மது விற்ற காசில் “தாலிக்குத் தங்கம்”

‘’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அவரால் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம், அவர் பெயரை சூட்டி துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டும் இவ்விடயத்தில் அவர் கருத்தை ஏற்று செயல்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” – பேரறிஞர் அண்ணா (tinypic.com)

தமிழகத்தில் மதுவுக்கு எதிரான பரப்புரை கடந்த சில ஆண்டுகளாகத்தான் துரிதப்பட்டு வருகிறது. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம், பலதளங்களிலும் மதுவுக்கு எதிராக இயங்கி வந்தோரை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தது. அதற்கு முன்னர் தமிழகத்தில் பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகள் மதுவிலக்கை வலியுறுத்தி வந்தனவே தவிர, அது வெகுஜன மக்களின் விவாதத் தளத்தில் இல்லை. இன்னும்கூட மதுவிலக்கு தமிழகம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைதானா என்பதும் விவாதத்திற்கு உரிய விஷயம் தான். ஒவ்வொருவரும் தன்னளவில் குடிக்காமல் ஒழுக்க சீலராக இருந்து விட்டால் நஷ்டத்தில் அத்துறை தானாகவே முடங்கிப் போய்விடும். அது எப்படி இயங்கும்? என கேட்டார் நண்பர் ஒருவர். பதில் சொல்லத் தான் தெரியவில்லை.

ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு கடையை திறந்து வைத்திருந்தால் போகத்தானே செய்வார்கள் என்றேன். அரசு, நூலகங்களையும் கூட அப்படித் திறந்து வைத்துள்ளதுதானே!” என்றார். நீங்க நல்ல விவரமா பேசுறீங்க என்றேன். நான் எப்பவுமே இப்படித் தான் தண்ணி போட்டிருந்தால்  ரொம்ப தெளிவாக பேசுவேன் என்றார். இது தான் இன்றைய தமிழகத்தின் நிலமையாக உருப்பெற்று நிற்கிறது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கல்லூரி, பேருந்து நிறுத்தம் என ஜனங்கள் கூடும் இடங்களில் எல்லாம் சர்வசாதாரணமாக டாஸ்மாக் கடைகள் முளைத்து நின்றது. பள்ளிச் சீருடை, புத்தகப் பையோடு டாஸ்மாக் கடையில் இருந்து பாட்டில்கள் வாங்கி கடப்போரையும் அன்றாட வாழ்வில் பார்த்து கடக்கத் தான் வேண்டியுள்ளது.

அவர்களிடம் சாராயக் கடையில் இருப்பதாக தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அரசே ஏற்று நடத்தும் வியாபாரம் என்பதால்தான். வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இதர அரசு அலுவலகங்களைப் போலவே இதுவும் ஒரு அரசு அலுவலகம் அல்லது அரசின் அங்கம் என்னும் புரிதல்தான் காரணமாக இருக்கக் கூடும். கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் டாஸ்மாக் விற்பனை 135 கோடி ரூபாய். நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சராசரியாக 65 கோடியில் இருந்து, 75 கோடி வரை மதுபான விற்பனை நடக்கிறது. இத்தனை வளம் கொழிக்கும் ஒரு தொழிலை அரசு எப்படி விட்டுக் கொடுக்கும்?

நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சராசரியாக 65 கோடியில் இருந்து, 75 கோடி வரை மதுபான விற்பனை நடக்கிறது. (deccanchronicle.com)

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பலரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். சசிபெருமாள் மதுவிலக்கு போராட்டத்தின் உச்சமாக உயிரையே இழந்தார். சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மதுவுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டார். பல பகுதிகளிலும் பூரண மதுவிலக்கு கேட்டு தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது. ஆனால் தமிழக அரசு பூரண மதுவிலக்கு விவகாரத்தில் மதில் மேல் பூனையாகவே இருந்தது.

நெடுஞ்சாலையோரங்களில் இருந்த மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 31ம் தேதியோடு பல கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் இயங்கி வந்த 5700 டாஸ்மாக் கடைகளில், நெடுஞ்சாலையோரங்களில் இயங்கியதாக 3300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது எத்தனை வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு. இது சட்டத்தின், நீதியின் ஆட்சியின் மிக முக்கியமான காலகட்டம். சீமைக் கருவேல மர ஒழிப்பு விவகாரத்துக்கு அடுத்து, நீதித்துறையின் மேல் மதிப்பினை ஏற்படுத்திய மிக முக்கியமான உத்தரவு இது.

கடந்த தேர்தலில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என அறிவித்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். மேலும் காலை 10 மணிக்கு திறக்கும் கடையை, நண்பகல் 12 மணிக்கு திறக்கும் என நேர மாற்றம் செய்தார். இது காலையில் பத்து மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா, டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டுமா என குழம்பியிருக்கும் ஆயிரத்தில் நான்கு பேரையாவது வேலைக்கு அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.

மதுவிலக்கு போராட்டத்தின் உச்சமாக உயிரையே இழந்தார் சசிபெருமாள் (inkfreezer.com)

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஏக குழப்பம். ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி. கிளர்ச்சி செய்து தனி ஆவர்த்தனம் காட்டிய ஓ.பி.எஸ், சட்டசபையில் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கண்ணாமூச்சி காட்டிய ஆளுநர், வரலாற்று சிறப்புமிக்க கூவத்தூர் விடுதி எம்.எல்.ஏக்கள் தங்கல் இத்தனைக்கும் பின்பு மலர்ந்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை.

ஆனால் அப்போதும் கூட மக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டிய கட்டாயத்தின் உச்சத்திலும் தமிழகத்தில் மீண்டும் 500 கடைகளை மட்டுமே  மூட உத்தரவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை. இவ்வளவு தான் நம்மை ஆளுபவர்களுக்கு மக்கள் மீது இருக்கும் கரிசனம். ஆனால் ஒரே ஒற்றை உத்தரவினால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மட்டும் 3300!.  தமிழகத்தில் மொத்தமுள்ள 5700 டாஸ்மாக் கடைகளோடு ஒப்பிடுகையில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். ஆனால் இவைகளை கிராமங்களுக்குள், ஒதுக்குப்புறத்துக்குள் கொண்டு செல்ல இடம் தேர்வு செய்யும் பணியும் துரிதகதியில் அரங்கேறியே வருகிறது.

குடிமகன்கள், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்தி வருவது காணச் சகிக்கவில்லை. ஏதோ ரேசன் கடையில் நியாயவிலைப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுவதைப் போல இதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் மகாத்மா. இப்போது கிராமங்கள் முதுகெலும்பை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையோர கடைகள் எல்லாம் கிராமியங்களுக்குள் சங்கமிக்க அந்த அந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். வாடகை கூடுதல் கிடைக்கும் என கிராமங்களுக்குள் யாரும் சாராய வாசனையை அனுமதித்துவிடக் கூடாது. மக்கள் திரள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் உண்மையில் இது தான். அரசியல் கட்சிகளே பூரண மதுவிலக்கை தமிழகத்துக்கு தரும் என இன்னமும் நம்பிக்கையுள்ளவர்கள் கீழே உள்ள இந்த வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்,.

சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மதுவுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டார் (amazonaws.com)

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை பிரதான தேர்தல் அறிக்கையின் அம்சமாக வைத்தது திமுக. ஆனால் அதிமுகவோ, படிப்படியாக மதுவிலக்கு என்று தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இருந்தும் அதிமுக பெற்ற வெற்றி, மதுவிலக்கு பிரதான பிரச்னையாக தேர்தலில் எதிரொலிக்கவில்லையா என துணை கேள்வியை எழுப்பி அடங்குகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவிலும், அலங்காநல்லூரிலும், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கூடிய மாணவர், இளைஞர் படை மதுவுக்கு எதிராக இப்படி கிளிர்ந்தெழுந்திருந்தால் என்றோ மதுவிலக்கு சாத்தியமாகி இருந்திருக்கலாம்.

தமிழகத்தில் முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது. ஓமந்தூர் ராமசாமியின் ஆட்சிக் காலத்தில் 1948ல் சென்னையில்  பூரண மதுவிலக்கு அமுலுக்கு வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி 1967ல் திமுக அரியணை ஏறியது. அண்ணா முதல்வரானார். அவரும் மதுவிலக்கு கொள்கையில் உறுதியாய் இருந்தார்.

ஆனால் அண்ணாவுக்கு பின்னர் முதல்வரான கருணாநிதி  தமிழகத்தின் நிதிநிலையையும், அண்டை மாநிலங்கள் எல்லாம் மதுவிற்கும்போது, இங்கு மட்டும் விற்காமல் இருப்பது நெருப்பு வளையத்துக்குள் கொழுத்தாத கற்பூரம் இருப்பதற்கு சமம் என அவரது பாணியில் கவன ஈர்ப்பு வார்த்தை பேசி 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மதுவிலக்கை தமிழகத்தில் இருந்து நீக்கினார். அப்போதே இது இப்போதைய நிதி தேவைக்கு குறுகிய காலத்துக்குத் தான் என வாக்குறுதி கொடுத்த கருணாநிதி அவர் ஆட்சிக் காலத்திலேயே 1974ல் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தார்.

அண்டை மாநிலங்கள் எல்லாம் மதுவிற்கும்போது, இங்கு மட்டும் விற்காமல் இருப்பது நெருப்பு வளையத்துக்குள் கொழுத்தாத கற்பூரம் இருப்பதற்கு சமம் – கருணாநிதி (frontline.in)

1981ம் ஆண்டு கள்ளச்சாராய சாவுகள் அதிகம் நடப்பதாக மீண்டும் எம்.ஜி.ஆர் மதுவிலக்கை விலக்கி வைத்தார். 1983ல் டாஸ்மாக்கை  மது விற்பனையை ஒருங்கிணைக்க துவங்கினார். இந்திய நிறுவனச் சட்டம் – 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது.  1989ல் கருணாநிதி மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதிமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் குடித்து, குடல் அழுகி செத்து ,மடிந்து போன பல ஆயிரம் குடும்பங்களின் கதறல்களுக்கும் திமுகவும், அதிமுகவும் ஏதோ ஒருவகையில் காரணமாகத் தான் இருந்துள்ளனர். அதற்கு தமிழகத்தின் நிதி நிலையை காரணம் காட்டி அனுமதிப்பதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது டாஸ்மாக்கிற்க்கு தேவையான சாராயம் திமுக, அதிமுக இரு தரப்பினருக்கும் சொந்தமான ஆலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. இரு கட்சிகள் ஆட்சியிலும் இதில் பரஸ்பரம் நீடிக்கிறது. இதோ இப்போது உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்துக்கு 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உத்தேச தகவல் சொல்கின்றனர். எத்தனை ஆயிரம் கோடியாக இருந்தாலும், மதுவை விற்றுத் தான், அரசு திட்டமான “தாலிக்கு தங்கத்தை” கொடுக்க வேண்டுமானால் தாலி அறுக்கும் டாஸ்மாக்கையும் நடத்தத்தான் வேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட. இதில் ஒரே ஒரு பிரச்னை டாஸ்மாக் கடை ஊழியர்களின் வேலை இழப்பு. சற்றேறக்குறைய ஏற்கனவே மூடப்பட்ட 1000 கடைகள், இப்போது நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட கடைகள் என இங்கெல்லாம் பணி செய்த எட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.

இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. பட்டப்படிப்பு தகுநிலையுடன், டாஸ்மாக் கடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழித்தவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்றுப்பணி தொகுப்பூதிய அடிப்படையில் கொடுக்க வேண்டும். ஏன் எத்தனையோ அரசு அலுவலகங்களில் பல காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆனால் அரசு இவர்களுக்கு வேலைவாய்ப்பு என்னும் பெயரில் மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கவே ஆர்வம் காட்டும்  என்பதே இதில் முகத்தில் அறையும் உண்மை.

இப்போது டாஸ்மாக்கிற்க்கு தேவையான சாராயம் திமுக, அதிமுக இரு தரப்பினருக்கும் சொந்தமான ஆலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது (tamilhindu.com)

கடந்த 2003ல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இப்போதைய டாஸ்மாக் பணியாளர்கள். கடந்த 13 வருடங்களாகவே ஒப்பந்தப் பணியாளராகவே இருந்து, அரசு கஜானாவை நிறைத்ததில் பெரும் பங்கு இவர்களுக்கு உண்டு. பட்டப்படிப்பு படித்த சற்றேறக்குறைய 30 ஆயிரத்தும் அதிகமான தொழிலாளர்களை சாராய விற்பனைக்கு மட்டுமே ஒரு அரசு பயன்படுத்திருப்பது வருமான சாதனையாக இருந்தாலும், மனதளவில் வேதனை தான். பள்ளிக் காலங்களில் வள்ளுவரின் கள் உண்ணாமையும் படித்துத் தான்  வந்திருப்பார்கள்.

இப்போது மீண்டும் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக சந்து, பொந்துகளில் கடையை கொண்டு சென்று இவர்களை பணி அமர்த்துவதை விட மாற்றுப் பணி வழங்குவதே சாலச்சிறந்தது. நாடு முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடலால் பல மாநிலங்களும் ஆடிப் போய் இருக்கின்றன. மாநில சாலைகளை, மாவட்ட சாலைகளாக மாற்றவும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. பல மாநிலங்களில் அரசின் வருவாய் இழப்பு பத்தாயிரம் கோடிகளை தாண்டுகிறது.

வருவாய் இழப்பு என்ற பதம், சாராயம் விற்பனையில் ஏற்கக் கூடியதா? வருவாயை பெருக்கும் தொலை நோக்குத் திட்டங்களை, புகுத்தியிருந்தால் மது விலக்கு என்றோ சாத்தியமாகி இருக்கும். அந்த வகையில் இதை வருவாய் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அடுத்த தலைமுறையின் எதிர்காலம் எனும்  கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை, முன்னெடுப்பை மதுவுக்கு எதிராக போர்ப்பணி தொடுக்கும் அனைவருமே கையில் எடுக்க வேண்டிய நேரம் இது!

Related Articles