ளது.

பாதசாரி கடவைகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து விளக்குகள் பொருத்தமானவகையில் செயற்படாமை, போக்குவரத்து மின்விளக்குகளுடன் காணப்படும் நேரமானிகளில் ஏற்படும் குளறுபடிகள் என்பவனவும் விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. (driverly.co)

பாதசாரிகள் கடவையில் இத்தனை விபத்துக்கள இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதிகமாக பாதிக்கபடுபவர்கள் அப்பாவி பாடசாலை சிறுவர்களும், முதியவர்களுமே ஆவர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்கள்தான் விபத்தில் சிக்கிக் கொள்ளுகிறார்கள். அதிலும், பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் வீதி விபத்தின் அபாயத்தன்மையை அறியாதவர்களாக இருப்பதனால், மிகக்கவனயீனமாக பாதசாரி கடவையில் செயற்படுவதுடன், முதியவர்கள் இயலாமையின் காரணமாக மெதுவாக பாதசாரி கடவையை கடப்பதாலும் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

இதனை விடவும் அதிர்ச்சிகரமான தரவுகளை தகவல் தொழில்நுட்ப பொறியியல் பல்கலைக்கழகமானது (Faculty of Engineering at the Sri Lanka Institute of Information Technology) வெளியிட்டுள்ளது. இதன் தரவுகளின் பிரகாரம், பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களில் 30% வீதமான விபத்துக்கள் அண்மைக்காலத்தில் தொலைபேசி பாவனை மூலமாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வாகன சாரதிகளும் சரி, பாதசாரிகளும் சரி இரு தரப்பினருமே வீதிக்கடவைகளுக்கான முக்கியத்துவம் வழங்காமல் தொலைபேசியை பயன்படுத்துவதாலும் இவ் விபத்துக்கள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது.

வீதி விபத்துக்களுக்கு மற்றுமொரு காரணமாக வீதிகளின் மோசமான நிலையும், வீதிக் குறியீடுகள் பொருத்தமானவகையிலின்மையும் காரணமாக உள்ளது. பெரும்பாலான பாதாசாரி கடவை விபத்துக்களில் இரவு நேரம் நிகழும் விபத்துக்கள். பாதசாரிகள் கடவையானது இரவுகளில் பொருத்தமானவகையில் தெரிவதின்மையும் காரணமாக உள்ளது. இந்த இரவுநேர விபத்துக்களில் பெரும்பாலானவை கொழும்பை அண்டியுள்ள புறநகர் பகுதிகளிலும் இடம்பெறுகின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழகத்தின் தரவுகளில் பாதசாரி கடவைகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து விளக்குகள் பொருத்தமானவகையில் செயற்படாமை, போக்குவரத்து மின்விளக்குகளுடன் காணப்படும் நேரமானிகளில் ஏற்படும் குளறுபடிகள் என்பவனவும் விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதசாரிகள் கடவையில் அதிகரித்துள்ள விபத்துக்களை குறைக்கும் ஒருபகுதியாக, இதுவரை காலமும் மஞ்சள் கடவையாக இருந்தவை தற்போது வெள்ளை நிறமாக மாற்றப்பட்டு வருகிறது. இது, இரவு நேரங்களில் அதிக பார்வைத்தன்மையை (Visibility) கொண்டிருக்கும் என்பதற்காக மேற்கூறிய பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு திட்டமாக உள்ளது. ஆனாலும், இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இவையும், பாதசாரிகள் கடவையில் தொடர்ந்தும் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதில் பின்னடைவு நிலையை ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளது.

வீதி போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத கவனத்தை செலுத்துவதுடன், இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது. (beckettandco.co.uk)

அத்துடன், இத்தகைய பாதசாரி கடவைகளில் ஏற்படும் விபத்தினை குறைப்பதற்கு விதிகளை இறுக்கப்படுத்தும் அளவிற்கு, மக்களுக்கு இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அல்லது திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவசரமாக வாகனம் ஓட்டுவதும், கவனயீனமாக செயல்படுவதுமே பாதசாரிக் கடவைகளை அப்பாவி பொதுமக்களுக்கு கொலைக்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. அவரசம் மிகுந்த உலகத்தில் வாகனம் ஓட்டும் பலரும், தமது தேவைகளை அவசரமாக பூர்த்தி செய்துகொள்ள வேகத்தையும், வேலைத்தளம் மற்றும் வீடுகளில் உள்ள அழுத்தங்கள் தொடர்பில் சிந்திக்க தங்கள் நிதானத்தையும் வாகனம் ஓட்டும்போது பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். விளைவு, கவனயீனத்தை காரணமாகக்கொண்டு உயிரைப் பறிக்கும் விபத்துக்களுக்கு தங்களை தாமே காரணமாக்கிக் கொள்ளுகிறார்கள். எனவேதான், வீதி போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத கவனத்தை செலுத்துவதுடன், இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.

விதிகளுக்கு மட்டுமின்றி மனித உயிர்களுக்கும் மரியாதை கொடுத்து வீதிகளில் பயணிக்கவேண்டிய நம்மவர்கள் தங்களது சுய அபிலாசைகளை மாத்திரமே கவனத்தில்கொண்டு போக்குவரத்தை துச்சமாக கொண்டு இயங்குவதால்தான், தரித்து அவதானமாக பயணிக்கவேண்டிய பாதசாரிக் கடவைகளும் கூட மனிதர்களை காவுகொள்ளும் கொலைக்களமாக மாறியிருக்கிறது. எனவே, நிதானத்துடன், மனித உயிர்களின் அவசியத்தை உணர்ந்தவாறு பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

Related Articles