கத்தார் மீதான நெருக்கடிக்கு அமெரிக்காதான் காரணம், அது எப்படி என்று ஆராய்வதற்கு முன், கத்தார் மீதான மற்ற அரபு நாடுகளின் பார்வை எப்படி உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். மற்ற அரபு நாடுகளின் பார்வை கத்தாரின் மீது எப்படி உள்ளது எனபதை அறிந்து கொண்டால்தான், அதை அமெரிக்கா தமக்குச்  சாதகமாகப்  பயன்படுத்திக்கொள்கிறது என்று அறிய முடியும்.  கத்தார் மீதான மற்ற அரபு நாடுகளின் நடவடிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவாகும், எரிபொருள் விலை எகிறுமோ, உலகப்பொருளாதாரத்தை பாதிக்குமோ, மீண்டும் ஒரு வளைகுடா போரை ஏற்படுத்துமோ,  என்று எல்லா திசைகளிலும் சந்தேகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இப்படியான பிரச்சனை, அதுவும் திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம் ?

எரிபொருள் விலை எகிறுமோ, உலகப்பொருளாதாரத்தை பாதிக்குமோ, மீண்டும் ஒரு வளைகுடா போரை ஏற்படுத்துமோ,  என்று எல்லா திசைகளிலும் சந்தேகத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  படம்: starsandsripes

சவுதி தலைமையிலான கூட்டு ராணுவப்படையில் கத்தாரும் அங்கம் வகிக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில் சவுதியோடும், எமிரேட்ஸோடும் கத்தாரும் ஒரு அங்கம்.  பிறகு எப்படி இப்படியான ஒரு நிலை ஏற்பட்டது. “ பயங்கரவாதிகளுக்கு கத்தார் உதவுகிறது ” என்ற  அரபு நாடுகளின் குற்றச்சாட்டு உண்மையோ? இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்  கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் கூறுகின்றன. ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது. இதனை ‘நேர்மையற்ற’ முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு ‘எந்த அடிப்படையும் இல்லை’ என்கிறது.

படம்: mintpressnews

அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியா அதிபர்  பஷார் அல் அஸாத்  சவுதி அரேபியா, கத்தார் உட்பட பல நாடுகளின் உதவியுடனேயே,  பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார். சவுதி உட்பட வளைகுடாவின் மற்ற நாடுகளின் மீது இருக்கும் ஒரு குற்றச்சாட்டிற்கு கத்தாரை பலிகடாவாக்குகின்றனரா மற்ற அரபுக்கள். வளைகுடா நாடுகளுக்குள் இருக்கும் உள் முரண்பாடுகள் தான் என்ன?

படம்:sputnikinternational

அரபு நாடுகளுக்கும், அவற்றின் அருகிலிருக்கும் இரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருக்கும் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இரானின் ஆதரவோடு செயல்படும் ஆயுதப்படைகளோடு கத்தார் ஒத்துழைப்பதாக சௌதி குற்றம்சாட்டுகிறது. ஆயினும் கத்தாரோடு ஏற்பட்டுள்ள இந்தப்  பிரச்சனை புதியதல்ல. எதிர்பாராத ஒன்றும் அல்ல. பல ஆண்டுகளாகவே பதட்டம் நிலவி, குறிப்பாக சமீபத்திய வாரங்களில் அது அதிகரித்த நிலையில் இது வருகிறது. 1992ல் சவுதி படைகள் கத்தார் எல்லையில் தாக்குதல் நடத்தியது,  2002ல் கத்தாருக்கான தனது தூதரைத்  திரும்ப அழைத்துக்கொண்டது, உட்பட ஏற்கனவே புகைந்து கொண்டிருந்ததுதான் இப்போது எரிகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இதே நான்கு நாடுகளும் அல் ஜசீரா உள்பட கத்தார் செய்தி இணையப் பக்கங்களை தடை செய்தன. கத்தார் அரசர் தமிம் பின் ஹமாட் அல்-தானி, சவுதி அரேபியாவை விமர்சிப்பதாகக் கூறப்பட்ட கருத்துகள் கத்தார் அரசு ஊடகத்தில் வெளியானது. இந்த தகவலை “வெட்கக்கேடான இணைய குற்றம்” என்றும்,   இது போலியானவை என்றும் கத்தார் அரசு நிராகரித்தது.

 

படம்: gado

அரபு நாடுகளின் இந்த முடிவில், பயங்கரவாத குழுக்களுடன் கத்தாருக்கு இருக்கும் உறவுகள் மற்றும் ஈரான் பின்னனி என இரண்டு முக்கிய விசயங்கள் பார்க்கப்படுகிறது.  இஸ்லாமிய அரசுக்கு ( ஐ.எஸ் ) கத்தார் நிதி உதவி அளிக்கிறது என்று ஈராக்கின் ஷியா தலைவர்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுகிறது. அதை தொடர்ந்து கத்தார் மறுத்து வருகிறது. ஷியா பெரும்பான்மை நாடான ஈரானுடன் கூட்டு சேர்கிறது என்ற குற்றச்சாட்டையும் சுன்னி பெரும்பான்மை கத்தார் மறுக்கிறது. “கத்தாருக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இந்த நடவடிக்கைகளால் குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன, வியாபாரம் பாதிக்கப்படுகிறது,” என்கிறது கத்தார் மனித உரிமை அமைப்பு. மனித உரிமை மீறல் பிரச்சனையை கத்தாரின் முதன்மையான பிரச்சனையாக சர்வதேச மனித உரிமையாளர்கள் இவ்வளவு நாள் சுட்டிவந்த நிலையில்,  இப்போதோ கத்தார் மனித உரிமை அமைப்பே இப்படி சொல்கிறது. இதற்கு காரணம், கத்தாரின் மீதான அரபு நாடுகளின் நடவடிக்கை. மற்ற அரபு நாடுகளை போலவே கத்தாரும் மன்னரடி  நாடுதான். ஏனைய அரபு/வளைகுடா நாடுகளைப்  போலவே எண்ணெய் வளமும் நிறைந்த நாடுதான். இஸ்லாமிய ஷரியத் சட்டம், சுன்னி முஸ்லீம் பெரும்பான்மை என சவுதிக்கு தோதான தேசம்தான் கத்தார். ஆனாலும் மற்ற அரபு நாடுகளுக்கும், கத்தாருக்கும் இடையே ஆரம்பம் முதலே புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்குக்  காரணமாகக் கூறப்படுவது கத்தார் எமிர் அண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய போது, “ஈரான், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் ஹமாஸுடன் நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசியதாகக் கத்தார் செய்தி நிறுவனத்தின் இணையதளம், சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. அப்போதே அதை கத்தாரும் மறுத்து, ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.

படம்: newsrescue

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு  தற்போதைய எகிப்து அரசுக்கு எதிரானது. எகிப்தில் அல்ஜசீரா செய்தியாளர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதிலும், இந்த அமைப்பின் தொடர்பைத்தான் அரசு சுட்டிக்காட்டியிருந்தது.  ஈரான் இன, மார்க்க உட்பிரிவு ரீதியிலாக இயல்பாகவே அரபுக்களோடு முரண்படுவார்கள். ஏமனின் உள்நாட்டுப் போரில் அதுதான் வெளிப்பட்டு வருகிறது. அவர்களுடனான தொடர்பும் சவுதிக்கு எரிச்சலைத்தரலாம்.  கத்தார், பாலஸ்தீனத்தின்  ஹமாஸுக்கு உதவி செய்வதாக இஸ்ரேல் நினைத்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அரபுக்கள் ஏன் எடுக்கிறார்கள் என்ற சந்தேகமும், அதன் தொடர்ச்சியாக  இஸ்ரேலுக்கு எதிரி ஹமாஸ் அப்படியானால் சவுதி, இஸ்ரேலின் கூட்டணியா என்று சந்தேகமும் எழுப்பப்படுகிறது.