முதலீடு செய்தல்: உங்கள் பணம் வளர்வதைப் பார்க்கும் கலை

முதலீடு என்னும் பதம் இலங்கையைப் பொறுத்த வரையில் ஓய்வுபெறும் காலப்பகுதியில் இருக்கும் வயதானோருக்கானது என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. உடலில் சக்தியிருக்கும் காலத்தில் மாதாந்த சம்பளத்துக்கும், வார இறுதி களியாட்டங்களுக்கும் வாழ்வின் இளமைக் காலம் ஒதுக்கப்பட்டுவிடும். ஓய்வுபெறும் காலப்பகுதியில் சேமநல நிதி மீது நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால், Candor Group of Companies இன் குழும பணிப்பாளர், சான்றளிக்கப்பட்ட நிதி ஆய்வாளரான ரவி அபேசூரிய இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டிருக்கிறார். ஒருவர் ஓய்வுபெறும்போது சேமநல நிதியிலிருந்து அல்லது வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்படுகின்ற பணத்திலிருந்து பெறும் வெறும் ஒரு தொகைப் பணமானது, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்குப் போதாது. “நீங்கள் இளைஞராக இருக்கும்போது, பெருமளவு பணத்தை சம்பாதிக்கும் சக்தியைப் பெற்றிருப்பீர்கள்.” என்கிறார். மேலும், “எனவே, நீங்கள் ஓய்வுபெறும்போது, இன்னும் 20 வருடங்கள் வாழ்வதற்கான ஒரு பெரும் தொகைப் பணம் உங்களிடமிருக்கும்.” என்கிறார்.

ஒருவர் ஓய்வுபெறும்போது சேமநல நிதியிலிருந்து அல்லது வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்படுகின்ற பணத்திலிருந்து பெறும் வெறும் ஒரு தொகைப் பணமானது, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்குப் போதாது. (arinersgalaxy.com)

இலங்கையர்கள் முதலீடு செய்வது குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், தமக்கு முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்புக்கள் குறித்து அவர்களுக்குத் தெரியாது என்கிறார் அபேசூரிய. பலரும் காணி, வீடுகள், தங்கம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர் – இது பங்குகள், நிலையான வருமான கருவிகள், பிணை முறி மற்றும் கடன்பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களுக்கு மாற்றமானதாகும். முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் விரிவாதானதாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன.

இதுபற்றி எளிதான விளக்கம் கீழே வழங்கப்படுகின்றது.

நிலையான வைப்புக்கள்

ஆபத்துக்களைப் புறக்கணிக்கும் நடுத்தர வர்க்க இலங்கையர்களுக்கு, நிலையான வைப்பு என்பது பெரிதான யோசிக்கத் தேவையற்ற ஆனால் பிரபலமான ஒரு முதலீட்டுத் தீர்வாகும். நாம் ஒரு நிலையான வைப்பில் முதலீடு செய்யும் பணம் கூடிக் குறைவதில்லை. அத்தோடு, முதலீடு செய்யும் பணத்தையும், ஏற்கனவே அறியப்பட்டுள்ள அதற்கான வட்டிப் பணத்தையும், குறிப்பிட்ட காலம் பூரணமானதும், எந்தவித சிக்கலுமின்றி பெறலாம். எனவே, நிலையான வைப்பு என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீட்டுத் திட்டம் என்பதுவே பலரதும் கருத்தாக உள்ளது.

நிலையான வைப்பில் ஒரு தொகை பணத்தை வைப்பிலிடும்போது, ஏற்கனவே பேசிக்கொண்டதற்கேற்ப, அந்தத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியின் அளவை, எந்தவொரு உழைப்புமின்றி, காலம் பூரணமானதும் பெற்றுக்கொள்ள முடியும். நிலையான வைப்புக்கு வழங்கப்படுவதாக உடன்பட்ட வட்டியை பெற வேண்டுமாயின், வைப்பிலிட்ட தொகையை குறிப்பிட்ட காலப்பகுதி வரையிலும் மீளப்பெறாமலிருக்க வேண்டும். வைப்பிலிட்ட பணத்தை, ஏதோ ஒரு காரணத்துக்காக, காலப் பகுதி பூரணமாகுவதற்கு முன்னர் மீளப்பெற்றால், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியையே வழங்குகின்றன. முதல் மூன்று மாதங்களுக்குள் பெற முனைந்தால், சிலவேளை வட்டியே கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

பணத்தை நிலையான வைப்பில் வைப்பிலிட்டு, எந்தவொரு உழைப்புமின்றி, பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பணம் வளர்வதைப் பார்ப்பதற்கு முடியுமாயிருப்பது, முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து பெருமளவு அறிந்திராத பொது மக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒரு முதலீட்டுத் திட்டமாகும். ஒரு நிலையான வைப்பு இருப்பதாயின், எந்தவொரு சிக்கலுமின்றி தேவையான நேரத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளமையும் ஒரு அனுகூலம்தான். அபேசூரிய இப்படிச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பெரும்பாலான நிலையான வைப்புக்கள், நீண்ட கால அடிப்படையிலானவை என்பதால், சந்தையில் ஏற்படுகின்ற வட்டி ஏற்ற இறக்கங்களின்போதும் கூட, சிறந்த வட்டியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்கிறார் அவர்.

எவ்வாறாயினும், இந்த நீண்ட கால அடிப்படையிலான விடயத்தில் சில பிரதிகூலங்களும் உள்ளன. இந்தப் பிரதிகூலங்களில் பிரதானமானது, பண வீக்கத்தால் தம்மிடமுள்ள உண்மையான பணத்தின் பெறுமதி, அதாவது வாங்கும் திறன் குறைகின்றமையாகும். அபிவிருத்தியடைந்துவரும் இலங்கை போன்ற ஒரு நாட்டில், காலத்துக்கு காலம் பணவீக்க வீதம் பெருமளவு அதிகரிக்க முடியுமென்பதால், இது ஒரு பெரும் பிரச்சினையாகும். பணவீக்க மதிப்பீடானது நிலையான வைப்புக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை விட அதிகமாக இருப்பின், உண்மையில் அந்தப் பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு அது நஷ்டமாகும்.

“பங்குச் சந்தையில் முதலிடும்போது ஏற்படுவது போன்று, முதலீட்டின் பெறுமதி மாற்றமடையாதபோதும், வாங்கும் திறன் வட்டியை விட வேகமாகக் குறைவதனால், நஷ்டம் ஏற்படுகின்றது.” என்கிறார் அபேசூரிய. மேலும், “சிலவேளை நீங்கள் நிலையான வைப்பில் பணம் முதலிட்ட நிறுவனம் மொத்தமாக நஷ்டமடைந்தால், அனைத்துமே இல்லாமல் போகும் ஆபத்தும் உள்ளது.” என்கிறார்.

அரச பத்திரங்கள்

நிலையான வருமான கருவிகளில் “நிலையான வைப்புக் கருவிகள் (fixed income instruments) ஆபத்து குறைந்த முதலீட்டு முறை,  treasury bills மற்றும் பிணைமுறி போன்ற அரச பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். இவ்வாறான அரச பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு, காலம் பூரணமடையும் வரையிலும், தவணை அடிப்படையில் ஒரு தொகை வட்டியை, அரசாங்கம் வழங்கும்.

உண்மையில், அரச பத்திரங்களில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று கூடக் கூறலாம். ஏனெனில், முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வட்டிப் பணத்தை வழங்குவதற்கான பணத்தை அரசாங்கத்துக்கு அச்சிடலாம். எவ்வாறாயினும் வெளிநாட்டு பண அலகுககளினால் முன்வைக்கப்படும் பத்திரங்கள் உள்ளிட்ட சில முதலீடுகளுக்கு, வங்குரோத்து நிலை ஏறப்ட்டால், பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான இயலுமை ஒரு நாட்டுக்கு உள்ளது. இந்த நிலையை இறையாண்மை இயல்புநிலை (sovereign default) என்று வழங்குவர்.

கடன் பத்திரம்

கடன் பத்திரம் என்பது வங்கிகளும், ஏனைய நிறுவனங்களும் நிலையான வட்டி வீத அடிப்படையில், கடன் பெறுவதற்கு பயன்படுத்தும் ஒரு நிலையான வருமான கருவியாகும். இவ்வாறு பெறப்படும் பணம், அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனத்தின் ஒரு பகுதியாக அல்லாமல், கடன் மூலதனத்தில் ஒரு பகுதியாக ஒன்றுசேர்க்கப்படுவதுதான் இதிலுள்ள பிரதானமான வேறுபாடு. எவ்வாறாயினும் கடன் பத்திரம், சாதாரண பத்திரங்கள் போன்று ஏதேனும் சொத்தை ஈடாக வைத்து வழங்கப்படாமையினால், முதலீட்டாளரிடம் மூலதனத்தை மீட்பதற்கான பொருட்கள் காணப்படுவதில்லை. எனவே, கடன் பத்திரமானது சற்று ஆபத்து கூடிய ஒரு முறைமையாகும். தமது பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனத்தால், மீளவும் பணத்தை திருப்பி செலுத்துவதற்குள்ள இயலுமை அல்லது கடன் தகுதிகளின் அடிப்படையில் முழுமையாக நம்ப வேண்டிய நிலை, முதலீட்டாளருக்கு ஏற்படுகின்றது.

சமீப காலம் வரையிலும், கடன் பத்திரங்களினால் கிடைக்கும் வட்டி வருமானமானது வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்ததால், நிதி விவகாரங்கள் தொடர்பில் அதிகம் அறிந்திந்திருந்தவர்கள் மத்தியில், இது மிகவும் பிரபலமான முதலீட்டு முறைமையாக இருந்ததாக அபேசூரிய குறிப்பிடுகிறார். பொதுவாக, முதலீட்டாளர் வங்கியில் பணத்தை வைப்பிலிடும்போது, அந்தப் பணத்தை வேறு நிறுவனங்களுக்கு கடன்களாக வழங்கும் செயற்பாடே நடைபெற்று வருகின்றது. இடைத்தரகர் என்பதால், வங்கியும் குறிப்பிட்டதொரு சதவீதத்தைப் பெறுகின்றது. இதுதான் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது.

“சிலவேளை இந்த சதவீதம் அதிகமாக இருக்கும்.” என்று தெளிவுபடுத்தினார் அபேசூரிய. “கடன் பத்திர விவகாரத்தில், நிறுவனம் முதலீட்டாளரைத் தேடிச் செல்கின்றது.” ஆனால், பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கு கிடைக்கின்ற வரி விலக்கானது, புதிதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள புதிய உள்நாட்டு வருமான சட்டத்தின்படி, இல்லாமல் போவதற்கான வாய்ப்பும் உள்ளது.

கடன் பத்திரங்கள் இரு வகைப்படுகின்றன. முதலாவது, மாற்ற முடியுமான கடன் பத்திரங்கள். மற்றையது, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள். மாற்ற முடியுமான கடன் பத்திரங்களில் ஓரளவு பாதுகாப்பு தன்மை இருக்கின்றது. அதாவது, ஒரு நிறுவனத்தால் பணத்தை செலுத்த முடியாது போனால், அதன் பெறுமதிக்கேற்ற வேறு பங்குகளுடன் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் பாதுகாப்பு குறைவாக உள்ளபோதும், அவற்றுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதால், முதலீட்டாளர்கள் அவை குறித்து ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரும்பாலான நிலையான வருமான கருவிகளின் கடன் தகுதிகள் அல்லது பணத்தை செலுத்துவதற்குள்ள இயலுமை, கடன் தகுதிகளை வகைப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதன்படி, ஒரு நிலையான வருமான கருவிக்கு அல்லது நிலையான வைப்புக்கு வட்டி, மூலதனத்தை மீளச் செலுத்துவதற்குள்ள இயலுமையானது, பல்வேறு மதிப்பீட்டு முறைகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அதிகளவு நம்ப முடியுமான அல்லது குறைந்த ஆபத்து உள்ள முதலீட்டு முறைமைகளுக்கு வழங்கப்படும் மதிப்பீடு AAA  என்று வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் AA, A, BBB, BB, B என்றவாறு குறைந்து சென்று, இறுதியில் C மற்றும் D  மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

“வட்டி மற்றும் வரிகளுக்கு முந்திய வருமானம் அல்லது EBIT யும், வட்டி செலவுகள் அல்லது மீளச் செலுத்துவதற்கான இயலுமை ஆகியவற்றுக்கு இடையில் காணப்படுகின்ற சுயபாதுகாப்பு எல்லை குறையும்போது, நிலையான வருமான கருவிகளில் கடன் தகுதியானது, இவ்வாறு குறைகின்றது.” என்று அபேசூரிய குறிப்பிட்டார். “இவ்வாறு நடப்பதானது, அந்த நிறுவனத்திலிருந்து உடனடியாக மூலதனத்தை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கான தெளிவான சமிக்கையாகும்.”

பங்குச் சந்தை

பல்வேறு நிறுவனங்களும் தமக்குத் தேவையான மூலதனப் பெறுமதியை பெற்றுக்கொள்வதற்காக, பங்குகளை விநியோகிக்கின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட பணத்தை, தமது நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு ஈடாக, குறித்த நிறுவனத்தின் உரிமையில் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு வழங்கப்படுகின்றது. அதன் பின்னர், நிறுவனத்தின் பங்காளர் என்ற வகையில், பங்கு உரிமையாளர்களுக்கு ஒரு இலாபப் பங்கு வழங்கப்படும். ஒரு நிறுவனத்துக்கு தமது பங்குகளை பட்டியலிடுவதை, அந்த நாட்டின் பங்குச் சந்தையில் மேற்கொள்ள முடியும். இதனைத்தான் ஆரம்ப பங்கு விநியோகம் என்பர். அதாவது, இவ்வாறு ஆரம்பமாக பங்குகளை விநியோகிப்பதையே இவ்வாறு வழங்குவர். பின்னர், இந்தப் பங்குகள் இரண்டாம் நிலை சந்தையில் பரிமாறப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கு உள்ள கேள்வி நிரம்பலானது, குறித்த பங்குகளின் பெறுமதியை தீர்மானிக்கின்றன.

கொழும்பு பங்குச் சந்தை (Getty Images/Spencer Platt)

இந்த வகையில் இரண்டாம் நிலை சந்தையில் பங்குகளுக்காக முதலீடு செய்வதில் உள்ள அனுகூலமானது, தேவையான நேரத்தில் பங்குகளை வாங்கி, விரும்பிய நேரத்தில் விற்பனை செய்து நீண்ட கால அடிப்படையில் நிலையான வைப்புக்களையும் விட அதிகமான இலாபத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு முதலீட்டாளருக்கு கிடைக்கின்றமையாகும். ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையானது, அந்த நிறுவனம் எதிர்காலத்தில் வருமானம் பெறுவதற்குள்ள வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் அதிகரிக்கின்றது. அத்தோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூக பொருளாதார விடயங்கள், அரசியல் விடயங்கள் பல்வேறு பங்குகளின் விலைகள் கூடிக் குறைவதற்கான காரணங்களாக அமைய முடியும். விவேகமாக சிந்திக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஏதேனுமொரு காரணத்தால், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையும்போது, அவற்றை வாங்கி, பின்னர் அவற்றின் விலை அதிகரிக்கும்போது அவற்றை விற்பனை செய்து பெரும் இலாபத்தை சம்பாதிக்கலாம். அடுத்த அனுகூலம் என்வென்றால், நன்கு வளர்கின்ற ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால், அந்த நிறுவனங்களின் வளர்ச்சியுடன் பங்குகளின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றம் எப்படிப்போனாலும், அதன் இலாபமாக, சிறந்த நிலையான வருமானமொன்றை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மூன்றாவது அனுகூலமானது, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் அனைத்தும் முதலீட்டாளரின் பார்வையில் பார்த்தால், மிகவும் இலகுவாக பணமாக மாற்றக்கூடிய வகையிலான சொத்துக்களாகவே உள்ளன. எனவே, அவசர தேவைகளின்போது, தமது பங்குகளை விற்பனை செய்து, மிகவும் இலகுவாக அதனைப் பணமாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு உள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, சில ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியமைக்கான பிரதான காரணம், பங்குகளின் விலை கூடிக் குறைவதனால், அதன் வருமானம் நிலையாக இருப்பதில்லை. எனவேதான் முதலீடு செய்யும் மூலதனத்தின் அளவு மாறுவது குறித்தும், அதிலுள்ள உறுதியற்ற தன்மை குறித்தும் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட முதலீட்டாளருக்கு முடியுமாயிருக்க வேண்டும். எவ்வாறாயினும், மூலதன சந்தையில் முதலீட்டாளர்களுக்கு உயர்ந்த இலாபத்தைப் பெறுவதற்குள்ள இயலுமையை எதிர்கொள்ள இந்த உறுதியற்ற தன்மை அல்லது ஆபத்தை எதிர்கொண்டு ஒருவர் முதலீடு செய்வதனால், அவருக்கு அதிகளவு இலாபம் கிடைக்கின்றது. தமது முதலீடு நீண்ட கால அடிப்படையில் வளர்ந்து செல்வதை ஒருவர் அவதானிக்கலாம்.

மக்கள் கம்பனிகளின் பங்குகளில் முதலீடு செய்து, தொழில்முனைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, சரியாக செயற்படுகின்ற கம்பனிகளை நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், அவை பெருமளவு பெறுமதியை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமையினாலாகும். இலங்கையின் பொருளாதாரத்துக்கு தோள் கொடுக்கின்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் எவரும் பங்காளர்களாக இணைந்துகொள்வதற்கான வாய்ப்பையே, பங்குச் சந்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

“இலங்கை பங்குச் சந்தை குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து செல்கின்றது.” என்கிறார் அபேசூரிய. முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச் சந்தை குறித்த நம்பிக்கை இல்லாமல் போனால், அவர்கள் அதிகளவு பணத்தை சேமித்து, தமது எதிர்காலத்துக்காக முதலீடு செய்து, அவர்களின் நீண்ட நிதி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைகின்றது. இலங்கை உலகின் வேகமாக முதுமையடைவோரைக் கொண்ட நாடு என்ற வகையில், “நம் நாட்டு மக்கள் அதிகளவு முதலீடு செய்யத் தொடங்காவிட்டால், இலங்கை கிட்டிய எதிர்காலத்தில் பெரும் சமூக சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி வரும். மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே சென்று, முதுமையடைந்த நிலையிலும் தொழிலில் ஈடுபட்டு, தலைமுறைகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.” என்கிறார் அபேசூரிய.

அலகு நம்பிக்கை அல்லது பரஸ்பர நிதி

ஏலவே விளக்கிய அனைத்து முதலீட்டு முறைமைகளும், தனித் தனியாக மேற்கொள்ளப்படுபவையாகும். மறுபுறம் அலகு நம்பிக்கை (Unit Trust) என்பது பங்குகளிலும், நிலையான வருமான கருவிகளிலும் பரஸ்பரம் முதலீடு மேற்கொள்ளும் ஒரு முறைமையாகும். கையில் 1000 ரூபாவை வைத்திருப்பவர்கூட, அலகு நம்பிக்கையில் ஒரு அலகை (ஒரு பங்கை) வாங்கலாம். இவ்வாறு சேர்க்கப்படும் மூலதனம், பின்னர் அதற்குரிய நிதிப் பத்திரன்படி, தொழில் ரீதியாக முகாமை செய்யப்படும். அலகு நம்பிக்கை, இதற்காக முகாமைத்துவ செலவை அறவிடும்.

ஒரு தனிநபர் மட்டுப்படுத்தப்பட்ட மூலதனத்தை மட்டும் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அலகு நம்பிக்கையானது எப்போதும் தனது முதலீட்டை பல்வேறு வகையில் மேற்கொள்வதனால், ஆபத்தும் குறைகின்றது. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு நம்பிக்கையாளர் இதில் எப்போதும் இருப்பது இதன் இன்னொரு அனுகூலமாகும்.

அலகு நம்பிக்கையானது பிரதானமான மூன்று வகைப்படுகின்றது:

திறந்த-எல்லையற்ற நிதிகள்

அலகு நம்பிக்கைகளை முகாமை செய்கின்ற நிறுவனங்கள் தமது முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்கும் பொறுப்புடையவர்களாவர்.

மூடிய- எல்லையுள்ள நிதிகள்

இந்த நிதிகளிலிருந்து மக்களுக்கு பங்கு விநியோகிக்கப்படுவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமேயாகும். ஏதேனும் ஒரு காரணத்துக்காக, முதலீட்டாளர் பங்குகளை விற்பனை செய்ய வேண்டியிருப்பின், அவர்கள் அதனை இரண்டாம் நிலை சந்தையில் மேற்கொள்ளலாம்.

நம்பிக்கைப் பத்திரம்

ஒரு நம்பிக்கைப் பத்திரத்தின் அடிப்படையிலேயே அலகு நம்பிக்கை நிதி ஸ்தாபிக்கப்படுகின்றது. அத்தோடு, இதனை அனுபவிப்பவர் முதலீட்டாளராவார். முதலீட்டாளர் அல்லது அலகு நம்பிக்கையாளர் மேற்கொள்ளும் முதலீடானது, நம்பிக்கைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் பேணப்படும். அலகு நம்பிக்கை என்பது தற்காலிகமானது என்பதே இதன் மூலம் கருதப்படுகின்றது. இந்த நிதி மூலம், முதலீட்டாளருக்கு நேரடியாகவே பணம் மீளச் செலுத்தப்படும். செலுத்தப்படும் தொகையை மீளவும் நிதியத்திலேயே முதலீடு செய்ய முடியாது.

முதலீட்டின்போது செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்

நியூ யார்க் பங்குச் சந்தை (Getty Images/Spencer Platt)

முதலீட்டை வேறுபடுத்துங்கள்.

“எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள் என்ற பழமொழியை கட்டாயம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.” என்கிறார் அபேசூரிய. தம்மிடமுள்ள எல்லாப் பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்து, நஷ்டமடைந்துபோனவர்கள் பற்றிய கதைகள் முதலீட்டுத் துறையில் நிறையவே இருப்பதாக சுட்டிக்காட்டினார். சமீபத்தில் நிகழ்ந்த சிறந்த உதாரணமாக, கோல்டன் கீ கடன் அட்டை நிறுவனத்தை சுட்டிக்காட்டலாம். மக்களின் பணத்தை, தவறான முறையில் பயன்படுத்தியதால், கோல்டன் கீ கடன் அட்டை நிறுவனத்தின் உரிமையாளர் குற்றவாளியானபோது, ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் மில்லியன் கணக்கான பணத்தை இழந்தனர். “தம்மிடம் இருக்கும் பணத்தை வெவ்வேறு நிறுவனங்களிலும், வெவ்வேறு முறைமைகளின் அடிப்படையிலும் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு முதலீட்டு முறைமை முழுமையாக வீழ்ச்சி காணவும் முடியும்.” என்று தெளிவுபடுத்தினார் அபேசூரிய. மேலும் “இலங்கை வரலாற்றில் முறைமைக் கோளாறுகள் காணரமாக, பெருமளவிலான நிதி நிறுவனங்கள் ஒரே தடவையில் வங்குரோத்து அடைந்த நிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம்.” என்றார்.

முதலீட்டு விளக்க தொகுப்பொன்றை (Portfolio) வைத்துக்கொள்ளுங்கள்

செல்வத்தை முகாமை செய்வதென்பது, முதலீட்டாளர் விளக்கத் தொகுப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகும். இதன் மூலம் கருதப்படுவது, பங்குகளை தெரிவு செய்வதோ அல்லது விவேகமாக சொத்துக்களில் முதலீடு செய்வதோ அல்ல. ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட விளக்கத் தொகுப்பானது, மிகவும் விரிவான முதலீடுகளைக் கொண்ட விளக்க தொகுப்பையும் விட, நஷ்டமடையும் ஆபத்தைக் கொண்டதாகும். உங்களைப் புரிந்துகொள்ளல், சந்தைகளைப் புரிந்துகொள்ளல், மூலதனத்தைப் பாதுகாத்தலுக்கும் எதிர்காலத்தில் முதலீட்டு விபர அறிக்கையில் வளர்ச்சிக்கும் இடையில் சமநிலை பேணல் ஆகியவற்றின் மூலமே செல்வத்தை முகாமை செய்ய ஆரம்பிக்க வேண்டும். செல்வத்தை முகாமை செய்வதென்பது, அவசரமாக செல்வந்தராக மாறுவதோ அல்லது பங்குச் சந்தையில் அனுமாதித்து முதலீடு செய்வதோ அல்ல. மாறாக, அறிவுபூர்வமான முடிவுகளின் ஊடாக, பொருளாதார செழிப்பை நோக்கி நீண்ட கால பயணத்தை மேற்கொள்வதாகும்.

ஒரு தனிநபர் முதலீடுகளை மேற்கொள்ளும்போது, விளக்க தொகுப்பை பின்பற்ற வேண்டும். அதாவது, ஒவ்வொரு முதலீட்டு வகையிலும் அவற்றின் பாதுகாப்பு, அவற்றின் மூலம் தனது முழுமையான முதலீட்டு விளக்க தொகுப்பின் முதலீட்டு அடையாளங்களுக்கு கிடைக்கின்ற பங்கு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தொழில் ரீதியான சொத்து முகாமையாளர்கள், பொருளாதார மற்றும் முதலீட்டு சந்தையின் தேவை, பாதுகாப்பு குறித்த ஆய்வு, சேவைநாடியின் இலக்கு, முதலீட்டு கொள்கை பிரகடனம் மூலம் வழங்கப்படும் எல்லைகளையும் கருத்திற்கொண்டு, இலக்குமயப்பட்ட சொத்து ஒதுக்கீட்டை உள்ளடக்கி முதலீட்டு விளக்கத் தொகுப்பை தயாரிப்பர்.

சொத்து ஒருக்கீட்டை ஒரு கலை என்றும், ஒரு விஞ்ஞானம் என்று அறிமுகப்படுத்தலாம். இது ஆபத்து மற்றும் இலாபம் ஆகிய இரண்டையும் சரியான அளவில் பேணி, செழிப்பு எனும் தொகுப்பை சரியாக செய்வதற்கான மூலப் பொருட்களை சரியான அளவில் பிரயோகிப்பது போன்ற ஒரு வேலையாகும். இங்கு, பல்வேறு முதலீட்டு முறைமைகளிலுள்ள ஆபத்து – இலாப அடையாளங்கள் மற்றும் இந்த முறைமைகளுக்கு இடையில் இருக்கின்ற இடைத்தொடர்பு ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. உதாணரமாக, வட்டி வீதம் அதிகரிக்குமாயின், பங்குச் (மற்றும் சொத்து) சந்தை வீழ்ச்சி காண ஆரம்பிக்கும். வட்டி வீதம் குறைய ஆரம்பித்தால், எழுச்சி காணும். ஒரு சொத்து முகாமையாளர் எப்போதும், சந்தையின் எதிர்வுகூற முடியாத நிலைக்கு மத்தியில், தனது வாடிக்கையாளரின் சொத்தைப் பாதுகாத்து, மிகவும் பொருத்தமான, விரிவானன மற்றும் பரந்த முதலீட்டு விளக்கத் தொகுப்பை தயாரிக்கவே முயற்சிப்பார்.

தொழில்வாண்மையாளரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

எவருக்கும் முதலீடு என்பது ஒரு சவாலான விடயமாக இருக்கலாம். சிக்கல்கள் நிறைந்த முதலீட்டு முறைமைகள் காணப்படுவதாலும், ஒவ்வொருத்தரும் ஒரு தொகை ஆலோசனைகளை வழங்குவதாலும், சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். அனுமானித்து முதலீடு செய்ய முயற்சித்து, நஷ்டமடைந்த சம்பவங்கள் சந்தையில் பெருமளவு இருக்கின்றன. நீங்கள் சேமித்து வைத்துள்ள அனைத்தையும், மனதைக் கவரும் வகையில் பேசுகின்ற வியாபார பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்டு, ஒருபோதும் முதலீடு செய்ய வேண்டாம். எப்போதும் சரியான, உங்களது தேவைகளுக்கான, அனைத்துக்கும் மேலாக ஒழுக்க விழுமியங்களுக்கேற்ப ஆலோசனைகளைப் பெற்று செயற்படுங்கள் என்று அபேசூரிய வலியுறுத்திக் கூறுகிறார். தொழில் ரீதியான முதலீட்டு ஆலோசகர்கள், எப்போதும் தமது வாடிக்கையாளரின் தேவை, அதாவது வாடிக்கையாளரின் முதலீட்டு இலக்கு மற்றும் நிலவுகின்ற தடைகளை நன்கு புரிந்துகொண்டு, முதலீட்டு கொள்கை பிரகடனத்தை தயாரிப்பர்.

முதலீட்டு கொள்கை பிரகடனம் (Investment Policy Document – IPS) என்பது வாடிக்கையாளர் முதலீட்டை மேற்கொள்வதன் இலக்கு, அதாவது மீளப் பெறும் தேவைகள் மற்றும் ஆபத்துக்களை எதிர்கொள்ளவுள்ள தயார்நிலை, நிலவுகின்ற தடைகள், அதாவது கால எல்லை, பணமாக்கும் தேவை, சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாடுகள், வரி, விசேட விருப்பு வெறுப்புக்கள் மற்றும் வாடிக்கையாளரின் விசேட நிலைமைகளைக் கருத்திக்கொண்டு தயாரிக்கப்படும் ஒரு எழுத்து வடிவிலான பிரகடனமாகும். அத்தோடு, இந்த முதலீட்டு கொள்கை பிரகடனமானது, எப்போது பரீட்சிக்கப்பட்டு, வாடிக்கையாளரின் இலக்கு, தடைகள் மற்றும் நிலைமைகள் மாறும்போது அவற்றுக்கேற்ப திருத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

CFA இலங்கை

“தலையில் புற்றுநோய் வந்தவர், நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியரிடம் செல்லவேண்டுமே தவிர, நாவிதனிடமல்ல.” என்று ஒரு சிறந்த உதாரணத்தைக் கூறினார் அபேசூரிய. மேலும் “அத்தோடு, உங்களது முதலீட்டு இலக்கை அடைந்துகொள்ள வேண்டுமாயின், நீங்கள் முதலீட்டு முகாமைத்துவம் குறித்த சிறந்த அறிவுள்ள, தனிப்பட்ட ரீதியில் பூரணமான நேர்மையுள்ள ஒருவரிடமே நீங்கள் செல்ல வேண்டும். இங்குதான் பட்டய நிதி நிபுணர்கள் வருகின்றனர்.” என்றும் குறிப்பிட்டார்.

எனவே, பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமன்றி, முதலீடு செய்வதா? இல்லையா? என்று தயங்கிக் கொண்டிருக்கும் பயிலுநருக்கும் பொருத்தமான, பெருமளவிலான முதலீட்டு முறைமைகள் உள்ளமை, இந்தக் கட்டுரையை இறுதி வரை வாசித்திருந்தால் புரிந்துகொண்டிருப்பீர்கள். எவ்வாறாயினும், முதலீடு என்பது, நீண்ட கால அடிப்படையில் இலாபங்களைப் பெறுவதற்கானதாகவும், பொறுமையாகவும், எதிர்பாலப் பார்வை கொண்டதாகவும் அமைய வேண்டுமே ஒழிய, பணம் சம்பாதிப்பதற்கான சூதாட்டம்போல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

தமிழாக்கம் – அஷ்கர் தஸ்லீம்

Related Articles